02 December 2008

தீவிர-வாத நோய்

எனக்கு ஒரு குழந்தைப் பருவ கதை ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு காதல் பறவைகள் தங்கள் குடும்பத்திற்காக மிக கடினமான உழைப்பில் ஒரு அழகான கூடு கட்டின. ஒரு நாள், நீண்ட இரை தேடலுக்கு பிறகு கூடு திரும்பின. அவைகளின் கூட்டை வேறு ஒரு பறவை ஆக்கிரமித்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தன. காதல் பறவைகள் அவனிடம், "இது எங்களுடைய கூடு. இதை நாங்கள் மிகவும் கடின முயற்சியில் கட்டினோம்" என்றன. அவனோ, "நான் இக்கூட்டை இங்கு யாருமின்றி பார்த்தேன். இப்பொழுது இது என்னுடையது" என்றான். காதல் பறவைகள் அவனிடம் பல நாட்கள் தொடர்ந்து போராடின. பிறகு, காதல் பறவைகள் இதற்காக விரையமான நேரத்தையும், சக்தியையும் உணர்ந்தன. புதிதாக வேறு இடத்திற்கு சென்று தங்கள் குடும்பத்தை ஆரம்பித்தன.

நம் உலக வரலாற்றில் பல கரைகள் உள்ளன. மக்கள் தவறுகளை செய்துள்ளனர், செய்து கொண்டும் உள்ளனர். இங்கு பிழையற்ற நாடோ, சமூகமோ, இனமோ இல்லை. உன் பக்கமே சரி என்று வைத்துக் கொண்டாலும், கடந்து போன விசயங்களுக்காக எவ்வளவு நாள் போராட்டம் தேவையானது? உனக்கோ, உன் சந்ததிக்கோ அது எப்படி பட்ட பலன் பயக்கும்? உன்னை அடிமையாக வாழ சொல்ல வில்லை; ஆனால் உன்னால் அமைதிக்காக ஓரளவு நியாயமான உடன்பாடு செய்ய முடியுமா? உன் அமைதிக்காக! உன் குழந்தைகளின் அமைதிக்காக! எப்படி பார்த்தாலும், நீ கொல்லும் அப்பாவி மக்கள் உன் உண்மையான எதிரிகள் அல்லவே!

இதை நன்றாக ஞாபகத்தில் வை... அழித்தல் என்பது மிக எளிதானது. நீ பெரிதாக ஒன்றை சாதித்து விட்டாய் என்று கர்வப் படாதே. உண்மையாக சாதிக்க, நீ ஒன்றை உருவாக்க வேண்டும்... உன் நாட்டை, இனத்தை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்; அங்கு சுதந்திரமும், அறிவும் பொங்க வேண்டும்... ஆணும் பெண்ணும் சரிநிகர் காண வேண்டும்... எல்லோரும் வறுமையற்ற மகிழ்ச்சி காண வேண்டும்! இதை நீ இவ்வுலகிற்கும், உன் எதிரிக்கும் கர்வத்துடன் காண்பி!

ஒன்றை நான் மறந்தே போனேன்... இவைகளெல்லாம் உன் அறிவிற்கே எட்டாதென்று. நீ எந்த ஆதாரமுமற்ற சில குருட்டு நம்பிக்கையையே பின்பற்றுகின்றாய். அதற்கு இந்த சமூகமும் காரணம். இங்கு எந்த ஆதாரமுமற்ற சில குருட்டு நம்பிக்கைகள் பாலாபிசேகத்துடன் வரவேற்கப் படுகின்றன. இது அப்பட்டமாக பின்பற்றும் கொடுரத்திற்கு ஒரு பாளமாக, அடிதளமாக, ஒழிவிடமாக அமைகின்றது.

ஒரு கிராமமாக சுருங்கி போன இவ்வுலகத்தில் முன் எப்பொழுதை விட, நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளோம். இதில் ஒரு சமூகமோ, இனமோ, நாடோ கீழே போனால், அதை கைக் கொடுத்து தூக்கி விடவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை; இல்லையென்றால், அது நம் ஒவ்வொருவரையும் பாதிக்கும். நம்மிடம் பலவற்றை உருவாக்கும் அறிவும், ஆற்றலும் இருக்கு... சில வினாடிகளில் இவ்வுலகையே அழிக்கும் ஆயுதங்களும் இருக்கு! ஒன்றாக நாம் உயர முடியும்... இல்லையென்றால் ஒன்றாகவே வீழ்வோம்!

No comments: