31 January 2011

ஆன்மாவை தேடி

மனிதர்கள், விலங்குகள் போன்ற இயக்கமுடைய பொருட்களுக்கும், பாறை, நாற்காலி, தாவரங்கள் போன்ற இயக்கமில்லாத பொருட்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு என்ன? இயக்கமுடைய பொருட்களுக்கு புதிரான ஒரு உயிர் சக்தி இருப்பதாகவும், அதனாலேயே அவை இயக்கமடைகின்றன என்றும் நம்முடைய முன்னோர்கள் நினைத்தனர். அந்த புதிரான உயிர் சக்தியை ஆன்மா என்றழைத்தனர். அந்த கருதுகோளை மேலும் விரிவுபடுத்தி, மரணத்திற்கு பின் ஆன்மா உடலை விட்டு பிரியும் என்றும், அது ஒருபோதும் சாவதில்லை என்றும் நம்பினர் (பாவம் செய்யாதவர்கள், குழந்தைகள் படும் துன்பங்களை விளக்க உருவான முன்-ஜென்ம-பாவம் என்ற யோசனைகளுக்கும், நரகம்-சொர்க்கம் போன்ற யோசனைகளுக்கும் அது ஏதுவாக உதவியது).

பிறகு தாவரங்கள் உயிர் என்பதையும், மேலும் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிரிகளையும் கண்டறிந்து கொண்டோம். இப்பொழுது, உயிர் என்பது ஒரு சிக்கலான தொடர்ச்சியாக நிகழும் வேதிவினைகளின் தொகுப்பு என்பதையும், மேலும் அது எவ்வாறு பாக்டீரியா போன்ற எளிய அமைப்பிலிருந்து தாவரங்கள், மீன்கள், விலங்குகள் மனிதர்கள் உட்பட பலவகை உயிரினங்களாக இயற்கை-தேர்வு-முறையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன என்பதையும் அறிந்துள்ளோம். பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களையும் இணைக்கும், உயிரின் இரகசிய மரபியல் மூலக்கூறையும் (DNA), அதன் நான்கு எழுத்துக்களை (A, C, G, T) கொண்ட மரபு குறிப்புகளையும் அறிவோம். மரபியல் மூலக்கூறு உட்பட, உயிரின் அனைத்து மூலப்பொருட்களையும் நம்மால் செயற்கையாக தயாரிக்க முடியும். 50 கோடி மக்களை கொன்ற, முற்றிலும் மறைந்து போன 1918 தொற்று வைரஸை (Flu virus), ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் மீண்டும் உயிர் கொண்டு வந்துள்ளனர். நம் உடலின் ஒரு செல்லை (உயிரணு) கொண்டு, நம்முடைய உருப்புகளையோ அல்லது ஒத்த மரபணுக்களை உடைய மற்றொரு நபரையோ (Clone) உருவாக்க முடியும்.

உயிரின் அடிப்படையை நாம் புரிந்து கொள்ளும் வேளையில், ஆன்மா என்ற கருதுகோள் மெதுவாக நம் மனதிற்கு நகர்த்தப்பட்டது. உடல் வேறு மனம் வேறாக, நாம் உணரும் உடல்-மனது இருமை (Mind-body dualism) இந்த யோசனை துளிர் விட வைத்தது. மனம் என்பது உடலிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, தனித்த ஒன்று என்று மக்கள் நினைத்தனர்; இன்றும் பலர் நினைக்கின்றனர் (இதயம் தான் ஆன்மாவின், அன்பின், காதலின் மையம் என்றும் மக்கள் நினைத்ததுண்டு). மூளை ஏதோ ஒரு மாயமான முறையில் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு உருவாகுவது தான் மனம் என்று நம்பினர். மரணத்தை-தொட்டு-வந்தவர்களின் அனுபவங்கள் (Near-death experience), உடலை விட்டு மனம் பிரியும் அனுபவங்கள் (Out-of-body experience) (அதன் விரிவுபடுத்தப்பட்ட கதையான கூடுவிட்டு கூடு பாய்தல்) போன்ற பலவகையான வினோதமான நிகழ்வுகள் இந்த யோசனையை மேலும் கொழுந்துவிட்டு எரிய வைத்தது.

கால்கள் செயல்படும் போது 'நடத்தல்' வெளிபடுவது போல், மூளை செயல்படுதலின் வெளிப்பாடு தான் மனம். இப்பொழுது, மூளை செயல்படுவதை fMRI (functional Magnetic Resonance Imaging) எனப்படும் 'வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு' எந்திரம் மூலம் நேரடியாக பார்க்கலாம். நம்முடைய உணர்வுகள் மூளையில் எங்கு அறியப்படுகின்றன, உணர்ச்சிகள் எப்படி கையாளப்படுகின்றன, எந்த வழிகளில்...எப்படி நம்முடைய தற்காலிக அனுபவ நினைவுகள் நீண்ட கால நினைவுகளாக சேமிக்கப்படுகின்றன போன்றவற்றை நாம் அறிவோம். இப்பொழுது, மரணத்தை-தொட்டு-வந்தவர்களின் அனுபவங்கள் (மூளையின் செல்களில் ஆக்ஸிஜன் குறைவால் ஏற்படும் குகைவழியின்-கடைசியில்-தெரியும்-ஒளி போன்ற அறிகுறிகள்), உடலை விட்டு மனம் பிரியும் அனுபவங்கள் (உடலை விட்டு மனம் பிரிவது போன்ற மாயை) போன்ற பலவகையான வினோதமான நிகழ்வுகளை நம்மால் விளக்க முடியும். உடலை விட்டு மனம் பிரியும் அனுபவத்தை காந்த அலைத்துடிப்புகளை கொண்டு நம்மால் எளிதாக தூண்ட வைக்கமுடியும்.

நம் மூளை வலது-இடது என இரண்டு அரைக்கோளங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. வலது-அரைக்கோளம் நம் இடப்பக்க உடலையும், இடது-அரைக்கோளம் நம் வலப்பக்க உடலையும் கட்டுப்படுத்துகின்றது. இந்த இரண்டு அரைக்கோளங்களையும் இணைப்பு-மெய்யம் (Corpus Callosum) எனப்படும் ஒரு கட்டான நரம்பிழைகள் இணைக்கின்றன. பலவகைகளில், இந்த இரண்டு அரைக்கோளங்களையும் இரண்டு தனி மூளைகளாக பாவிக்கலாம். சில காரணங்களுக்காக, இவற்றை இணைக்கும் இணைப்பு-மெய்யம் துண்டிக்கப்பட்டால், இரண்டு அரைக்கோளங்களின் இரு வேறுபட்ட பண்புகளையும், விருப்பு வெறுப்புகளையும், ஆசா பாசங்களையும், நம்பிக்கைகளையும் கவனிக்க முடியும். உதாரணமாக, இந்த நிலையில் உள்ள சில நோயாளிகள், ஒருபக்க அரைக்கோளத்தில் கடவுளை நம்பிக்கை உள்ளதாகவும், மறுபக்க அரைக்கோளத்தில் கடவுளை நம்பிக்கை இல்லை எனவும் கூறுகின்றனர் (நம் இரண்டு கண்களிலிருந்து செல்லும் குறிப்பலைகள் மூளையின் வெவ்வேறு அரைக்கோளத்தில் பகுத்து அறியப்படுவதால், ஒரு கண்ணை மூடிவிட்டு இச்சோதனையை செய்ய முடியும்). ஆன்மா என்ற ஒன்று இருந்தால், இங்கு அது பாதியாக பகுக்கப்பட்டிருக்க வேண்டும் (ஒருவேளை, அவர்களின் ஒருபாதி ஆன்மா சொர்க்கத்திற்கும், மறுபாதி ஆன்மா நரகத்திற்கும் செல்லலாம்!).

எனினும், மற்றொரு கோணத்தில், ஆன்மா என்ற ஒன்று உண்மையிலே உண்டு! அது எந்த ஒன்றிலிருந்தும் வெளிப்படும் ஒரு சாரம் அல்லது ஜீவன் ஆகும். அது ஒரு புத்தகத்தின் ஆன்மாவாக இருக்கலாம், அல்லது ஒரு திரைப்படத்தின் ஆன்மாவாக இருக்கலாம். அது பல நுண்ணிய புள்ளிகளை (படத்துணுக்குகள்) கொண்டு ஒரு படம் வெளிப்படுவது போன்றது; பல எழுத்துக்களை கொண்டு ஒரு புத்தகத்தில் கதை வெளிப்படுவது போன்றது; சில தொடர்ந்த வேதிவினைகளின் தொகுப்பை கொண்டு ஒரு உயிருள்ள செல் வெளிப்படுவது போன்றது. ஒரு உயிருள்ள செல் என்பது எந்தவித விருப்பு-வெறுப்பு அற்ற, ஆசா-பாசங்கள் அற்ற வேதிவினைகளின் தொகுப்பு. ஆனால், இப்படிப்பட்ட பலகோடி செல்களின் ஒன்று கூடிய செயல்பாட்டின் வெளிப்பாடே... உணர்ச்சி, நம்பிக்கை, விருப்பு-வெறுப்பு, ஆசா-பாசங்கள், வலி-சுகம் கொண்ட மனம்! அது ஒரு மனிதனின் சாரம், ஜீவன், ஆன்மா!

10 January 2011

அண்டக்கா கசம்

தூரத்தில் இருந்து பார்க்கும் போது தொலைகாட்சி திரையிலுள்ள படம் தொடர்ச்சியாகவும், தெளிவாகவும் தெரிகின்றது. ஆனால் அருகில் சென்று பார்த்தால், அது பல்லாயிரக்கணக்கான நுண்ணிய தனித்தனியான புள்ளிகளை (படத்துணுக்குகள்) கொண்டு அமைக்கப் பட்டுள்ளதை அறியலாம். நாம் வாழும் இந்த உலகமும் (அண்டமும்) அப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளது. உயர்மட்டத்தில், அதாவது நாம் சாதாரணமாக உணரகூடிய அளவில், அனைத்தும் தொடர்சியாகவும், எளிதாக அறிதியிட்டு கூற முடிந்ததாகவும், காரண-காரியங்களை அறிந்து கொள்ளக் கூடியதாகவும் தெரிகின்றது. ஆனால் ஆழமான மட்டத்தில், அதாவது அணு அளவில், அனைத்தும் தனித்தனியான அளவிலும், தனித்தனியான நுண்பொருட்களாகவும் இருக்கின்றது. இந்த தனித்தனியான நுண்பொருட்களை அடிப்படைத் துகள்கள் (Elementary Particles) என்கின்றோம். இவை நம் உலகின் கட்டுமானப் பொருட்கள். இந்த மட்டத்தில், நம்முடைய உலகம் மிகவும் வினோதமாக இருப்பதால், அடிப்படைத் துகள்களின் செயல்பாடுகளை மற்றும் அவை எவ்வாறு ஒன்றுக்கொன்றுடன் இடைபடுவினை கொள்கின்றன என்பதை விளக்க குவாண்டம் இயக்கவியல் (Quantum Mechanics) எனப்படும் முற்றிலும் புதிய இயற்பியல் தேவைப்பட்டது. ஒரு அடிப்படை துகள் ஒரே சமசயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் இருக்க முடியும். அங்கு காலம் இரு திசைகளிலும் செல்லும். ஒரு அடிப்படை துகளின் நிலையை (எந்த இடம், முடுக்கம்,…) நிகழ்தகவு வரையறைக்குள் மட்டுமே குறிக்கமுடியும்; திட்டவட்டமாக அறிதியிட்டு கூற முடியாது. இந்த ஒழுங்கற்ற நிகழ்தகவு சுபாவம் இயற்கையின் அடிப்படையான நிதர்சனம்; அது எந்த விதத்திலும் நம்முடைய புரிதலின் குறைபாடு அல்ல! உயர்மட்டத்தில், நாம் இவற்றின் ஒட்டுமொத்த சீர்படுத்தப்பட்ட சராசரி நிலையை காண்கின்றோம். அதனால், நம்முடை அன்றாட வாழ்கையின் அனுபவ அளவில், எளிதாக அறிதியிட்டு கூறமுடிந்த ஒழுங்கான இயல்பை இயற்கையில் காண்கின்றோம். குவாண்டம் இயக்கவியல் மனிதன் உருவாக்கிய தியரிகளில் மிகச்சிறந்த ஒன்று; அது பலமுறை திரும்ப திரும்ப துல்லியமாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது! குவாண்டம் இயக்கவியல் அணுவின் அமைப்பையும், தனிம வரிசை அட்டவணையில் உள்ள அனைத்து தனிமங்களையும் நேர்த்தியாக விளக்குகின்றது!

கீழே உள்ள படம், அறியப்பட்ட அனைத்து அடிப்படை துகள்களையும் காட்டுகின்றது. ஒவ்வொரு அடிப்படைத் துகளின் குறியீடு நடுவிலும், அதன் நிறை (mass), மின்னூட்டம் (charge), சுழற்ச்சி (spin) மற்றும் பெயர் (name) மேலிருந்து கீழாக, மேல் குவார்க்குவில் (Up quark) காட்டப் பட்டுள்ளது போல் குறிக்கப்பட்டுள்ளது.
 • முதல் மூன்று நெடுக்குவரிசையில் பருப்பொருள் துகள்கள் (Fermions) காட்டப்பட்டுள்ளன. அவை மூன்று தலைமுறைகளாக (I, II, III Generations) வருகின்றன. அவற்றின் நிறை வேறுபாட்டை தவிர, ஒவ்வொரு தலைமுறை துகள்களும் ஒரே மாதிரி பண்புகளை கொண்டுள்ளன (படத்தில் அவற்றின் வேற்றுமை ஒற்றுமைகளை கவனிக்கவும்). II-தலைமுறை I-தலைமுறையை விட கனமாகவும், III-தலைமுறை II-தலைமுறையை விட கனமாகவும் உள்ளது. III மற்றும் II தலைமுறை துகள்கள் உடனடியாக சிதைவடைந்து மிககுறைந்த ஆற்றல் நிலையான I-தலைமுறை துகள்களாக மாறிவிடுவதால், நாம் I-தலைமுறை துகள்களை கொண்டு அமைக்கப்பட்ட பொருட்களை மட்டுமே உலகில் காண்கின்றோம் (ஆனால் III மற்றும் II தலைமுறை துகள்களை சோதனைக்கூடத்தில் உருவாக்க முடியும்). மேலும் பருப்பொருள் துகள்கள் குவார்க்குகள் (Quarks) மற்றும் லெப்டான்களாக (Leptons) தொகுக்கப் பட்டுள்ளது.
 • நான்காவது நெடுக்குவரிசையில் போஸான்கள் (Bosons) எனப்படும் விசை-கடத்தி துகள்கள் காட்டப்பட்டுள்ளன. அவை இயற்கையின் அடிப்படை விசைகளுக்கு காரணம். இந்த துகள்களின் பரிமாற்றம் அல்லது இடைபடுவினைகளின் விளைவு தான் இயற்கையில் நாம் காணும் விசைகள். இயற்கையில் நான்கு அறியப்பட்ட அடிப்படை விசைகள் உண்டு: மின்காந்த விசை [ஃபோட்டான்] (Photon), நிறையீர்ப்பு (புவியீர்ப்பு) விசை [கிராவிட்டான்] (Graviton), வலிமையான விசை [குலுவான்] (Gluon), வலுவற்ற விசை [W மற்றும் Z]. ஃபோட்டான்கள் மின்புலம், காந்தபுலம் மற்றும் ஓளி எனப்படும் மின்காந்த அலை ஆகியவற்றிக்கு காரணம். குலுவான்கள் வலிமையான அணுக்கரு விசைக்கு காரணம்; இவை புரோட்டான்களை (குவார்க்குகளை) அணுக்கருவினுள் பிணைத்து வைத்துள்ளன. W மற்றும் Z துகள்கள் வலுவற்ற அணுக்கரு விசைக்கு காரணம்; இவை அணுக்கரு கதிரியக்கத்தில் தொடர்புடையவை. கிராவிட்டான்கள் நிறையீர்ப்பு (புவியீர்ப்பு) விசைக்கு காரணம். ஆனால் இத்துகள்கள் இன்னும் கண்டுபிடிக்க படாததால் படத்தில் காட்டப் படவில்லை.
 • ஒவ்வொரு துகளுக்கும் அதனுடன் தொடர்புடைய எதிர்த் துகளும் (Antiparticle) உண்டு (எதிர்த் துகள்கள் முதலில் தியரி மூலம் கணிக்கப்பட்டு பின் சோதனையில் கண்டறியப்பட்டவை). உதாரணமாக, எலக்ட்ரானின் எதிர்த் துகள் பாஸிட்ரான். எதிர்த் துகள்கள் படத்தில் காட்டப்பட வில்லை. ஒரு புதிய துகள் உருவாகும் போது அதன் எதிர்த் துகளும் சேர்ந்தே உருவாகும் (நாம் சோதனைக் கூடத்தில் உருவாக்கும் போது அப்படித்தான் நிகழும்). ஒரு துகளும் அதன் எதிர்த் துகளும் மோதிக் கொண்டால், அவை நிர்மூலமாகி ஃபோட்டான்கள் போன்ற வேறுசில துகள்கள் உருவாகும். ஆனால் நாம் காணும் உலகில் துகள்கள் மட்டுமே உள்ளன.

கீழே உள்ள படம், அடிப்படை துகள்கள் எவ்வாறு ஒன்றுக்கொன்றுடன் இடைபடுவினை கொள்கின்றன என்பதை காட்டுகின்றது.

 • மேல் பகுதியில் பருப்பொருள் துகள்கள் காட்டப்பட்டுள்ளன: லெப்டான்கள் மற்றும் குவார்க்குகள். நடு பகுதியில் விசை-கடத்தி துகள்கள் காட்டப்பட்டுள்ளன: ஃபோட்டான், W - Z துகள்கள் மற்றும் குலுவான். கீழ் பகுதியில் தியரி மூலம் கணிக்கப்பட்டுள்ள, ஆனால் முழுமையாக அறியப்படாத ஹிக்ஸ் விசை-கடத்தி துகள் காட்டப்பட்டுள்ளது.
 • குலுவான்கள் குவார்க்குகளுடன் மட்டுமே இடைபடுவினை கொள்கின்றன. அவை குவார்க்குகளை இணைத்து அணுக்கருவை அமைக்கின்றன.
 • ஃபோட்டான்கள் பருப்பொருள் துகள்களுடன் இடைபடுவினை கொள்கின்றன.
 • ஹிக்ஸ் விசை-கடத்தி துகள்களுடன் இடைபடுவினை கொள்ளும் துகள்கள் அதன் நிறையை பெறுகின்றன. நீரினுள் நகரும் பொருட்கள் அதன் தடையை உணருவது போல், ஹிக்ஸ் விசை-கடத்தி துகள்களால் உருவான ஹிக்ஸ் புலத்தின் (ஃபோட்டான்கள் மின்புலம், காந்தபுலம் உருவாக்குவது போல்; கிராவிட்டான்கள் நிறையீர்ப்பு புலத்தை உருவாக்குவது போல்) தடையை அதனுடன் இடைபடுவினை கொள்ளும் துகள்கள் உணருவதையே நாம் நிறை என்கின்றோம்.
கீழே உள்ள படம், அடிப்படைத் துகள்களை கொண்டு நாம் காணும் உலகை விவரிக்கின்றது.

 • இடப்பக்கத்தில் பருப்பொருட்களின் ஒருங்கிணைப்பு காட்டப்பட்டுள்ளது. 2 மேல்-குவார்க்குகள் (மின்னூட்டம் = 2/3) மற்றும் 1 கீழ்-குவார்க்கு (மின்னூட்டம் = -1/3) இணைந்து ஒரு அலகு நேர்-மின்னூட்டம் கொண்ட புரோட்டானை (2/3 + 2/3 - 1/3 = 1) உருவாக்குகின்றது. 1 மேல்-குவார்க்கு மற்றும் 2 கீழ்-குவார்க்குகள் இணைந்து நடுநிலை-மின்னூட்டம் கொண்ட நியூட்ரானை (2/3 - 1/3 - 1/3 = 0) உருவாக்குகின்றது. வெவ்வேறு எண்ணிக்கையில் புரோட்டான்களும், நியூட்ரான்களும் இணைந்து பலவகை அணுகருக்களும், அதனை சுற்றி எலக்ட்ரான்கள் கொண்டு அணுக்களும் உருவாகின்றன. அணுக்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாகின்றன. நட்சத்திரங்கள், கருங்குழிகள் (Black holes), கோள்கள், மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்கள் என அணைத்தும் அணுக்களாலும், அதன் மூலக்கூறுகளாலும் அமைக்கப்பட்டவை!
 • வலப்பக்கத்தில் விசைகளின் ஒருங்கிணைப்பு காட்டப்பட்டுள்ளது. குலுவான்களின் இடைபடுவினைகளை குவாண்டம் குரோமோ-இயக்கவியல் (Chromo-dynamics) கொண்டு விளக்கப்பட்டுள்ளது. ஃபோட்டான்களின் மின்காந்தம், குவாண்டம் மின்-இயக்கவியல் (Electro-dynamics) கொண்டு விளக்கப்பட்டுள்ளது. மின்காந்தம் மற்றும் அணுக்கரு-வலுவற்ற-விசையை ஒருங்கிணைத்த மின்-வலுவற்ற (Electro-weak) தியரியை கொண்டு விளக்க முடியும். மின்-வலுவற்ற தியரியை, குரோமோ-இயக்கவியலுடன் ஒருங்கிணைத்து பெரிய-ஒருங்கிணைப்பு (Grand unified) தியரியை கொண்டு விளக்க முடியும். கடைசியாக, பெரிய-ஒருங்கிணைப்பு தியரியை நிறையீர்ப்புடன் (கிராவிட்டான்) இணைத்து ஒரு ஒருங்கிணைந்த, அணைத்திற்குமான ஒன்றுபட்ட தியரியை (Theory of everything) உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட முழுமையான தியரி பல்வேறு காரணங்களால் இன்னும் அகப்படாமலே உள்ளது.
குவாண்டம் இயக்கவியலுக்கு முன்பிருந்த இயற்பியலை செவ்வியல் இயக்கவியல் (Classical mechanics) என்கின்றோம். அதன் படி, நிறையீர்ப்பை (புவியீர்ப்பு) நியூட்டன் முதன் முதலில் எளிய சமன்பாட்டின் மூலம் விளக்கினார். பிறகு ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டை இணைத்து மேலும் அதை சரிபடுத்தினார் (பொது சார்பியல்; General relativity). நிறையீர்ப்பு ஒரு வலுவற்ற விசையாகும் (அணுக்கரு-வலுவற்ற-விசையை விட மிகமிக வலுவற்றது). ஒரு இரும்பு துண்டை இந்த மொத்த பூமியும் சேர்த்து கீழ்நோக்கி இழுத்தாலும், ஒரு சிறு காந்தத்தை கொண்டு தூக்கிவிட முடியும். நிறையீர்ப்பு அவ்வளவு வலுவற்று இருப்பதால், அதை சாதாரண பொருட்களுக்கிடையே, மனிதர்களுக்கிடையே நாம் உணர்வதில்லை. அதன் விளைவை பூமி, சூரியன், சந்திரன் போன்ற மிகப்பெரிய நிறையுள்ள பொருட்கள் மூலமே அறிந்து கொள்ள முடிகின்றது. அது மிக வலுவற்று இருந்தாலும், அந்த விசைதான் நம்மை பூமியில் நிலைப்படுத்துகின்றது; சந்திரன் பூமியை சுற்றிவர காரணமாகின்றது; கோள்கள் சூரியனை சுற்றிவர காரணமாகின்றது; நட்சத்திரங்கள் இணைந்த மண்டலங்கள் உருவாக காரணமாகின்றது. நிறையீர்ப்பை பொது-சார்பியல் கோட்பாடு துள்ளியமாக விளக்கினாலும், அது மிகச் சிறிய குவாண்டம் அளவில் எதையும் விளக்க முடியாமல் தோற்றுப் போகின்றது. பெரு வெடிப்பு (Big bang), கருங்குழிகள் (Black holes) போன்றவற்றை விளக்க நிறையீர்ப்பின் குவாண்டம் தன்மை (அதனால் அணைத்திற்குமான ஒன்றுபட்ட தியரி) அவசியமாகின்றது.

ஐன்ஸ்டீனின் E = mc^2 சமன்பாடு, ஆற்றலும் நிறையும் எப்படி தொடர்புடையவை என்பதை விளக்குகின்றது. நட்சத்திரங்களிலுள்ள அணுக்களில் சில அணுக்கருவின் நிறை ஆற்றலாக (அணுப் பிணைவு மூலம்) மாற்றப்படுகின்றது (ஃபோட்டான்கள் போன்ற அடிப்படைத் துகள்களாக – மின்காந்த கதிர்களாக - ஒளியாக). அவ்வாறே அணுமின் நிலையங்களும், அணுகுண்டும் (அணுப் பிளவு மூலம்) வேலை செய்கின்றது. நிறையிலிருந்து ஆற்றலை பெருவது போல், ஆற்றலை கொண்டு அடிப்படைத் துகள்களை உருவாக்க முடியும். பெரிய-ஹேட்ரான்-மோது உலை (Large Hadron Collider; LHC) போன்ற துகள் முடுக்கிகளில் புரோட்டான் போன்ற துகள்கள் அதி வேகமாக முடுக்கி ஒன்றுக்கொன்றுடன் மோதவிட்டு புதிய அடிப்படைத் துகள்கள் உருவாக்கப்படுகின்றன. இது போன்ற சோதனைகள் ஹிக்ஸ் விசை-கடத்தி துகள்கள் போன்ற தியரி மூலம் எதிர்ப் பார்க்கப்படும் துகள்கள் மற்றும் முற்றிலும் புதிய அடிப்படைத் துகள்களை கண்டறிய உதவுகின்றன (நிறையீர்ப்பு விசை-கடத்தி துகள்களான கிராவிட்டான்களை கண்டறிய, இன்றுள்ள துகள் முடுக்கிகளை விட மிகமிக…மிகமிக அதிக ஆற்றல் கொண்ட முடுக்கிகள் தேவை).

பெரு-வெடிப்பின் (Big Bang) மூலக்காரணம் பற்றி தெளிவற்ற கருதுகோள்கள் (இழை தியரி; String-Theory; மற்றும் அதன் தொடர்ச்சியான M-தியரி) மட்டுமே இருந்தாலும், நாம் காணும் உலகம் பெரு வெடிப்பிலிருந்து தான் உருவாகியது என்பதற்கு நல்ல தியரியும் அதற்கு பல நல்ல ஆதாரங்களும் உண்டு. 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அந்த பெரு-வெடிப்பு, நாம் காணும் உலகத்தில் உள்ள அனைத்திற்குமான ஆரம்பம் - இடம் (Space) மற்றும் காலக் கணை (Arrow of time) உட்பட! அடிப்படையில் காலம் இரு திசைகளிலும் செல்வதால், அதற்கு முன்பு என்ன என்று நாம் சாதாரணமாக உணருவது போல், 'பெரு-வெடிப்புக்கு முன்' என்பது இல்லை. மேலும், பொது சார்பியல் கோட்பாட்டின் படி, நாம் காணும் இடமும் (Space) மற்றும் காலக் கணையும் தோன்றியதே பெரு-வெடிப்பில் தான் எனும் போது, அதன் முன் என்ன என்ற கேள்வி பொருளற்றதாகி விடுகின்றது (இது பூமியின் வடதுருவத்திற்கு வடக்கே என்ன உள்ளது என்பது போன்றது).

எண்ட்ரோப்பி (Entropy) என்பது ஒரு அமைப்பில் உள்ள ஒழுங்கற்ற அல்லது சீரற்ற தன்மையை குறிக்கின்றது. வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதியின் படி, ஒரு மூடிய அமைப்பில் உள்ள எண்ட்ரோப்பி அதிகரிகரித்து கொண்டே இருக்கும். எண்ட்ரோப்பி அதன் அதிகப்பட்ச அளவை எட்டும் போது அந்த அமைப்பு முழு-ஒழுகற்ற அல்லது முழு-சீறற்ற சமநிலை காணும். இந்த சமநிலையிலிருந்து, பெரு-வெடிப்பு மிகக் குறைந்த எண்ட்ரோப்பியை (அல்லது ஒரு செறிந்த ஆற்றலை அல்லது அதிகமான ஒழுங்கை) உருவாக்கியது. அன்றிலிருந்து எண்ட்ரோப்பி அல்லது ஒழுங்கற்ற தன்மை நாம் காணும் உலகில் அதிரிகரித்து கொண்டே இருந்தாலும், இருக்கும் பயன்படு-ஆற்றலை கொண்டு அண்டங்கள், நட்சத்திரங்கள், கோள்கள், உயிர்கள் போன்ற சில ஒழுங்கானவை (இயற்கையின் அடிப்படை விசைகளினால்) தற்காலிகமாக உருவாக்கப்படுகின்றன. நாம் பெரு-வெடிப்பு என்ற மிக் குறைந்த எண்ட்ரோப்பி நிகழ்வின் பின்விளைவில் இருப்பதால், எண்ட்ரோப்பி குறைந்த அளவிலிருந்து அதிக அளவை நோக்கி செல்வதால், நாம் காலம் ஒரு திசையில் (கடந்த காலம் -> நிகழ் காலம் -> எதிர் காலம்) செல்வது போன்ற காலக் கணையை உணர்கின்றோம் (உலகத்தில் மேலே, கீழே என்று இல்லை என்றாலும், அதிக நிறையீர்ப்பு விசையுள்ள பூமியின் கட்டுபாட்டுக்குள் நாம் மேல், கீழ் உணருவது போல், மிக் குறைந்த எண்ட்ரோப்பி நிகழ்வின் பின்விளைவில் நாம் காலக் கணையை உணருகின்றோம்). நாம் காணும் உலகம் அதிகபட்ச எண்ட்ரோப்பியை நெருங்கும் போது, அதாவது முழு-ஒழுகற்ற சமநிலையை அடையும் போது காலக் கணையும் இல்லாது போகும்! அங்கு முன்பு பின்பு என்பதற்கு இடமில்லை! (அந்த நிலையை நோக்கி, நம் உலகம் தோராயமாக பாதி வாழ்நாள் கடந்துள்ளது).


அடிப்படை துகள்களை நாம் துகள் முடுக்கிகளில் உருவாக்குவது போல், பெரு-வெடிப்பில் நாம் காணும் உலகிலுள்ள அனைத்து அடிப்படை துகள்களும் உருவாகின (அதனுடன் எதிர்த் துகள்களும் உருவாகி இருக்க வேண்டும். நாம் முற்றிலும் அறியப்படாத காரணங்களால் நாம் காணும் உலகில் அவை காணவில்லை அல்லது எதிர்த் துகள்களை விட அதிக துகள்கள் உருவாகியிருக்க வேண்டும்). உலகம் விரிவடைந்து, சற்றே குளிர்ந்த பின், இந்த அடிப்படை துகள்கள் ஒன்றுக்கொன்றுடன் இடைபடுவினை புரிந்து ஒன்றுகூடி நாம் காணும் உலகம் உருவாகியது. (மேலும் அறிய: வரலாற்று படங்கள்)

ஒரு கனமான பொருளை மற்ற பொருட்கள் சுற்றிவரும் போது, அருகில் சுற்றும் பொருள் தூரத்தில் சுற்றும் பொருளை விட வேகமாக சுற்றிவர வேண்டும். உதாரணமாக, சூரியனை வெள்ளி பூமியை விட வேகமாகவும், பூமி செவ்வாயை விட வேகமாகவும் சுற்றுகின்றது. சூரியனின் நிறையீர்ப்பு விசையை விட மெதுவாக பூமி சுற்றினால், பூமி சூரியனுக்குள் இழுக்கப்பட்டுவிடும்; சூரியனின் நிறையீர்ப்பு விசையை விட மிக வேகமாக பூமி சுற்றினால், பூமி சூரிய மண்டலத்தை விட்டு விலகி சென்றுவிடும். இது நட்சத்திர-மண்டலங்களுக்கும் பொருந்தும். நட்சத்திர-மண்டலத்தின் மையத்தை (மையத்தில் செறியுள்ள மிகக்கணமான கருங்குழி உள்ளது) சுற்றிவரும் நட்சத்திரங்களின் வேகத்தை விஞ்ஞானிகள் கண்காணித்தனர். அப்பொழுது, வெளி-விளிம்பில் சுற்றிவரும் நட்சத்திரங்களின் வேகம் மையத்திற்கு அருகில் சுற்றிவரும் நட்சத்திரங்களின் வேகத்திற்கு இணையாக இருப்பதை கண்டறிந்தனர். மொத்தத்தில், நாம் காணும் (அறிந்த) பருப்பொருட்களை விட மிக அதிக பருப்பொருட்கள் அங்கு இருப்பது போல், நட்சத்திரங்கள் நட்சத்திர-மண்டலத்தை சுற்றி வருகின்றன (ஒருவேளை, நிறையீர்ப்பு பற்றி நம்முடைய அறிதல் மிக-மிகப்பெரிய அளவுகளில் தவறாக இருக்கலாம். ஆனால், பலவகைகளில் இது அப்படிப்பட்ட குறையல்ல என்றே தெரிகின்றது). நாம் அறியாத இந்த பருப்பொருட்களை இருண்ட-பொருட்கள் (Dark Matter) என்கின்றோம்; இவை நாம் அறியாத சில அடிப்படை துகள்கள். இருண்ட-பொருட்கள் சாதாரண பொருட்களுடன் மின்காந்த விசைகள் மூலமாக இடைபடுவினை கொள்வதில்லை. அவற்றை அவற்றின் நிறையீர்ப்பு புலத்தை மட்டும் கொண்டே அறியமுடிகின்றது.
பெரு-வெடிப்பு தியரி மற்றும் பொது-சார்பியல் கோட்பாடு உலகம் விரிவடைவதை (இடம் விரிவடைவதை) முன்னறிவிக்கின்றன. உலகிலுள்ள பருப்பொருட்களின் நிறையீர்ப்பினால், உலகம் மேலும் மேலும் குறைந்த வேகத்தில் விரிவடைய வேண்டும். ஆனால், உலகம் மேலும் மேலும் வேகமாக விரிவடைவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதற்கு நாம் அறியாத ஒரு ஆற்றல் காரணமாக இருக்கலாம். அதை நாம் இருண்ட ஆற்றல் (Dark Energy) எனலாம். இதை நாம் வெற்றிட ஆற்றலாக கருதலாம். இது ஒருபடித்தான, செறிவற்ற, நிறையீர்ப்பை தவிர மற்ற விசைகளுடன் இடைபடுவினை கொள்ளாத ஆற்றலாக இருக்க வேண்டும். இருண்ட ஆற்றல் செறிவற்று மிகச்சிறிய அளவில் இருந்தாலும், வெற்றிடமாக உள்ள இந்த பரந்த இடைவெளி முழுவதும் சீராக ஆட்கொண்டுள்ளதால், அது 74% பங்கை நம் உலகில் வகித்து, மிகப்பெரிய விளைவை ஏற்படுத்துகின்றது.

பொது-சார்பியல் கோட்பாடு (உயர்மட்டத்தில்), குவாண்டம் இயக்கவியல் (ஆழ்மட்டத்தில்) என வெற்றிகரமாக உறுதிசெய்யப்பட்ட தியரிகளை நாம் கண்டறிந்து இருந்தாலும், இன்னும் விளங்கப்படாத பல புதிர்கள் உள்ளன. பெரு-வெடிப்பின் மூலம் என்ன? பெரு-வெடிப்பிற்கு முன்பிருந்த (எந்த பொருளுள்ள முறையிலாவது) நிலை என்ன? இருண்ட-பொருள் மற்றும் இருண்ட-ஆற்றல் என்பவை என்ன? மிக ஆழமான புதிர் - இவைகளெல்லாம் ஏன் உள்ளது என்பதாக இருக்கலாம். ஒருவேளை, அணைத்திற்குமான ஒன்றுபட்ட தியரியை உருவாக்கும் போது, பெரும்பாலான புதிர்களை விளக்க முடியலாம். இவ்வாறு விளக்க வேண்டிய பல புதிர்கள் இருந்தாலும், அதில் ஒன்றுகூட உயிரை பற்றியோ, நம் வாழ்வை பற்றியோ, நம் அன்றாட அனுபவங்களை பற்றியோ இல்லை!

02 January 2011

அர்த்தங்களை தேடி

இந்த உலகம் மிகவும் விந்தையான ஒன்று தான். அதன் அர்த்தங்களை நாம் எப்படி தேடுங்கின்றோம் என்பதற்கான தேடலே இது. அதற்கு நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி இந்த உலகை உணர்ந்து கொள்கின்றோம், எப்படி கற்று கொள்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இது ஒரு தேடலின் தேடல்!

உணர்வுகள்

உயிர்கள் அதன் சுற்றுச்சூழலின் அர்த்தங்களை அறிந்து கொள்கின்றனவோ இல்லையோ, அனைத்து உயிர்களும் ஏதாவது ஒரு வகையில் அதன் சுற்றுச்சூழலை உணர்கின்றன. அப்படி பட்டவை மட்டுமே பிழைத்து இருக்க முடியும். பரிணாம வளர்ச்சி தொடர்பில் (Tree of Life) மேல் மட்டத்திலுள்ள விலங்குகள், பல நுணுக்கமான உணர்-உருப்புகளான புலன்களையும், மூளையையும் பரிணாம வளர்ச்சியில் பெற்றிருக்கின்றன. புலன்கள் சுற்றுச்சூழலின் பண்புகளை/காரணிகளை குறிப்பலைகளாக (மின்னலைகளாக) மாற்றி மூளைக்கு அனுப்புகின்றன. அந்த குறிப்பலைகளை கொண்டு மூளை சுற்றுசூழலை உணர்கின்றது.

[உணர்வு = சுற்றுச்சூழலின் ஒரு குறிப்பிட்ட பண்பை/காரணியை/தன்மையை அறிதல்]

மற்ற பல விலங்குகளை போல், மனிதனுக்கும் (குறைந்த பட்சம்) ஏழு உணர்வுகள் உண்டு.
 1. ஓளி-உணர்வு (பார்த்தல்; கண்)
 2. ஒலி-உணர்வு (கேட்டல்; காது)
 3. காற்றில்-கலந்துள்ள-சில-வேதிப்பொருட்களை-அறியும்-உணர்வு (மணம்; மூக்கு)
 4. நாக்கில்-படும்-சில-வேதிப்பொருட்களை-அறியும்-உணர்வு (சுவை; நாக்கு)
 5. அழுத்தத்தை-அறியும்-உணர்வு (தொடு-உணர்வு; தோல்)
 6. வெப்பநிலையை-அறியும்-உணர்வு (வெப்ப-உணர்வு; தோல்)
 7. புவியீர்ப்பு-விசையை-அறியும்-உணர்வு (சமன்நிலை-உணர்வு; காது; காதினுள்ளே உள்ள திரவத்தின் நிலையை கொண்டு அறியும் உணர்வு; இந்த சமன்நிலை-உணர்வை கொண்டு தான், நாம் மேல், கீழ் உணர்கின்றோம். அதை கொண்டே நடக்கவும், பிறகு ஓடவும், மிதிவண்டி ஓட்டவும் கற்றுக்கொள்கின்றோம்)
சில பறவைகளுக்கு உயர-உணர்வு (காற்றழுத்தத்தை பயன்படுத்தி) மற்றும் திசை-உணர்வு (புவியின் காந்தபுலத்தை பயன்படுத்தி) இருக்கலாம்.

ஒரு உணர்வின் திறன் அதனுடைய புலனின் திறனையும், அதனை அறியும் மூளையின் செயல்திறனையும் பொருத்து இருக்கும். உதாரணமாக, மனிதனின் காதினால் 20 முதல் 20,000 Hz வரையுள்ள அதிர்வெண் (Hz = ஒரு வினாடியில் நிகழும் அதிர்வுகள்) கொண்ட ஒலியலைகளை மட்டுமே அறிய முடியும். மற்ற சில விலங்குகளின் காதினால் இதைவிட குறைந்த அல்லது அதிக அதிர்வெண் ஒலியலைகளை அறிய முடியலாம். ஒரு உணர்விற்கான மூளையின் செயல்திறன் அந்த உணர்வின் குறிப்பலைகளை மூளை எந்த அளவு பயன்படுத்தி கற்று கொள்கின்றது என்பதை பொருத்தது. ஆனால் அதற்கு மூளையில் தேவையான அளவு இடமும் வேண்டும். உதாரணமாக, கண்பார்வை இழந்தவர்கள் ஒலியலைகளை பெரிதும் சார்ந்து இருப்பதாலும், பொதுவாக ஓளி-உணர்வுக்கு பயன்படும் மூளையின் இடம் பயன்படுபடுத்தப் படாமல் இருப்பதாலும், அவர்கள் மூளையின் ஒலி-உணர்வு செயல்திறன் அதிகமாக இருக்கும்.

கற்றல்

மூளையின் கட்டமைப்பு கணினியின் கட்டமைப்பிலிருந்து மாறுபட்டு இருந்தாலும், மூளை கணினி போன்று செய்திகளை/குறிப்பலைகளை பகுத்தாயும் ஒரு அமைப்பு. மூளை என்பது நரம்பணுக்களால் (Neurons) பிணையப்பட்ட வலை (Neural Network). மூளையின் நரம்பணுக்கள் ஒன்றுக்கொன்று பல்வேறு வகையில் இணைந்து நரம்பணு-வலைச்சுற்றுக்களை (கணினியின் மின் சுற்றுகளை போல்) அமைக்கின்றன. இந்த நரம்பணு-வலைச்சுற்றுக்களைப் பொருத்து மூளையின் செயல்முறைகள் இருக்கும். மூளையின் நரம்பணு-வலைச்சுற்றுக்கள் இரண்டு வழிகளில் அமைக்கப்படுகின்றன.

பரிணாம வளர்ச்சி தொடர்பில் கீழ் மட்டதிலுள்ள விலங்குகளின் மூளையின் நரம்பணு-வலைச்சுற்றுக்கள் பிறப்பிலே உருவாக்கப்படும் (கால்கள், வாய், மூக்கு போன்றவை பிறப்பிலே உருவாக்கப்படுவது போல்). அதாவது அதற்கேற்ற மரபணுக்கள் (ஜீன்கள்) பரிணாம வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இந்த முறை மூலம் எளிய சிக்கலற்ற செயல்முறைகள் மட்டுமே எளிதாக பரிணாம வளர்ச்சி அடைய முடியும். ஆதலால் அந்த விலங்குகளின் நடத்தைகளும் எளியமையாகவும் நேரடியாகவும் இருக்கும். உதாரணமாக எறும்புகள், தவலைகள், முதலைகள், பலவகை பறவைகள் கூட சில எளிய செயல்முறைகளை கொண்டே இயங்குகின்றன. இப்படி பெறப்படும் மூளையின் செயல்முறையை நாம் இயலுணர்வு/உள்ளுணர்வு (Intuition) என்கின்றோம்.

இந்த முறையை தவிர, பரிணாம வளர்ச்சி தொடர்பில் மேல் மட்டதிலுள்ள விலங்குகள் சுற்றுசூழலிலிருந்து பெறப்படும் அனுபவத்திலிருந்து அதாவது புலன்கள் மூலமாக வரும் குறிப்பலைகளை கொண்டு நரம்பணு-வலைச்சுற்றுக்களை அமைக்கின்றன. இதை நாம் கற்றல் என்கின்றோம். இந்த முறையில், பிறக்கும் போது மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் வெறுமையாக இருக்கும் (நரம்பணுக்கள் இருக்கும்; ஆனால் முறையான இணைப்புகள் இருக்காது). ஆனால் மூளை பலவிதமான கற்கும் உத்திகளை இயலுணர்வாக கொண்டிருக்கும். சிக்கலான, மாறி கொண்டே இருக்கும் சுற்றுச்சூழலை கற்றுக்கொள்ளவும், புதிய திறமைகளை கற்றுகொள்ளவும் இந்த முறை உதவும். ஆனால் கற்று கொள்வதற்கு காலமும் ஆற்றலும் தேவை. அதனால், இம்முறையை கொண்ட விலங்குகளின் குழந்தை பருவம் நீண்டதாக இருக்கும். மேலும், அதற்கு தேவையான பெற்றோர் பாசமும் கூடவே பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும். பிறந்த சில மணிநேரத்தில் நடக்கும் மான்குட்டியை ஓப்பிடும் போது, ஒரு மனித குழந்தை நடக்க வருடங்களை எடுத்துக் கொள்ளும்.

நாம் பிறக்கும் போது நமது மூளை சில இயலுணர்வுகளுக்கான (சில எளிய செயல்முறைகள் மற்றும் கற்றும் உத்திகள்) நரம்பணு-வலைச்சுற்றுக்களை கொண்டும், பெரும்பான்மையான பகுதி வெறுமையாகவும் இருக்கும். நாம் வளரும் போது, நம் புலன்களிலிருந்து பெறப்படும் குறிப்பலைகளை கொண்டு, மூளை அதன் கற்கும் உத்திகளை கொண்டு புதிய நரம்பணு-வலைச்சுற்றுக்களை உருவாக்கும். வெளிப்படையாகத் தெரிவதால், நாம் குழந்தைகள் நடக்க, பேச கற்றுக்கொள்வதை கவனிக்கின்றோம். வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அவ்வாறே நாம் பார்க்கவும், கேட்கவும், நுகரவும், சுவைக்கவும், உணரவும், அறியவும் கற்றுக்கொள்கின்றோம். இப்படி கற்றுக்கொண்டவற்றை சுய-அறிவு/பொது-அறிவு (Commonsense) என்கின்றோம். இது இயலுணர்வாக தன்னிச்சையாக நடக்கும் ஒன்று. இவ்வாறே குரங்கினங்கள் உட்பட பலவகை மேல்மட்ட விலங்குகள் கற்றுக்கொள்கின்றன. இதை தவிர, மனிதன் கற்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ளும் திறனையும் கொண்டுள்ளான். இப்பொழுது அவனால் இயலுணர்வாக உள்ள கற்கும் உத்திகளை தாண்டி புதிய கற்கும் உத்திகளையும் கற்க முடியும். இப்பொழுது அவனால் தன்னிச்சையாக கற்றுக்கொள்வதை தாண்டி வேண்டுமென்றே ஆராய்ந்து கற்றுக் கொள்ள முடியும். ஆனால் அது தன்னிச்சையாக (எளிதாக) வராது. அப்படி மனிதன் கண்டறிந்த சில செயல்முறைகள் தான் தத்துவம் (Philosophy) மற்றும் அறிவியல் (Science).

அறிவியல்

ஒரு கல்லை மேலே எறி. அது மேலே போகும்போது மேலும் மேலும் வேகமாக சென்றாலோ, அல்லது கீழே வரும்போது மேலும் மேலும் மெதுவாக வந்தாலோ, அல்லது திடீரென கோணல்மாணலாக சென்றாலோ எப்படி இருக்கும்? நாம் ஆச்சர்யம் அடைவோம். மேலே எறியப்பட்ட கல், மேலே போகும் போது மேலும் மேலும் மெதுவாகவும், கீழே வரும்போது மேலும் மேலும் வேகமாகவும் செல்ல வேண்டும். மேலும், எறியப்பட்ட கோணத்திற்கு ஏற்ப, அது ஒரு வளைவு பாதையை மேற்கொள்ளும். ஒவ்வொரு குழந்தையும் வளரும் போது அதன் அனுபவத்திலிருந்து இதை கற்றுக்கொள்கின்றது. வேகம், முடுக்கம், விசை, புவியீர்ப்புவிசை என எந்தவித ஆழ்ந்த புரிதலும் இல்லை என்றாலும், எறிந்த கல் சற்றே வேறுவிதமாக நடந்து கொண்டால், உடனே ஏதோ ஒன்று முரணாக இருப்பதை உணர்கின்றோம். ஆனால், நாம் வாழும் சுற்றுச்சூழலில், மேலே எறிந்த கல் கீழே வரவே வராது என்றால், அப்படியே நமது மூளையும் கற்று கொண்டிருக்கும். நாம் எப்படிப்பட்ட சுற்றுச்சூழலில் வாழ்கின்றோமோ அதனுடைய பண்புகளை, காரண-காரியங்களை நமது மூளை கற்றுக்கொள்கின்றது. இப்படி, நாம் வளர வளர, நமது மூளை பலவகையான அறிதல்களை கற்று, சேகரித்து கொள்கின்றது. இதை சுய-அறிவு/பொது-அறிவு என்கின்றோம். இது முக்கியமான பல அறிதல்களை கொடுத்தாலும், எந்தவித ஆழ்ந்த தெரிதலையோ, புரிதலையோ அது தருவதில்லை; மேலும் அது பலநேரம் நம்மை தவறான அறிதல்களுக்கும் இட்டுச் செல்கின்றது. அப்படித்தான், நாம் உருண்டையான பூமியை தட்டையாக நினைக்கின்றோம்; அப்படித்தான், பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றிவரும்போது, சூரியன் நம்மை சுற்றி வருவதாக நினைக்கின்றோம். அப்படித்தான், இயற்கைத்-தேர்வு-முறையில் (Natural Selection Process) பரிணாம வளர்ச்சிப் பெற்ற உயிர்களை யாரோ படைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.

ஆனாலும், பொது அறிவை தாண்டி, மனிதன் பல விசயங்களை ஆழமாக யோசித்தும், விவாதித்தும் இருக்கின்றான். இப்படிப்பட்ட அறிவு தேடலை தத்துவம் என்கின்றோம். இது பலவித புதிய சிந்தனைகளையும், யோசனைகளையும் உருவாக்கியது. முதல்-காரணகர்த்தா (Prime Mover) (அனைத்து காரண-காரிய விளைவுகளின் சங்கிலி தொடரில் முதல் மூலக் காரணம்) மற்றும் ஜீனோ முரண்பாட்டுண்மை (Zeno’s Paradox) (இயக்கம் எப்படி சாத்திமில்லா ஒன்று) போன்றவை அப்படி உருவான சிந்தனைகள் தான். கடவுள் என்ற கோட்பாடும் அப்படி உருவான ஒரு சிந்தனை தான். பல தத்துவ மேதைகள் அதை ஆழமாக அலசினார்கள். அனைத்துக்கும் மூல காரகர்த்தா கடவுள் என்றால், கடவுளின் காரணகர்த்தா யார்? தத்துவ தருக்க அடிப்படையில் பார்த்தால், ஒரு புதிரை விளக்க மற்றொரு புதிரை பயன்படுத்தும் முரன்பாடுதான் கடவுள் கோட்பாடு என்பதை அறிய முடியும். ஆனாலும் பலர் கடவுள் கோட்பாட்டை எந்த காரண-காரிய தருக்கங்களை எல்லாம் தாண்டி நம்பினாலும், அதை தத்துவ அளவில் விளக்க முற்பட்டனர். தத்துவத்தின் ஒரு துணைப்பிரிவாக கருதப்படக் கூடிய, இந்த தேடலை இறையியல் (Theology) என்கின்றோம். சில காலத்திற்கு பிறகு, தத்துவம் என்ற அறிவை தேடும் செயல்முறை, அதன் திறனின் எல்லையை எட்டியது; அதற்கு மேல் ஆழமாகவோ தெளிவாகவோ செல்ல முடியாமல், வாழ்கையை பற்றியோ, நாம் வாழும் உலகைப் பற்றியோ எந்த அழ்ந்த அறிவையும் தரமுடியாமல் வெறும் முன்னும் பின்னுமான விவாதித்திலே நின்று போனது.

மேலிருந்து கீழே போட்டால், ஒரு கனமான பொருள் அதைவிட குறைந்த கனமுள்ள பொருளை விட வேகமாக பூமியை அடையும் என்று நமது பொதுஅறிவுக்கு படலாம். கலிலியோ முதன்முதலில் இந்த இரண்டு பொருட்களும் ஒரே நேரத்தில் பூமியை அடையும் என்பதை சோதனை மூலம் செய்து காட்டினார். சந்திரன், கோள்கள், சூரியன், நட்சத்திரங்கள் பற்றி தத்துவங்களையும், கற்பனை கதைகளையும் சொல்வதை விடுத்து, தன்னுடைய தொலைநோக்கி கொண்டு அவற்றை கண்காணித்தார். வெளிச்சார்புடனான பரிசோதனை செய்தல், சரிபார்த்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை சுட்டி காண்பித்தார். இவ்வாறு கலிலியோ மற்றும் பலர் கண்காணித்தல், கோட்பாடு இயற்றுதல், பரிசோதனை செய்தல், சரிபார்த்தல் முதலியவற்றை கொண்ட ஒரு செயல்முறையை உருவாக்கினர். இப்படிப்பட்ட அறிவு தேடலை அறிவியல் என்கின்றோம். இது உயிர்களையும், அவற்றின் 400 கோடி வருட பரிணாம வளர்ச்சியையும், நாம் புரிந்து கொள்ள உதவியது. கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களையும், அவை ஒவ்வொன்றிலும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் அடக்கிய நமது அண்டத்தையும், அதன் 1400 கோடி வருட வளர்ச்சியையும் நமக்கு காட்டியது.

அறிவியல் என்பது வெளிசார்புடனான (Objectivity) ஒழுங்கு முறையில் அறிவைத் தேடும் ஒரு செயல்முறை. நமது மூளை எப்படிப்பட்ட திறன்களுடனும், குறைகளுடனும், வரம்புகளுடனும் பரிணாம வளர்ச்சியில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்து, நாம் வாழும் இந்த சிக்கலான உலகை ஆழ்ந்த அறிவுடன் புரிந்து கொள்ள நாம் கண்டறிந்த சிறந்த உத்திதான் அறிவியல். இதைக் கொண்டு உயிரை படிக்கலாம் (உயிரியல்), அண்டத்தை படிக்கலாம் (அண்டவியல்), மனதை படிக்கலாம் (உளவியல்), கலைகளை படிக்கலாம், மதங்களை படிக்கலாம், ஏன் அறிவியலையும் படிக்கலாம் (அறிவியலைப் பற்றிய அறிவியல்). ஆனால் நமக்கு அனைத்து விடைகளையும் உடனடியாக தர அறிவியல் ஒன்றும் மாயவித்தை அல்ல. அதற்கு காலமும், உழைப்பும் தேவை.

அறிதல்

மனிதனின் மூளை எப்படி பரிணாம வளர்ச்சியில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்தும், பல தலைமுறைகளாக நாம் கற்ற அனுபவத்திலிருந்தும் பல முறைகளில் நாம் எந்த ஒன்றையும் அறிந்து கொள்கின்றோம். இப்படி அறிந்தவற்றின் தொடர்புகளை கொண்டு நாம் அவற்றின் அர்த்தங்களை காண விளைகின்றோம்.
 • இயலுணர்வு/உள்ளுணர்வு (Intuition) : பிறப்பிலே நம்முடைய மூளை பல செயல்முறைகளை கொண்டுள்ளது. இவை பரிணாம வளர்ச்சியில் செதுக்கப் பட்டவை.
 • சுய-அறிவு/பொது-அறிவு (Commonsense): புலன்கள் மூலமாக வரும் குறிப்பலைகளை கொண்டு, அதாவது நம் உலக அனுபவத்திலிருந்து, நம்முடைய மூளை தன்னிச்சையாக கற்று, காரண-காரியங்களை பற்றிய பலவிதமான அனுமானங்களை சேகரிக்கின்றது. இதில் மிகக் குறிகிய புரிதலே இருக்கும்.
 • தத்துவம் (Philosophy): உள்ளுணர்வு மற்றும் பொது-அறிவில் பெறப்பட்ட செயல்முறைகளை விரிவுபடுத்தி நிறுவப்பட்ட நம்பிக்கை அமைப்பு. அதனால், இது நம் தற்சார்பு நம்பிக்கைக்கு (Subjectivity) உட்பட்டது.
 • இறையியல் (Theology): தத்துவத்தின் ஒரு துணைப்பிரிவான இது, ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை ஒருதலையாக சார்ந்த அமைப்பு. இது மிகவும் தாராளமாக (Liberal) ஏற்றுக் கொள்ளும் நம்பிக்கை அமைப்பு. அதனால் இது வெகுவாக நம் தற்சார்பு நம்பிக்கைக்கு உட்பட்டது.
 • அறிவியல் (Science): இது "எந்த ஒரு விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார்" என்பது போன்ற மிகவும் கட்டுபாடான (Conservative) நம்பிக்கை அமைப்பு. இதற்கு கண்காணித்தல், கோட்பாடு இயற்றுதல், பரிசோதனை செய்தல், சரிபார்த்தல் போன்றவை அவசியம். நம்முடைய உள்ளுணர்வு மற்றும் பொதுஅறிவின் தடைகளை தாண்டி ஒரு வெளிசார்புடனான அறிவை பெற இது ஒரு வழியை காட்டுகின்றது.