08 November 2008

சரியென்று பட்டதெல்லாம்

(எப்பொழுதும் போல், எந்த காரணமும் இல்லையென்றாலும் புலி மூச்சு வாங்க வேகமாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான். அவ்வழியே ஆமையார் வருவதைப் பார்த்ததில் சந்தோசம் தான்!...)

புலி: என்ன, ஆமையாரே எப்படி இருக்க?

ஆமை: நலம் தான். நீ கிரேக்க கண்காட்சிக்கு போவதாக சொன்னாயே?

புலி: அங்கிருந்து தான் வருகின்றேன். கிரேக்க ஞானிகள், சாக்ரடீஸ், பிலாடோ, அரிஸ்டாட்டில் பற்றிய விசயங்கள் நன்றாக இருந்தது. சமயம் வரும் போது, இவர்களுடைய தத்துவங்களைப் பற்றி நாம் பேச வேண்டும்.

ஆமை: உனக்குத் தான் தெரியுமே, எனக்கு தத்துவம் (philosophy) பிடிக்கும் என்று! (ஆமை, புலியின் கையிலுள்ள‌ பேப்ப‌ரை க‌வ‌னிக்கின்றான்...) என்னது உன் கையில்?

புலி: இது சாய்ந்த‌-கோபுர‌-மாயைப் ப‌டம். 2007 வ‌ருட, க‌ண் மாயை ப‌ட‌ போட்டியில், இதற்க்கு முத‌ல் பரிசு கிடைத்த‌து. (புலி ப‌ட‌த்தை ஆமைக்கு காட்டுகின்றான்...) இந்த இரண்டு படமும், ஒரு அச்சு கூட மாறாமல் ஒரே படம் தான்...‌உன்னால் ந‌ம்ப‌ முடிகிற‌தா?

ஆமை: வழ‌துகைப் ப‌க்க‌ம் உள்ள‌ கோபுர‌ம் அதிக‌மாக‌ சாய்ந்துள்ள‌து போல் இருக்கிற‌து.

புலி: ந‌ம் க‌ண்ணால் பார்ப்ப‌தெல்லாம் சரியென்று சொல்ல‌ முடியாது என்றே நினைக்கிறேன்!

ஆமை: "கண்ணால் பார்ப்ப‌தும் பொய்யாக‌லாம்!
காதால் கேட்ப‌தும் பொய்யாக‌லாம்!
உணர்வுக்கு பட்டதும் பொய்யாக‌லாம்!
மனதிற்கு பட்டதும் பொய்யாக‌லாம்!
சுய அறிவுக்கு பட்டதும் பொய்யாக‌லாம்!
பொது அறிவுக்கு பட்டதும் பொய்யாக‌லாம்!
ஆழ‌மான ஆராய்சி ம‌ட்டுமே உண்மையை விள‌க்கலாம்!

புலி: ம்ம்ம்...ந‌ல்ல த‌த்துவ‌ம் தான்! அது எப்படி ந‌ம் மனதிற்கு/அறிவுக்கு சரி என்று பட்டது பொய்யாக‌லாம்?

ஆமை: சாக்ர‌டீஸ் காலத்திலும் (469-399 கி.மு), அத‌ற்கு ப‌ல‌ நூற்றாண்டுக‌ள் முன்னும் பின்னும், ந‌ம‌து மனதிற்கு/அறிவுக்கு சரி என்று பட்டதெல்லாம் உண்மையாக கருதப்பட்டது. வாழ்கை த‌த்துவ‌திற்கெல்லாம் இதுவே ஆதார‌மாக‌ இருந்த‌து. 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த‌, க‌லிலியோ க‌லிலிலை (1564-1642 கி.பி) சோத‌னை முறையில் ந‌ம் அறிவுக்கு சரி என்று பட்டது த‌வ‌றாகவும் இருக்காலாம் என்று நிரூபித்தார். க‌தையின் ப‌டி, பெரிய‌ மக்க‌ள் கூட்ட‌த்திற்கு முன், இர‌ண்டு குண்டுக‌ளை, ஒன்று க‌ன‌மான‌து ம‌ற்றொன்று க‌ன‌ம‌ற்ற‌து, பைசா கோபுர‌த்திலிருந்து ஒரே நேர‌த்தில் கீழே போட்டார். க‌ன‌மான‌ பொருள் வேக‌மாக‌ பூமியை அடையும் என்று ந‌மது அறிவுக்கு (இயல்பறிவுக்கு) ப‌டுகின்ற‌து. ஆனால், இர‌ண்டு குண்டுக‌ளும் ஒரே நேர‌த்தில் பூமியை அடைந்த‌து!

புலி: ஆச்ச‌ர்ய‌ம் தான்! அது எப்ப‌டி சாத்திய‌ம்?

ஆமை: ஏனென்றால் புவியீர்ப்பு முடுக்க‌ம் (9.8 m/s2) எல்லா பொருளுக்கும் ஒன்று தான்! இது கற்பிக்கும் முக்கிய‌ பாட‌ம், ந‌மது இயல்பறிவுக்கு (Common sense/ Intuition) ச‌ரியாக‌ ப‌டுவ‌தெல்லாம் த‌வ‌றாகவும் இருக்காலாம் என்பதே!!! உண்மையை க‌ண்ட‌றிய‌, ஆழ்ந்த‌ ஆராய்சி தேவை. இந்த‌ ஆழ்ந்த‌ ஆராய்சி முறையை தான், நாம் அறிவிய‌ல் என்று சொல்கின்றோம். இதில், எந்த ஒரு விசயத்தையும் கண்கானித்தல், கண்கானித்ததிலிருந்து அதன் பொருள் என்னவாக இருக்குமென‌ கணித்தல் (தியரி), தியரியிலிருந்து கண்கானித்த அனைத்து விசயங்களுக்கும் விளக்கம் அளித்தல், தியரியிலிருந்து மேலும் புதியவற்றை கண்டுபிடித்தல், அதை பரிசோத‌னை செய்து நிரூபித்த‌ல்...ஆகிய‌வை அட‌ங்கும்.

புலி: பூமி உருண்டை என்றாலும், நம் அறிவுக்கு த‌ட்டையாக‌ தெரிவ‌தும் இதுபோல் தானே?

ஆமை: ஆமாம்! அதே போல், சூரிய‌ன் ந‌ம் பூமியை சுற்றுவ‌தாக‌ தெரிந்தாலும், உண்மையில் நாம் சூரிய‌னை சுற்றுகின்றோம். இது போன்ற‌ ப‌ல‌ உண்மைக‌ளை நிலைப‌டுத்த‌, நாம் மிக பெரிய‌ தொகையை கொடுத்துள்ளோம். சூரிய‌ மைய‌ விள‌க்க‌ம், அன்றைய‌ கிருஸ்த்துவ‌ ந‌ம்பிக்கைக்கு முர‌னாக‌ இருந்த‌தால், க‌லிலியோவை சாகும் வ‌ரை வீட்டு சிறையில் அடைத்தார்க‌ள்.

புலி: சூரிய‌ மைய‌ விள‌க்க‌த்தை முத‌லில் க‌ண்ட‌ரிந்த‌ நிகோல‌ஸ் கோப‌ர்னிகஸ் (1473-1543 கி.பி) கூட‌, அதை வெளியிட‌ ப‌ய‌ந்தார் என்று ப‌டித்துள்ளேன்.

ஆமை: சார்ல‌ஸ் டார்வினும் (1809-1882 கி.பி) அப்ப‌டித்தான்! த‌ன்னுடைய‌ ப‌ரினாம‌ திய‌ரி புத்த‌க‌த்தை ம‌ர‌ண‌ப் ப‌டுக்கையில் தான் வெளியிட்டார். இது போல எவ்வளவு அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சி ந‌சுக்க‌ப் ப‌ட்டிருந்த‌து என்ப‌தை நினைத்தால் அதிர்ச்சியாக‌ உள்ள‌து!

புலி: ம்ம்ம்...அது ப‌ற்றி என‌க்கு எந்த‌ க‌ருத்துமில்லை. ஆனால், அது போன்ற‌ கால‌க்க‌ட்ட‌த்தை க‌ட‌ந்து வ‌ந்துவிட்டோம் என்ப‌தில் ச‌ந்தோச‌ம் தான்!

ஆமை: உண்மையில் இது இன்னும் தொட‌ர்ந்து கொண்டுதான் இருக்கின்ற‌து. அமெரிக்கா போன்ற‌ நாடுக‌ளில் கூட‌, தண்டுவ‌ட‌‍-செல் (stem-cell) ம‌ற்றும் பல‌ உயிர் காக்கும் சோத‌னைக‌ள் தடுக்க‌ப்ப‌ட்டு கொண்டுதான் உள்ள‌து. 200 வ‌ருட‌த்திற்க்குப் பிற‌கும், ப‌ரிணாம‌ திய‌ரி எதிரான‌ போர்கொடிக‌ள் இன்னும் உள்ள‌து!

புலி: எப்படி ஆனாலும், ப‌ரிணாம‌ம் ஒரு திய‌ரிதானே... அது ஒன்றும் 100% நிருபிக்க‌ப் பட்ட‌ உண்மைய‌ல்ல‌வே?!

ஆமை: இது த‌வ‌றாக‌ நிழ‌வும் க‌ருத்தாகும். இது அறிவிய‌ல் முறை எப்படி செயல்படுகின்றது என்பது தெளிவாக‌ தெரியாத‌தால் ஏற்ப‌டும் குழ‌ப்ப‌ம். உண்மையில் நாம் எதையும் 100% ந‌ம்பிக்கையுட‌ன் ச‌ரி த‌வ‌று என்று நிருபிக்க‌ முடியாது! நாம் இருக்கிறோம் என்ப‌தை கூட‌ 100% ந‌ம்பிக்கையுட‌ன் நிருபிக்க‌ முடியாது! உதாரணமாக ப‌ற‌க்கும் குதிரை இல்லை என்ப‌தையும் 100% ந‌ம்பிக்கையுட‌ன் நிருபிக்க‌ முடியாது! அறிவிய‌ல் முறையில், நாம் க‌ண்ட‌றியும் விச‌ய‌த்தை வைத்து, திய‌ரி விள‌க்க‌ம் சொல்ல‌ப் ப‌டுகின்ற‌து. அந்த‌ திய‌ரி க‌ண்டுபிடிக்கும் புதிய‌ விச‌ய‌ங்க‌ள் ஒவ்வொறு முறை நிருப‌ன‌மாகும் போதும் அத‌ன் மேல்லுள்ள‌ ந‌ம்பிக்கை அதிக‌ரிக்கும்... இல்லையென்றால் அது வ‌லுவிழ‌ந்து போகும். ரிச்ச‌ர்டு டாக்கின்ஸ் சொல்லுவ‌து போல், ப‌ரிமான‌ திய‌ரி, சூரிய‌‍-மைய‌ திய‌ரி நிக‌ராக‌ நிரூபிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. ப‌ரிணாம‌ திய‌ரி ப‌ல‌ முறை நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து ம‌ட்டும‌ல்லாம‌ல், இப்பொழுது அது எப்ப‌டி செய‌ல்ப‌டுகின்றது என்ப‌தையும் நாம் க‌ண்ட‌றிந்துள்ளோம்!

புலி: என்னுடைய‌ முத‌ல் கேள்விக்கு வ‌ருவோம்... ந‌ம் ம‌ன‌திற்கு/அறிவுக்கு ப‌ட்ட‌தெல்லாம் த‌வ‌று என்கிறாய்?

ஆமை: அப்ப‌டி அல்ல‌. அது நம் மூளையை எப்படி பழக்கப்படுத்தினோம்... ப‌ய‌ன்ப‌டுத்தினோம்... ப‌யிற்சிகொடுத்தோம் என்ப‌தை பொருத்த‌து. ந‌ம‌து மூளை (மனம்/அறிவு) எப்ப‌டி செய‌ல்ப‌டுகின்ற‌து என்ப‌தைப் ப‌ற்றிய‌ தெளிவு, இதை ந‌ன்றாக‌ புரிந்துகொள்ள‌ உத‌வும். ச‌ம‌ய‌ம் கிடைக்கும் போது, இதைப் ப‌ற்றியும் விவாதிப்போம். மொத்த‌தில், ந‌ம் ம‌ன‌திற்கு/அறிவுக்கு ப‌ட்டது முத‌ல் க‌ட்ட‌மே, அது இறுதி முடிவு அல்ல.

கேளிகூத்து என்னவென்றால், ஒரு பக்கம் நன்கு நிரூபிக்கப்பட்டவற்றை ஏற்க மறுக்கின்றோம்... மறு பக்கம் கொஞ்சம்கூட ஆதாரம் இல்லாதவற்றை, எந்த கேள்வியும் இன்றி மிக எளிதாக ந‌ம்புகின்றோம். பேய், ம‌றுபிற‌ப்பு, ஜாதகம், ராசி பலன் இவ‌ற்றிக்கு எந்த‌வித‌ அடிப்ப‌டை ஆதார‌முமில்லை. இவை ந‌ம் சிறு வ‌ய‌தில் திணிக்க‌ப்ப‌ட்டு ப‌ழ‌க்கப்ப‌ட்டு விடுவ‌தால், மிக ஆழமாக நம் உள்மனதில் ப‌திந்துவிடுகின்ற‌து. மேலும் இவை நம் அடிப்படை உணர்ச்சிகளின் பலவீனத்தைப் பயன்படுத்திகொள்கின்றன. பிற‌கு இதை மாற்றுவ‌து மிக‌ மிக‌ க‌டின‌ம். இது ந‌ம்முடைய‌ மூளையின் ப‌ல‌வீன‌ம் (vulnerabilities) .

புலி: ஆனால், உலகில் அதிகாமான மக்கள் இவற்றை நம்புகிறார்கள்... அதில் பலர் நன்கு படித்தவர்கள்! அனைத்து பண்டைய‌ கலாச்சாரத்திலும் இது போன்ற நம்பிக்கைகள் இருந்திருக்கின்றன. ஜோதிட‌த்திற்கு கார‌ண‌மும், ஆதார‌ண‌மும் உள்ள‌து. பேயை பார்த்த‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். சில‌ர் ஆவியுட‌ன் பேசுகிறார்க‌ள். இவ‌ற்றில் எந்த‌ உண்மையும் இல்லையா என்ன‌?!!

ஆமை: இதைத் தான் நான் ந‌ம்முடைய‌ மூளையின் ப‌ல‌வீனம் (vulnerabilities) என்றேன்... உன‌க்கு இவற்றைப் பற்றி எத்த‌னை அறிவிய‌ல் பூர்வ‌மான‌ ஆதாரண‌ங்கள் தெரியும். இதை ஞாப‌க‌ம் வைத்துக் கொள்... "எந்த ஒரு அசாதாரணமான‌ விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார்!"

புலி: ம்ம்ம்...ந‌ல்ல அறிவியல் த‌த்துவ‌ம் தான்! :‍-) நேர‌மாகிவிட்டதென்று நினைக்கின்றேன்...

ஆமை: ஆமாம், நானும் வீட்டுக்கு செல்ல‌ வேண்டும்.

புலி: நல்லது ஆமையாரே, நாளை பார்க்கலாம்.

ஆமை: சரி...பார்க்கலாம்.

(எப்பொழுதும் போல, கூட வருவோரின் பொருமையை சோதிக்குமளவிற்க்கு, ஆமையார் அவ‌னுடைய‌ மெதுவான‌ ந‌டையைப் போட்டான்!)

11 comments:

VIKNESHWARAN said...

ஆஹா... பல விடயங்களை ஒரு கதையில் அடக்கிட்டிங்களே... மீண்டும் மீண்டும் படிக்கிறேன்... பல புரிதல்கள்... நன்றி...

RajK said...

நன்றி VIKNESHWARAN!

E.Parthiban said...

நல்ல பதிவு, மீண்டும் படிக்கவேண்டும் மீண்டும் படிக்கவேண்டும்.... நன்றி...

RajK said...

நன்றி இளங்கோ பார்த்திபன்!

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்... நன்றாக இருக்குப்பா!
தொடந்து எழுது..

ஆ.ஞானசேகரன் said...

///கேளிகூத்து என்னவென்றால், ஒரு பக்கம் நன்கு நிரூபிக்கப்பட்டவற்றை ஏற்க மறுக்கின்றோம்... மறு பக்கம் கொஞ்சம்கூட ஆதாரம் இல்லாதவற்றை, எந்த கேள்வியும் இன்றி மிக எளிதாக ந‌ம்புகின்றோம். உதார‌ண‌மாக‌, க‌ட‌வுள், பேய், ம‌றுபிற‌ப்பு, ஜோதிட‌ம் இவ‌ற்றிக்கு எந்த‌வித‌ அடிப்ப‌டை ஆதார‌முமில்லை. இவை ந‌ம் சிறு வ‌ய‌தில் தினிக்க‌ப்ப‌ட்டு ப‌ழ‌க்கப்ப‌ட்டு விடுவ‌தால், மிக ஆழமாக நம் உள்மனதில் ப‌திந்துவிடுகின்ற‌து. மேலும் இவை நம் அடிப்படை உணர்ச்சிகளின் பலவீனத்தைப் பயன்படுத்திகொள்கின்றன. பிற‌கு இதை மாற்றுவ‌து மிக‌ மிக‌ க‌டின‌ம். இது ந‌ம்முடைய‌ மூளையின் ப‌ல‌வீன‌ம் (vulnerabilities)///
பல சிந்தனையை தூண்டும் வாக்கியம், புரிந்தவர்களும் புரியததுபொல இருப்பதும் இதனால் தானோ!!!!!

RajK said...

//ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம்... நன்றாக இருக்குப்பா!
தொடந்து எழுது..//

நன்றி.

yugandar said...

Very good. Aamai, Puli nalla jodee. Tamizhil ethu pondra katturaigal neriyaa vendum. Arputhamana muyarchi.

உமா said...

நல்ல கட்டுரை. கண்டிப்பாக மீண்டும் படிக்கவேண்டும்.

RajK said...

நன்றி உமா.

Information said...

சிறந்த பதிவு