13 December 2012

மனக்கோட்டை இரகசியம்

நம் சுகங்கள் துக்கங்களுக்கான அனுபவம் நம் மனதை சார்ந்துள்ளதால், அது எப்படி வேலை செய்கின்றது என்பதை அறிவது முக்கியமல்லவா? நம் மனதுடன், எண்ணங்களுடன், உணர்ச்சிகளுடன் நமக்கு இருக்கும் தொடர்பை தேவையற்ற மருளியை தவிர்த்து தெளிவுடன் பார்ப்பது முக்கியம்... ~Dzigar Kongtrul Rinpoche


நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று, பல நேரம் நாம் கடினமான முயற்சிப்போம். ஆனாலும் மறந்து போய் முழிப்போம்! சில நேரம், சில நினைவுகளை, கெட்ட கனவுகளாக நினைத்து மறந்து விட போராடுவோம். ஆனாலும் அவற்றில் சில, நம்மை விடாமல் வாழ்நாள் முழுவதும் துரத்தும். பவிதமான கொடுமைகளுக்கு, பலாத்காரங்களுக்கு ஆளான குழந்தைகள், பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சலில் (post-traumatic stress disorder) பாதிக்கப்பட்ட போர்வீரர்கள் கடந்தகால நினைவுகளால் பல நேரம் வாழ்நாள் முழுவதும் போராடுகின்றார்கள். பெரும்பான்மையான நமக்கு, அது போன்ற கொடுமையான அனுபவம் ஏற்படாதது அதிர்ஷ்டவசம். நம் மனம், ஆக நம் வாழ்கை நம் கட்டுப்பாட்டில் இருப்பதாக உணருகின்றோம். அனாலும் பல்வேறு ஆசை மோகத்திலும், ஆசா பாசத்திலும், அடிமைத்தனத்திலும் போராடுகின்றோம். நம் தேவைகளில், ஆசைகளில், விருப்பங்களில் எப்படிப்பட்ட கட்டுப்பாட்டு நமக்கு உள்ளது? நம் மனம், ஆக நம் வாழ்கையில் நமக்கு எப்படிப்பட்ட கட்டுப்பாட்டு நமக்கு உள்ளது?

----------------------------
உயிர்வாழ் எந்திரம்
----------------------------

பூமி உருவான ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட ஆதி கால கடல்களில் (4௦௦ கோடி வருடங்களுக்கு முன்பு), முதலில் உருவான மரபு வேதிமூலக்கூறுகள் [மரபணுக்கள்/ ஜின்கள்/ DNA) எந்தவித பாதுகாப்பு (உயிர்காப்பு) கவசம் அல்லது சுவர் [செல்] இல்லாமலே இருந்தன. இயற்கை தேர்வு முறையில் (அதாவது, எவை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக உள்ளதோ அவை பிழைத்து, மற்றவை மாந்து போகும்) படிப்படியாக உயிர்காப்பு அல்லது உயிர்வாழ் செல் வடிவமைக்க பரிணாம வளர்ச்சி பெற்றன. வாழ்கை போராட்டத்தில், மேலும் தொடர்ந்து சிக்கலான உயிர்வாழ் எந்திரங்களை வடிவமைக்க பரிணாம வளர்ச்சி பெற்றன. இந்த உயிர்வாழ் எந்திரங்கள் இன்று பாக்டிரியா, தாவரங்கள், விலங்குகள் என பல வடிவத்தில் உள்ளன. உயிரினங்களின் இந்த பரிணாம வளர்ச்சியில், நாம் (மனிதன்) அப்படிப்பட்ட ஒரு உயிர்வாழ் எந்திரம் – நம்முடைய வடிவமைப்பும், உயிர்வாழ் வழிமுறைகளும் நம் மரபணுக்களில் உள்ளது.

இயற்கை தேர்வு முறையில் சுற்றுச்சூழலுக்கு தேர்ந்த மரபணுக்களை தேர்ந்தெடுக்க (மரபு பிழைகளில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சில) பல சந்ததிகளில் உருவாக வேண்டும். ஆனால், சுற்றுச்சூழலோ தொடர்ந்து மாறிக்கொண்டு இருக்கும் ஒன்று. ஆக, சுற்றுச்சூழலுக்கும் தகுந்த மரபணுக்களுக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருக்கும். மேல்மட்ட சிக்கலான உயிரினங்கள் அதிக நாள் உயிர்வாழ்ந்து, மெதுவாக இனப்பெருக்கம் செய்வதால், இந்த இடைவெளி இவற்றின் சந்ததிகளை வெகுவாக பாதிக்கும். ஆக, இப்படிப்பட்ட உயிரினங்களில், அதன் வாழ்நாளிலே சுற்றுச்சூழலை கற்று அதற்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் நெகிழ்வுத் தன்மை (இலாபகத் தன்மை; Flexibility) வடிவமைப்பிற்கான மரபணுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. விலங்கினங்களில் பரிணாம வளர்ச்சிப் பெற்ற அப்படிப்பட்ட நெகிழ்வுத் தன்மை வடிவமைப்பே மூளை. இவ்வாறு நம் மூளை, நம் மரபணுக்களின் உயிர்வாழ் வழிமுறைகளை நிருவகித்து நிறைவேற்றுகின்றது. இந்த நெகிழ்வுத் தன்மை, நம் வாழ்கை, நம் கட்டுப்பாட்டில் உள்ளது போன்ற உணர்வை தருகின்றது!

உயிர்பிழைத்தல் மற்றும் இனப்பெருக்கம் அனைத்து உயிர்வாழ் வழிமுறைகளுக்குமான அடிப்படை குறிக்கோள்கள் – ஏனெனில் அப்படிப்பட்ட மரபணுக்கள் மட்டுமே இயற்கை தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நம் மரபணுக்களின் உயிர்வாழ் வழிமுறைகள் பரந்து விரிந்து நுணுக்கமாக இருந்தாலும், அவை முற்றிலும் முழுமையானதாகவோ, குறையற்றதாகவோ இல்லை – ஏனெனில் இது குருட்டுத்தனமான பரிணாம வளர்ச்சி, அறிவுபூர்வமான உருவாக்கம் அல்ல. நம் மரபணுக்களின் உயிர்வாழ் வழிமுறைகளில் பலவித இடைவெளிகள், குறைபாடுகள், ஓட்டைகள் உண்டு. நம் மரபணுக்களின் உயிர்வாழ் வழிமுறைகளை நிருவகித்து நிறைவேற்றும் நம் மூளை, இந்த ஓட்டைகளை பயன்படுத்தி இன்பம், சந்தோசம், அமைதி என பலவற்றிற்கும் அதன் அடிப்படை குறிக்கோள்களுக்கு தொடர்பற்ற பல குறுக்கு வழிகளை கண்டுகொள்கின்றது. அப்படியே நாம், சுய இன்பம், இசை, பலவித போதைபோருட்கள் என பலவற்றை அனுபவிக்கின்றோம். அப்படியே நாம், தியானம், பிராத்தனையை கண்டறிந்து கொண்டோம். அப்படியே சிலர், வாழ்கையின் கடுமையான இடர்களையும், வலிகளையும் போக்க தற்கொலை செய்து கொள்கின்றனர். இது போன்ற குறுக்கு வழிகளுக்கு மிக எளிதாக ஆளாகும்படியாக நாம் உள்ளோம். (பரிணாம வளர்ச்சி பார்வைவில் இவை குறுக்கு வழிகள். ஆனால் சில குறுக்கு வழிகள் நன்மை பயக்கக்கூடியவை, மற்றும் சில தீங்கானவை. ஒரு குறுக்கு வழி நன்மையாக இருந்தால் அது இயற்கை தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மேலும் பரிணாம வளர்ச்சி அடையலாம் - ஆக அது நம் மரபணுக்களின் ஒரு பகுதியாகலாம்)

உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) சமீபத்திய மதிப்பீட்டின் படி, வருடத்திற்கு கிட்டத்தட்ட 10 இலட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் (அதற்கு முயற்சிப்போர், அதைப்பற்றி நினைப்போரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக இருக்கும்); 23 கோடி பேர் அல்லது வயதிற்கு வந்தவர்களில் 20 பேரில் ஒருவர், சட்டத்திற்கு முரணான போதை பொருட்களை ஒரு முறையாவது பயன்படுத்தி உள்ளனர்; மதுவின் பாதகமான பயன்பாட்டின் மூலம் வருடத்திற்கு 25 இலட்சம் பேர் உயிரிழகின்றனர்; வருடத்திற்கு 60 இலட்சம் பேர் புகையிலை பயன்பாட்டால் உயிரிழகின்றனர்.

நிருவகிக்கும் மூளையின் மூலம் நாம் பெற்ற நெகிழ்வுத் தன்மை அதிக விலைகொடுத்தே வந்துள்ளது. அதனால் நம் மூளை, முழுமையான நெகிழ்வுத் தன்மையோடோ, முழுமையான கட்டுப்பாடு இருக்குமாறோ பரிணாம வளர்ச்சி அடைய முடியாது (அப்படிப்பட்ட மரபணுக்கள் அழிந்து விடும்). அப்படியெனில், நம் மூளை எப்படிப்பட்ட நெகிழ்வுத் தன்மையை, எப்படிப்பட்ட கட்டுப்பாட்டை கொண்டுள்ளது?

----------------------------
மனச் சமுதாயம்
----------------------------

பெரிய நிறுவனங்கள், மனிதயின சமுதாயங்கள் முதலியவை பல படிநிலை மட்டங்களாக நிர்வகிக்கப்படுகின்றன – ஏனெனில் அதுவே பலதரப்பட்ட சிக்கலான தகவல்களை திறனுடன் ஆராய்ந்து செயல்முறை படுத்தக்கூடிய நல்ல வழி. மூளையின் செயல்பாடும், அதாவது மனமும் அடிப்படையில் அதுபோன்ற தகவல்களை ஆராய்ந்து செயல்முறை படுத்தும் ஒரு அமைப்பு என்பதால், அதுவும் பல படிநிலை மட்டங்களாக பகுக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றது (கால்கள் செயல்படுவதன் மூலம் நடத்தல் வெளிப்படுவது போல், மூளையின் செயல்பாடுகளால் மனம் வெளிபடுகின்றது. மூளையை கணினியின் வன்பொருள் போல் கருதினால், மனம் அதன் மென்பொருள்). அதனால் மனதின் சமுதாய அமைப்பை படிப்பதன் மூலம், நம் மனதை புரிந்துகொள்ளலாம்.

மனச் சமுதாயம் நரம்பணுக்களால் ஆன வலைச்சுற்றுக்களை கொண்டு அமைக்கப்பட்ட பல செயலகங்களையும் (Agency), ஒவ்வொரு செயலகமும் பல செயலர்களையும் (Agent) கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது (உதாரணமாக, நடத்தல் செயலகம் பல்வேறு கால் பாகங்களை கட்டுப்படுத்தும் செயலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது). செயலகங்கள் பல படிநிலை மட்டங்களில் உள்ளன. மனித மனச் சமுதாயம் நான்கு முதல் ஆறு வரையிலான படிநிலை மட்டங்களில் அமைக்கப்பட்டிருக்கலாம். மனித மூளை உள்ளிருந்து வெளிப்புறமாக – கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டமாக – நான்கு முக்கிய கட்டங்களில் (மட்டங்களில்) பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நான்கும் உடலியல் சார்ந்த மட்டங்கள் என்றாலும், நெருங்கிய மனவியல் (செயலியல்) சார்ந்த தொடர்பும் உள்ளது (செயலியல் அடிப்படையில், நம் மனம் இதை விட அதிக மட்டங்கள் கொண்டிருக்க வேண்டும்).
  • மூளை தண்டுவடம் [Brain stem]: இது விலங்கினங்களில் முதலில் பரிணாம வளர்ச்சி அடைந்த பழமையான பகுதி. இது இதயத்துடிப்பு, சுவாசம் போன்ற அடிப்படை செயல்களை கட்டுப்படுத்துகின்றன.
  • நடுமூளை (ஊர்வன வகை மூளை) [Diencephalon]: இது தாக்கும் உணர்வு, விலங்குகளுக்கு இடையேயான சடங்குகள், எல்லை காத்தல், சமூகப் படிநிலை போன்றவற்றிற்கான இருப்பிடம். இது சில 10 கோடி வருடங்களுக்கு முன்பு, நம் ஊர்வன வகை முன்னோர்களில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.
  • உணர்ச்சி மூளை (பாலூட்டி வகை மூளை) [Limbic System]: இது சில கோடி வருடங்களுக்கு முன்பு, பாலூட்டி விலங்கினங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இது மனநிலை, உணர்ச்சி, அக்கறை, குழந்தை பராமரிப்பு முதலியவற்றை கட்டுப்படுத்துகின்றது.
  • சிந்திக்கும் மூளை (உயர்விலங்கு மூளை) [Cerebral cortex] : இது சில 10 இலட்ச வருடங்களுக்கு முன்பு, உயர்விலங்கினங்களில் (குரங்கு, மனிதன்) பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இது உள்ளுணர்வு, பகுத்தறிவு, சிந்தனைகள், கருதுகோள்கள், மொழி, கணிதம், இசை, கலைகள், அறிவியல் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்துகின்றது.
புலன்களிலிருந்து வரும் அனைத்து தகவல்களும் முதலில் கீழ்மட்டத்திற்கு சென்று பிறகு மேல்மட்டமாக பரவுகின்றது. அதனால் கீழ்மட்ட செயலகங்கள் தகவல்களை முதலில் கையாளுகின்றன (உதாரணமாக, தன்னிச்சையாக நெருப்பிலிருந்து கையை எடுத்தல்). கீழ்மட்ட செயலகங்கள் துல்லியமற்று ஆனால் துரிதமாக செயல்படுகின்றன (இவை பரிணாம வளர்ச்சியில் முதலில் தோன்றியவை; குழந்தை வளர்ச்சியிலும் முதலில் உருவாகும்). மேல்மட்ட செயலகங்கள் துல்லியமாக ஆனால் மெதுவாக செயல்படுகின்றன. கீழ்மட்ட செயலகங்களின் செயல்முறைகள் (வலைச்சுற்றுகள்) மரபணுக்களின் மூலம் பிறப்பிலே நிர்ணயிக்கப்படுகின்றன – ஆக சில முக்கிய செயல்முறைகள் பிறப்பிலே வேலை செய்யும். மேல்மட்ட செயலகங்களின் செயல்முறைகள் பெரும்பாலும் நம் அனுபவத்திலிருந்து கற்பதிலிருந்து நாம் வளர வளர படிப்படியாக உருவாக்கப்படுகின்றன. ஆதலால் மூளையின் மாற்றிக்கொள்ளும் இளகுதன்மை (Plasticity) கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டமாக அதிகரிக்கின்றது.

கீழ்மட்ட செயலகங்கள், மேல்மட்ட செயலகங்களுக்கு அறிக்கை செய்கின்றன. மேல்மட்ட செயலகங்கள், கீழ்மட்ட செயலகங்களின் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகின்றன (இவ்வாறே சிந்திக்கும் மூளை பகுதியின் செயலகங்கள், உணர்ச்சி மூளை பகுதி செயலகங்களின் செயல்முறைகளை – உணர்ச்சிகளை - கட்டுப்படுத்துகின்றன). இந்த படிநிலையின் உயர்மட்டத்தில் நனவு செயலகம் (Conscious Agency) உள்ளது – இங்கே தான் சுய உணர்வு, விழிப்புணர்வு, புலன்களின் உணர்வுகள் (பார்த்தல், கேட்டல் முதலியவை), சுய உணர்வோடான கட்டுப்பாடு (வேண்டிய பொழுது கையை உயர்த்துதல் போன்றவை), சிந்தித்தல், திட்டமிடுதல் போன்றவற்றை நாம் உணர்கின்றோம். செயலகங்கள் தனித்தனியாக ஒரே சமயத்தில் பல்வேறு செயல்களை நிறைவேற்றுகின்றன (அடிப்படை உயிர் செயல்முறைகள், நடத்தல், பார்த்தல், கேட்டல், சிந்தித்தல் போன்றவை). செயலகங்கள் ஒத்துழைத்து ஒரு பொதுவான குறிக்கோளை, பணியை நிறைவேற்றலாம். சிலநேரம் செயலகங்கள் விருப்பம், தட்டுப்பாடு, முக்கியத்துவம் போன்ற காரணங்களால் ஏற்படும் முரண்பாடுகளால் ஒன்றுக்கொன்று போட்டியிடலாம். உதாரணமாக, நாம் ஒரே சமயத்தில் இருவேறு விசயங்களை பேசவும் எழுதவும் முடியாது – இங்கே பேசுதல் செயலகமும், எழுதுதல் செயலகமும் பொதுவான மொழி/இலக்கணம் சார்ந்த செயலகங்களை பயன்படுத்த போட்டியிடுகின்றன – இது தட்டுப்பாடு சார்ந்த முரண்பாடு. விருப்பம்/தேவை சார்ந்த முரண்பாட்டிற்கான உதாரணம்: கடினமாக உழைத்தல், ஒய்வு எடுத்தல், கேளிக்கைகளில் பொழுதுபோக்குதல் – இவற்றில் ஒன்றை முடிவெடுத்தல் – இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட செயலகங்கள் வெவ்வேறு குறிக்கோள்களை திருப்தி படுத்த போட்டியிடுகின்றன.

செயலகங்களுக்கு இடையே போட்டி ஏற்படும்போது, அதன் முடிவை எடுக்க அவற்றின் மேல்மட்ட செயலகத்திற்கு அனுப்பபடும். நனவு செயலகம் உட்பட அனைத்து செயலகங்களுகிடையே கட்டுப்பாடு மற்றும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு சமநிலை படுத்தப்படுகின்றது. இவ்வாறு எந்த ஒரு செயலகமும் அனைத்தையும் கட்டுப்படுத்தவோ, தீர்மானிக்கவோ முடியாது – ஆக எல்லாவற்றையும் எளிதாக மாற்றவும் முடியாது, அழிக்கவும் முடியாது. உதாரணமாக, மறுநாள் தேர்வுக்காக கடினமாக உழைக்க நனவு செயலகம் முடிவெடுத்தாலும், நேரம் செல்லச்செல்ல ஓய்வு செயலகத்தின் வலிமை அதிகரிக்கும் – அதனால் நாம் நம் உடலை எளிதாக கெடுத்துக் கொள்ள இயலாது. நனவு செயலகத்திற்கு நம் கைகளை உயர்த்த, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மூச்சை அடக்க கட்டுபாடும், நேரடியாக இதயத்துடிப்பை நிறுத்த எந்தவித கட்டுபாடு இல்லாமலும் இருக்கின்றது. நமது அடிப்படையான குறிக்கோள்கள், விருப்பு வெறுப்புகள், ஆசா பாசங்கள் கீழ்மட்ட செயலகங்களில் ஆழாமாக வேரூன்றியுள்ளது. அவற்றை பயின்று ஓரளவு ஒழுங்குபடுத்த முடிந்தாலும், முற்றிலும் நிறுத்தவோ, மாற்றவோ எளிதாக முடியாது (மன்மத லீலையை வென்றார் உண்டோ?)

----------------------------
கற்றல்
----------------------------

பல செயலகங்கள் இணையாக ஒரே சமயத்தில் வேலை செய்தாலும், நனவு செயலகம் ஒரு நேரத்தில் ஒரு (அலகு) வேலையை மட்டுமே செய்யும் – அதனாலே நாம் நனவு நிலையை தொடர்ச்சியாக, ஒன்றன்பின் ஒன்றாக உணர்கின்றோம். ஆனால் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்கள் நனவு செயலகத்தின் கவனத்திற்காக போட்டியிடலாம். அப்பொழுது முக்கியத்துவம் மற்றும் நோக்கத்தை பொறுத்து ஒரு தகவல் கவனித்து தேர்ந்தெடுக்கப்படும். இதை பொறுத்து இருவகை கவனங்கள் உண்டு:
  • கீழிலிருந்து-மேல் கவனம்: கீழ்மட்ட செயலகங்களிலிருந்து வரும் தகவல் முக்கியமானதாக இருந்தால் அது நனவு செயலகத்தை முன்னுரிமையுடன் அடையும் – இவ்வாறே நம் கவனம் தன்னிச்சையாக திடீரென்று ஏற்படும் சத்தத்தை நோக்கி திரும்பும்.
  • மேலிருந்து-கீழ் கவனம்: நனவு செயலகம் ஒரு நோக்கத்தோடு கீழ்மட்ட செயலகங்களிலிருந்து வரும் தகவல்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட தகவல்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் – உதாரணமாக, ஆசிரியரின் பாடத்திற்கு குறிப்பாக நாம் கவனம் கொடுத்தல்.
ஒரு சூழலுக்கான தகவலை அதற்கான ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட செயலகங்கள் செயல்முறை படுத்தும் (இச்செயலகங்கள் மரபணுக்களின் மூலம் பிறப்பிலோ அல்லது அனுபவத்திலிருந்து கற்றதன் மூலமாகவோ நிர்மானிக்கப்ட்டிருக்கலாம்). பெரும்பான்மையான தகவல்கள் கீழ்மட்ட செயலகங்கள் செயல்முறை படுத்தப்படுவதால், கடைசி உயர்மட்டமான நனவு செயலகத்திற்கு செல்லவதில்லை. அதனால் மனிதன் பெரும்பான்மையான செயல்பாடுகளை நாம் நனவுநிலையோடு உணர்வதில்லை. செயலகங்களுக்கு இடையேயான போட்டி அனைத்து கீழ்மட்டங்களிலும் முடிவெடுக்க/செயல்முறை-படுத்த முடியவில்லை என்றால், அது கடைசியாக நனவு செயலகத்திற்கு அனுப்பப்படும். அல்லது அந்த சுழல் (அதற்கான தகவல்) புதுமையானது என்றால் – அதற்கான செயலகங்கள் ஏற்கனவே இல்லாததால், அது நனவு செயலகத்திற்கு அனுப்பப்படும். நனவு செயலகம், இந்த புதுமையான சூழலை, அதன் முக்கியத்துவம், கால அவகாசம் போன்றவற்றை பொறுத்து, பல வகையில் தீர்வுகளை காண முயலும். இச்சூழலை ஒத்த கடந்தகால அனுபவத்தை கொண்டோ, அல்லது உருவகப்படுத்துதலை கொண்டு பலபட்ட தீர்வுகளை சோதித்து ஒன்றை தேர்ந்தெடுத்தோ நனவு செயலகம் அதை கையாளலாம் (சில நேரம், ஒரு தீர்வையும் எடுக்க முடியாமல் ஸ்தம்பித்தும் போகலாம்; அல்லது தான்தோன்றித்தனமான ஒரு தீர்வை முயற்ச்சிக்கலாம்). அடிப்படையில் நனவு செயலகம் அச்சூழலின் தகவல்களை மனச் சமுதாயம் முழுவதற்கும் பரப்பி ஒரு ஒட்டுமொத்த கணிப்பை பெற முயற்ச்சிக்கின்றது.

இந்த புதுமையான சூழல் திரும்ப திரும்ப நிகழும் போது, நனவு செயலகம் அதற்கான தனிப்பட்ட செயலத்தை உருவாக்கலாம் – இது கற்றலின் செயல்முறை. கற்றல் முழுமை அடைந்த பிறகு, இச்சூழலை இந்த புதிய செயலகம் செயல்முறை படுத்தும். கற்றல் செயல்முறையில் புதியவற்றை கற்பதும், கற்றவற்றை சரிசெய்வதும் அடங்கும். இவ்வாறு கற்றலுக்கு சரியான கவனமும் (கவனம் இல்லாமல் நனவு செயலகத்தின் கையாளுதல் இருக்காது), பலமுறை திரும்ப திரும்ப நிகழ்தலும் (பயிற்சி) தேவைப்படுகின்றது.

----------------------------
உணர்ச்சி
----------------------------

மனச் சமுதாயத்தில் உள்ள அனைத்து செயலகங்களையும் எல்லா நேரமும் இயக்கத்தில் வைப்பது ஆற்றலை வீணடிப்பது மற்றும் திறனற்றது மட்டுமில்லாமல், அது மனதின் செயல்பாடுகளை திணரடிக்கக்கூடியதும் கூட. வாழ்கை என்பது பல்வேறு முரண்பாடுகளை கொண்ட சிக்கலான ஒன்று என்பதால், அனைத்து செயலகங்களையும் இயக்கத்தில் வைப்பது பெரும்பாலும் முடக்க நிலைகளையே இட்டுச்செல்லும் (எதையும் முடிவெடுக்க முடியாமல் குழம்பி கொண்டே இருத்தல்). எப்படியாகிலும் குறைகளற்ற பூரணமான ஒன்று என்று எதுவும் இல்லையே – வாழ்கையில் நாம் பல்வேறு சமரசங்களை செய்தே ஆக வேண்டும்! வாழ்கையின் சில முக்கிய தருணங்களின் வகைகளை கொண்டு அதற்கேற்ப சில செயலகங்களை இயக்கத்திலும், மற்ற சிலவற்றை இயக்கமற்றும் செய்து பல்வேறு மன-நிலைகளை அடையுமாறு மனம் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த மன-நிலைகளை நனவு செயலகம் உணர்ச்சிகளாக உணர்கின்றது. உதாரணமாக, காதல் உணர்ச்சிக்கான மனநிலை, நிறைகுறைகளை ஆராய்ந்து அறியும் பல செயலகங்களை இயக்கமற்று ஆக்கலாம் – அதனால் இந்த உலகம் முன்பை விட ஆழகாகவும், பூரணமாகவும் தோன்றலாம் (எனவே இருவேறு நபர்கள் அவர்களின் குறைகளை சமரசம் செய்து இணைய முடியும்). சில மனநிலை விரைவாக தொடங்கி விரைவாக முடிந்துவிடலாம் (உதாரணமாக, கோபம்). சில மனநிலை மெதுவாக ஆரம்பித்து மெதுவாக முடியலாம் (உதாரணமாக, காதல்). ஒவ்வொரு மனநிலையும் அதற்கேற்ப உடலையையும் தயார்படுத்தும் – உதாரணமாக, கோபம் இதயத்துடிப்பை அதிகப்படுத்தும். இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தில் ஏற்படும் மாற்றம், இதயத்தில் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் ஏற்படும் வலி, தசை இறுக்கம் போன்ற பல்வேறு உடலியல் மாற்றத்தை நனவு செயலகம் எளிதாக உணர்ந்து கொள்ள முடிவதால், அது மறைமுகமாக மனநிலைகளை/உணர்ச்சிகளை இதன்மூலம் அறிந்து கொள்கின்றது.

ஒவ்வொரு நாளும் மனம் அளவில் அடங்கா தகவல்களை செயல்முறை படுத்துகின்றது. அதனால் எல்லா தகவல்களும் ஒரே அளவிலான முக்கியத்துவம் தரமுடியாது. மனம் உணர்ச்சியின் முக்கியத்தும் பொறுத்து அதற்கேற்ப தகவல்களை செயல்முறை படுத்தி, மேலும் எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைக்கின்றது. உதாரணமாக, உயிருக்கு மிக ஆபத்தான அனுபவம் பலமுறை திரும்ப திரும்ப ஏற்பட்ட பிறகே நாம் கற்றுகொள்ள வாய்ப்பு இருக்காது – உடனடியாக கற்றுகொள்ள வேண்டும். அதனால் மிக உணர்ச்சிகரமான நிகழ்வுகளின் போது ஏற்பட்ட தகவல்களை தெளிவாக, விவரமாக நாம் நினைவில் கொள்கின்றோம். இப்படிப்பட்ட தகவல்கள் மிக வலிமையாக சேமிக்கப்படுவதால் (சேமித்தலின் வலிமை உணர்ச்சியின் முக்கியத்துவம் மற்றும் எத்தனை முறை திரும்ப நிகழ்ந்தது என்பதை பொறுத்தது), அவை மூளையில் நீண்ட காலத்திற்கு நிலைத்து இருக்கலாம் – அதனால் அந்த நினைவுகள் நீண்ட நாட்களுக்கு நம்மை துரத்தலாம்!

இவ்வாறு மனநிலைகள் தற்பொழுதைய நம் உணர்வுகளையும், அனுபவத்தையும் பாதிப்பது மட்டுமில்லாமல், கற்றலின் செயல்முறையை தாக்கம் செய்வதன் மூலம் நம்முடைய நீண்டநாள் தன்மையையும், நடத்தையையும் பாதிக்கின்றது. நம் அன்புக்கு சொந்தமானவர்களை பற்றியும், அவர்களுடனான நம் அனுபவங்களை பற்றியும் நாம் நினைவில் கொள்வது முக்கியம். நாம் நம்முடைய சுய-மாதிரியை மனதில் அமைப்பது போல், நம் அன்புக்கு மிக-நெருக்கமானவர்களின் மாதிரிகளையும் அமைக்கின்றோம். அவர்களின் விருப்பு வெறுப்புகள், பழக்க வழக்கங்கள், குணாதிசியங்கள் பற்றி நமக்கு நன்றாக தெரிவது மட்டுமில்லாமல், நம் வாழ்கையின் பல அனுபவங்கள் அவற்றோடு பிணைந்துவிடலாம். ஒருவரை நாம் அன்பு செய்யும் போது, அதற்கேற்ப மனநிலையும் மெதுவாக மாறுகின்றது. அன்பு, காதல் சம்மந்தப்பட்ட உணர்ச்சிக்கான மனநிலை, நிறைகுறைகளை ஆராய்ந்து அறியும் பல செயலகங்களை இயக்கமற்று ஆக்குவதாலும், அனுபவங்கள் சார்ந்த மற்ற செயலகங்கள் வலிமையுடன் இயக்கம் செய்வதாலும், நம் மனம் திறந்து வெளிப்படையாகவும், அதே நேரம் எளிதாக பாதிக்கப்படக் கூடிய வகையிலும் உள்ளது. இந்த திறந்த மனநிலை, உறவின் நல்ல காலத்தில் நமக்கு அழகான, அடர்த்தியானா (உணர்வுபூர்வமான) அனுபவத்தை தருகின்றது! உறவு முறிந்து போகும்போது கொடூரமான அனுபவத்தை தருகின்றது!

----------------------------
வலி
----------------------------

உடலில் ஏற்படும் எந்த ஒரு சேதத்தையும் வலியாக உணர்ந்து, அதை வலி-செயலகம் கையாளும். முதலில் சேதப்படுத்தும் சுழலில் இருந்து பின்வாங்க ஊக்கப்படுத்தும். மறுபடியும் இது போன்ற அனுபவத்தை தவிர்க்க கற்க உதவும். சேதமான இடத்தை பாதுகாக்க, அது ஆறும்வரை வலி இருக்கும். சேதராம் கடுமையாக இருந்தால், வலி-செயலகம் பழைய அனுபவங்களை தேடி அதற்கு ஏற்ற தீர்வுகளை காண புதிய குறிக்கோள்களை ஏற்படுத்தும் (உதாரணமாக, மருந்து போடுதல், மருத்துவரை அணுகுதல்). மேலும் ஏற்கனவே உள்ள மற்ற செயலகங்களின் குறிக்கோள்களை மட்டபப்டுத்தும் (உதாரணமாக, மாலை விளையாட்டை இரத்து செய்தல்). சேதாரம் மேலும் அதிகமாக கடுமையாக இருந்தால் (அல்லது சேதராம் மேலும் பல நாட்கள் நீடித்தால்), வலி-செயலகம் இதற்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்து, மேலும் புதிய குறிக்கோள்களை உருவாக்கும்; தொடர்ந்து ஏற்கனவே உள்ள மற்ற பல செயலகங்களின் குறிக்கோள்களை மட்டப்படுத்தும். வலியின் தீவிரம் தொடர்ந்தால், இந்த செயல்முறை மேலும் படிப்படியாக மனச் சமுதாயம் முழுவதும் பரவும். இப்படியாக, மிகவும் அத்தியாவிசியமான குறிக்கோள்களையும், செயல்களையும் தவிர மற்ற அனைத்தையும் மட்டப்படுத்தி மனம் இந்த வலிக்கான தீர்வு காணுவதை மட்டுமே முக்கிய குறிக்கோளாக்கும். இப்படி மட்டப்படுத்துவது மற்ற செயலகங்களின் குறிக்கோள்களை மட்டுமல்ல அவற்றிக்கான வலிமை, ஆர்வம், ஈடுபாடு, சந்தோசம் என அனைத்தையும் சேர்த்து தான் (நாம் மற்றவற்றில் ஈடுபட ஆர்வம் காட்டாமல் இச்சமயத்தில் வலியை மட்டும் பிராதனப்படுத்துவது நம் உயிர்காப்பிற்கு முக்கியம்). அதனால், உலகம் மந்தமாகவும், ஏன் கொடூரமாகவும் தோன்றலாம். நனவு செயலகம் இந்த மனநிலையை மனச்சோர்வாக உணர்கின்றது. சேதாரம் குணமான பிறகு வலி நின்று, மனமும் இயல்பான நிலைக்கு திரும்பும்.

பரிணாமம் பலசமயம் ஏற்கனவே உள்ள வேறொன்றிற்கான அமைப்பை, புதிய ஒத்த செயல்பாடுகளுக்கு பயன்படுத்தும் –ஏனெனில் இது எளிதான ஆரம்ப தகவமைப்பை தருகின்றது. பிறகு படிப்படியாக புதிய செயல்பாட்டிற்கு ஏற்றவாறு அது பரிணாம வளர்ச்சி அடையும். அப்படியே, மனம் ஏற்கனவே உள்ள உடல் சார்ந்த வலியை கையாளும் செயல்முறைகளை, மனதளவில் சேதாரம் விளைவிக்கும் சுழலுக்கும் – மன வலிக்கும் – பயன்படுத்த பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இது எளிதான ஆரம்ப தகவமைப்பாக இருந்தாலும், மனம் சார்ந்த சேதாரத்திற்கு  அது முழுமையாக ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். உடல் சார்ந்த வலிகளுக்கும், மனம் சார்ந்த வலிகளுக்கும் இடையே முக்கிய வித்தியாசங்கள் உண்டு – இதன் பின்விளைவே, நம் மன வலி  சார்ந்த கொடூரமான துயரங்களுக்கு காரணமாக இருக்கலாம் (இது அதிகமாக சிந்திக்கும், மனிதன் போன்ற உயர்நிலை விலங்குகளை அதிகமாக பாதிக்கும்).

பெரும்பாலும் உடல் சார்ந்த வலியின் காரணங்கள் நேரடியானது. ஆனால் மனம் சார்ந்த வலியின் காரணங்கள் பலநேரம் சிக்கலாக, தெளிவற்று குழப்பமாக இருப்பதுடன், பல்வேறு நினைவு சார்ந்த தொடர்புகள் மூலம் மறுபடியும் மறுபடியும் தூண்டப்பட்டு வலிமைப்படுத்தப் படுகின்றது. பெரும்பாலும் உடல் சார்ந்த வலிக்கான தீர்வுகள் நேரடியானது. ஆனால் மனம் சார்ந்த வலிக்கான தீர்வுகள் சிக்கலாக, தெளிவற்று குழப்பமாக இருப்பது மட்டுமின்றி பலநேரம் அதற்கு எந்தவித நல்ல தீர்வும் இருப்பதில்லை (நம் அன்புக்குடைய ஒருவரை இழக்க நேர்ந்தால், அதற்கு ஏதாவது நல்ல தீர்வு உண்டா?). வலி-செயலகம் தீர்வுகளை காணும் நோக்கில், இது போன்ற முந்தைய மன வலியின் அனுபவங்களை தேடி ஆராயும் போது, பலநேரம் அது நம் துயரத்தை மேலும் அதிகப்படுத்தலாம். இக்காரணங்களால், மன வலி (உடல் வலியை காட்டிலும்) நம்மை எளிதாக மனச்சோர்வு நிலைக்கு தள்ளிவிடுகின்றது.

சரி செய்துவிட வேண்டுமென்று தீர்வுக்காக போராடாமல் விட்டுவிடுவதும், மறந்து விடுவதும் எளிய தீர்வாக இருக்கலாம். ஆனால், நம் மனம் சோர்வு நிலையில் உள்ளதால், அந்த மனநிலையில் உலகம் மந்தமாகவும், கொடூரமாகவும் உள்ளதால், மற்ற எதுவும் நம்மை ஊக்கப்படுத்தியோ, விருப்பப்படுத்தியோ, சந்தோசப்படுத்தியோ அந்த நிலையிலிருந்து நகர்த்துவது இல்லை (ஏனெனில், மனச்சோர்வு செயல்முறையின் நோக்கம், காய்ச்சல் போன்று நம்மை முடக்கி வலிக்கான தீர்வு காண்பதே). அதனால், மனம் சோர்வு நிலையில் பல நாட்கள், மாதங்கள், வருடங்களாக முடங்கி விடுகின்றது. கடுமையான மனச்சோர்வு என்பது மனிதனின் மிகக் கொடூரமான அனுபவங்களில் ஒன்றாக இருக்கலாம். உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய மதிப்பீட்டின் படி (மருத்துவ நிலை) மனச்சோர்வால் உலக அளவில் 35 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடுமையான மனச்சோர்வை எளிதாக புறம்தள்ளி, அதிலிருந்து மீண்டு விடலாம் என்று நீங்கள் நினைக்கலாம் – அனால், நிதர்சனம் என்னவென்றால் பெரும்பான்மையான நமக்கு, அதை தூண்டக் கூடிய கொடுமையான அனுபவங்கள் (சில கெட்ட மரபணுக்கள்) வாழ்க்கையில் ஏற்படாதது அதிர்ஷ்டவசம். 


----------------------------
உரையாடல்
----------------------------

முயல்: மனச் சமுதாயத்தை மனித சமுதாயத்துடன் ஒப்பிட்டால்: செயலர்கள் = மக்கள்; செயலகங்கள் = பல்வேறு மாநில, மத்திய அரசு மற்றும் தனியார் அமைப்புகள், நிறுவனங்கள்; நனவு செயலகம் = சமுதாயத்தின் தலைவர் (ஜனாதிபதி அல்லது பிரதமமந்திரி போல்). கீழிலிருந்து மேல் மற்றும் மேலிலிருந்து கீழ் செல்லும் தகல்கள், ஒத்துழைப்புகள், போட்டிகள், அதிகார பகிர்ந்திடுதல், ஒன்றை ஒன்று கண்காணித்தல் என பல ஒற்றுமைகள் இரண்டுக்கும் இருக்கின்றது. ‘நான்’ என்ற சுயஉணர்வு, நனவு செயலகத்திலிருந்து வருவதால், நான் என்னுடைய மனச் சமுதாயத்தின் தலைவர் – ஆக நான் என் மனதின், உடலின், வாழ்வின் தலைவர்.  

ஆமை: நன்று. மேலும் மனச் சமுதாயம் சர்வாதிகார அமைப்பாக இல்லாமல் ஜனநாக அமைப்பு போல் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது – நனவு செயத்திற்கு முழுமையான கட்டுப்பாடோ, அதிகாரமோ இல்லை. எந்த ஒரு ஜனநாக அமைப்பைப் போல், சில சமயம், ஒன்றை நிறைவேற்றுவது விரக்தி அடைய வைப்பதாகவும், ஒன்றை கற்க, சரிசெய்ய தொடர்ந்த நீடித்த முயற்ச்சி தேவை படுவதாகவும் இருந்தாலும், எளிதாக ஒருசில தவறுகளால் எல்லாவற்றையும் அழித்து விடவும் முடியாது.

முயல்: தலைவருக்கு முழு அதிகாரம் இல்லாததால் பலநேரம் அவர் ஊக்கப்படுத்தி, உத்வேகப்படுத்தி சமுதாயத்தின் மற்ற அங்கத்தினரை நம்பவைத்து முடுக்கி விடுகின்றார்.

ஆமை: நனவு செயலகமும் ஊக்கப்படுத்துதல், உத்வேகப்படுத்துதல் போன்ற பலவகை உத்திகளை பயன்படுத்தி மற்ற சில செயலகங்களின் வலிமையை மட்ட/அதிக படுத்தலாம். உதாரணமாக, நம்முடைய சொந்த நம்பிக்கைகள், எண்ணங்கள், வாழ்கைமுறை நம் வாழ்கைக்கு முக்கியம். அதே சமயம், ஒரு சமூக விலங்ககாக, நம் வெற்றிகரமான வாழ்கைக்கு நாம் எப்படி அடுத்தவர்களுடனும், அவர்களுடைய எண்ணங்கள், நம்பிக்கைகளுடனும் எப்படி ஒத்துப் போகின்றோம் என்பதும் முக்கியம். பலநேரம், இந்த இரண்டு சுய-பாதுகாப்பு மற்றும் ஒத்துபோகுதல் செயலகங்களுக்கு இடையே முரண்பாடுகளும் அதனால் போட்டியும் ஏற்படும்.

முயல்: இதை சார்ந்த ஒரு ஊக்க/உத்வேகப் படுத்தும் பழமொழி ஒன்று: "ஊரோடு ஒத்து போ".

ஆமை: அதற்கு மாற்றாக மற்றொரு மொழி: "அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்கு அதிக அக்கறை கொடுத்தால், நீ எப்பொழுதும் அடுத்தவரின் கைதியாகவே இருப்பாய்". இதில் எது, சரி தவறு என்பதை விட, நம்மை நாமே (நனவு செயலகம்) ஒருபக்கமாக ஊக்கப்படுத்த இது ஒரு உத்தி. நனவு செயலகத்திற்கு நேரடியான கட்டுப்பாடு இல்லாததலால், மற்ற செயலகங்களின் வலிமைகளை மறைமுகமாக கட்டுப்படுத்த இவையெல்லாம் நாம் கண்டறிந்த உத்திகள். அப்படியே, நாம் நமக்கு நாமே தேற்றிக் கொள்கின்றோம், நமக்கு நாமே ஊக்கப்படுத்திக் கொள்கின்றோம்!

முயல்:  நாம் எதிர்பார்க்காத சமயத்தில் நண்பர் ஒருவர் பின்னாலிருந்து திடீரென்று சத்தமிட்டால், உடனே நாம் பயப்படுகின்றோம். அது நண்பர் என்று உணர்ந்தவுடன் இயல்பு நிலைக்கு திரும்புகின்றோம். எவ்வளவு எளிதாக நமது உலகப் அனுபவம் திடீரென்று பயத்திற்கும், இயல்பு நிலைக்கும் மாறுகின்றது!?!

ஆமை: நமது கீழ்மட்ட செயலகங்களின் கணிப்பு வேகமாக இருந்தாலும் துல்லியமாக இருப்பதில்லை. அவை ஒரு உணர்வு பூர்வமான நிகழ்வை உணர்ந்தால், அது நம் மனநிலையை மாற்றி அதற்கேற்ப நம் உடலையையும் தயார்படுத்துகின்றது. மேல்மட்ட செயலகங்கள் அதிக நேரம் எடுத்து கொண்டாலும், சற்றே துல்லியமாக கணித்து அதற்கேற்ப கீழ்மட்ட செயலகங்களை கட்டுப்படுத்தி நம் மனநிலையை மாற்ற வைக்கின்றது. சிலநேரம், இது நமது மனநிலையை, உலக அனுபவத்தை தலைகீழாக மாற்றிவிடுகின்றது.

முயல்: அதனால் தானோ, கீழே விழுந்த குழந்தை, வலியில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும், பெற்றோர்கள் எப்படி எடுத்துக் கொள்கின்றனர் என்பதை பொறுத்து அழலாம் அல்லது அழாமல் போகலாம்! (சிலசமயம் சிரிக்கலாம்)

ஆமை: அதுபோலவே, நம் நம்பிக்கையை பொறுத்து, தற்செயலான ஒன்று அதிசியமாகவோ அல்லது சதாரனாமானதாகவோ தோன்றலாம்! நம் நம்பிக்கையை பொறுத்து, பார்பதற்கு எளிய நிகழ்வு ஒன்று தொடர்வினையை தூண்டி ஒரு கொடூரமான அனுபவத்தையோ அல்லது சாதாரண அனுபவத்தையோ தரலாம்!

முயல்: துயரங்களை நாம் மனதில் அனுபவித்தாலும், காயப்பட்ட இதயம், கனத்த இதயம், உடைந்து போன இதயம் என்றல்லவா குறிப்பிடுகின்றோம்.

ஆமை: மன அதிர்ச்சி முதலில் நம் மனதைத் தான் தாக்குகின்றது. அந்த சூழலை எப்படியாவது கட்டுக்குள் கொண்டுவர, எப்படியாவது புரிந்து கொண்டு தீர்வு காண மனநிலை மாறும்போது, அதற்கேற்ப உடலை அதன் உச்சவரம்பிற்கு தயார்படுத்துகின்றது – இதயத்துடிப்பு உட்பட. இதயம் ஒரு மென்மையான உறுப்பு என்பதால், அதன் உடலியலான வலியை மனம் எளிதாக உணர்ந்து கொள்கின்றது.
இந்த படம், குறிப்பீடாக மனம்-இதயத்திற்கான தொடர்பை காட்டுகின்றது. மூளையின் உள்ளே பல செயலகங்கள், பல படிநிலைகளில், பல வண்ணத்தில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு செயலகத்திலும் நட்சத்திரம் போன்ற செயலர்கள் காட்டப்பட்டுள்ளன. நனவு செயலகம் CA (Conscious Agency) என்று குறிக்கப்பட்டுள்ளது. நனவு செயலகம், அனைத்து செயலகங்களின் ஒட்டுமொத்த நிலையை உணர்ச்சியாக உணர்ந்து கொள்கின்றது. மேலும், இந்த மனநிலை இதயத்துடிப்பை பாதிப்பதால், அதன் வலியை மற்றொரு செயலகம் அளவீட்டு முடிவில் அதை நனவு செயலகம் உணர்கின்றது

முயல்: மனித வரலாற்றில் எவ்வளவு துயர் நிறைந்த காதல் தோல்விகளும், கல்லறைகளும் உள்ளன! ஒரு சில வருட அல்லது மாத உறவானாலும், காதலுக்கு ஏன் அப்படி ஒரு வலிமை? வாழ்நாள் தொடர்ந்த இரத்த சொந்தமுள்ள பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், பெற்ற குழந்தைகள் உடனான உறவுக்கு கூட அப்படி ஒரு வலிமை இருப்பதாக தெரியவில்லையே!

ஆமை: காதல் நம் மரபணுக்களின் உயிர்வாழ் வழிமுறைகளின் மிக அடிப்படையான இனப்பெருக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. அதனால் அது ஒரு வலிமையான மனநிலையாக உள்ளது – அப்படியே நாம் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம் – அப்படியே நம் மூளை/மனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  காதல் கதைகளை நாம் ஆர்வமாக கேட்டாலும், நம் சொந்த வாழ்கையில் அதன் பிடியில் சிக்காத வரை, அதன் முழு வலிமையை நம்மால் உணர்ந்து கொள்வது கடினம்.

முயல்: சொந்த அனுபவம் இல்லாதவரை, ஏன் அதன் வலிமையை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது?

ஆமை: ஏனெனில், நம் மனநிலைக்கான உணர்வு வேறு எங்கும் இல்லை – அது நம்முடைய தற்சார்பு நிதர்சனம் மட்டுமே! நமது அனுதாபம், பச்சாதாபம் கூட நம்முடைய அனுபவத்தை பொறுத்ததே. பிறவி நிறக்குருடு உள்ளவரிடம் அல்லது பார்வையற்றவரிடம், வண்ணங்களை பார்ப்பதின் அனுபவத்தை எப்படி விளக்க முடியும்? (தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனதிலே?!) திடீரென்று அவருக்கு வண்ணங்களை பார்க்க முடிந்தால், அவர் எப்படி உணர்வார்? எந்த வார்த்தைகளும், விளக்கங்களும் அந்த அனுபவத்தை அதற்கு முன் விளக்கியிருக்க முடியாது.

நம் மனம் அது போன்ற பல இரகசியங்களை வைத்துள்ளது – அவை இதுவரை இயங்காத அல்லது இதுவரை இயக்கத்தை நிறுத்தாத செயலகங்கள் தரும் மனநிலைக்கான உணர்ச்சி அல்லது உணர்வு. அவை முதன் முறையாக இயக்கப்படும் போதோ அல்லது இயக்கமற்று போகும்போதோ, அது நம்மை அதிர்ச்சி அடைய வைக்கலாம்! எந்த ஒரு அறிதலும், அந்த அனுபவத்தை முழுமையாக புரிந்து கொள்ள உதவி இருக்காது. அப்படிப்பட்ட புதிய அனுபவம், நம் வாழ்க்கையை, மனித வாழ்க்கையை புதிய பார்வையில் உணர வைக்கலாம்! – அது ஞானம்!

முயல்: அண்டத்தோடு-ஒன்று-கலந்த-உணர்வு, உடலை-விட்டு-மனம்-பிரிந்த-உணர்வு போன்ற ஆன்மவியல், மருளியல் சார்ந்த அனுபவங்கள் பற்றி...

ஆமை: நம் மன அனுபவங்கள் வியப்பாக, அதிர்ச்சியாக, கொடூரமாக, விந்தையாக, அழகாக, வலிமையாக என எப்படி தோன்றினாலும், அவை அனைத்தும் நம் தற்சார்புடைய அனுபவங்கள் மட்டுமே. முறையான வெளிச்சார்புடைய, அறிவியல்படியான புரிதல் இன்றி, அந்த அனுபவங்கள் தவறான அர்த்தங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் நம்மை இட்டுச் செல்லலாம். ஞானம் ஒரு வெளிச்சார்புடைய புரிதலோ, நிதர்சனமோ அல்ல! 

முயல்: எப்படியாகிலும் நம் பெற்றோர்களின், முன்னோர்களின் ஞானம் சார்ந்த படிப்பினைகளையும், அறிவுரைகளையும் கற்றுகொள்வது நல்லது தானே!

ஆமை: இசை, பிராத்தனை, தியானம் போன்றவை நம் முன்னோர்களின் ஞானத்திலிருந்து வளர்ச்சி அடைந்தவையே! நமது சமுதாயத்தில் நம் முன்னோர்களின் பல பயனுள்ள படிப்பினைகளை நிரம்பியுள்ளன. ஆனால் எல்லாவற்றையும் வெளிச்சார்புடைய அறிவுக்கு இணையாக கருதும்போது அவை அவற்றின் மதிப்பை இழக்கின்றன.  அவற்றை எல்லாவற்றிக்கும் மேலான மாற்ற முடியாத கோட்பாடுகளாகப் பாவித்து, அவற்றை மேலும் முறையாக வளரவிடாத போது (சேர்த்தல், கழித்தல், சரிசெய்தல்), அவை அவற்றின் பயனை இழக்கின்றன. இன்று நம் சமுதாயத்தில் காலாவதியாகிப் போன, பாதகமான ஞானங்களும் உள்ளன. திறந்த மனதுடன் பகுத்தறிவோடு நம் முன்னோர்களின் ஞானங்களை படித்து பயன்படுத்த வேண்டும். இவை சக மனிதர்களின் கனத்த வலிகளுக்கு மருந்தாக, நம் முன்னோர்கள் கனத்த வலிகளோடு அவர்கள் அறிந்த, புரிந்த வரையில் கற்று விட்டுச்சென்ற ஞானங்கள் – இது வறட்டு ஆணவத்திற்கான இடமல்ல!

முயல்: மொத்தத்தில் சுருக்கமாக சொன்னால், நம் மனச் சமுதாயத்தின் தலைவராக நமக்கு உண்மையில் எப்படிப்பட்ட கட்டுப்பாடு உள்ளது?

ஆமை: நம் மூளை பெரும்பாலும் கருதிய நோக்கத்திற்கேற்ப வேலை செய்தால் (எந்த பெரிய கோளாறுகளோ, இடர்களோ இல்லாமல்), நம்முடைய நெருங்கிய உண்மையான கட்டுப்பாடு கற்றலில் உள்ளது எனலாம். அதிலும், நம் சொந்த மனம் எப்படி வேலைசெய்கின்றது என்பதை கவனித்து, அதை படிப்பது என்பது மிகச்சிறந்த ஒரு கற்றலாக இருக்க வேண்டும் – இது மனம்-அறிதலை வளர்த்தல்! 

முயல்: மனம்-அறிதலின் இரகசியம் என்ன?

ஆமை: எந்த ஒரு கற்றலுக்கும் நனவுநிலையோடான கவனமும், தொடர்ந்த பயிற்ச்சியும் தேவை. மனம்-அறிதல் என்பது ஒரு திறமையை கற்பது மட்டுமல்ல, நாம் தொடர்ந்து கவனத்தை நம் சிந்தனைகளுக்கும், எண்ண ஓட்டங்களுக்கும் கொடுக்கும் போது, அது நம் மனச் சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியையும் மெதுவாக படிப்படியாக சரிசெய்ய, திரும்ப கற்க ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்றது. தனி மனிதனாக, சமூகமாக நாம் நூற்றாண்டுகளாக சேர்த்து வைத்த தேவையற்ற மனமூட்டைகளை, அது இறக்கி வைக்கலாம்!   

நாம் நம் மனச் சமுதாயத்தின், அதனால் நம் வாழ்கையின் தலைவர். நாம் நம் கீழ்மட்ட செயலகங்களின் அனைத்து கதறல்களையும், எச்சரிக்கைகளையும் கண்டுகொள்ளாமல், நம்மையே அழித்துக் கொள்ளும் அக்கறையற்ற தலைவராக இருக்கலாம். அல்லது நம் கீழ்மட்ட செயலகங்களின் ஒவ்வொரு சின்ன கதறலுக்கும் அடிபணிந்து, ஒவ்வொரு சின்ன எச்சரிக்கைக்கும் பயந்து போகும் பலவீனமான தலைவராக இருக்கலாம். நமக்கு பெரிதாக கட்டுப்பாடோ, சுதந்திரமோ இல்லை என்றாலும், நாம் நம் கீழ்மட்ட செயலகங்களின் செய்திகளை அக்கறையுடன் கேட்டு – ஆனால் அவற்றின் கதறல்களுக்கு, கட்டளைகளுக்கு, குழப்பங்களுக்கு, ஏமாற்றுதல்களுக்கு அடிபணிந்து விடாமல் – நிதானமாக, திடமாக, நல்ல முறையில் கையாளும் திறைமான தலைவராக இருக்க கற்று அதை வளர்க்க முயலலாம். நம் முன்னோர்களின் பல ஞானங்கள் அப்படிப்பட்ட... தைரியம், அன்பு போன்ற முக்கிய பண்புகள் கலந்த கற்றலை, வளர்ச்சியை நமக்கு காட்டுகின்றன


மேலும்:

References and Additional Notes:

No comments: