18 February 2012

சுயாதீனம் தேடி...

உண்மை எப்பொழுதும் நம்மை விடுதலை படுத்துகின்றது. ஆனால் அது எல்லா சமயத்திலும் ஆறுதல் தருவதில்லை. உண்மை எவ்வளவு பயங்கரமாக தோன்றினாலும், இயற்கை நமக்கு புலப்படுத்துவதை கண்டுகொள்ளாமல் திரும்பி கொள்ள கூடாது... நமக்கு அது தெரிவதில்லை என்பது போல் நடிக்க கூடாது. -- ஜானா லெவின்.


நம் கைகளை உயர்த்துவது முதல், வாழ்கை முடிவுகளை எடுப்பது வரை, மூச்சை அடக்குவது முதல், நல்லது கெட்டதை தீர்மானிப்பது வரை பலவற்றை வேண்டிய பொழுது செய்கின்றோம். ஆனால், அதை சுயாதீனமாக (Freewill) எடுக்கின்றோமா? அப்படி என்றால், அது எந்த அர்த்தத்தில்? நம் செய்கைகளுக்கு, நாம் எடுக்கும் முடிவுகளுக்கு நமக்கு முழு சுதந்திரம், முழு ஆளுமை உண்டு என்றா?

நாம் அறிந்த ஆழம் வரை, நாம் அறிந்த இந்த அண்டம் அடிப்படையில் சில எளிய விதிகளை பின்பற்றுகின்றது. இவற்றை சில எளிய கணித சமன்பாடுகளில் குறிக்க முடியும். இதில் மண்டலங்களும், நட்சத்திரங்களும், கோள்களும், உயிர்களும், மனங்களும் அடக்கம். அப்படி எனில், இந்த அண்டம் முன்பே தீர்மானிக்க கூடியதா? மிக கடினம் என்றாலும், கோட்பாட்டிலாவது, எதிர்காலம் கணிக்க கூடியதா? (தற்போதைய நிலைகளை விதிகளில் பயன்படுத்தி எதிர்காலம் கணிப்பது). அப்படி எனில், நமக்கு எப்படிப்பட்ட முழு சுதந்திரமான சுயாதீனம் இருக்க முடியும்? இயற்கையின் ஆழ்மட்டத்தில், குவாண்டம் இயக்கவியலின் (Quantum Mechanics) படி, இந்த அண்டம் சில ஒழுங்கற்ற சுபாவம் கொண்டுள்ளது – இதை நிகழ்தகவு கொண்டே கணிக்க முடிகின்றது (அண்டக்கா கசம்). ஆக, இந்த அண்டம் விதிகளுக்கு உட்பட்ட பல சாத்தியங்களில் ஒன்றை தொடரலாம். ஆனால் இந்த ஒழுங்கற்ற ஏதேச்சையான சாத்தியம் எப்படி திட்டமிட்ட, உறுதியான நம் சுயாதீன முடிவை தரமுடியும்?

நம் செய்கைகள், நாம் எடுக்கும் முடிவுகள், நம் செயல்கள் என அனைத்தையும் நம் மரபணுக்கள் (பரிணாம வளர்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டவை), நம் சுற்று சூழல்கள்/அனுபவங்கள் (கற்றல்) மற்றும் சில எதேச்சையான சீரற்ற நிகழ்வுகள் நிர்ணயிக்கின்றன (ஆன்மா போன்று வேறு ஏதாவது ஒரு மேஜிக் காரணி உண்டா? ஆன்மாவை தேடி). பல்வேறு சாத்தியங்களை ஆராய்ந்து முடிவு எடுக்கக்கூடிய, அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய கணினி நிரல்களை உருவாக்க முடியும். இன்று பங்குசந்தை-வர்த்த-கணினி-நிரல்களை போன்ற சிக்கலான, கற்றுக்கொள்ள கூடிய, அறிவார்ந்த முடிவுகளை எடுக்கக்கூடிய பல கணினி நிரல்கள் உண்டு. இது போன்ற கணினி நிரல்களை ஒப்பிடும்போது, நாம் எடுக்கும் முடிவுகள் அடிப்படையில் எப்படி வேறுபட்டது? நாம் சுய-உணர்வோடு (Consciousness) எடுப்பதிலா?

(A மற்றும் B கட்டத்தில் உள்ள நிறங்கள் அப்படியே ஒன்றுதான். இப்படத்தை காகிதத்தில் நகழெடுத்து, இந்த கட்டங்களை வெட்டி எடுத்து அருகருகே வைத்து பார்க்கவும்)

இவை இரண்டும் அப்படியே ஒன்றுதான் என்ற உண்மை நமக்கு சுய-உணர்வோடு தெரிந்தாலும், ஏன் நாம் அப்படி உணர்கின்றோம் என்ற காரணத்தை புரிந்து கொண்டாலும், அதன் செயல்பாடுகளுக்கான மூளையின் நரம்பணு-வலைச்சுற்றுக்களை அறிந்து கொண்டாலும், அது நாம் எப்படி பார்க்கின்றோம் என்பதை மாற்றப் போவதில்லை. நம் சுய-கட்டுப்பாட்டு பகுதியின் செயல்முறை எவற்றை செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதோ அவற்றை மட்டுமே அதனால் செய்ய முடியும். ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணர்ச்சிகளைப்* பற்றி மக்கள் பேசி உள்ளனர், எழுதி உள்ளனர், படித்து உள்ளனர், ஆராய்ந்து உள்ளனர், பாடி உள்ளனர், ஆடி உள்ளனர், அரங்கேற்றி உள்ளனர்... ஆனாலும், இப்பொழுது அது நமக்கு நிகழ்ந்தாலும்... அது அதே ஆனந்தத்துடன்!... அதே வலியுடன்!

சுயமாக நினைத்த பொழுது உங்கள் கையை உயர்த்துங்கள்; அல்லது மூச்சை அடக்குங்குகள் – எவ்வளவு நேரம் அடக்க முடிகின்றது? ஏன் அதற்கு மேல் முடியவில்லை? சில வினாடிகள் இதயத்துடிப்பை** நிறுத்துங்கள் அல்லது அதன் வேகத்தை கூட்டவோ குறைக்கவோ செய்யுங்கள் – ஏன் முடியவில்லை? நம் மூளையின் சுய-கட்டுப்பாட்டு பகுதி செயல்முறைக்கு மூளையின் மற்ற பகுதியுடன் ஒரு சில குறிப்பிட்ட தொடர்புகளும், வழிமுறைகளும் இருக்குமாறே மூளை பரிணாம வளர்ச்சியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் என்ன செய்கின்றோம், என்ன சிந்திக்கின்றோம், எவற்றை செயல்படுத்த முடியும், எவற்றை செயல்படுத்த முடியும் என நினைக்கின்றோம் – இவற்றை மட்டுமே நாம் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளோம்; அவற்றை மட்டுமே நாம் செய்யுவோம்! அப்படியெனில் நாம் சுய-உணர்வோடு சுயாதீனமாக கட்டுப்படுத்துவதாக நினைப்பது என்ன?

ஒரு சோதனையில்***, நபர்கள் வேண்டிய பொழுது சீரற்ற முறையில் தன்னிச்சையாக கைமணிக்கட்டை முடுக்க (மேசையின் மேல் விரல்களால் தட்டுதல்) சொல்லப்பட்டார்கள். அப்பொழுது அவர்களுடைய மூளையின் செயல்பாடுகளின் குறியீட்டு அலைகள் (தயார்நிலை குறியீட்டு அலை; Readiness potential signal) அளவிடப்பட்டது. அந்த நபர்கள் எப்பொழுது முடுக்க நினைத்தார்கள் (உடலியலான செயல்பாடு அதற்கு பிறகு ஏற்படும்) என்பதை அறிய இரண்டாவது கையிலுள்ள கடிகார நிலையை, முடுக்க முடிவெடுக்க நினைக்கும் போது குறிக்க சொல்லப்பட்டார்கள். இச்சோதனையிலிருந்து, நபர்கள் சுய-உணர்வோடு முடிவெடுத்ததாக நினைப்பதற்கு 1/2 வினாடிக்கு முன்பே, மூளையின் மற்ற பகுதியின் செயல்பாடுகள் அதை முடிவெடுக்கின்றன – சுய-உணர்வு அதற்கு பிறகே ஏற்படுகின்றது என்பதாக தெரிகின்றது. இச்சோதனை பல ஆராய்ச்சியாளர்களால் பல்வேறு விதமாக பலமுறை திரும்ப செய்யப்பட்டுள்ளது. வினைசார்-காந்த-ஒத்ததிர்வு-வரைவு (Functional Magnetic Resonance Imaging அல்லது fMRI) எந்திரம் மற்றும் ஒற்றை நரம்பணு குறியீட்டு அலைகளை அளப்பது போன்ற மற்ற உத்திகளை பயன்படுத்தி நபர்களின் சுய-உணர்வான முடிவை, 10 வினாடிகளுக்கு முன்பு வரை கணிக்க முடிகின்றது!

மற்றொரு சோதனையில் நபர்கள் சீறற்ற முறையில் வேண்டிய பொழுது இடது அல்லது வலது கையை உயர்த்த சொல்லப்பட்டார்கள். மூளையின் இடது அல்லது வலது அரை-கோளத்தில் ஒரு பகுதியில் TMS (Transcranial Magnetic Stimulation) எனப்படும் காந்த அதிர்வலைகளை செலுத்தி அவர்களின் முடிவெடுத்தல் வெளிப்புறத்திலிருந்து கட்டுப்படுத்தப்பட்டது. அப்பொழுதும் அவர்கள் சுய-உணர்வோடு தன்னிச்சையாக, சுயாதீனமாக முடிவெடுப்பதாகவே நினைக்கின்றார்கள்!

மற்றுமொரு சோதனையில்****, ஒரு நபர் கண்ணாடிக்கு முன்பு அமர்த்தப்பட்டு, அவர் முழங்கையிலிருந்து அவருக்கு பின்னாலுள்ள மற்றொருவரின் கைகளை கொண்டு விரிவுபடுத்தப்பட்டது. பார்ப்பதற்கு பின்னால் உள்ள நபரின் கைகளின் அசைவுகள் கண்ணாடிக்கு முன்னால் அமர்ந்துள்ளவரின் கைகளின் அசைவுகளை போன்று தோன்றும். இப்பொழுது பின்னால் உள்ளவர் கைகளை எப்படி அசைக்க வேண்டும் (ஆட்டுதல், நகர்த்தல், மூக்கை தொடுதல்) என்பதற்கான ஒலிநாடவின் கட்டளைகளை கண்ணாடி முன் அமர்ந்து உள்ளவரும் கேட்டால், அவர்தான் அந்த கைகளை தன் கட்டுப்பாட்டில், சுயாதீனமாக அசைப்பதாக நினைக்கின்றார்!

நம் மூளை எப்படி சுய-உணர்வு நிலையை உருவாக்குகின்றது என்பதை நாம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்றாலும், இந்த சோதனைகள் மற்றும் இதர பல சோதனைகள், பல்வேறு ஆதாரங்கள், மற்றும் கோட்பாடு அடிப்படையிலான மூளையின் கட்டமைப்பு ஆகியவற்றை கொண்டு பார்த்தால், நம் சுய-உணர்வுக்கு எட்டாத மூளையின் மற்ற பகுதிகளின் செயல்பாடுகளே நம் முடிகவுகளையும், செயல்களையும் நிறைவேற்றுகின்றன; பிறகு அதை சுய-உணர்வு பகுதி அறிந்து கொள்கின்றது! நம் செய்கைகளுக்கும், நாம் எடுக்கும் முடிவுகளுக்கும் நமக்கு எந்த அளவு மற்றும் எப்படிப்பட்ட கட்டுப்பாடு, ஆளுமை உள்ளது என்பதை அறிய, நாம் மூளையின் கட்டமைப்பை மேலும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் - ஆனால், தற்போதைய புரிதல்களையும், ஆதாரங்களையும் வைத்துப் பார்த்தால், கண்டிப்பாக நாம் நினைக்கும் அளவிற்கு அது இல்லை! ஆழ்மட்டத்தில் இந்த உண்மை நமக்கு தெரிந்திக்க வேண்டும் – அதனால் தான், வேறு வழியின்றி மூளையின் செயல்நிலையை (மனநிலையை) மாற்றும் பொருட்களை (காப்பி, சாராயம், புகையிலை, அபின், கொக்கேன், LSD) மற்றும் முறைகளை (இசை, வழிபாடு, தியானம்) நோக்கி உந்தப்படுகின்றோம் – இவற்றில் சில மிகவும் ஆபத்தானவையாக இருந்தும் கூட!


முயல்: சுயாதீனம் இல்லை என்றால் மக்கள் அவர்களின் செய்கைகளுக்கு தனிப்பட்ட பொறுப்பு எடுத்து கொள்ளாமல் போகலாமே?

ஆமை: நம் சுற்றுச்சூழல், சமூகத்தின் எதிர்பார்ப்பு நம் நடத்தையை பாதிக்கின்றன. பொதுவாக அன்றாட நடைமுறை வாழ்கையில் தனிமனித பொறுப்பை நாம் மக்களிலிடமிருந்து எதிர்பார்க்கலாம். குற்றங்களுக்கான சட்டதிட்டங்கள் நம் சமூகத்தில் வேண்டும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஆனால் தவறு செய்தவர்களை மேலும் இரக்கத்துடன் நடத்தலாம். சிறைச்சாலைகளை அவர்களை வழிமுறைப்படுத்தும் இடமாக மாற்றலாம்.

முயல்: மக்களின் சாதாரண நெறிமுறைகள் கூட பாதிக்க படலாமே?

ஆமை: சுயாதீனத்தை நம்புபவர்கள், நம்பாதவர்களை விட அதிகமாக அடுத்தவர்களுக்கு உதவலாம் என ஒரு ஆய்வு காட்டுகின்றது. ஆனால், சரியான முழு விபரம் அறிந்தவர்கள் சரியாகவே நடந்து கொள்வார்கள் என்பதே என் எண்ணம். நம் அனைவருக்கும் துன்பப்படும் தகுதியும் உண்டு (அதும் மூளையின் ஒரு திறனே), அடுத்தவரின் துன்பத்தை உணர்ந்து கொள்ளும் தகுதியும் உண்டு, அதற்கு ஏதாவது செய்ய முடியும் தகுதியும் உண்டு! எப்படியாகிலும், நம்மை பற்றி நாம் மேலும் அறிந்து கொள்ளும் போது, மேலும் நன்றாக வாழ நாம் வழிகளை காண்போம்; ஏனெனில், அறிவு = ஆற்றல்!

முயல்: நம் மரபணுக்களையோ, கடந்த கால அனுபவத்தையோ எளிதாக மாற்ற முடியவதில்லை. பல நேரம் நாம் கடந்த கால அனுபவத்தின் பலிகடாவாக உள்ளோம். அதன் கட்டுக்கோப்பிலிருந்து விடுபட இயற்கையான சாத்தியம் என்ன?

ஆமை: முற்றிலும் புதிய சூழ்நிலை ஏற்படுவதற்கான சாத்தியத்தை உருவாக்கலாம். புத்தகங்கள் படிப்பது, புதியவற்றை படிப்பது…கற்பது, புதியவர்களை சந்திப்பது, புதிய இடங்களுக்கு பயணம் செய்வது போன்றவை புதிய மாற்றங்களுக்கான கதவுகளை திறக்கலாம்!

முயல்: நன்று! புதிய தேடல்களுக்கான நம் துணிவான பயணம் தொடரட்டும்!



மேலும்: மன விளையாட்டு


* மூளையின் மேல்மட்ட சிந்திக்கும் பகுதி கொண்டு உணர்ச்சிகளை ஓரளவு கட்டுப்படுத்தலாம். மூளையின் பல்வேறு பகுதிகளை மறைமுகமாக கட்டுப்படுத்தும் வழிமுறைகளை நாம் கற்று கொள்கின்றோம். அவ்வாறே நாம் நம்மையே ஊக்கப்படுத்தி கொள்கின்றோம்; நம்மையே நாம் ஏமாற்றி கொள்கின்றோம்
** உடல் இயங்கியல் பின்னூட்டம் மூலம் (பல்வேறுவிதமான சூழ்நிலைகளை/நிகழ்வுகளை மனதில் கற்பனை செய்து) மறைமுகமாக இதயத்துடிப்பின் வேகத்தை மாற்றலாம்.
*** பெஞ்சமின் லிபெட் (Benjamin Libet) என்பவர் முதலில் இச்சோதனையை செய்தார்.
**** மனவியல் ஆராய்ச்சியாளர் டேன் வேக்னர் (Dan Wegner) என்பவர் இதை ஆராய்ந்தார்.