31 January 2011

ஆன்மாவை தேடி

மனிதர்கள், விலங்குகள் போன்ற இயக்கமுடைய பொருட்களுக்கும், பாறை, நாற்காலி, தாவரங்கள் போன்ற இயக்கமில்லாத பொருட்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு என்ன? இயக்கமுடைய பொருட்களுக்கு புதிரான ஒரு உயிர் சக்தி இருப்பதாகவும், அதனாலேயே அவை இயக்கமடைகின்றன என்றும் நம்முடைய முன்னோர்கள் நினைத்தனர். அந்த புதிரான உயிர் சக்தியை ஆன்மா என்றழைத்தனர். அந்த கருதுகோளை மேலும் விரிவுபடுத்தி, மரணத்திற்கு பின் ஆன்மா உடலை விட்டு பிரியும் என்றும், அது ஒருபோதும் சாவதில்லை என்றும் நம்பினர் (பாவம் செய்யாதவர்கள், குழந்தைகள் படும் துன்பங்களை விளக்க உருவான முன்-ஜென்ம-பாவம் என்ற யோசனைகளுக்கும், நரகம்-சொர்க்கம் போன்ற யோசனைகளுக்கும் அது ஏதுவாக உதவியது).

பிறகு தாவரங்கள் உயிர் என்பதையும், மேலும் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிரிகளையும் கண்டறிந்து கொண்டோம். இப்பொழுது, உயிர் என்பது ஒரு சிக்கலான தொடர்ச்சியாக நிகழும் வேதிவினைகளின் தொகுப்பு என்பதையும், மேலும் அது எவ்வாறு பாக்டீரியா போன்ற எளிய அமைப்பிலிருந்து தாவரங்கள், மீன்கள், விலங்குகள் மனிதர்கள் உட்பட பலவகை உயிரினங்களாக இயற்கை-தேர்வு-முறையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன என்பதையும் அறிந்துள்ளோம். பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களையும் இணைக்கும், உயிரின் இரகசிய மரபியல் மூலக்கூறையும் (DNA), அதன் நான்கு எழுத்துக்களை (A, C, G, T) கொண்ட மரபு குறிப்புகளையும் அறிவோம். மரபியல் மூலக்கூறு உட்பட, உயிரின் அனைத்து மூலப்பொருட்களையும் நம்மால் செயற்கையாக தயாரிக்க முடியும். 50 கோடி மக்களை கொன்ற, முற்றிலும் மறைந்து போன 1918 தொற்று வைரஸை (Flu virus), ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் மீண்டும் உயிர் கொண்டு வந்துள்ளனர். நம் உடலின் ஒரு செல்லை (உயிரணு) கொண்டு, நம்முடைய உருப்புகளையோ அல்லது ஒத்த மரபணுக்களை உடைய மற்றொரு நபரையோ (Clone) உருவாக்க முடியும்.

உயிரின் அடிப்படையை நாம் புரிந்து கொள்ளும் வேளையில், ஆன்மா என்ற கருதுகோள் மெதுவாக நம் மனதிற்கு நகர்த்தப்பட்டது. உடல் வேறு மனம் வேறாக, நாம் உணரும் உடல்-மனது இருமை (Mind-body dualism) இந்த யோசனை துளிர் விட வைத்தது. மனம் என்பது உடலிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, தனித்த ஒன்று என்று மக்கள் நினைத்தனர்; இன்றும் பலர் நினைக்கின்றனர் (இதயம் தான் ஆன்மாவின், அன்பின், காதலின் மையம் என்றும் மக்கள் நினைத்ததுண்டு). மூளை ஏதோ ஒரு மாயமான முறையில் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு உருவாகுவது தான் மனம் என்று நம்பினர். மரணத்தை-தொட்டு-வந்தவர்களின் அனுபவங்கள் (Near-death experience), உடலை விட்டு மனம் பிரியும் அனுபவங்கள் (Out-of-body experience) (அதன் விரிவுபடுத்தப்பட்ட கதையான கூடுவிட்டு கூடு பாய்தல்) போன்ற பலவகையான வினோதமான நிகழ்வுகள் இந்த யோசனையை மேலும் கொழுந்துவிட்டு எரிய வைத்தது.

கால்கள் செயல்படும் போது 'நடத்தல்' வெளிபடுவது போல், மூளை செயல்படுதலின் வெளிப்பாடு தான் மனம். இப்பொழுது, மூளை செயல்படுவதை fMRI (functional Magnetic Resonance Imaging) எனப்படும் 'வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு' எந்திரம் மூலம் நேரடியாக பார்க்கலாம். நம்முடைய உணர்வுகள் மூளையில் எங்கு அறியப்படுகின்றன, உணர்ச்சிகள் எப்படி கையாளப்படுகின்றன, எந்த வழிகளில்...எப்படி நம்முடைய தற்காலிக அனுபவ நினைவுகள் நீண்ட கால நினைவுகளாக சேமிக்கப்படுகின்றன போன்றவற்றை நாம் அறிவோம். இப்பொழுது, மரணத்தை-தொட்டு-வந்தவர்களின் அனுபவங்கள் (மூளையின் செல்களில் ஆக்ஸிஜன் குறைவால் ஏற்படும் குகைவழியின்-கடைசியில்-தெரியும்-ஒளி போன்ற அறிகுறிகள்), உடலை விட்டு மனம் பிரியும் அனுபவங்கள் (உடலை விட்டு மனம் பிரிவது போன்ற மாயை) போன்ற பலவகையான வினோதமான நிகழ்வுகளை நம்மால் விளக்க முடியும். உடலை விட்டு மனம் பிரியும் அனுபவத்தை காந்த அலைத்துடிப்புகளை கொண்டு நம்மால் எளிதாக தூண்ட வைக்கமுடியும்.

நம் மூளை வலது-இடது என இரண்டு அரைக்கோளங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. வலது-அரைக்கோளம் நம் இடப்பக்க உடலையும், இடது-அரைக்கோளம் நம் வலப்பக்க உடலையும் கட்டுப்படுத்துகின்றது. இந்த இரண்டு அரைக்கோளங்களையும் இணைப்பு-மெய்யம் (Corpus Callosum) எனப்படும் ஒரு கட்டான நரம்பிழைகள் இணைக்கின்றன. பலவகைகளில், இந்த இரண்டு அரைக்கோளங்களையும் இரண்டு தனி மூளைகளாக பாவிக்கலாம். சில காரணங்களுக்காக, இவற்றை இணைக்கும் இணைப்பு-மெய்யம் துண்டிக்கப்பட்டால், இரண்டு அரைக்கோளங்களின் இரு வேறுபட்ட பண்புகளையும், விருப்பு வெறுப்புகளையும், ஆசா பாசங்களையும், நம்பிக்கைகளையும் கவனிக்க முடியும். உதாரணமாக, இந்த நிலையில் உள்ள சில நோயாளிகள், ஒருபக்க அரைக்கோளத்தில் கடவுளை நம்பிக்கை உள்ளதாகவும், மறுபக்க அரைக்கோளத்தில் கடவுளை நம்பிக்கை இல்லை எனவும் கூறுகின்றனர் (நம் இரண்டு கண்களிலிருந்து செல்லும் குறிப்பலைகள் மூளையின் வெவ்வேறு அரைக்கோளத்தில் பகுத்து அறியப்படுவதால், ஒரு கண்ணை மூடிவிட்டு இச்சோதனையை செய்ய முடியும்). ஆன்மா என்ற ஒன்று இருந்தால், இங்கு அது பாதியாக பகுக்கப்பட்டிருக்க வேண்டும் (ஒருவேளை, அவர்களின் ஒருபாதி ஆன்மா சொர்க்கத்திற்கும், மறுபாதி ஆன்மா நரகத்திற்கும் செல்லலாம்!).

எனினும், மற்றொரு கோணத்தில், ஆன்மா என்ற ஒன்று உண்மையிலே உண்டு! அது எந்த ஒன்றிலிருந்தும் வெளிப்படும் ஒரு சாரம் அல்லது ஜீவன் ஆகும். அது ஒரு புத்தகத்தின் ஆன்மாவாக இருக்கலாம், அல்லது ஒரு திரைப்படத்தின் ஆன்மாவாக இருக்கலாம். அது பல நுண்ணிய புள்ளிகளை (படத்துணுக்குகள்) கொண்டு ஒரு படம் வெளிப்படுவது போன்றது; பல எழுத்துக்களை கொண்டு ஒரு புத்தகத்தில் கதை வெளிப்படுவது போன்றது; சில தொடர்ந்த வேதிவினைகளின் தொகுப்பை கொண்டு ஒரு உயிருள்ள செல் வெளிப்படுவது போன்றது. ஒரு உயிருள்ள செல் என்பது எந்தவித விருப்பு-வெறுப்பு அற்ற, ஆசா-பாசங்கள் அற்ற வேதிவினைகளின் தொகுப்பு. ஆனால், இப்படிப்பட்ட பலகோடி செல்களின் ஒன்று கூடிய செயல்பாட்டின் வெளிப்பாடே... உணர்ச்சி, நம்பிக்கை, விருப்பு-வெறுப்பு, ஆசா-பாசங்கள், வலி-சுகம் கொண்ட மனம்! அது ஒரு மனிதனின் சாரம், ஜீவன், ஆன்மா!

5 comments:

Kamaraj said...

இணைப்பு-மெய்யத்தால் பிணைக்கப்பட்ட இரு அரைக்கோளங்களை போல், அன்பால்/காதலால் பிணைய பட்ட இரு உள்ளங்கள் - ஈருடல் ஓர் மனது!
Friendship is a single soul dwelling in two bodies. -- Aristotle

Seeker said...

படித்தேன் பிடித்திருந்தது. நான் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை என்னுடைய foundation-னான beliefs and faith-ஐ யாரோ (குடும்பம், சூழல், சமுதாயம்) build and develop செய்திருக்கிறார்கள் அதையும் மீறி என் சுய அறிவினால் சிந்தித்து conscious-ஆ எதை செய்கிறேனோ அதுதான் நான்.

Kamaraj said...

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி Ravi!

//நான் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை என்னுடைய foundation-னான beliefs and faith-ஐ யாரோ (குடும்பம், சூழல், சமுதாயம்) build and develop செய்திருக்கிறார்கள் அதையும் மீறி என் சுய அறிவினால் சிந்தித்து conscious-ஆ எதை செய்கிறேனோ அதுதான் நான்.//

நான் யார்? (http://icortext.blogspot.com/2010/07/blog-post.html) என்ற பதிவில் நான் எழுதியுள்ள சமன்பாடு:
[நான் யார்?] = [என் மரபணுக்கள்] + [என் சூழல்கள்]
இதையும் மீறி நாம் எதுவும் செய்ய முடியும் என்று தெரியவில்லை. நேரம் கிட்டும் போது Consciousness, Freewill பற்றிய இன்றைய அறிதலை (Neuroscience, Cognitive science) எழுத முயற்சிக்கின்றேன்.

ஆ.ஞானசேகரன் said...

நன்றாக உள்ளது... இன்னும் எளிமைப்படித்தியிருக்கலாம்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Kamaraj said...

//ஆ.ஞானசேகரன் said...
நன்றாக உள்ளது... இன்னும் எளிமைப்படித்தியிருக்கலாம்
//
கருத்துக்கு மிக்க நன்றி. ஏதாவது ஒரு சில பகுதியை எளிமைப் படுத்தியிருக்கலாம் என்று நினைத்தால், எந்த பகுதி என்று கூறவும்.