18 June 2011

கேட்பதெல்லாம்...

இது காண்பதெல்லாம்... பதிவின் தொடர்ச்சி.

பொருட்கள் உதாரணமாக கம்பியோ, தகடோ, சவ்வோ அதிரும் போது அவை காற்றிலுள்ள மூலக்கூறுகளையும் தாக்கி அதிரவைத்து பரவுகின்றன. இந்த அதிர்வு-அலைகளை காது மின்-அலைகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகின்றது. மூளை அதிலுள்ள பாங்கை, ஏற்கனவே கற்று உருவாக்கிய மாதிரிகளை கொண்டு உணர்ந்து கொள்கின்றது (மேலும்: அறிவின் மூலம்). அதை நாம் சத்தமாக உணர்கின்றோம். சத்தம் என்பது வெளி-உலகில் எங்கும் இல்லை. அது மூளையில் மட்டுமே உருவாக்கப்படுகின்றது. ஆக மூளையால் எந்தவித வெளி-உலக அதிர்வு-அலை தூண்டுதலும் இன்றி சத்ததை உருவாக்க முடியும். அப்படியே, மூளையில் ஏற்படும் சில கோளாறுகள், உதாரணமாக சிகோஃபெரனியா (Schizophrenia) எனப்படும் மனச்சிதைவு நோய், பலவிதமான சத்த-பிரம்மையை உருவாக்குகின்றன (மனவியல் பற்றிய போதுமான அறிவு இல்லாத காலத்தில், அப்படிப்பட்ட சிலர் தூதுவர்களாக ஆனார்கள்).

மூளை உருவாக்கிய மாதிரிகளே, நாம் உணரும் உலகம். ஆக, நாம் கேட்பது/பார்ப்பது/உணர்வது அனைத்துமே ஒருவகையில் மாயை போன்றது தான். இந்த மாயையை நாம் பொதுவாக உணருவதில்லை என்றாலும், கீழே உள்ள உதாரணங்கள், வெளியுலக-நிதர்சனத்திற்கும் மூளை-உருவாக்கிய-மாதிரிகளுக்கும் உள்ள வேறுபாட்டை சற்றே வெளிப்படையாக அறிவிக்கின்றன.


(சுருதி ஏறிகொண்டே போவதுபோல் தோன்றினாலும், ஒரே சத்தம் தான் திரும்ப திரும்ப கேட்கின்றது)
(இது மெக்கார்க் விளைவு எனப்படுகின்றது (McGurk effect). இங்கு சத்ததின் தூண்டுதலை, பார்வையின் தூண்டுதல் குழப்பிவிடுவதால், மூளை வேறுமாதிரியான சத்தத்தை உருவாக்குகின்றது. இதை ஒரு முறை கேட்ட பிறகு, மீண்டும் ஒருமுறை கண்களை மூடிக் கொண்டு கேட்கவும்)
(மெக்கார்க் விளைவுக்கு மற்றொரு உதாரணம். இதில் ஒவ்வொரு உதாரணத்திற்கும் காட்சி-வார்த்தை என்ன, சத்த-வார்த்தை என்ன எழுதப்பட்டுள்ளதை கவனிக்கவும். உண்மையான சத்தத்தை கண்ணை மூடிக் கொண்டு கேட்டு உறுதிபடுத்திக் கொள்ளலாம்)ஒரு காட்சி, இரண்டு கண்களில் சற்றே மாறுபட்ட கோணத்தில் விழுகின்றது. இந்த வேறுபாட்டை கொண்டு மூளை முப்பரிமாண தோற்றத்தை உருவாக்குகின்றது (மேலும்: வண்ண ஆன்மீக உலகம்). இது போலவே, ஒரு அதிர்வு-அலை இரண்டு காதுகளுக்கும் வெவ்வேறு சமயத்தில் அடைவதை கணித்து சத்ததின் திசையை, இடத்தை மூளை கணிக்கின்றது. இதை உருவகப்படுத்தி, முப்பரிணமான திரைப்படம் பார்ப்பது போல் (3D கண்ணாடி வேண்டும்), முப்பரிணிமான ஓசையை (காதொலிப்பான் வேண்டும்) உருவாக்கலாம்.


(முப்பரிமாண மெய்நிகர் முடிவெட்டும் கடை. இதை காதொலிப்பான் (Headphone) கொண்டு கேட்க வேண்டும். நன்றாக இளைப்பாற உட்கார்ந்து கொண்டு, கண்களை மூடிக்கொண்டு கேட்கவும்)

17 June 2011

காண்பதெல்லாம்...

தனி ஒரு நபராக, சுயநினைவு (Consciousness) என்பது நம் ஒவ்வொருடைய அனுபவத்திலும் மிக நெருங்கிய அன்னோன்யமான ஒன்று. ஆனால் நம் அறிவுக்கோ மிகக் குறைவாக எட்டிய ஒன்று. இந்த மிக நெருங்கிய தற்சார்புடைய அனுபவத்தை, மனதைப் பற்றிய வெளிச்சார்புடைய அறிவாக மக்கள் தவறாக எடுத்துக்கொள்கின்றனர். அதனால் தான், பல்லாயிரம் வருடங்களாக மனதை பற்றி பல்வேறு அரை வேக்காடான கருத்துக்களை நம்பிக் கொண்டுள்ளனர். முறையான ஆராய்ச்சிகளும், ஆதாரங்களும் மாறுபட்ட கோணத்தை காட்டுகின்றன.

சுயநினைவை முதல்-நிலை-சுயநினைவு, மேல்-நிலை-சுயநினைவு, தன்-சுயநினைவு என பலவாறு பகுக்கலாம். அதில் பார்த்தல், கேட்டல் போன்ற நம் உணர்வுகள், சுயநினைவில் முதல் நிலையில் உள்ளவை. அதிலும் பார்வையை, நம் அனுபவத்தில் மிக தெளிவான, திடமான ஒன்றாக கருதுகின்றோம். அதனால் தான், "ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்" என்கின்றோம். அப்படிப்பட்ட பார்வையை ஒரு உதாரணமாக கொண்டு சுயநினைவை பற்றிய சில எளிய அடிப்படை உண்மைகளை அறிய முயலும் ஒரு தேடல் இது.

நாம் பார்ப்பது எப்படி? கண்களால் அல்ல, மூளையால் பார்க்கின்றோம். கண் என்பது புகைப்படக் கருவி போல் ஒளிச் செய்திகளை சேகரிக்கும் ஒரு புலன் உருப்பு. அது ஒளிச் செய்திகளை மின்-அலைச்-செய்திகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகின்றது. இந்த செய்திகளை கொண்டு, கோடுகள், விளிம்புகள், ஓரங்கள், நிறங்கள், உருவங்கள், பொருட்கள், முகங்கள், மனிதர்கள், இயக்கங்கள் என படிப்படியாக பல்வேறு பாங்குகளை மூளை அடையாளம் கண்டுகொள்கின்றது. மூளை இவற்றை எப்படி அடையாளம் கண்டுகொள்கின்றது? நாம் வளரும் போது, இந்த பாங்குகளை படிப்படியாக நம் மூளை கற்றுக் கொண்டு அதற்கேற்ப நரம்பணு-வலைச்சுற்றுக்களை (Neuronal Circuitry) உருவாக்குகின்றது (மேலும்: அறிவின் மூலம்). இவை நம் மூளை உருவாக்கிய உலக மாதிரிகள். முடிவாக, இந்த மாதிரிகளை உணர்வதையே, நாம் பார்த்தல் என்கின்றோம்.

மூளை உருவாக்கிய மாதிரிகளே, நாம் உணரும் உலகம். ஆக, நாம் பார்ப்பது/உணர்வது அனைத்துமே ஒருவகையில் மாயை போன்றது தான். இதில் ஏற்படும் சில குழறுபாடுகளை தான், ஆவியென்றும், பூதமென்றும், பேய் பிடித்ததென்றும், சாமி பிடித்ததென்றும், கூடுவிட்டு-கூடு பாய்தல் என்றும் மக்கள் கூறுகின்றனர். இந்த மாயையை நாம் பொதுவாக உணருவதில்லை என்றாலும், பல்வேறு மாயப் படங்கள் மூளை-உருவாக்கிய-மாதிரிகளுக்கும் வெளியுலக-நிதர்சனத்திற்கும் உள்ள வேறுபாட்டை சற்றே வெளிப்படையாக அறிவிக்கின்றன. கீழே உள்ள மாயப் படங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். இப்பொழுது சற்றே அனுபவபூர்வமாக பாருங்கள். இது உங்கள் அடிப்படை சுயநினைவை பற்றிய உங்கள் அனுபவம். (இங்குள்ள படங்களை சொடுக்கி பெரிது படுத்தலாம்)

(இந்த இரண்டு படங்களும் அச்சு மாறாமல் ஒரே படங்கள் தான்)

(A மற்றும் B கட்டத்தில் உள்ள நிறங்கள் அப்படியே ஒன்றுதான். இப்படத்தை காகிதத்தில் நகழெடுத்து, இந்த கட்டங்களை வெட்டி எடுத்து அருகருகே வைத்து பார்க்கவும். நிறங்கள் என்பது வெளியுலக-நிதர்சனத்தில் எங்கும் இல்லை. அவை மூளை-உருவாக்கிய-மாதிரியின் அம்சங்கள். (மேலும்: வண்ண ஆன்மீக உலகம்))


(இது எந்த இயக்கமும் அற்ற அசைவற்ற படம்)(உள்ளீடற்ற முகம். இது ஏமாற்று வித்தை அல்ல. முகம் பொதுவாக வெளி நோக்கியே இருப்பதால், உள்ளீடற்ற பக்கத்தையும் வெளிநோக்கிய முகமாக மூளை அனுமானிக்கின்றது. அந்த மாதிரியையே நாம் உணருகின்றோம் – நமது அறிவு பகுதி மூளைக்கு அது உண்மையல்ல என்று தெரிந்தாலும் கூட!)

பார்ப்பது என்பது ஒளி-அலைகளை மின்-அலைகளாக மாற்றி அதை ஆராய்ந்து அதிலுள்ள பல்வேறு பாங்குகளை கண்டறிவதென்றால், அதற்கு சில குறிப்பட்ட நேரம் ஆகவேண்டுமே. பிறகு எப்படி நாம் உடனடியாக பார்க்கின்றோம்? நாம் உடனடியாக பார்ப்பதில்லை. ஒன்றை ஒரளவு உணர ஆரம்பிக்கவே, தோராயமாக 50 மில்லி-வினாடிகள் ஆகும். நிறம், இயக்கம் என பார்வையின் பல்வேறு பண்புகள், மூளையின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு கால-அளவில் கணிக்கப்படுகின்றன (இதில் தொடர் மற்றும் இணை கணிப்புகள் அடக்கம்). ஆக, நாம் எப்பொழுதும் தாமதமாகவே பார்க்கின்றோம், உடனடியாக/நேரடியாக பார்ப்பதில்லை. மேலும், தொடர்ச்சியாகவும் பார்ப்பதில்லை. தோராயமாக ஒவ்வொரு 50 மில்லி-வினாடிக்கு ஒரு முறை, நாம் பார்ப்பது மூளையில் படம் பிடிக்கப்பட்டு அதன் பாங்குகள் கணிக்கப்படுகின்றன. நம் மூளை காட்சியை தொடர்ச்சியாக பார்ப்பது போன்ற மாயையை உருவாக்குகின்றது. அதனால் தான், படச்சுருளிலுள்ள தனிப்பட்ட படங்களை வேகமாக ஓட்டி காட்டும் போது திரைப்படமாக கண்டுகளிக்கின்றோம்.

ஒவ்வொன்றையும் கண்டுகொள்ள நேரம் தேவைப்படும்போது, நாம் எப்படி பலவற்றை இவ்வளவு வேகமாக கண்டுகொள்கின்றோம்? உதாரணமாக ஒரு வீட்டில் நுழைந்த உடன்! இதும் ஒரு மாயை தான். நாம் எல்லாவற்றையும் உடனடியாக கண்டுகொள்வதில்லை. சூழ்நிலை மற்றும் கடந்தகால நினைவை பொருத்து, நம் மூளை ஏற்கனவே மூளையில் சேமித்தவற்றை வார்ப்புருக்களாக (Templates) பயன்படுத்தி, தேவை மற்றும் முக்கியத்துவத்திற்கு ஏற்ப அங்குள்ள ஒவ்வொரு பொருட்களையும், உருவங்களையும் ஒன்றன்-பின்-ஒன்றாக பூர்த்தி செய்கின்றது. அதனால் தான், ஒரே மாதிரியான இரண்டு படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை கண்டுகொள்ள நேரமாகின்றது.

(இந்த அவரை விதைகளுக்கிடையே ஒரு முகம் உள்ளது. கண்டுபிடிக்கவும்)

(முகத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், ஒரு சிறு குறிப்பு: படத்தின் கீழ் பகுதி. கீழே உள்ள எளிய சோதனையை முழுமனதோடு முயற்சி செய்யவும். ஏனெனில் இது ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவம். இங்கு இரண்டு அணிகள் உள்ளன. அதில் வெள்ளை-உடை-உடுத்திய அணி எத்தனை முறை பந்தை பரிமாறி கொள்கின்றனர் என்பதை கணக்கிடவும். எண்ணிக்கை சற்றே தவறிபோனாலும், நிறுத்தாமல் தொடர்ந்து கணக்கிடவும்)பெரும்பான்மையானவர்கள் "அதை" பார்க்க தவறிவிடுகின்றனர். நாம் எல்லாவற்றையும் பார்ப்பது போல் தோன்றினாலும், சூழ்நிலைக்கேற்ப நம் மூளை சிலவற்றை தேர்ந்தெடுத்தும், மற்றவற்றை தவறவும் விடுகின்றது. ஏனெனில், எல்லாவற்றையும் அவ்வளவு விரைவாக கண்டுகொள்ள தேவையான வேகமோ, திறனோ நம் மூளைக்கு இல்லை.

மூளையின் நரம்பணுக்களுக்கு இடையே நிகழும் மின்-துடிப்புகளின் வேகம் சில 10-கள் முதல் சில 100-கள் வரை உள்ள ஹெர்ட்ஸ்கள் (Hz = ஒரு வினாடியில் நிகழும் துடிப்புகள்) இருக்கும் (இப்பொழுதுள்ள கணினியின் வேகம், சில 1,00,00,00,000-கள் ஹெர்ட்ஸ்கள் - GHz). மூளையின் மின்-துடிப்புகளின் வேகம் குறைவாக இருந்தாலும், இணை-கணிப்பு (Parallel Processing), வார்ப்புரு-பூர்த்தி-செய்தல் (Template Filling) போன்ற பல்வேறு உத்திகளை பயன்படுத்தி அதை ஓரளவு ஈடு செய்கின்றது. நரம்பணு-மின்-துடிப்புகளின் வேகம் ஏன் ஒரு சிறு வரம்புக்குள் உள்ளது? நரம்பணுக்கள் வேதி-அயனிகளை மின்னேற்றி (சேகரித்து), மின்னிறக்கி (வெளியேற்றி) மின்-துடிப்புகளை உருவாக்குகின்றது. இப்படி மின்னேற்றி தேவையான மின்னழுத்ததை உருவாக்க சில குறைந்தபட்ச நேரம் தேவைப்படுகின்றது.

மேலும், மூளை வேலை செய்ய அதிகமான ஆற்றல் தேவைப்படுகின்றது (நம் கால்களுக்கு இணையான அளவு). அதனால் பரிணாம வளர்ச்சி பார்வையில், மூளையின் அளவை அதிகரிப்பதோ, மூளையின் வேகத்தை அதிகரிப்பதோ அதிக செலவீனமாக ஒன்று. சாதாரண சமயங்களில், மூளை ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச தேவையான வேகத்தில் வேலை செய்கின்றது. ஆனால், மிக எச்சரிக்கையான, ஆபத்தான சமயத்தில் (உதாரணமாக, ஒரு ஆபத்திலிருந்தோ, விபத்திலிருந்தோ தப்பிக்கும் கணத்தில்) மூளை வேகமான வேகத்தில் வேலை செய்யும். அதனால், மூளையால் உலக செய்திகளை மேலும் வேகமாக கணிக்க முடியும். இப்படிப்பட்ட சமயங்களில், வெளி-உலக-இயக்கங்கள் மெதுவாக செல்லது போல் தோன்றும். வெளி-உலக வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், மூளை சாதாரண வேகத்தை விட வேகமாக கண்டுகொள்வதால், வெளி-உலக-இயக்கங்கள் மெதுவாக செல்வது போல் தோன்றுகின்றது (இதை உருவகப்படுத்தயே Slow-Motion எனப்படும் மெதுவாக செல்லும் காட்சிகள் திரைப்படத்தில் அமைக்கப்படுகின்றன). பல வெற்றிகரமான விளையாட்டுவீரர்களின் மூளை, இதை விளையாட்டுகளின் போதும் செயல்படுத்தலாம். நாம் வயதடையும் போது, மூளையின் வேகமும் மெதுவாக குறைகின்றது. அதனால், வெளி-உலகம் வேகமாக செல்வது போல் தோன்றும்.

03 June 2011

அறிவின் மூலம்

எந்த ஒன்றையும் வடிவமைப்பதற்கான அல்லது தீர்வு காண்பதற்கான எளிய அடிப்படை வழிமுறை, சீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறை (Random Process). அதாவது எதேச்சையாக நிகழும் வடிவமைப்பு. இது குலுக்குச் சீட்டில் வெற்றி பெருவது போன்றது. இது சில செங்கற்களை தரையில் தூக்கி எறிந்து ஒன்றன்-மேல்-ஒன்றாக அமைந்த கோபுரத்தை உருவாக்குவது போன்றது. இவற்றை பலமுறை தொடர்ந்து திரும்ப, திரும்ப செய்தால் ஒருமுறை அது நிகழலாம். இது பல்வேறு வடிவங்கள் மேகக்கூட்டத்தில் உருவாகுவது போன்றது. பல்வேறு காரணிகளை...கட்டுபாடுகளை பொருத்து, அதன் வாய்ப்பு விகிதம் (நிகழ்தகவு) மிகக் குறைவான அளவிலிருந்து மிக அதிகமாக அளவுவரை இருக்கலாம் – அதாவது முற்றிலும் சீரற்றோ (Random) அல்லது வெகுவாக தீர்மானிக்கக் கூடுமாறோ (Determined) இருக்கலாம்.

கார்பன் அணுக்கள் இணைந்து வைரமாக உருவாக மிகவும் ஏற்ற தட்பவெப்பநிலை, அழுத்தம் என பல்வேறு காரணிகள் வேண்டும். இப்படிப் பட்ட சூழ்நிலை அமைவது எவ்வளவு அரிது என்றாலும், இந்த பரந்த அண்டவெளியில், இந்த நீண்ட அண்ட காலவெளியில், எங்கோ எப்பொழுதுதோ இந்த சூழ்நிலை ஏற்படலாம். அப்படியே, நாம் வைரத்தை இந்த உலகத்தில் காண்கின்றோம். அப்படியே, உலகத்தில் உள்ள அனைத்தும் உருவாகி இருக்க வேண்டும். அப்படியே, முதல் மரபணு (DNA) மூலக்கூறும் உருவாகி இருக்க வேண்டும் (அது இன்றுள்ள மரபணுவை விட பலமடங்கு எளிமையாக இருந்திருக்க வேண்டும்). ஆனால், இந்த உலகத்தில் உள்ள அனைத்து வடிவமைப்புகளும், சாத்தியமாகக் கூடிய கணக்கற்றவைகளில் ஒரு சிறு பகுதியே!

மரபணு-மூலக்கூறின் முக்கியத்துவம், அது உயிர்களின் வடிவமைப்பு மாதிரிகளை குறியீடுகளாக வைத்திருப்பதில் இருக்கின்றது. அது நகல்கள் (இனப்பெருக்கம்) எடுக்கப்படும் போது, அதன் மரபணு-குறியீடுகள் பெரும்பாலும் அடுத்த தலைமுறைக்கு சென்றாலும், ஒரு சில முறையற்ற, சீரற்ற பிழைகள் (மரபு-பிழைகள்) நிகழலாம். பெரும்பாலான பிழைகள் ஏற்றவையாக இல்லாது மடிந்து போனாலும், அரிதாக ஒரு சில பிழைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கலாம். அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு செல்லும். இவ்வாறு பல கோடி வருடங்களாக, சுற்றுச்சூழலுக்கு தகுந்த வடிவமைப்புகள் சிறுகச் சிறுகச் சேர்ந்து உருவானவையே பாக்டீரியா, மீன்கள், தாவரங்கள் முதல் மனிதன் உட்பட அனைத்து விலங்குகள் வரை. இதை பரிணாமம் (Evolution) என்கின்றோம்.

பரிணாமத்திலும் சீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறையே அடிப்படையில் புதிய வடிவமைப்பு வெளிப்படும் முறை. ஆனால் வெளிப்பட்ட, தேர்ந்த வடிவமைப்புகள் மரபணு குறியீடுகளாக சேமித்து வைக்கப்படுகின்றன. மேலும் தேர்ந்த வடிவமைப்பு தகவல்கள் மற்றவைகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. பகிர்தல் பொதுவாக பாலினப் பெருக்கத்தில் ஏற்படுகின்றது. இது நல்ல மரபணுக்கள் மக்கள்தொகையில் பரவவும், கெட்ட மரபணுக்களை களை எடுக்கவும் உதவுகின்றது. இது விலங்குகள் போன்ற சிக்கலான மேம்பட்ட உயிரினங்கள் மற்றும் அவற்றின் மூளை போன்ற நுட்பமிக்க உருப்புகள் பரிணாம வளர்ச்சி அடைய முக்கிய காரணமாகின்றது.

தகல்களை சேமித்தல் மற்றும் பகிர்தல் என்பது கற்றலின் அடிப்படை பண்புகள். உயிர்களின் பரிணாமத்தை கூர்ந்து நோக்கினால் கற்றலின் அடிப்படை செயல்முறையை அறிந்து கொள்ள முடியும். அதிலுள்ள முக்கிய அடிப்படை படிகள்:
 • உருவாக்குதல்: தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற வடிவமைப்புகள் தொடர்ந்து உருவாகுதல். இது இனப்பெருக்கம் மற்றும் அதன் மரபு-பிழைகளால் ஏற்படுகின்றது.
 • தேர்ந்தெடுத்தல்: சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வடிவமைப்புகள் மட்டுமே பிழைக்கின்றன. இதை இயற்கை-தேர்வு-முறை (Natural Selection Process) என்கின்றோம்.
 • சேமித்தல்: தேர்ந்தெடுத்த வடிவமைப்புகள் மரபணு-மூலக்கூறில் மரபணு குறியீடுகளாக (Genes) சேமிக்கப்படுகின்றது.
 • பகிர்தல்: தேர்ந்த வடிவமைப்புகளை மற்றவற்றுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. இது பொதுவாக பாலினப் பெருக்கத்தில் ஏற்படுகின்றது (மற்ற சில வழிகளும் உண்டு)
அடிப்படையில் இந்த படிகளை உருவகப்படுத்தியே மூளையும் கற்று கொள்கின்றது. ஆனால், பரிணாமத்தை ஒப்பிடும் போது, மூளைக்கு பல மேன்பாடுகள் உண்டு. இனப்பெருக்கம், அதனால் ஏற்படும் மரபுபிழைகளை கொண்டு தேர்ந்த வடிவமைப்புகள் வெளிப்பட ஆயிரமாயிர தலைமுறைகள் தேவை. அதனால் பரிணாம வளர்ச்சிக்கு நீண்ட நெடிய காலம் தேவைப்படுகின்றது. இதை ஒப்பிடும் போது, தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற வடிவமைப்புகளை மூளை பல மடங்கு அதிவேகமாக உருவாக்க முடியும். மேலும் மரபணு-மூலக்கூறை ஒப்பிடும் போது, மூளையின் சேமிக்கும் திறன் பலமடங்கு அதிகமானது, நுட்பமானது.

வேதி-அயனிகளை (மின்னூட்டணுக்கள்) செய்திகளாக/குறிப்பலைகளாக கடத்தி, நரம்பணு-வலைச்சுற்றுக்களை பொருத்து பகுத்தாய்ந்து மூளை வேலை செய்கின்றது. பரிணாம வளர்ச்சியில் வடிவமைக்கப்பட்ட சில நரம்பணு-வலைச்சுற்றுக்கள் பிறக்கும் போதே மரபணுக்களை கொண்டு வடிவமைக்கப்படுகின்றது. மற்றவற்றை அனுபவத்தின்/கற்றலின் மூலம் மூளை வடிவமைக்கின்றது. மூளை கற்கும் வழிமுறையை, குழந்தைகள் எப்படி நடக்க கற்றுக்கொள்கின்றனர் என்பதை பார்த்து அறிந்து கொள்ள முடியும்.
 • உருவாக்குதல்: இது குழந்தை பல்வேறு விதமாக நடக்க முயலும் பயிற்சியால் ஏற்படுகின்றது. ஒவ்வொரு விதமும் வெவ்வேறு தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற நரம்பணு-வலைச்சுற்று அமைப்புகளை குறிக்கின்றது.
 • தேர்ந்தெடுத்தல்: எந்த விதம், அதாவது எந்த நரம்பணு-வலைச்சுற்று அமைப்புகள் தகுந்த விளைவுகளை தருகின்றதோ அவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இது புலன்கள் மூலம் பெறப்படும் செய்திகளை (உணர்வுகள்) ஒப்பிட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இங்கு சமன்நிலை-உணர்வான, காதினுள்ளே உள்ள திரவத்தின் நிலையை கொண்டு அறியும் உணர்வு முக்கியமானது; பார்வை உணர்வும் முக்கியமானது. ஆனால், புலன் செய்திகளையும் உணர்ந்து கொள்வதும், எந்த புலன் செய்திகள் ஒரு விசயத்திற்கு பொருத்தமானவை என்பதை உணர்ந்து கொள்வதும் கற்றலின் பகுதிகளே.
 • சேமித்தல்: தேர்ந்தெடுக்கப்பட்ட நரம்பணு-வலைச்சுற்றுகள் மூளையில் நினைவகமாக சேமிக்கப்பட்டு தொடர்ந்து மேலும், மேலும் சரி செய்யப்படுகின்றது மற்றும் விரிவு படுத்தப்படுகின்றது.
 • பகிர்தல்: பெற்றோர்கள்/பெரியவர்கள் குழந்தைக்கு நடக்க கற்று கொடுப்பது; உதவி செய்வது. குழந்தை அடுத்தவர்களை பார்த்து முயற்சிப்பது; கற்றுக் கொள்வது; இவ்வாறு ஏற்கனவே கற்றவை, கற்ற முறை, குழந்தையுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
பிறக்கும் போதே குழந்தையின் மூளை தேர்ச்சி அடையாத சில நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகளோடு இருக்கும். இதைக் கொண்டு, குழந்தை பல்வேறு விதமாக நடக்க முயலும் போது நிகழும் சில எதேச்சையான சமன்நிலை பெற உதவிய நரம்பணு-வலைச்சுற்று தொடர்புகள் மேலும் வலிமைப்படுத்தப்படும்; மற்ற தொடர்புகளின் வலிமை மேலும் குறைக்கப்படும். இவ்வாறு நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகள் மேலும் சரிசெய்யப்பட்டு விரிவுபடுத்தப்படும். இதை உடனடியான/நேரடியான கற்றல் (Online Learning) எனலாம். இதைத் தவிர, குழந்தை முயன்ற ஒவ்வொரு நிலைகளையும் (கால்கள், கைகள், உடல் போன்றவற்றின் தசைகளை கட்டுப்படுத்தும் செய்திகள்), அதற்கான புலன் செய்திகளையும், மூளை ஒரு தற்காலிக இடத்தில் “சோதனைச்-செய்திகளாக” சேமித்து வைத்துக் கொள்ளலாம். உடல் ஓய்வெடுக்கும் போது, அதாவது தூங்கும் போது, இந்த சோதனைச்-செய்திகளை கொண்டு நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகளை பல்வேறு விதமாக பலமுறை மாற்றி அமைத்து எப்படிப்பட்ட வலைச்சுற்றுகள் தகுந்த விளைவுகளை கொடுக்கின்றது என சோதித்துப் பார்க்கலாம். ஒவ்வொரு முறையிலும், படிப்படியாக நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகள் மேலும் சரிசெய்யப்பட்டு விரிவுபடுத்தப்படும். இதை பிற்பாடு/மறைமுக கற்றல் (Offline Learning) எனலாம். இது தூக்கத்தின் ஒரு முக்கிய செயல்பாடாக இருக்க வேண்டும். குழந்தை நன்றாக, சகஜமாக நடக்க, இந்த செயல்முறை ஒவ்வொரு நாளும் வருடக்கணக்கில் தொடர வேண்டும். மேலும், இதில் பெற்றோர்கள்/பெரியவர்கள் குழந்தைக்கு தரும் தூண்டுதல், உற்சாகமூட்டல், மேற்பார்வை, உதவி போன்றவை மற்றொரு முக்கிய பகுதி. இவையின்றி குழந்தையின் வளர்ச்சி என்றென்றைக்கும் முடமாகி போகலாம்.

வடிவமைக்கப்பட்ட நரம்பணு-வலைச்சுற்றுகளை நினைவகமாக (Memory) கருதலாம். மூளையின் நினைவகத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்: செயல்முறை-நினைவகம் (Procedural memory) மற்றும் அறிவிப்பு-நினைவகம் (Declarative memory). செயல்முறை-நினைவகம் பல்வேறு செயல்முறைகளை கட்டுப்படுத்துகின்றன. நிற்க, நடக்க, ஓட, ஆட, நீந்த, ஓட்ட, எழுத என ஒவ்வொரு செயலுக்கும் செயல்முறை-நினைவகம் வேண்டும். நாம் ஒரு செயலை “செய்ய” கற்கும் போது செயல்முறை-நினைவகம் உருவாக்கப்படுகின்றது. புலன் செய்திகளிலிருந்து, நாம் ஒன்றை “அறிந்து”/”உணர்ந்து” கொள்ள கற்கும் போது அறிவிப்பு-நினைவகம் உருவாக்கப்படுகின்றது. பார்க்க, கேட்க, சுவைக்க, நுகர என ஒவ்வொரு உணர்வுகளுக்கும் அறிவிப்பு-நினைவகம் வேண்டும். புலன் செய்திகளில் உள்ள பாங்கை கண்டறிய (Pattern recognition) கற்பதே அறிவிப்பு-நினைவகம் உருவாக்கத்தின் அடிப்படை.
 • உருவாக்குதல்: பல்வேறு விதமாக பாங்கை கண்டறிய முற்படுதல்.
 • தேர்ந்தெடுத்தல்: எந்த விதம், அதாவது எந்த நரம்பணு-வலைச்சுற்று அமைப்புகள் தகுந்த விளைவுகளை தருகின்றதோ அவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
 • சேமித்தல்: தேர்ந்தெடுக்கப்பட்ட நரம்பணு-வலைச்சுற்றுகள் மூளையில் நினைவகமாக சேமிக்கப்பட்டு தொடர்ந்து மேலும், மேலும் சரி செய்யப்படுகின்றது மற்றும் விரிவு படுத்தப்படுகின்றது.
 • பகிர்தல்: பெற்றோர்கள்/பெரியவர்கள்/ஆசிரியர்கள் கற்று கொடுப்பது; அடுத்தவர்கள் மற்றும் புத்தங்கள் போன்றவற்றிலிருந்து கற்றுக் கொள்வது.

(ஒரு குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மனித உருவத்தை மேல்கண்டவாறு உடல் இல்லாமல் வரைவதை காணலாம். குழந்தைகள் முகம், கைகள், கால்கள் என முக்கியமான பாங்குகளை முதலில் கண்டறிய கற்று கொள்ளலாம். பிறகு மெதுவாக மற்ற பாங்குகளை மேலும் துள்ளியமாக கண்டறிய கற்று கொள்ளலாம்)

இவ்வாறு கற்றல், படிப்படியாக உலக மாதிரியை நினைவகமாக உருவாக்குகின்றது (ஒலியை இசைத்தட்டுகளில் சேமிப்பது போல்). இதில் உலகில் காணப்படும் அனைத்து படிநிலைகளும், தொடர்புகளும், கூட்டுகளும், பிரிவுகளும், அவற்றிலிருந்து பெறப்படும் பொதுவாக்கலும் (Generalization or Abstraction), அவற்றின் காரண-விளைவுகளும் அடங்கும். இதைக் கொண்டு உலகை உணர்ந்து/அறிந்து/புரிந்து கொள்கின்றோம். இது மேலும் திறம்பட கற்கும் செயல்முறைகளை கற்க வழிவகுக்கின்றது. இது தெரிந்த, ஒத்த, தொடர்புடைய சிக்கல்களுக்கு வழி காணவும், திட்டமிடவும் உதவுகின்றது.

முற்றிலும் புதிய சிக்கலுக்கான தீர்வை மூளை எப்படி கண்டுகொள்கின்றது? மூளையில் உலக மாதிரி உள்ளது. இதைக் கொண்டு சீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறையை (மற்றும் பரிணாம வழிமுறையை) மூளையால் உருவகப்படுத்த முடியும். அது பல்வேறு தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற (கிறுக்குத்தனமான!) யோசனைகளை உருவாக்கி அவற்றை உலக மாதிரியை கொண்டு சோதனை செய்து சரிபார்க்கலாம் (இது மூளையின் பின்னணில் தொடர்ந்து நடக்கலாம்). அதில் ஒரு யோசனை அல்லது தீர்வு எதேச்சையாக சிக்கலை தீர்க்கும் போது, அது வெற்றியின் தருணமாக உணரப்படுகின்றது! (ஒரு மேதையின் இரகசியம், முற்றிலும் புதிய சிக்கலை தீர்க அதிக வாய்ப்பு கிடைக்குமாறு, எப்படி அவரது மூளை திறம்பட மேம்பட்ட உலக மாதிரியை உருவாக்குகின்றது என்பதில் உள்ளது)

இப்படி கற்றவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் போது, அது மேலும் விரிவடைந்து வளர்ச்சியடைந்து பல புதிய பரிமாணங்களை தொடுகின்றது. கற்றல், உணர்தல், யோசித்தல், புரிந்து கொள்ளுதல், காரண-காரியங்களை அறிந்து கொள்ளுதல், சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், திட்டமிடுதல் போன்ற மூளையின் பல திறமைகளை ஒருமித்தமாக அறிவு அல்லது அறிவாற்றல் என்கின்றோம். இந்த அறிவை கொண்டு, கட்டுப்பாட்டுடன் திட்டமிட்டு மனிதன் பலவற்றை வடிவமைக்கின்றான். அது அறிவுமுறை வடிவமைப்பு (Intelligent design)!இது நரம்பு-இயங்கியல் (Neuroscience), Cognitive science, செயற்கை அறிவு (AI) முதலிய ஆராய்ச்சிகளிலின் அறிதல்களை கொண்டு இயற்கை-வடிவமைப்பு, பரிணாமம், கற்றல், அறிவு ஆகியவற்றை இணைத்த ஒரு தகவல்-கோட்பாடு (Information theory) பார்வை.June 4, 2011

ஆறாம் அறிவு?

மற்ற விலங்குகளுக்கும் ஐந்து புலன் உணர்வுகள் உண்டு என்றும் (அதை ஐந்து அறிவாக கொண்டு) மனிதனுக்கு மட்டும் ஆறாவது அறிவான, பகுத்தறிவு உண்டு என்றும் சொல்லப்படுகின்றது. இது உண்மையென்றால், ஏன் இவ்வளவு மடத்தனங்களும், மூடநம்பிக்கைகளும் மனிதனிடத்தில் கொட்டி கிடக்கின்றது?

மனிதனுக்கு மட்டுமே சொந்தமான ஆறாவது அறிவு, எந்த விதத்திலும் அறிவியல் உண்மை அல்ல. மனிதன் மற்ற விலங்குகளிலிருந்தே பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளான். அவனுக்கென திடீரென புதிதாக அறிவெல்லாம் வளரவில்லை. ஏற்கனவே மற்ற விலங்குகளில் உள்ளவற்றின் திறம்/தரம் சிலவற்றில் சற்றே மனிதனுக்கு அதிகரித்துள்ளது (Not quantity; just some quality). குரங்கினங்களை, டால்ஃபீன்களை, ஏன் காக்கைகளை கூட கூர்ந்து நோக்கினால் அது எளிதாக விளங்கும். உண்மை என்வென்றால், ஆராய்ச்சியாளர்கள் மற்ற விலங்குகளுக்கும் மனிதனுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்னவென்று சல்லடை போட்டே தேட வேண்டி உள்ளது. ஏனெனில் அப்படி எதுவும் பெரிதா இருக்கக் காணோம்.

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணம்: பகிர்தல். அதற்கு தேர்ந்த மொழி தேவை. மனிதன் மட்டுமே குழந்தைகளுக்கு முனைப்போடு கற்று தருகின்றான் (Active Teaching). முறையான கல்வி மட்டுமே மனிதனின் அறியாமையை போக்குகின்றது.

பகுத்தறிவு பற்றி: நம்பிக்கைகளின் மூலம்

உணர்வுகள் பற்றி: அர்த்தங்களை தேடி

02 May 2011

பழைய கணக்கு

எந்த அறிதலிலும் மிக மிக முக்கியமானது அறிந்த...அறியும் முறை. அது அறிதலை மற்றவர் சரிபார்க்கவும், விரிபடுத்தவும், மேலும் புதியவற்றை கற்கவும் உதவுகின்றது. இதன் முக்கியத்துவம் அறியாததால், ஏன்...எதற்கு என்று தெரியாமல், கோடிக்கணக்கான மூடநம்பிக்கைகளும், மூடவழக்கங்களும் நம் சமூகத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இதன் முக்கியத்துவம் அறியாததால், நம் பண்டைய அறிதல்கள் மேலும் வளர்ச்சி அடையாமல், இன்று நாம் பழம்பெருமை மட்டுமே பேசி கொண்டுள்ளோம்.

அறிதலின் வழிமுறைகளின் முக்கியத்துவம் இன்றைக்கும் ஒழுங்காக அறியாதப்பட்டதாக தெரிவில்லை. அறிவியல்-முறை என்றால் என்னவென்று தெரியாமலே அறிவியல்-அறிதல்களை படிக்கின்றோம் – அப்படியே நம் கல்விமுறையும். கணித வழிமுறைகள் எதுவும் தெரியாமலே சூத்திரங்களை படிக்கின்றோம். சில எளிய கணித சூத்திரங்கள் எப்படி வந்திருக்கலாம், எப்படி அவற்றை தருவிக்கலாம்/நிரூபிக்கலாம் என்று அறிவியல்/தொழிற்நுட்பம் படித்த பெரும்பாலானோருக்கு கூட தெரிவதில்லை என்பது நம் கல்வியின் அவல நிலையே. கீழே இரண்டு பழம் தமிழ் பாடல்கள் மற்றும் அது கூறும் விளக்கங்கள் உள்ளன. இதில் செங்கோண முக்கோணத்தின் கர்ணத்திற்கான சூத்திரம், இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சரியான பிதாகிரஸ் சூத்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. முடிந்தால் அது எப்படி வந்ததென்று தருவிக்க முயற்சி செய்யுங்கள்.

வட்டத்தின் சுற்றளவு:

"விட்டமோர் எழு செய்து
திகைவர நான்கு சேர்த்து
சட்டென இரட்டிச் செய்யின்
திகைப்பன சுற்றுத் தானே"
-- காக்கைப் பாடினியார் (சங்க காலத்திற்கு அப்புறம், விருத்தப் பாக்கள் எழுந்த காலத்தில்)

வட்டத்தின் சுற்றளவு = S, அதன் ஆரம் = R (அல்லது விட்டம், D = 2 x R)
S = 2 x 22/7 x R


செங்கோண முக்கோணத்தின் கர்ணம்:

"ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறதாக்கி கூறிலே ஒன்று தள்ளி
குன்றத்தில் பாதி சேர்த்தால் வருவது கர்ணம் தானே"
-- (யார் எழுதியது? காலம்?)

முக்கோணத்தின் கர்ணம் = C, நீளம் = L, குறுக்கம் = W
C = 7/8 x L + 1/2 x W

(இது எப்படி வந்ததிருக்கலாம் என்று தருவிக்க முயற்சி செய்யுங்கள். முடியவில்லை என்றால் மேற்கொண்டு தொடரவும்)எந்த ஒன்றையும் கணிக்க அது எந்த தனிப்பட்ட காரணிகளை சார்ந்துள்ளது என்பதை அறிய வேண்டும். அது நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கலாம். அது ஒரு படியாக இருக்கலாம், இருபடியாக இருக்கலாம், அதற்கு மேலும் இருக்கலாம்.

உதாரணமாக வட்டத்தின் சுற்றளவு (S) அதன் ஆரத்தை (R) சார்ந்தது என்பது கண்கூடானது. ஆரம் அதிகரித்தால் சுற்றளவும் அதிகரிக்கின்றது – ஆக அது நேர்மறை தொடர்பு (S α R; எதிர்மறை என்றால், S α 1/R). இதை பொதுவாக கணித சமன்பாட்டில் இப்படி குறிக்கலாம்:

S = a + bR + cR2 + dR3 + ...

இதில் R : முதல் படி; R2 : இரண்டாவது படி; R3 : மூன்றாவது படியை குறிக்கின்றது. மேலும் a, b, c, d... போன்றவை மதிப்புகள் அறியப்படாத மாறிலிகள். அவற்றின் மதிப்புகளை கண்டறிய பல R-ன் மதிப்புகளுக்கு S-னுடைய மதிப்பு என்னவென்று கண்டறிய வேண்டும். எந்த ஒரு சமன்பாட்டையும் தீர்க, அதாவது தெரியாத மதிப்புகளை கண்டறிய, அதில் எத்தனை தெரியாதவைகள் உள்ளனவோ, அத்தனை சமன்பாடுகள் தேவை.

எளிமைக்காக, முதல் படியோடு இங்கு நிறுத்தி கொள்வோம். பல்வேறு R மற்றும் அதன் S மதிப்புகளை கிராஃப் வரைபடத்தில் வரைந்தும் சமன்பாட்டை தீர்க்க முடியும். ஒன்றினுடைய தொடர்பு முதல்-படியை மட்டுமே சார்ந்து இருந்தால், கிராஃப் வரைபடத்தில் அது நேர்கோடாக இருக்கும், எந்த வளைவும் இருக்காது.

அப்படியேனில்:
S = a + bR

இதில் a, b என இரண்டு தெரியாதவைகள் உள்ளன. அவற்றை அறிய இரண்டு சமன்பாடுகள் வேண்டும். அதற்கு இரண்டு R, S மதிப்புகளை கண்டறிய வேண்டும் (வரைந்து அளந்து பார்த்து தான். எந்த அளவு துள்ளியமாக அதை கணிக்கின்றோமோ அந்த அளவு துள்ளியமாக தெரியாதவைகளின் மதிப்புகளை அறியமுடியும்). உதாரணமாக, இரண்டு மதிப்புகள்:

R = 0, S = 0
R = 7, S = 44

இவற்றை சமன்பாட்டில் பயன்படுத்தினால்:

0 = a + bx0 --> (1)
44 = a + bx7 --> (2)

சமன்பாடு(1)லிருந்து [a = 0] என்பதை அறியலாம். அதை சமன்பாடு(2)ல் பயன்படுத்தினால் [b = 44/7 = 2 x 22/7] என்பதை அறியலாம். ஆக:
S = 2 x 22/7 x R

இங்கு 22/7 என்பது ஒரு தோரயமான மதிப்பு. இன்று இதன் மதிப்பு π என்று குறிக்கப்படுகின்றது. இதன் மதிப்பு பல்வேறு உத்திகளை பயன்படுத்தி லட்சம்-கோடி இலக்கத்தில் துல்லியமாக இன்று கணிக்கப்பட்டுள்ளது.மேலுள்ள பழம் தமிழ் பாடலின் படி, செங்கோண முக்கோணத்தின் கர்ணம்:
C = 7/8 x L + 1/2 x W (கர்ணம் = C, நீளம் = L, குறுக்கம் = W)

இந்த சமன்பாட்டை பார்த்த உடன் அறியும் இரு முக்கிய அம்சங்கள். கர்ணம் C இரண்டு காரணிகளை L, W சார்ந்துள்ளது. இரண்டு காரணிகளும் முதல் படி தொடர்பை கொண்டுள்ளது (ஆனால் அதன் சரியான தொடர்பு - பிதாகிரஸ் சூத்திரம் – முதல் படி அல்ல).

அறிவியல், தொழிற்நுட்பம், பொருளாதார, மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில், தெரியாத பலவற்றின் தொடர்புகளை தோராயமாக அறிய வளைகோட்டைப் பொருத்துதல் (Curve Fitting) என்ற முறை பயன்படுத்த படுகின்றது. அதிலும் எளிமையாக முதல்-படி-வளைகோட்டைப்-பொருத்துதல் (கிராஃப் வரைபடத்தில் தோராயமான நேர்கோடு வரைதல்) பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. இப்படி திட்டமிட்டு செய்யாமல், பல தெரிந்த மதிப்புகளை கொண்டு சோதித்தும் (Trial and Error method) கிட்டதட்ட அதே தீர்வுகளை காணலாம். இதன் படி பொதுவான சமன்பாடு:

C = aL + bW

இதில் a, b தெரியாத மாறிலிகள். இரண்டு தெரியாதவை உள்ளதால், இதை தீர்க்க குறைந்த பட்சம் இரண்டு சமன்பாடுகள், அதாவது இரண்டு தொகுப்பு மதிப்புகள் தேவை. உதாரணமாக:
L=4, W=3, C=5
L=8, W=4, C=9 (இங்கு C ன் சரியான மதிப்பு 8.9...)

ஆக,
5 = 4a + 3b --> (1)
9 = 8a + 4b --> (2)

சமன்பாடு(1)-ஐ 2-ஆல் பெருக்கினால்:
10 = 8a + 6b --> (3)

சமன்பாடு(3)-ஐ சமன்பாடு(2)-ஆல் கழித்தால்:
1 = 0 + 2b
1 = 2b
b = 1/2

இதை சமன்பாடு(2)-ல் பயன்படுத்தினால்:
9 = 8a + 4x1/2
9 = 8a + 2
9-2 = 8a
7 = 8a
a = 7/8

ஆக, கர்ணத்திற்கான சூத்திரம்:
C = 7/8 x L + 1/2 x W

இது ஒரு தோராயமான சூத்திரம். சரியான சூத்திரம் முதல் படி இல்லை என்றாலும் இது ஓரளவு பொருந்தி வருதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. கர்ண மதிப்பின் சார்பு மாற்றம், L மற்றும் W-வின் உண்மையான மதிப்பை விட அதன் கோணத்தை அதாவது (L/W) சார்ந்துள்ளது. முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூட்டுதொகை 180° பாகை. செங்கோண முக்கோணத்தில், ஒரு கோணம் எப்பொழுதும் 90° பாகை. ஆக L, W மதிப்புகளை பொருத்து மற்ற கோணம் 0° பாகையிலிருந்து 90° பாகை வரை செல்ல முடியும். முதல்-படி-வளைகோட்டைப்-பொருத்துதலில் 0° முதல் 90° பாகை வரை பொருத்தினால், அதில் பிழையின் அளவு அதிகமாக இருக்கும். இந்த சூத்திரத்தில் 0° முதல் 45° பாகை வரை மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது (மேலுள்ள படத்தில் இது Ø என குறிக்கப்பட்டுள்ளது). அதனால் தான் செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள் நீளம் L, குறுக்கம் W என வெளிப்படையாக உள்ளது. நீள குறுக்கத்தை மாற்றி சூத்திரத்தில் பயன்படுத்தினால் பிழை மிக அதிகமாக இருக்கும் (பிதாகிரஸ் சூத்திரத்தில் இந்த கட்டுபாடு தேவையில்லை).

29 April 2011

பழமை பேசியே

இயற்கை இயல், காதல் கணிதம்,
என எந்த பாகுபாடுமின்றி அனைத்திற்கும்,
பாட்டெழுதியே பாடாவதி ஆனோமோ?
உண்மையும் பொய்யும் கற்பனையும் மிகையும்
ஒன்றே கலந்து உருப்படாமல் போனோமோ?

மீன் கொடுப்பதை விட, மீன்
பிடிக்க கற்று கொடுப்பது முக்கியம்.
சமன்பாட்டை விட அது வந்த முறை முக்கியம்.
விடையை விட அதன் வழிமுறை முக்கியம்.
அறிதலை விட அறிந்த முறை முக்கியம் - இதை
நம் முன்னோர் அடுத்த தலைமுறைக்கு
கொடுக்க தவற, தவறியே போனோமோ?

முன்னோர் கொடுத்ததில் அறியாமையும் பாதி,
அதை அறியாமல் முடங்கி போனோமோ?
அதன் விளைவில் வேதனையும் பாதி,
அதை உணராமல் மூழ்கி போனோமோ?
உண்மை வரலாறு தேடி கற்காமல்,
பழம்பெருமை பேசி பாழாகி போனோமோ?

பழம் கதைகள் மட்டுமே பேசியது போதும்,
நாளை நம் சந்ததி நம்மை பேசட்டும் வா!
நம் பெருமை நாமே பேசியது போதும்,
அதை அடுத்தவர் பேசட்டும் வா!

29 March 2011

மனிதனும் மற்ற உயிரினங்களும்

மிகக் கொடுமையான அவலங்கள், உதாரணமாக குழந்தை தொழிலாளர்கள், குப்பம், கூவம், கோடி கணக்கில் பட்டினி சாவு போன்றவை மனிதனுக்கு மட்டுமே சொந்தமானவை, மற்ற உயிரினங்களில் அவை காண இல்லை. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, என்றோம். ஆனால், மற்ற உயிரினங்களை விட ஏன் மனிதன் கீழ்நிலைக்கு போனான்? இங்கு எழும் மற்றொரு கேள்வி: ஏழ்மையான நாடுகள் பல இருந்தாலும், நம் நாட்டில் உள்ள கடைநிலை அவலத்தை மற்ற நாடுகளில் காண்பது அரிது, ஏன்? (இருக்கா?)

எந்த ஒன்றை நகல்கள் (Copy) எடுக்கும் போதும் பிழைகள் நிகழும். அதில் சில பிழைகளின் விளைவு சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருந்தால், அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு செல்லும், மற்றவை மடிந்து போகும். சிற்பி தேவையற்றதை செதுக்கி ஒரு வடிவமைப்பை உருவாக்குவது போல், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதல்லாதவை மடிந்து ஒருவகை வடிவமைப்பு வளர்ச்சி அடைந்து விடுகின்றது. இதை பரிணாம வளர்ச்சி என்கின்றோம். ஜீன்களின் பரிணாம வளர்ச்சி (உயிர்கள்) மற்றும் மெம்களின் பரிணாம வளர்ச்சி (யோசனைகள்) மனிதனின் வாழ்வை நிர்ணயிக்கின்றன. (நம்பிக்கைகளின் மூலம்)

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி நிகழ்கின்றது. ஆனால், சுற்றுச்சூழலோ மாறி கொண்டே இருக்கின்றது. அதற்கேற்ப பரிணாம வளர்ச்சியின் பாதையும் மாறி கொண்டே இருக்கின்றது. ஆக, சுற்றுச்சூழலின் மாற்றங்களுக்கு ஏற்ப மெதுவாக உயிரனங்கள் மாறியும், அழிந்தும், புதியவை உருவாகியும் சமன் செய்யப்படுகின்றது (இங்கு, கோடி கணக்கில் குழந்தைகளை பெற்று போட்டு பட்டினி போடுவதற்கு இடமில்லை). இப்படிப்பட்ட வடிவமைப்பிற்கு...வளர்ச்சி முறைக்கு... எந்தவித அறிவும் தேவையில்லை. உயிரினங்களை அறிவுடைய-யாரும் படைக்கவும் இல்லை. பரிணாம வளர்ச்சி யாருடைய-அறிவின் கட்டுபாடும் இல்லாமல் (எந்தவித திட்டமிடுதலும் இன்றி) இயற்கையாக நிகழ்வதால், அது பொதுவாக சீறற்று, முழுமையற்று, தொடர்பற்று, பல பலவீனங்கள் மற்றும் குறைகளுடனே இருக்கும். அப்படியே அனைத்து உயிரினங்களும், மனிதனும், அவனுடைய மூளையும், அவனுடைய உணர்ச்சிகளும், அவனுடைய அறிவுதிறனும்!

அறிவை கொண்டு, பரிணாம வளர்ச்சியை விட மேம்பட்ட முறையை காண முடியும். அதனாலே, அறிவுதிறன் மெதுவாக பரிணாம வளர்ச்சி அடைந்ததுள்ளது. அது இயற்கையின் மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொண்டும், மேலும் இயற்கை இரகசியங்களை புரிந்து கொண்டும், அதற்கேற்ப மாற்றிக் கொள்ள உதவும் ஒரு உத்தி. மனிதன் அவனுடைய அறிவுதிறனை கொண்டு பரிணாம-வளர்ச்சி-முறையை விட மேம்பட்ட தீர்வுகளை காண முடியும்; கண்டும் உள்ளான். அப்படியே இயற்கையின் பல துயரங்களிலிருந்து தப்பித்தும் உள்ளான். அப்படி தான், கருவிகளை உருவாக்கினான், வீட்டை கட்டினான், விவசாயம் செய்தான், பல உயிர்க் கொல்லி நோய்களை கழைந்தான். ஆனால், இவற்றை ஒரு நாளிலோ அல்லது ஒரு தலைமுறையிலோ செய்துவிடவில்லை. ஏனெனில், மனிதனின் அறிவுதிறன் மற்ற விலங்குகளை காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதல்ல, சற்றே அதிகமானது. காட்டில் வாழ்ந்த ஆதி மனிதன் கிட்டத்தட்ட குரங்குகளை போல் தான் வாழ்ந்தான். அவனுடைய மூளைக்கும், நவீன மனிதனின் மூளைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பிறகு, எங்கிருந்து வந்தது நவீன மனிதனின் வளர்ச்சி? அதற்கு காரணம், மெம்களின் பரிணாம வளர்ச்சி. மெம்கள் (யோசனைகள்) ஒரு மூளையிலிருந்து மற்றொரு மூளைக்கு நகலாக தேர்ந்த மொழி தேவைப்படுவதால், அதை கொண்ட மனிதனிடத்தில் மெம்கள் பரிணாம வளர்ச்சி அடைகின்றன. அதனால், மெம்களின் வளர்ச்சியான அறிவியல் வளர்ச்சியையும், மூடநம்பிக்கைகளையும் மனிதனிடத்தில் காணமுடிகின்றது, மற்ற உயிரினங்களில் அவற்றை காண முடிவதில்லை.

மனிதன் உருவாக்கிய சில நல்ல மெம்களின் வளர்ச்சி அவனை உயர்த்துகின்றன, சில கெட்ட மெம்களின் வளர்ச்சி அவனை மற்ற உயிரினங்களை விட கீழ்நிலைக்கு கொண்டுபோய்கின்றன. ஜீன்களை போலவே, பலவகையான மெம்கள் (நல்ல, கெட்ட, வெட்டியான,...) உருவாகி கொண்டே உள்ளன. அவற்றில் சமூகச்சூழலுக்கு ஏற்றவை பரிணாம வளர்ச்சி அடைகின்றதன. மெம்கள் தொடர்ந்து தோன்றுவதை தடுப்பது கடினம். ஒவ்வொரு தனி மனிதனின் எண்ணங்களையும், யோசனைகளையும் எப்படி தடுப்பது? அப்படியே தடுப்பதும் வளர்ச்சியை தடுப்பது போல் தான். ஆனால், நல்ல மெம்கள் செழிப்புடன் வளரவும், கெட்ட மெம்கள் வளரச்சி-அடையாமல் இருக்கவும் கூடிய சமூகச்சூழலை உருவாக்க முடியும். ஆனாலும், சில கெட்ட ஜீன்களை முற்றிலும் கழைவது எப்படி கடினமோ, அப்படியே, சில கெட்ட மெம்களை முற்றிலும் கழைந்தெடுப்பதும் கடினம். குறைந்த பட்சம், கெட்ட மெம்கள் செல்வ-செழிப்புடன்-வளராத சமூகச்சூழலை மனிதன் உருவாக்கும் போது, அவன் மற்ற உயிரினங்களை விட கேவலமான நிலைக்கு தள்ளப்படுவதை தடுக்கலாம்.


முயல்: இன்றுள்ள பெரும்பான்மையான அவலங்களுக்கு மக்கள் தொகையும் ஒரு காரணம். முன்பு அடிக்கடி நிகழும் போர்களிலும், கொள்ளை நோய்களிலும் மக்கள் தொகை குறைக்க பட்டிருக்க வேண்டும். இன்று அப்படி இல்லை.

ஆமை: மக்கள் தொகை பெருக்கத்திற்கு மற்றொரு முக்கியமான ஒரு மெம் உண்டு.

பாலினப்பெருக்கம் மிகவும் சிக்கலானது. அதனால் மக்கள் தொகை அவ்வளவு எளிதாக பெருகாது. அது குறையாக இருந்தாலும், பாலினப்பெருக்கத்தில் பல நன்மைகள் உண்டு, அதனாலே அது பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளது. அதன் முக்கிய நோக்கம், மக்கள் தொகையிலுள்ள ஜீன்களை கலக்குதல். ஜீன்களின் கலப்பு பல்வேறு வேறுபாடுகளை கொண்ட மக்களை உருவாக்குவதால், நோய் கிருமிகள் எல்லோரையும் ஒரே சமயத்தில் ஒரே மாதிரியாக தாக்குவது கடினம் (இல்லையென்றால், புதிதாக தோன்றும் ஒரு வைரஸ் மொத்த மக்கள் தொகையையும் எளிதாக அழித்து விடமுடியும்). அதனால் தொற்று நோய்கள் பரவுவதும் குறைக்கப்படும். மேலும், மரபுபிழையில் தோன்றிய நல்ல ஜீன்கள் மக்கள் தொகையில் பரவவும், கெட்ட ஜீன்களை களை எடுக்கவும் பாலினப் பெருக்கம் உதவுகின்றது. அதனால், உயிரினங்கள் பொதுவாக நெருங்கிய சொந்தங்களுடன், அதாவது ஒரே மாதிரியான ஜீன்களை கொண்டவர்களுடன் பாலினப் பெருக்கம் ஏற்படாமல் இருக்கமாறே பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

இயற்கையில் தகுந்த துணையை தேடுவது மிகவும் சிக்கலான காரியம். அதற்கு மனிதன் உருவாக்கிய ஒரு மெம் தான் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள், அதிலும் எளிதாக ஒரே ஜாதியில் செய்யப்படும் திருமணங்கள், இன்னும் எளிதாக சொந்தத்திலே செய்யப்படும் திருமணங்கள்.

முயல்: இதில் ஒரே மாதிரியான ஜீன்களை கண்டுகொள்ள இடம் இல்லை. மேலும் ஒரே மாதிரியான ஜீன்களுடனே பெரும்பாலான திருமணங்கள் நடக்கின்றன. பல நூற்றாண்டுகளாக, நாம் எப்படிபட்ட தலைமுறைகளை உருவாக்கி கொண்டுள்ளோம்?! மற்ற உயிரினங்களை தாண்டி, வாழ்க்கையை இசை, கலை, ஆடல், பாடல், ஆராய்ச்சி என பல்வேறு பரிமாணங்களில் இரசிக்க தெரிந்தவனுக்கு, கவிதை போன்ற காதலை எப்படி சற்றே தள்ளி வைக்க முடிந்தது என்பது ஆச்சர்யமாகத் தான் உள்ளது.

மற்றொரு ஆச்சர்யம்... ஜாதி எப்படி உருவாகி...வளர்ச்சி அடைந்தது? அக்கொடுமையை எப்படி பெரும்பான்மையான மக்கள் சகித்து கொண்டனர்? இன்றும் அது பல வடிவில் இருப்பதும் ஆச்சர்யம் தான்.

ஆமை: என்னை அதிர்ச்சியுடன் ஆச்சர்யப்படுத்தும் ஒன்று பச்சிளம் குழந்தைகளை விதவையாக்கியது!?!... எப்படி அவ்வளவு கீழ்நிலைக்கு மனிதன் போனான்? ஆண் ஆதிக்கம், பெண் அடிமை, கற்பு, விதவை கொடுமை, சிறுவயதில் திருமணம் என எப்படியோ அந்த மெம் உருவாகி...வளர்ச்சி அடைந்திருக்கின்றது. அச்சிறுமியை பெத்தவனும், பெத்தவளும்... அவளின் அண்ணனும், அக்காவும்... தாத்தாவும், பாட்டியும்... உற்றார் உறவினரும், சக மனிதர்களும் எப்படி அதை சகித்து கொண்டிருந்தனர்?

முயல்: அறியாமை, தேவையற்ற பயம், மூடநம்பிக்கை போன்றவை இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

ஆமை: அது போன்ற மெம்கள் வளர்ச்சி அடைய காரணம், மனிதன் உருவாக்கிய சமூகச்சூழலில் உள்ள சில அடிப்படை தவறுகளே... குறைந்த பட்சம், கெட்ட மெம்கள் செல்வ-செழிப்புடன்-வளராத சமூகச்சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு நான் கருதும் சில அடிப்படை பண்புகள்:
 • குறைபட்ச அவசியமான சமூக கட்டுபாடு. (கலாச்சார சிறையிலே)
 • ஒரு சமூகமாக, ஒவ்வொன்றையும் வெளிப்படையாக அலசம் பாங்கு மற்றும் புதியவற்றை ஏற்கும் பக்குவம்.
 • எந்த ஒரு விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார் – என்பதை உணருதல்.
 • தெரியாததை தெரியாது என சொல்ல துணியும் தைரியம். (அறிவு பேசினால்)
நீங்கள் கருதும் அடிப்படை பண்புகள் என்ன?

18 March 2011

இருக்கா?

காக்கா இளைப்பாற கருவேல மரமிருக்கு;
என் மக்க இளைப்பாற மாமரத்து நிழலிருக்கா?

கொக்கு பசியாற கொக்குளத்து மீனிருக்கு;
என் மக்க பசியாற மக்கிப்போன நெல்லிருக்கா?

வண்டு தாகம்தீர பூவிலெல்லாம் தேனிருக்கு;
என் மக்க தாகம்தீர சிறுகுவளை நீரிருக்கா?

சிங்கம் படுத்துறங்க மலையிலே குகையிருக்கு;
என் மக்க படுத்துறங்க ஒழுகாத குடிலிருக்கா?

குரங்கு விளையாட மரத்தோட கிளையிருக்கு;
என் மக்க விளையாட குப்பத்திலே இடமிருக்கா?

குருவி நீராட தெருயோர ஓடையிருக்கு;
என் மக்க நீராட கூவத்திலே நீரிருக்கா?

மயிலு காதலிக்க சோலையெல்லாம் பூத்திருக்கு;
என் மக்க காதலிக்க விலைபோகா ஊரிருக்கா?முதல் நான்கு வரிகள்: வைரமுத்து

23 February 2011

வாழ்கை விளையாட்டு


பயன்பாட்டுக் கணிதத்தின் (Applied Mathematics) ஒரு பிரிவான ஆட்டக் கோட்பாடு (Game Theory) என்பது சமூகவியல், பொருளாதாரம், உயிரியல் (பரிணாமம், சூழலியல்), தொழிற்நுட்பம், அரசியல்-அறிவியல் (அரசறிவியல்; Political Science), சர்வதேச உறவு, கணினி-அறிவியல், சமூக உளவியல், தத்துவம் (ஒழுக்கம்), நிர்வாகம் என பல துறைகளில் பயன்படுகின்றது. ஆட்டக் கோட்பாட்டில் கைதியின்-குழப்பம் (Prisoner's dilemma; கை|கு) எனப்படும் கணித-சிக்கல் மிக அடிப்படையானது. இதை சுருக்கமாக கை|கு என்று குறிப்போம். கை|கு-விற்கு ஒரு உதாரணம் இங்கே:

உன்னையும், உன் திருட்டு பங்காளியையும் களவு போன இடத்திற்கு அருகே காவல் துறை பிடித்தது என கொள்வோம். ஆனால் அவர்களிடம் போதுமான ஆதாரம் இல்லை. அதனால் அவர்கள் உங்கள் இருவரையும் தனித்தனி சிறையில் அடைத்து ஒரே மாதிரியான பேரத்தை தனித்தனியே சொல்கின்றார்கள். அதாவது, நீ குற்றத்தை ஒத்துக்கொண்டு, உன் பங்காளி அமைதி காத்தால், உனக்கு விடுதலை, உன் பங்காளிக்கு 10-வருட தண்டனை. இது அப்படியே எதிர்மாறாகவும் பொருந்தும். நீங்கள் இருவரும் குற்றத்தை ஒத்துக்கொண்டால் இருவருக்கும் தலா 5-வருட தண்டனை. இருவரும் அமைதியாக இருந்தால், இருவருக்கும் தலா 6-மாத தண்டனை. உன் பங்காளியின் முடிவு என்னவாக இருக்கும் என உனக்கு தெரியாத இந்த நிலையில், நீ என்ன முடிவு எடுப்பாய்?

நீங்கள் இருவரும் ஒத்துழைத்து அமைதியாக இருந்தால், அது இருவருக்கும் நல்லது. ஆனால், உன் பங்காளி ஒத்துழைக்காவிட்டால்? ஆக, நீ ஒத்துழைக்காமல் இருப்பதே உன் விவேகமான முடிவாக இருக்க முடியும்.

கை|கு-வை கீழ்கண்டவாறு குறிக்கலாம்:


கை|கு-வை கீழ்கண்டவாறு பொதுவான அமைப்பில் குறிக்கலாம்:


கை|கு-வை செலவு-ஆதாய பகுப்பாய்வாக பயன்படுத்தலாம் [ஆதாயம் – செலவு]. உதாரணமாக, ஒரு விலங்கு X (அதன் ஆற்றலை செலவு செய்து) மற்றொரு விலங்கு Y - க்கு உதவலாம், பிறகு ஒரு தருணத்தில் அதனிடமிருந்து உதவியை பெறும் நம்பிக்கையில் (ஆதாயம்). ஆனால் Y மறு-உதவி செய்யலாம் அல்லது செய்யாமலும் போகலாம். சில நேரங்களில், அது வாழ்விற்கும் சாவிற்குமான வித்தியாசத்தை தரலாம். உதாரணமாக, இரத்த-உறிஞ்சி-வௌவால்கள் இரவு நேரத்தில் இரத்தம் குடித்து உயிர் வாழும். ஒரு நாள் உணவு இல்லை என்றாலும் அவை உயிர் வாழ்வது கடினம். உணவோ அனைத்து நாட்களிலும் கிடைப்பது எளிதல்ல. ஆனால், கிடைக்கும் போது அதிகமாக கிடைக்க வாய்ப்பு அதிகம். ஒவ்வொரு நாளும், சில வௌவால்கள் வெறும் வயிற்றோடு திரும்பும். அதிகமாக குடித்த அதிர்ஷ்டமான வௌவால்கள், அதிர்ஷ்டமற்ற வௌவால்களுக்கு பெரும்பாலும் கொடுத்து உதவும்.

செலவு மற்றும் ஆதாயத்திற்கு சில புள்ளிகளை நிர்ணயிக்கலாம் (புள்ளிகளின் ஒன்றுக்கொன்று சார்ந்த வேறுபாடு தான் முக்கியம், அதன் உண்மையான மதிப்பல்ல). உதவி செய்வதற்கான செலவு 10 புள்ளிகள் எனவும், அதை பெறுபவரின் ஆதாயம் 15 புள்ளிகள் எனவும் வைப்போம். இப்பொழுது X, Y-க்கு உதவி செய்து, ஆனால் Y-யிடமிருந்து மறு உதவி கிடைக்கவில்லை என்றால், X-ன் மொத்த பலன்: [ஆதாயம் – செலவு = 0-10 = -10]. X, Y-க்கு உதவி செய்து, Y-யிடமிருந்து மறு உதவி கிடைத்தால், X-ன் மொத்த பலன்: [ஆதாயம் – செலவு = 15-10 = 5]. X, Y-யிடமிருந்து உதவி பெற்று, ஆனால் Y-க்கு மறு உதவி செய்யவில்லை என்றால், X-ன் மொத்த பலன்: [ஆதாயம் – செலவு = 15-0 = 15]. இதை கீழ்கண்டவாறு குறிக்கலாம்:


இந்த ஆட்டம் ஒரு முறை தான் என்றால், X-னுடைய விவேகமான முடிவு (நிகழ்தகவு படி பாதுகாப்பான பணயம்) ஒத்துழைக்காமல், Y-க்கு உதவாமல் இருப்பதாக இருக்கும். ஆனால், இந்த ஆட்டம் தொடர்ந்து திரும்ப திரும்ப நிகழ்ந்தால், மேலும் X, Y மட்டுமில்லாமல் பல விலங்குகள் ஒன்றுக்கொன்றுடன் வெவ்வேறு சமயத்தில் ஈடுபட்டால், எப்படி பட்ட உத்தி வெற்றிகரமாக இருக்கும்? அரசியல்-அறிவியல் விஞ்ஞானி ராபட் ஆக்ஸல்ராட் (Robert Axelrod) என்பவர் இதை கணினில் உருவகப்படுத்தினார் (Computer Simulation). அதாவது, பலவகையான உத்திகளை கணினி நிரல்களாக மாற்றி, அவற்றை ஒன்றுக்கொன்றுடன் தொடர்ந்து போட்டியிட வைக்க வேண்டும் (இது பரிணாம கால அளவில், விலங்குகளின் குழுவில் நிகழ்வதை போன்றது). அதற்காக அவர் பல்வேறுவகையான தேர்ந்த உத்திகளை பல ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்தும், அறிவியல் மற்றும் கணித நிபுணர்களிடமிருந்தும் பெற்றார். அதில் சில எளிய உத்திகள், மற்றவை மிகவும் விரிவான சிக்கலான உத்திகள். ஒரு வெற்றிகரமான உத்தி, சார்புடைய செலவு-ஆதாய புள்ளிகள், அங்குள்ள மற்ற உத்திகள் (சூழல்) என பல காரணிகளை பொருத்தது என்றாலும், டிட்டுக்கு-டாட் (Tit for Tat) என்று அழைக்கப்படும் ஒரு எளிய உத்தி வெற்றிகரமான ஒன்றாக அறியப்பட்டது. டிட்டுக்கு-டாட் முதல் முறையில் ஒத்துழைத்து உதவி செய்யும், அதற்கு பிறகு அடுத்தவரின் முந்தைய செயலை பின்பற்றும்.

டிட்டுக்கு-டாட் ஏன் வெற்றிகரமான உத்தியாக இருக்கிறது என்பதை ஆராயலாம். எப்பொழுதும் ஒத்துழைக்கும் உத்தி, அங்குள்ள ஒத்துழைக்காத உத்திகளால் எளிதாக தோற்கடிக்கப்பட்டு விடும். எப்பொழுதும் ஒத்துழைக்காத உத்தி வெற்றிபெற, அங்கு நிறைய ஒத்துழைக்கும் உத்திகள் இருக்க வேண்டும். டிட்டுக்கு-டாட்-ஆனால்-முதலில்-ஒத்துழைக்காத உத்தி (முதல் முறை ஒத்துழைக்காமல், அடுத்த முறையிலிருந்து டிட்டுக்கு-டாட் போல் செயல்படும் உத்தி) ஒத்துழைக்காத உத்திகளிடமிருந்து ஏமாறாமல் இருந்தாலும், டிட்டுக்கு-டாட் போன்ற கவனமான உத்திகளிடமிருந்து குறைந்த ஆதாயமே பெறும். டிட்டுக்கு-டாட் மற்ற ஒத்துழைக்கும் உத்திகளிடமிருந்து ஆதாயத்தை பெறுவதுடன், ஒத்துழைக்காத உத்திகளினால் குறைந்த அளவே நட்டமடைகின்றது.

ராபர்ட் ஆக்ஸெல்ராட் டிட்டுக்கு-டாட்டின் பல பண்புகளை விளக்குகின்றார். அது 'நல்ல/அன்பான/நேர்த்தியான' உத்தி, ஏனென்றால் முதலில் ஒத்துழைத்து உதவி செய்கின்றது. அது 'மன்னிக்கும்' உத்தி, ஏனென்றால் அடுத்தவரின் பழைய தவறைகளை நினைவில் வைத்து கொள்வதில்லை; அடுத்தவரின் முந்தைய கடைசி செயலை மட்டுமே கவனத்தில் கொள்கின்றது. அது 'பொறாமை படாத' உத்தியும் கூட, ஏனென்றால் அடுத்தவரின் நட்டத்தில் புள்ளிகளை பெறுவதில்லை. ஆனால், அது 'புனித/கருணைக் கடல்' உத்தி அல்ல, ஏனென்றால் அது எந்த நிபந்தனையும் இன்றி ஒத்துழைப்பதில்லை. வாழ்கை மிகவும் சிக்கலான பல்வேறு காரணிகளை கொண்டது. இருப்பினும், ஒத்துழைத்தல், உதவுதல், அன்பு, நேர்மை, மன்னித்தல், பொறாமைபடாமல் இருத்தல் போன்ற உத்திகள் மனிதர்கள் உட்பட விலங்குகளில் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம் என்பதை இது அடிப்படை அளவில் காட்டுகின்றது.

இது நாம் ஆடும் வாழ்கை விளையாட்டு. இதை நாம் தனி மனிதர்களாக ஒவ்வொருவரிடமும் பெரும்பாலும் ஒத்துழைப்புடன் ஆடினாலும், குழுக்கள், நிறுவனங்கள், நாடுகள் போன்ற பெரிய அளவில் அதை உணராமல் தோற்றுவிடுகின்றோம். துரதிர்ஷ்டவசமாக, நாம் உருவாக்கிய பெரும்பான்மையான பிரபல விளையாட்டுகள் பூச்சியம்-கூட்டுத்-தொகை ஆட்டங்களாக உள்ளன - அதில் ஒருவரின் வெற்றி மற்றவரின் தோழ்வியை கொண்டே இருக்கும்.


ஆமை: ஒருவரின் வெற்றி அடுத்தவரின் தோழ்வில் மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையே டிட்டுக்கு-டாட்டும், வாழ்கையும் உணர்த்துகின்றன. அதை சமூக பார்வைக்கு கொண்டுவர‌ பூச்சியம்-அற்ற-கூட்டுத்-தொகை ஆட்டங்களையும் நாம் உருவாக்கலாம்.

புலி: ஆனால் அது சுவாரசியமாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் முயற்சிக்கலாம். அதற்கு முன், நாம் ஏன் விளையாட்டுக்களை உருவாக்கினோம்? நாம் ஏன் விளையாடுகின்றோம்?

ஆமை: மனிதன் உட்பட பெரும்பான்மையான விலங்குகளின் குழந்தை பருவத்தில் விளையாடுதல் என்பது மிக முக்கியமான பகுதி. பரிணாம வளர்ச்சியில் விளையாடுதல் என்ற முக்கியமான கற்றும் உத்தியை நாம் பெற்றுள்ளோம். அப்படித்தான் குழந்தைகள் நாம் வாழும் உலகை, அதன் பண்புகளை, காரண-காரியங்களை, முக்கியமாக இடம்-காலம் போன்றவற்றை அறிந்து கொள்கின்றன; இந்த உலகில் எப்படிப் பட்டவை வேலை செய்யும், வேலை செய்யாது, நிலைக்கும், நிலைக்காது என்பதை அறிந்து கொள்கின்றன. மொத்ததில் [விளையாட்டு = பயிற்சி --> கற்றல்].

புலி: பெரியவர்கள் எதற்காக விளையாட வேண்டும்?

ஆமை: பயிற்சிக்காக தான். ஆரம்பத்தில் நாம் உருவாக்கிய விளையாட்டுகள் நம் பிழைப்பிற்காக உதவும், வாழ்கை நடைமுறைக்கான பயிற்சிகளாக இருந்தன (மல்யுத்தம், குதிரை பந்தயம் போன்றவை). பிறகு நாம் பிழைப்பதற்காக உருவாக்கிய கருவிகளை பயிற்சி செய்து தேர்ச்சியுடன் பயன்படுத்துவதற்கான விளையாட்டுகள் உருவாகின (கத்தி சண்டை, வாள் சண்டை, அம்பு விடுதல் போன்றவை). அதில் வெற்றி பெற்றவர்களை மக்கள் வீரர்களாகவும், நாயகர்களாகவும் கருதினர். ஏனெனில், அது நாட்டை... வீட்டை காக்கும் பயிற்சி. மெதுவாக வாழ்கை நடைமுறைக்கு உதவும் முக்கியத்துவம் விளையாட்டுகளிலிருந்து பிரிந்து தொலைந்து போகின. இன்றுள்ள பெரும்பான்மையான விளையாட்டுகள் எந்த நடைமுறை பயனுமில்லாமல் விளையாட்டுகளுக்காக மட்டுமே உள்ளன.

புலி: ஆனாலும், விளையாட்டுகள் நல்ல உடற்பயிற்சி தானே! அவை நல்ல ஆரோக்கியமான வாழ்வு முறையை ஊக்குவிக்கின்றன.

ஆமை: விளையாட்டுகள் நல்ல உடற்பயிற்சி தான், அவற்றை சரியான அளவில் பயன்படுத்தினால்... தொழிலாக (?!) விளையாடுபவர்களில் பெரும்பான்மையானோர் தேவைக்கு மிக அதிகமாக செய்கின்றனர். சிலர் உடலுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளையும் பயன்படுத்துகின்றனர். விளையாட்டுகள் நல்ல உடற்பயிற்சி தான், அவற்றை வெறுமே பார்த்து கொண்டிராமல் அனைவரையும் விளையாட ஊக்கப்படுத்தினால்...

புலி: விளையாட்டை பார்ப்பதும் ஒரு நல்ல பொழுதுபோக்கு தான். மேலும், சில பூச்சியம்-அற்ற-கூட்டுத்-தொகை விளையாட்டுகளையும், வாழ்கைக்கு பயனுள்ள விளையாட்டுகளையும் நாம் உருவாக்க வேண்டும் என்றே நினைக்கின்றேன்.

ஆமை: எப்படியாகிலும், விளையாட்டு மிக முக்கியமானது; ஆனால், அதன் பயன் அது விளையாட்டாக இருப்பதில் தான்!

31 January 2011

ஆன்மாவை தேடி

மனிதர்கள், விலங்குகள் போன்ற இயக்கமுடைய பொருட்களுக்கும், பாறை, நாற்காலி, தாவரங்கள் போன்ற இயக்கமில்லாத பொருட்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு என்ன? இயக்கமுடைய பொருட்களுக்கு புதிரான ஒரு உயிர் சக்தி இருப்பதாகவும், அதனாலேயே அவை இயக்கமடைகின்றன என்றும் நம்முடைய முன்னோர்கள் நினைத்தனர். அந்த புதிரான உயிர் சக்தியை ஆன்மா என்றழைத்தனர். அந்த கருதுகோளை மேலும் விரிவுபடுத்தி, மரணத்திற்கு பின் ஆன்மா உடலை விட்டு பிரியும் என்றும், அது ஒருபோதும் சாவதில்லை என்றும் நம்பினர் (பாவம் செய்யாதவர்கள், குழந்தைகள் படும் துன்பங்களை விளக்க உருவான முன்-ஜென்ம-பாவம் என்ற யோசனைகளுக்கும், நரகம்-சொர்க்கம் போன்ற யோசனைகளுக்கும் அது ஏதுவாக உதவியது).

பிறகு தாவரங்கள் உயிர் என்பதையும், மேலும் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிரிகளையும் கண்டறிந்து கொண்டோம். இப்பொழுது, உயிர் என்பது ஒரு சிக்கலான தொடர்ச்சியாக நிகழும் வேதிவினைகளின் தொகுப்பு என்பதையும், மேலும் அது எவ்வாறு பாக்டீரியா போன்ற எளிய அமைப்பிலிருந்து தாவரங்கள், மீன்கள், விலங்குகள் மனிதர்கள் உட்பட பலவகை உயிரினங்களாக இயற்கை-தேர்வு-முறையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன என்பதையும் அறிந்துள்ளோம். பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களையும் இணைக்கும், உயிரின் இரகசிய மரபியல் மூலக்கூறையும் (DNA), அதன் நான்கு எழுத்துக்களை (A, C, G, T) கொண்ட மரபு குறிப்புகளையும் அறிவோம். மரபியல் மூலக்கூறு உட்பட, உயிரின் அனைத்து மூலப்பொருட்களையும் நம்மால் செயற்கையாக தயாரிக்க முடியும். 50 கோடி மக்களை கொன்ற, முற்றிலும் மறைந்து போன 1918 தொற்று வைரஸை (Flu virus), ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் மீண்டும் உயிர் கொண்டு வந்துள்ளனர். நம் உடலின் ஒரு செல்லை (உயிரணு) கொண்டு, நம்முடைய உருப்புகளையோ அல்லது ஒத்த மரபணுக்களை உடைய மற்றொரு நபரையோ (Clone) உருவாக்க முடியும்.

உயிரின் அடிப்படையை நாம் புரிந்து கொள்ளும் வேளையில், ஆன்மா என்ற கருதுகோள் மெதுவாக நம் மனதிற்கு நகர்த்தப்பட்டது. உடல் வேறு மனம் வேறாக, நாம் உணரும் உடல்-மனது இருமை (Mind-body dualism) இந்த யோசனை துளிர் விட வைத்தது. மனம் என்பது உடலிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, தனித்த ஒன்று என்று மக்கள் நினைத்தனர்; இன்றும் பலர் நினைக்கின்றனர் (இதயம் தான் ஆன்மாவின், அன்பின், காதலின் மையம் என்றும் மக்கள் நினைத்ததுண்டு). மூளை ஏதோ ஒரு மாயமான முறையில் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு உருவாகுவது தான் மனம் என்று நம்பினர். மரணத்தை-தொட்டு-வந்தவர்களின் அனுபவங்கள் (Near-death experience), உடலை விட்டு மனம் பிரியும் அனுபவங்கள் (Out-of-body experience) (அதன் விரிவுபடுத்தப்பட்ட கதையான கூடுவிட்டு கூடு பாய்தல்) போன்ற பலவகையான வினோதமான நிகழ்வுகள் இந்த யோசனையை மேலும் கொழுந்துவிட்டு எரிய வைத்தது.

கால்கள் செயல்படும் போது 'நடத்தல்' வெளிபடுவது போல், மூளை செயல்படுதலின் வெளிப்பாடு தான் மனம். இப்பொழுது, மூளை செயல்படுவதை fMRI (functional Magnetic Resonance Imaging) எனப்படும் 'வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு' எந்திரம் மூலம் நேரடியாக பார்க்கலாம். நம்முடைய உணர்வுகள் மூளையில் எங்கு அறியப்படுகின்றன, உணர்ச்சிகள் எப்படி கையாளப்படுகின்றன, எந்த வழிகளில்...எப்படி நம்முடைய தற்காலிக அனுபவ நினைவுகள் நீண்ட கால நினைவுகளாக சேமிக்கப்படுகின்றன போன்றவற்றை நாம் அறிவோம். இப்பொழுது, மரணத்தை-தொட்டு-வந்தவர்களின் அனுபவங்கள் (மூளையின் செல்களில் ஆக்ஸிஜன் குறைவால் ஏற்படும் குகைவழியின்-கடைசியில்-தெரியும்-ஒளி போன்ற அறிகுறிகள்), உடலை விட்டு மனம் பிரியும் அனுபவங்கள் (உடலை விட்டு மனம் பிரிவது போன்ற மாயை) போன்ற பலவகையான வினோதமான நிகழ்வுகளை நம்மால் விளக்க முடியும். உடலை விட்டு மனம் பிரியும் அனுபவத்தை காந்த அலைத்துடிப்புகளை கொண்டு நம்மால் எளிதாக தூண்ட வைக்கமுடியும்.

நம் மூளை வலது-இடது என இரண்டு அரைக்கோளங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. வலது-அரைக்கோளம் நம் இடப்பக்க உடலையும், இடது-அரைக்கோளம் நம் வலப்பக்க உடலையும் கட்டுப்படுத்துகின்றது. இந்த இரண்டு அரைக்கோளங்களையும் இணைப்பு-மெய்யம் (Corpus Callosum) எனப்படும் ஒரு கட்டான நரம்பிழைகள் இணைக்கின்றன. பலவகைகளில், இந்த இரண்டு அரைக்கோளங்களையும் இரண்டு தனி மூளைகளாக பாவிக்கலாம். சில காரணங்களுக்காக, இவற்றை இணைக்கும் இணைப்பு-மெய்யம் துண்டிக்கப்பட்டால், இரண்டு அரைக்கோளங்களின் இரு வேறுபட்ட பண்புகளையும், விருப்பு வெறுப்புகளையும், ஆசா பாசங்களையும், நம்பிக்கைகளையும் கவனிக்க முடியும். உதாரணமாக, இந்த நிலையில் உள்ள சில நோயாளிகள், ஒருபக்க அரைக்கோளத்தில் கடவுளை நம்பிக்கை உள்ளதாகவும், மறுபக்க அரைக்கோளத்தில் கடவுளை நம்பிக்கை இல்லை எனவும் கூறுகின்றனர் (நம் இரண்டு கண்களிலிருந்து செல்லும் குறிப்பலைகள் மூளையின் வெவ்வேறு அரைக்கோளத்தில் பகுத்து அறியப்படுவதால், ஒரு கண்ணை மூடிவிட்டு இச்சோதனையை செய்ய முடியும்). ஆன்மா என்ற ஒன்று இருந்தால், இங்கு அது பாதியாக பகுக்கப்பட்டிருக்க வேண்டும் (ஒருவேளை, அவர்களின் ஒருபாதி ஆன்மா சொர்க்கத்திற்கும், மறுபாதி ஆன்மா நரகத்திற்கும் செல்லலாம்!).

எனினும், மற்றொரு கோணத்தில், ஆன்மா என்ற ஒன்று உண்மையிலே உண்டு! அது எந்த ஒன்றிலிருந்தும் வெளிப்படும் ஒரு சாரம் அல்லது ஜீவன் ஆகும். அது ஒரு புத்தகத்தின் ஆன்மாவாக இருக்கலாம், அல்லது ஒரு திரைப்படத்தின் ஆன்மாவாக இருக்கலாம். அது பல நுண்ணிய புள்ளிகளை (படத்துணுக்குகள்) கொண்டு ஒரு படம் வெளிப்படுவது போன்றது; பல எழுத்துக்களை கொண்டு ஒரு புத்தகத்தில் கதை வெளிப்படுவது போன்றது; சில தொடர்ந்த வேதிவினைகளின் தொகுப்பை கொண்டு ஒரு உயிருள்ள செல் வெளிப்படுவது போன்றது. ஒரு உயிருள்ள செல் என்பது எந்தவித விருப்பு-வெறுப்பு அற்ற, ஆசா-பாசங்கள் அற்ற வேதிவினைகளின் தொகுப்பு. ஆனால், இப்படிப்பட்ட பலகோடி செல்களின் ஒன்று கூடிய செயல்பாட்டின் வெளிப்பாடே... உணர்ச்சி, நம்பிக்கை, விருப்பு-வெறுப்பு, ஆசா-பாசங்கள், வலி-சுகம் கொண்ட மனம்! அது ஒரு மனிதனின் சாரம், ஜீவன், ஆன்மா!

10 January 2011

அண்டக்கா கசம்

தூரத்தில் இருந்து பார்க்கும் போது தொலைகாட்சி திரையிலுள்ள படம் தொடர்ச்சியாகவும், தெளிவாகவும் தெரிகின்றது. ஆனால் அருகில் சென்று பார்த்தால், அது பல்லாயிரக்கணக்கான நுண்ணிய தனித்தனியான புள்ளிகளை (படத்துணுக்குகள்) கொண்டு அமைக்கப் பட்டுள்ளதை அறியலாம். நாம் வாழும் இந்த உலகமும் (அண்டமும்) அப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளது. உயர்மட்டத்தில், அதாவது நாம் சாதாரணமாக உணரகூடிய அளவில், அனைத்தும் தொடர்சியாகவும், எளிதாக அறிதியிட்டு கூற முடிந்ததாகவும், காரண-காரியங்களை அறிந்து கொள்ளக் கூடியதாகவும் தெரிகின்றது. ஆனால் ஆழமான மட்டத்தில், அதாவது அணு அளவில், அனைத்தும் தனித்தனியான அளவிலும், தனித்தனியான நுண்பொருட்களாகவும் இருக்கின்றது. இந்த தனித்தனியான நுண்பொருட்களை அடிப்படைத் துகள்கள் (Elementary Particles) என்கின்றோம். இவை நம் உலகின் கட்டுமானப் பொருட்கள். இந்த மட்டத்தில், நம்முடைய உலகம் மிகவும் வினோதமாக இருப்பதால், அடிப்படைத் துகள்களின் செயல்பாடுகளை மற்றும் அவை எவ்வாறு ஒன்றுக்கொன்றுடன் இடைபடுவினை கொள்கின்றன என்பதை விளக்க குவாண்டம் இயக்கவியல் (Quantum Mechanics) எனப்படும் முற்றிலும் புதிய இயற்பியல் தேவைப்பட்டது. ஒரு அடிப்படை துகள் ஒரே சமசயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் இருக்க முடியும். அங்கு காலம் இரு திசைகளிலும் செல்லும். ஒரு அடிப்படை துகளின் நிலையை (எந்த இடம், முடுக்கம்,…) நிகழ்தகவு வரையறைக்குள் மட்டுமே குறிக்கமுடியும்; திட்டவட்டமாக அறிதியிட்டு கூற முடியாது. இந்த ஒழுங்கற்ற நிகழ்தகவு சுபாவம் இயற்கையின் அடிப்படையான நிதர்சனம்; அது எந்த விதத்திலும் நம்முடைய புரிதலின் குறைபாடு அல்ல! உயர்மட்டத்தில், நாம் இவற்றின் ஒட்டுமொத்த சீர்படுத்தப்பட்ட சராசரி நிலையை காண்கின்றோம். அதனால், நம்முடை அன்றாட வாழ்கையின் அனுபவ அளவில், எளிதாக அறிதியிட்டு கூறமுடிந்த ஒழுங்கான இயல்பை இயற்கையில் காண்கின்றோம். குவாண்டம் இயக்கவியல் மனிதன் உருவாக்கிய தியரிகளில் மிகச்சிறந்த ஒன்று; அது பலமுறை திரும்ப திரும்ப துல்லியமாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது! குவாண்டம் இயக்கவியல் அணுவின் அமைப்பையும், தனிம வரிசை அட்டவணையில் உள்ள அனைத்து தனிமங்களையும் நேர்த்தியாக விளக்குகின்றது!

கீழே உள்ள படம், அறியப்பட்ட அனைத்து அடிப்படை துகள்களையும் காட்டுகின்றது. ஒவ்வொரு அடிப்படைத் துகளின் குறியீடு நடுவிலும், அதன் நிறை (mass), மின்னூட்டம் (charge), சுழற்ச்சி (spin) மற்றும் பெயர் (name) மேலிருந்து கீழாக, மேல் குவார்க்குவில் (Up quark) காட்டப் பட்டுள்ளது போல் குறிக்கப்பட்டுள்ளது.
 • முதல் மூன்று நெடுக்குவரிசையில் பருப்பொருள் துகள்கள் (Fermions) காட்டப்பட்டுள்ளன. அவை மூன்று தலைமுறைகளாக (I, II, III Generations) வருகின்றன. அவற்றின் நிறை வேறுபாட்டை தவிர, ஒவ்வொரு தலைமுறை துகள்களும் ஒரே மாதிரி பண்புகளை கொண்டுள்ளன (படத்தில் அவற்றின் வேற்றுமை ஒற்றுமைகளை கவனிக்கவும்). II-தலைமுறை I-தலைமுறையை விட கனமாகவும், III-தலைமுறை II-தலைமுறையை விட கனமாகவும் உள்ளது. III மற்றும் II தலைமுறை துகள்கள் உடனடியாக சிதைவடைந்து மிககுறைந்த ஆற்றல் நிலையான I-தலைமுறை துகள்களாக மாறிவிடுவதால், நாம் I-தலைமுறை துகள்களை கொண்டு அமைக்கப்பட்ட பொருட்களை மட்டுமே உலகில் காண்கின்றோம் (ஆனால் III மற்றும் II தலைமுறை துகள்களை சோதனைக்கூடத்தில் உருவாக்க முடியும்). மேலும் பருப்பொருள் துகள்கள் குவார்க்குகள் (Quarks) மற்றும் லெப்டான்களாக (Leptons) தொகுக்கப் பட்டுள்ளது.
 • நான்காவது நெடுக்குவரிசையில் போஸான்கள் (Bosons) எனப்படும் விசை-கடத்தி துகள்கள் காட்டப்பட்டுள்ளன. அவை இயற்கையின் அடிப்படை விசைகளுக்கு காரணம். இந்த துகள்களின் பரிமாற்றம் அல்லது இடைபடுவினைகளின் விளைவு தான் இயற்கையில் நாம் காணும் விசைகள். இயற்கையில் நான்கு அறியப்பட்ட அடிப்படை விசைகள் உண்டு: மின்காந்த விசை [ஃபோட்டான்] (Photon), நிறையீர்ப்பு (புவியீர்ப்பு) விசை [கிராவிட்டான்] (Graviton), வலிமையான விசை [குலுவான்] (Gluon), வலுவற்ற விசை [W மற்றும் Z]. ஃபோட்டான்கள் மின்புலம், காந்தபுலம் மற்றும் ஓளி எனப்படும் மின்காந்த அலை ஆகியவற்றிக்கு காரணம். குலுவான்கள் வலிமையான அணுக்கரு விசைக்கு காரணம்; இவை புரோட்டான்களை (குவார்க்குகளை) அணுக்கருவினுள் பிணைத்து வைத்துள்ளன. W மற்றும் Z துகள்கள் வலுவற்ற அணுக்கரு விசைக்கு காரணம்; இவை அணுக்கரு கதிரியக்கத்தில் தொடர்புடையவை. கிராவிட்டான்கள் நிறையீர்ப்பு (புவியீர்ப்பு) விசைக்கு காரணம். ஆனால் இத்துகள்கள் இன்னும் கண்டுபிடிக்க படாததால் படத்தில் காட்டப் படவில்லை.
 • ஒவ்வொரு துகளுக்கும் அதனுடன் தொடர்புடைய எதிர்த் துகளும் (Antiparticle) உண்டு (எதிர்த் துகள்கள் முதலில் தியரி மூலம் கணிக்கப்பட்டு பின் சோதனையில் கண்டறியப்பட்டவை). உதாரணமாக, எலக்ட்ரானின் எதிர்த் துகள் பாஸிட்ரான். எதிர்த் துகள்கள் படத்தில் காட்டப்பட வில்லை. ஒரு புதிய துகள் உருவாகும் போது அதன் எதிர்த் துகளும் சேர்ந்தே உருவாகும் (நாம் சோதனைக் கூடத்தில் உருவாக்கும் போது அப்படித்தான் நிகழும்). ஒரு துகளும் அதன் எதிர்த் துகளும் மோதிக் கொண்டால், அவை நிர்மூலமாகி ஃபோட்டான்கள் போன்ற வேறுசில துகள்கள் உருவாகும். ஆனால் நாம் காணும் உலகில் துகள்கள் மட்டுமே உள்ளன.

கீழே உள்ள படம், அடிப்படை துகள்கள் எவ்வாறு ஒன்றுக்கொன்றுடன் இடைபடுவினை கொள்கின்றன என்பதை காட்டுகின்றது.

 • மேல் பகுதியில் பருப்பொருள் துகள்கள் காட்டப்பட்டுள்ளன: லெப்டான்கள் மற்றும் குவார்க்குகள். நடு பகுதியில் விசை-கடத்தி துகள்கள் காட்டப்பட்டுள்ளன: ஃபோட்டான், W - Z துகள்கள் மற்றும் குலுவான். கீழ் பகுதியில் தியரி மூலம் கணிக்கப்பட்டுள்ள, ஆனால் முழுமையாக அறியப்படாத ஹிக்ஸ் விசை-கடத்தி துகள் காட்டப்பட்டுள்ளது.
 • குலுவான்கள் குவார்க்குகளுடன் மட்டுமே இடைபடுவினை கொள்கின்றன. அவை குவார்க்குகளை இணைத்து அணுக்கருவை அமைக்கின்றன.
 • ஃபோட்டான்கள் பருப்பொருள் துகள்களுடன் இடைபடுவினை கொள்கின்றன.
 • ஹிக்ஸ் விசை-கடத்தி துகள்களுடன் இடைபடுவினை கொள்ளும் துகள்கள் அதன் நிறையை பெறுகின்றன. நீரினுள் நகரும் பொருட்கள் அதன் தடையை உணருவது போல், ஹிக்ஸ் விசை-கடத்தி துகள்களால் உருவான ஹிக்ஸ் புலத்தின் (ஃபோட்டான்கள் மின்புலம், காந்தபுலம் உருவாக்குவது போல்; கிராவிட்டான்கள் நிறையீர்ப்பு புலத்தை உருவாக்குவது போல்) தடையை அதனுடன் இடைபடுவினை கொள்ளும் துகள்கள் உணருவதையே நாம் நிறை என்கின்றோம்.
கீழே உள்ள படம், அடிப்படைத் துகள்களை கொண்டு நாம் காணும் உலகை விவரிக்கின்றது.

 • இடப்பக்கத்தில் பருப்பொருட்களின் ஒருங்கிணைப்பு காட்டப்பட்டுள்ளது. 2 மேல்-குவார்க்குகள் (மின்னூட்டம் = 2/3) மற்றும் 1 கீழ்-குவார்க்கு (மின்னூட்டம் = -1/3) இணைந்து ஒரு அலகு நேர்-மின்னூட்டம் கொண்ட புரோட்டானை (2/3 + 2/3 - 1/3 = 1) உருவாக்குகின்றது. 1 மேல்-குவார்க்கு மற்றும் 2 கீழ்-குவார்க்குகள் இணைந்து நடுநிலை-மின்னூட்டம் கொண்ட நியூட்ரானை (2/3 - 1/3 - 1/3 = 0) உருவாக்குகின்றது. வெவ்வேறு எண்ணிக்கையில் புரோட்டான்களும், நியூட்ரான்களும் இணைந்து பலவகை அணுகருக்களும், அதனை சுற்றி எலக்ட்ரான்கள் கொண்டு அணுக்களும் உருவாகின்றன. அணுக்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாகின்றன. நட்சத்திரங்கள், கருங்குழிகள் (Black holes), கோள்கள், மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்கள் என அணைத்தும் அணுக்களாலும், அதன் மூலக்கூறுகளாலும் அமைக்கப்பட்டவை!
 • வலப்பக்கத்தில் விசைகளின் ஒருங்கிணைப்பு காட்டப்பட்டுள்ளது. குலுவான்களின் இடைபடுவினைகளை குவாண்டம் குரோமோ-இயக்கவியல் (Chromo-dynamics) கொண்டு விளக்கப்பட்டுள்ளது. ஃபோட்டான்களின் மின்காந்தம், குவாண்டம் மின்-இயக்கவியல் (Electro-dynamics) கொண்டு விளக்கப்பட்டுள்ளது. மின்காந்தம் மற்றும் அணுக்கரு-வலுவற்ற-விசையை ஒருங்கிணைத்த மின்-வலுவற்ற (Electro-weak) தியரியை கொண்டு விளக்க முடியும். மின்-வலுவற்ற தியரியை, குரோமோ-இயக்கவியலுடன் ஒருங்கிணைத்து பெரிய-ஒருங்கிணைப்பு (Grand unified) தியரியை கொண்டு விளக்க முடியும். கடைசியாக, பெரிய-ஒருங்கிணைப்பு தியரியை நிறையீர்ப்புடன் (கிராவிட்டான்) இணைத்து ஒரு ஒருங்கிணைந்த, அணைத்திற்குமான ஒன்றுபட்ட தியரியை (Theory of everything) உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட முழுமையான தியரி பல்வேறு காரணங்களால் இன்னும் அகப்படாமலே உள்ளது.
குவாண்டம் இயக்கவியலுக்கு முன்பிருந்த இயற்பியலை செவ்வியல் இயக்கவியல் (Classical mechanics) என்கின்றோம். அதன் படி, நிறையீர்ப்பை (புவியீர்ப்பு) நியூட்டன் முதன் முதலில் எளிய சமன்பாட்டின் மூலம் விளக்கினார். பிறகு ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டை இணைத்து மேலும் அதை சரிபடுத்தினார் (பொது சார்பியல்; General relativity). நிறையீர்ப்பு ஒரு வலுவற்ற விசையாகும் (அணுக்கரு-வலுவற்ற-விசையை விட மிகமிக வலுவற்றது). ஒரு இரும்பு துண்டை இந்த மொத்த பூமியும் சேர்த்து கீழ்நோக்கி இழுத்தாலும், ஒரு சிறு காந்தத்தை கொண்டு தூக்கிவிட முடியும். நிறையீர்ப்பு அவ்வளவு வலுவற்று இருப்பதால், அதை சாதாரண பொருட்களுக்கிடையே, மனிதர்களுக்கிடையே நாம் உணர்வதில்லை. அதன் விளைவை பூமி, சூரியன், சந்திரன் போன்ற மிகப்பெரிய நிறையுள்ள பொருட்கள் மூலமே அறிந்து கொள்ள முடிகின்றது. அது மிக வலுவற்று இருந்தாலும், அந்த விசைதான் நம்மை பூமியில் நிலைப்படுத்துகின்றது; சந்திரன் பூமியை சுற்றிவர காரணமாகின்றது; கோள்கள் சூரியனை சுற்றிவர காரணமாகின்றது; நட்சத்திரங்கள் இணைந்த மண்டலங்கள் உருவாக காரணமாகின்றது. நிறையீர்ப்பை பொது-சார்பியல் கோட்பாடு துள்ளியமாக விளக்கினாலும், அது மிகச் சிறிய குவாண்டம் அளவில் எதையும் விளக்க முடியாமல் தோற்றுப் போகின்றது. பெரு வெடிப்பு (Big bang), கருங்குழிகள் (Black holes) போன்றவற்றை விளக்க நிறையீர்ப்பின் குவாண்டம் தன்மை (அதனால் அணைத்திற்குமான ஒன்றுபட்ட தியரி) அவசியமாகின்றது.

ஐன்ஸ்டீனின் E = mc^2 சமன்பாடு, ஆற்றலும் நிறையும் எப்படி தொடர்புடையவை என்பதை விளக்குகின்றது. நட்சத்திரங்களிலுள்ள அணுக்களில் சில அணுக்கருவின் நிறை ஆற்றலாக (அணுப் பிணைவு மூலம்) மாற்றப்படுகின்றது (ஃபோட்டான்கள் போன்ற அடிப்படைத் துகள்களாக – மின்காந்த கதிர்களாக - ஒளியாக). அவ்வாறே அணுமின் நிலையங்களும், அணுகுண்டும் (அணுப் பிளவு மூலம்) வேலை செய்கின்றது. நிறையிலிருந்து ஆற்றலை பெருவது போல், ஆற்றலை கொண்டு அடிப்படைத் துகள்களை உருவாக்க முடியும். பெரிய-ஹேட்ரான்-மோது உலை (Large Hadron Collider; LHC) போன்ற துகள் முடுக்கிகளில் புரோட்டான் போன்ற துகள்கள் அதி வேகமாக முடுக்கி ஒன்றுக்கொன்றுடன் மோதவிட்டு புதிய அடிப்படைத் துகள்கள் உருவாக்கப்படுகின்றன. இது போன்ற சோதனைகள் ஹிக்ஸ் விசை-கடத்தி துகள்கள் போன்ற தியரி மூலம் எதிர்ப் பார்க்கப்படும் துகள்கள் மற்றும் முற்றிலும் புதிய அடிப்படைத் துகள்களை கண்டறிய உதவுகின்றன (நிறையீர்ப்பு விசை-கடத்தி துகள்களான கிராவிட்டான்களை கண்டறிய, இன்றுள்ள துகள் முடுக்கிகளை விட மிகமிக…மிகமிக அதிக ஆற்றல் கொண்ட முடுக்கிகள் தேவை).

பெரு-வெடிப்பின் (Big Bang) மூலக்காரணம் பற்றி தெளிவற்ற கருதுகோள்கள் (இழை தியரி; String-Theory; மற்றும் அதன் தொடர்ச்சியான M-தியரி) மட்டுமே இருந்தாலும், நாம் காணும் உலகம் பெரு வெடிப்பிலிருந்து தான் உருவாகியது என்பதற்கு நல்ல தியரியும் அதற்கு பல நல்ல ஆதாரங்களும் உண்டு. 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அந்த பெரு-வெடிப்பு, நாம் காணும் உலகத்தில் உள்ள அனைத்திற்குமான ஆரம்பம் - இடம் (Space) மற்றும் காலக் கணை (Arrow of time) உட்பட! அடிப்படையில் காலம் இரு திசைகளிலும் செல்வதால், அதற்கு முன்பு என்ன என்று நாம் சாதாரணமாக உணருவது போல், 'பெரு-வெடிப்புக்கு முன்' என்பது இல்லை. மேலும், பொது சார்பியல் கோட்பாட்டின் படி, நாம் காணும் இடமும் (Space) மற்றும் காலக் கணையும் தோன்றியதே பெரு-வெடிப்பில் தான் எனும் போது, அதன் முன் என்ன என்ற கேள்வி பொருளற்றதாகி விடுகின்றது (இது பூமியின் வடதுருவத்திற்கு வடக்கே என்ன உள்ளது என்பது போன்றது).

எண்ட்ரோப்பி (Entropy) என்பது ஒரு அமைப்பில் உள்ள ஒழுங்கற்ற அல்லது சீரற்ற தன்மையை குறிக்கின்றது. வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதியின் படி, ஒரு மூடிய அமைப்பில் உள்ள எண்ட்ரோப்பி அதிகரிகரித்து கொண்டே இருக்கும். எண்ட்ரோப்பி அதன் அதிகப்பட்ச அளவை எட்டும் போது அந்த அமைப்பு முழு-ஒழுகற்ற அல்லது முழு-சீறற்ற சமநிலை காணும். இந்த சமநிலையிலிருந்து, பெரு-வெடிப்பு மிகக் குறைந்த எண்ட்ரோப்பியை (அல்லது ஒரு செறிந்த ஆற்றலை அல்லது அதிகமான ஒழுங்கை) உருவாக்கியது. அன்றிலிருந்து எண்ட்ரோப்பி அல்லது ஒழுங்கற்ற தன்மை நாம் காணும் உலகில் அதிரிகரித்து கொண்டே இருந்தாலும், இருக்கும் பயன்படு-ஆற்றலை கொண்டு அண்டங்கள், நட்சத்திரங்கள், கோள்கள், உயிர்கள் போன்ற சில ஒழுங்கானவை (இயற்கையின் அடிப்படை விசைகளினால்) தற்காலிகமாக உருவாக்கப்படுகின்றன. நாம் பெரு-வெடிப்பு என்ற மிக் குறைந்த எண்ட்ரோப்பி நிகழ்வின் பின்விளைவில் இருப்பதால், எண்ட்ரோப்பி குறைந்த அளவிலிருந்து அதிக அளவை நோக்கி செல்வதால், நாம் காலம் ஒரு திசையில் (கடந்த காலம் -> நிகழ் காலம் -> எதிர் காலம்) செல்வது போன்ற காலக் கணையை உணர்கின்றோம் (உலகத்தில் மேலே, கீழே என்று இல்லை என்றாலும், அதிக நிறையீர்ப்பு விசையுள்ள பூமியின் கட்டுபாட்டுக்குள் நாம் மேல், கீழ் உணருவது போல், மிக் குறைந்த எண்ட்ரோப்பி நிகழ்வின் பின்விளைவில் நாம் காலக் கணையை உணருகின்றோம்). நாம் காணும் உலகம் அதிகபட்ச எண்ட்ரோப்பியை நெருங்கும் போது, அதாவது முழு-ஒழுகற்ற சமநிலையை அடையும் போது காலக் கணையும் இல்லாது போகும்! அங்கு முன்பு பின்பு என்பதற்கு இடமில்லை! (அந்த நிலையை நோக்கி, நம் உலகம் தோராயமாக பாதி வாழ்நாள் கடந்துள்ளது).


அடிப்படை துகள்களை நாம் துகள் முடுக்கிகளில் உருவாக்குவது போல், பெரு-வெடிப்பில் நாம் காணும் உலகிலுள்ள அனைத்து அடிப்படை துகள்களும் உருவாகின (அதனுடன் எதிர்த் துகள்களும் உருவாகி இருக்க வேண்டும். நாம் முற்றிலும் அறியப்படாத காரணங்களால் நாம் காணும் உலகில் அவை காணவில்லை அல்லது எதிர்த் துகள்களை விட அதிக துகள்கள் உருவாகியிருக்க வேண்டும்). உலகம் விரிவடைந்து, சற்றே குளிர்ந்த பின், இந்த அடிப்படை துகள்கள் ஒன்றுக்கொன்றுடன் இடைபடுவினை புரிந்து ஒன்றுகூடி நாம் காணும் உலகம் உருவாகியது. (மேலும் அறிய: வரலாற்று படங்கள்)

ஒரு கனமான பொருளை மற்ற பொருட்கள் சுற்றிவரும் போது, அருகில் சுற்றும் பொருள் தூரத்தில் சுற்றும் பொருளை விட வேகமாக சுற்றிவர வேண்டும். உதாரணமாக, சூரியனை வெள்ளி பூமியை விட வேகமாகவும், பூமி செவ்வாயை விட வேகமாகவும் சுற்றுகின்றது. சூரியனின் நிறையீர்ப்பு விசையை விட மெதுவாக பூமி சுற்றினால், பூமி சூரியனுக்குள் இழுக்கப்பட்டுவிடும்; சூரியனின் நிறையீர்ப்பு விசையை விட மிக வேகமாக பூமி சுற்றினால், பூமி சூரிய மண்டலத்தை விட்டு விலகி சென்றுவிடும். இது நட்சத்திர-மண்டலங்களுக்கும் பொருந்தும். நட்சத்திர-மண்டலத்தின் மையத்தை (மையத்தில் செறியுள்ள மிகக்கணமான கருங்குழி உள்ளது) சுற்றிவரும் நட்சத்திரங்களின் வேகத்தை விஞ்ஞானிகள் கண்காணித்தனர். அப்பொழுது, வெளி-விளிம்பில் சுற்றிவரும் நட்சத்திரங்களின் வேகம் மையத்திற்கு அருகில் சுற்றிவரும் நட்சத்திரங்களின் வேகத்திற்கு இணையாக இருப்பதை கண்டறிந்தனர். மொத்தத்தில், நாம் காணும் (அறிந்த) பருப்பொருட்களை விட மிக அதிக பருப்பொருட்கள் அங்கு இருப்பது போல், நட்சத்திரங்கள் நட்சத்திர-மண்டலத்தை சுற்றி வருகின்றன (ஒருவேளை, நிறையீர்ப்பு பற்றி நம்முடைய அறிதல் மிக-மிகப்பெரிய அளவுகளில் தவறாக இருக்கலாம். ஆனால், பலவகைகளில் இது அப்படிப்பட்ட குறையல்ல என்றே தெரிகின்றது). நாம் அறியாத இந்த பருப்பொருட்களை இருண்ட-பொருட்கள் (Dark Matter) என்கின்றோம்; இவை நாம் அறியாத சில அடிப்படை துகள்கள். இருண்ட-பொருட்கள் சாதாரண பொருட்களுடன் மின்காந்த விசைகள் மூலமாக இடைபடுவினை கொள்வதில்லை. அவற்றை அவற்றின் நிறையீர்ப்பு புலத்தை மட்டும் கொண்டே அறியமுடிகின்றது.
பெரு-வெடிப்பு தியரி மற்றும் பொது-சார்பியல் கோட்பாடு உலகம் விரிவடைவதை (இடம் விரிவடைவதை) முன்னறிவிக்கின்றன. உலகிலுள்ள பருப்பொருட்களின் நிறையீர்ப்பினால், உலகம் மேலும் மேலும் குறைந்த வேகத்தில் விரிவடைய வேண்டும். ஆனால், உலகம் மேலும் மேலும் வேகமாக விரிவடைவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதற்கு நாம் அறியாத ஒரு ஆற்றல் காரணமாக இருக்கலாம். அதை நாம் இருண்ட ஆற்றல் (Dark Energy) எனலாம். இதை நாம் வெற்றிட ஆற்றலாக கருதலாம். இது ஒருபடித்தான, செறிவற்ற, நிறையீர்ப்பை தவிர மற்ற விசைகளுடன் இடைபடுவினை கொள்ளாத ஆற்றலாக இருக்க வேண்டும். இருண்ட ஆற்றல் செறிவற்று மிகச்சிறிய அளவில் இருந்தாலும், வெற்றிடமாக உள்ள இந்த பரந்த இடைவெளி முழுவதும் சீராக ஆட்கொண்டுள்ளதால், அது 74% பங்கை நம் உலகில் வகித்து, மிகப்பெரிய விளைவை ஏற்படுத்துகின்றது.

பொது-சார்பியல் கோட்பாடு (உயர்மட்டத்தில்), குவாண்டம் இயக்கவியல் (ஆழ்மட்டத்தில்) என வெற்றிகரமாக உறுதிசெய்யப்பட்ட தியரிகளை நாம் கண்டறிந்து இருந்தாலும், இன்னும் விளங்கப்படாத பல புதிர்கள் உள்ளன. பெரு-வெடிப்பின் மூலம் என்ன? பெரு-வெடிப்பிற்கு முன்பிருந்த (எந்த பொருளுள்ள முறையிலாவது) நிலை என்ன? இருண்ட-பொருள் மற்றும் இருண்ட-ஆற்றல் என்பவை என்ன? மிக ஆழமான புதிர் - இவைகளெல்லாம் ஏன் உள்ளது என்பதாக இருக்கலாம். ஒருவேளை, அணைத்திற்குமான ஒன்றுபட்ட தியரியை உருவாக்கும் போது, பெரும்பாலான புதிர்களை விளக்க முடியலாம். இவ்வாறு விளக்க வேண்டிய பல புதிர்கள் இருந்தாலும், அதில் ஒன்றுகூட உயிரை பற்றியோ, நம் வாழ்வை பற்றியோ, நம் அன்றாட அனுபவங்களை பற்றியோ இல்லை!

02 January 2011

அர்த்தங்களை தேடி

இந்த உலகம் மிகவும் விந்தையான ஒன்று தான். அதன் அர்த்தங்களை நாம் எப்படி தேடுங்கின்றோம் என்பதற்கான தேடலே இது. அதற்கு நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி இந்த உலகை உணர்ந்து கொள்கின்றோம், எப்படி கற்று கொள்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இது ஒரு தேடலின் தேடல்!

உணர்வுகள்

உயிர்கள் அதன் சுற்றுச்சூழலின் அர்த்தங்களை அறிந்து கொள்கின்றனவோ இல்லையோ, அனைத்து உயிர்களும் ஏதாவது ஒரு வகையில் அதன் சுற்றுச்சூழலை உணர்கின்றன. அப்படி பட்டவை மட்டுமே பிழைத்து இருக்க முடியும். பரிணாம வளர்ச்சி தொடர்பில் (Tree of Life) மேல் மட்டத்திலுள்ள விலங்குகள், பல நுணுக்கமான உணர்-உருப்புகளான புலன்களையும், மூளையையும் பரிணாம வளர்ச்சியில் பெற்றிருக்கின்றன. புலன்கள் சுற்றுச்சூழலின் பண்புகளை/காரணிகளை குறிப்பலைகளாக (மின்னலைகளாக) மாற்றி மூளைக்கு அனுப்புகின்றன. அந்த குறிப்பலைகளை கொண்டு மூளை சுற்றுசூழலை உணர்கின்றது.

[உணர்வு = சுற்றுச்சூழலின் ஒரு குறிப்பிட்ட பண்பை/காரணியை/தன்மையை அறிதல்]

மற்ற பல விலங்குகளை போல், மனிதனுக்கும் (குறைந்த பட்சம்) ஏழு உணர்வுகள் உண்டு.
 1. ஓளி-உணர்வு (பார்த்தல்; கண்)
 2. ஒலி-உணர்வு (கேட்டல்; காது)
 3. காற்றில்-கலந்துள்ள-சில-வேதிப்பொருட்களை-அறியும்-உணர்வு (மணம்; மூக்கு)
 4. நாக்கில்-படும்-சில-வேதிப்பொருட்களை-அறியும்-உணர்வு (சுவை; நாக்கு)
 5. அழுத்தத்தை-அறியும்-உணர்வு (தொடு-உணர்வு; தோல்)
 6. வெப்பநிலையை-அறியும்-உணர்வு (வெப்ப-உணர்வு; தோல்)
 7. புவியீர்ப்பு-விசையை-அறியும்-உணர்வு (சமன்நிலை-உணர்வு; காது; காதினுள்ளே உள்ள திரவத்தின் நிலையை கொண்டு அறியும் உணர்வு; இந்த சமன்நிலை-உணர்வை கொண்டு தான், நாம் மேல், கீழ் உணர்கின்றோம். அதை கொண்டே நடக்கவும், பிறகு ஓடவும், மிதிவண்டி ஓட்டவும் கற்றுக்கொள்கின்றோம்)
சில பறவைகளுக்கு உயர-உணர்வு (காற்றழுத்தத்தை பயன்படுத்தி) மற்றும் திசை-உணர்வு (புவியின் காந்தபுலத்தை பயன்படுத்தி) இருக்கலாம்.

ஒரு உணர்வின் திறன் அதனுடைய புலனின் திறனையும், அதனை அறியும் மூளையின் செயல்திறனையும் பொருத்து இருக்கும். உதாரணமாக, மனிதனின் காதினால் 20 முதல் 20,000 Hz வரையுள்ள அதிர்வெண் (Hz = ஒரு வினாடியில் நிகழும் அதிர்வுகள்) கொண்ட ஒலியலைகளை மட்டுமே அறிய முடியும். மற்ற சில விலங்குகளின் காதினால் இதைவிட குறைந்த அல்லது அதிக அதிர்வெண் ஒலியலைகளை அறிய முடியலாம். ஒரு உணர்விற்கான மூளையின் செயல்திறன் அந்த உணர்வின் குறிப்பலைகளை மூளை எந்த அளவு பயன்படுத்தி கற்று கொள்கின்றது என்பதை பொருத்தது. ஆனால் அதற்கு மூளையில் தேவையான அளவு இடமும் வேண்டும். உதாரணமாக, கண்பார்வை இழந்தவர்கள் ஒலியலைகளை பெரிதும் சார்ந்து இருப்பதாலும், பொதுவாக ஓளி-உணர்வுக்கு பயன்படும் மூளையின் இடம் பயன்படுபடுத்தப் படாமல் இருப்பதாலும், அவர்கள் மூளையின் ஒலி-உணர்வு செயல்திறன் அதிகமாக இருக்கும்.

கற்றல்

மூளையின் கட்டமைப்பு கணினியின் கட்டமைப்பிலிருந்து மாறுபட்டு இருந்தாலும், மூளை கணினி போன்று செய்திகளை/குறிப்பலைகளை பகுத்தாயும் ஒரு அமைப்பு. மூளை என்பது நரம்பணுக்களால் (Neurons) பிணையப்பட்ட வலை (Neural Network). மூளையின் நரம்பணுக்கள் ஒன்றுக்கொன்று பல்வேறு வகையில் இணைந்து நரம்பணு-வலைச்சுற்றுக்களை (கணினியின் மின் சுற்றுகளை போல்) அமைக்கின்றன. இந்த நரம்பணு-வலைச்சுற்றுக்களைப் பொருத்து மூளையின் செயல்முறைகள் இருக்கும். மூளையின் நரம்பணு-வலைச்சுற்றுக்கள் இரண்டு வழிகளில் அமைக்கப்படுகின்றன.

பரிணாம வளர்ச்சி தொடர்பில் கீழ் மட்டதிலுள்ள விலங்குகளின் மூளையின் நரம்பணு-வலைச்சுற்றுக்கள் பிறப்பிலே உருவாக்கப்படும் (கால்கள், வாய், மூக்கு போன்றவை பிறப்பிலே உருவாக்கப்படுவது போல்). அதாவது அதற்கேற்ற மரபணுக்கள் (ஜீன்கள்) பரிணாம வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இந்த முறை மூலம் எளிய சிக்கலற்ற செயல்முறைகள் மட்டுமே எளிதாக பரிணாம வளர்ச்சி அடைய முடியும். ஆதலால் அந்த விலங்குகளின் நடத்தைகளும் எளியமையாகவும் நேரடியாகவும் இருக்கும். உதாரணமாக எறும்புகள், தவலைகள், முதலைகள், பலவகை பறவைகள் கூட சில எளிய செயல்முறைகளை கொண்டே இயங்குகின்றன. இப்படி பெறப்படும் மூளையின் செயல்முறையை நாம் இயலுணர்வு/உள்ளுணர்வு (Intuition) என்கின்றோம்.

இந்த முறையை தவிர, பரிணாம வளர்ச்சி தொடர்பில் மேல் மட்டதிலுள்ள விலங்குகள் சுற்றுசூழலிலிருந்து பெறப்படும் அனுபவத்திலிருந்து அதாவது புலன்கள் மூலமாக வரும் குறிப்பலைகளை கொண்டு நரம்பணு-வலைச்சுற்றுக்களை அமைக்கின்றன. இதை நாம் கற்றல் என்கின்றோம். இந்த முறையில், பிறக்கும் போது மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் வெறுமையாக இருக்கும் (நரம்பணுக்கள் இருக்கும்; ஆனால் முறையான இணைப்புகள் இருக்காது). ஆனால் மூளை பலவிதமான கற்கும் உத்திகளை இயலுணர்வாக கொண்டிருக்கும். சிக்கலான, மாறி கொண்டே இருக்கும் சுற்றுச்சூழலை கற்றுக்கொள்ளவும், புதிய திறமைகளை கற்றுகொள்ளவும் இந்த முறை உதவும். ஆனால் கற்று கொள்வதற்கு காலமும் ஆற்றலும் தேவை. அதனால், இம்முறையை கொண்ட விலங்குகளின் குழந்தை பருவம் நீண்டதாக இருக்கும். மேலும், அதற்கு தேவையான பெற்றோர் பாசமும் கூடவே பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும். பிறந்த சில மணிநேரத்தில் நடக்கும் மான்குட்டியை ஓப்பிடும் போது, ஒரு மனித குழந்தை நடக்க வருடங்களை எடுத்துக் கொள்ளும்.

நாம் பிறக்கும் போது நமது மூளை சில இயலுணர்வுகளுக்கான (சில எளிய செயல்முறைகள் மற்றும் கற்றும் உத்திகள்) நரம்பணு-வலைச்சுற்றுக்களை கொண்டும், பெரும்பான்மையான பகுதி வெறுமையாகவும் இருக்கும். நாம் வளரும் போது, நம் புலன்களிலிருந்து பெறப்படும் குறிப்பலைகளை கொண்டு, மூளை அதன் கற்கும் உத்திகளை கொண்டு புதிய நரம்பணு-வலைச்சுற்றுக்களை உருவாக்கும். வெளிப்படையாகத் தெரிவதால், நாம் குழந்தைகள் நடக்க, பேச கற்றுக்கொள்வதை கவனிக்கின்றோம். வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அவ்வாறே நாம் பார்க்கவும், கேட்கவும், நுகரவும், சுவைக்கவும், உணரவும், அறியவும் கற்றுக்கொள்கின்றோம். இப்படி கற்றுக்கொண்டவற்றை சுய-அறிவு/பொது-அறிவு (Commonsense) என்கின்றோம். இது இயலுணர்வாக தன்னிச்சையாக நடக்கும் ஒன்று. இவ்வாறே குரங்கினங்கள் உட்பட பலவகை மேல்மட்ட விலங்குகள் கற்றுக்கொள்கின்றன. இதை தவிர, மனிதன் கற்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ளும் திறனையும் கொண்டுள்ளான். இப்பொழுது அவனால் இயலுணர்வாக உள்ள கற்கும் உத்திகளை தாண்டி புதிய கற்கும் உத்திகளையும் கற்க முடியும். இப்பொழுது அவனால் தன்னிச்சையாக கற்றுக்கொள்வதை தாண்டி வேண்டுமென்றே ஆராய்ந்து கற்றுக் கொள்ள முடியும். ஆனால் அது தன்னிச்சையாக (எளிதாக) வராது. அப்படி மனிதன் கண்டறிந்த சில செயல்முறைகள் தான் தத்துவம் (Philosophy) மற்றும் அறிவியல் (Science).

அறிவியல்

ஒரு கல்லை மேலே எறி. அது மேலே போகும்போது மேலும் மேலும் வேகமாக சென்றாலோ, அல்லது கீழே வரும்போது மேலும் மேலும் மெதுவாக வந்தாலோ, அல்லது திடீரென கோணல்மாணலாக சென்றாலோ எப்படி இருக்கும்? நாம் ஆச்சர்யம் அடைவோம். மேலே எறியப்பட்ட கல், மேலே போகும் போது மேலும் மேலும் மெதுவாகவும், கீழே வரும்போது மேலும் மேலும் வேகமாகவும் செல்ல வேண்டும். மேலும், எறியப்பட்ட கோணத்திற்கு ஏற்ப, அது ஒரு வளைவு பாதையை மேற்கொள்ளும். ஒவ்வொரு குழந்தையும் வளரும் போது அதன் அனுபவத்திலிருந்து இதை கற்றுக்கொள்கின்றது. வேகம், முடுக்கம், விசை, புவியீர்ப்புவிசை என எந்தவித ஆழ்ந்த புரிதலும் இல்லை என்றாலும், எறிந்த கல் சற்றே வேறுவிதமாக நடந்து கொண்டால், உடனே ஏதோ ஒன்று முரணாக இருப்பதை உணர்கின்றோம். ஆனால், நாம் வாழும் சுற்றுச்சூழலில், மேலே எறிந்த கல் கீழே வரவே வராது என்றால், அப்படியே நமது மூளையும் கற்று கொண்டிருக்கும். நாம் எப்படிப்பட்ட சுற்றுச்சூழலில் வாழ்கின்றோமோ அதனுடைய பண்புகளை, காரண-காரியங்களை நமது மூளை கற்றுக்கொள்கின்றது. இப்படி, நாம் வளர வளர, நமது மூளை பலவகையான அறிதல்களை கற்று, சேகரித்து கொள்கின்றது. இதை சுய-அறிவு/பொது-அறிவு என்கின்றோம். இது முக்கியமான பல அறிதல்களை கொடுத்தாலும், எந்தவித ஆழ்ந்த தெரிதலையோ, புரிதலையோ அது தருவதில்லை; மேலும் அது பலநேரம் நம்மை தவறான அறிதல்களுக்கும் இட்டுச் செல்கின்றது. அப்படித்தான், நாம் உருண்டையான பூமியை தட்டையாக நினைக்கின்றோம்; அப்படித்தான், பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றிவரும்போது, சூரியன் நம்மை சுற்றி வருவதாக நினைக்கின்றோம். அப்படித்தான், இயற்கைத்-தேர்வு-முறையில் (Natural Selection Process) பரிணாம வளர்ச்சிப் பெற்ற உயிர்களை யாரோ படைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.

ஆனாலும், பொது அறிவை தாண்டி, மனிதன் பல விசயங்களை ஆழமாக யோசித்தும், விவாதித்தும் இருக்கின்றான். இப்படிப்பட்ட அறிவு தேடலை தத்துவம் என்கின்றோம். இது பலவித புதிய சிந்தனைகளையும், யோசனைகளையும் உருவாக்கியது. முதல்-காரணகர்த்தா (Prime Mover) (அனைத்து காரண-காரிய விளைவுகளின் சங்கிலி தொடரில் முதல் மூலக் காரணம்) மற்றும் ஜீனோ முரண்பாட்டுண்மை (Zeno’s Paradox) (இயக்கம் எப்படி சாத்திமில்லா ஒன்று) போன்றவை அப்படி உருவான சிந்தனைகள் தான். கடவுள் என்ற கோட்பாடும் அப்படி உருவான ஒரு சிந்தனை தான். பல தத்துவ மேதைகள் அதை ஆழமாக அலசினார்கள். அனைத்துக்கும் மூல காரகர்த்தா கடவுள் என்றால், கடவுளின் காரணகர்த்தா யார்? தத்துவ தருக்க அடிப்படையில் பார்த்தால், ஒரு புதிரை விளக்க மற்றொரு புதிரை பயன்படுத்தும் முரன்பாடுதான் கடவுள் கோட்பாடு என்பதை அறிய முடியும். ஆனாலும் பலர் கடவுள் கோட்பாட்டை எந்த காரண-காரிய தருக்கங்களை எல்லாம் தாண்டி நம்பினாலும், அதை தத்துவ அளவில் விளக்க முற்பட்டனர். தத்துவத்தின் ஒரு துணைப்பிரிவாக கருதப்படக் கூடிய, இந்த தேடலை இறையியல் (Theology) என்கின்றோம். சில காலத்திற்கு பிறகு, தத்துவம் என்ற அறிவை தேடும் செயல்முறை, அதன் திறனின் எல்லையை எட்டியது; அதற்கு மேல் ஆழமாகவோ தெளிவாகவோ செல்ல முடியாமல், வாழ்கையை பற்றியோ, நாம் வாழும் உலகைப் பற்றியோ எந்த அழ்ந்த அறிவையும் தரமுடியாமல் வெறும் முன்னும் பின்னுமான விவாதித்திலே நின்று போனது.

மேலிருந்து கீழே போட்டால், ஒரு கனமான பொருள் அதைவிட குறைந்த கனமுள்ள பொருளை விட வேகமாக பூமியை அடையும் என்று நமது பொதுஅறிவுக்கு படலாம். கலிலியோ முதன்முதலில் இந்த இரண்டு பொருட்களும் ஒரே நேரத்தில் பூமியை அடையும் என்பதை சோதனை மூலம் செய்து காட்டினார். சந்திரன், கோள்கள், சூரியன், நட்சத்திரங்கள் பற்றி தத்துவங்களையும், கற்பனை கதைகளையும் சொல்வதை விடுத்து, தன்னுடைய தொலைநோக்கி கொண்டு அவற்றை கண்காணித்தார். வெளிச்சார்புடனான பரிசோதனை செய்தல், சரிபார்த்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை சுட்டி காண்பித்தார். இவ்வாறு கலிலியோ மற்றும் பலர் கண்காணித்தல், கோட்பாடு இயற்றுதல், பரிசோதனை செய்தல், சரிபார்த்தல் முதலியவற்றை கொண்ட ஒரு செயல்முறையை உருவாக்கினர். இப்படிப்பட்ட அறிவு தேடலை அறிவியல் என்கின்றோம். இது உயிர்களையும், அவற்றின் 400 கோடி வருட பரிணாம வளர்ச்சியையும், நாம் புரிந்து கொள்ள உதவியது. கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களையும், அவை ஒவ்வொன்றிலும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் அடக்கிய நமது அண்டத்தையும், அதன் 1400 கோடி வருட வளர்ச்சியையும் நமக்கு காட்டியது.

அறிவியல் என்பது வெளிசார்புடனான (Objectivity) ஒழுங்கு முறையில் அறிவைத் தேடும் ஒரு செயல்முறை. நமது மூளை எப்படிப்பட்ட திறன்களுடனும், குறைகளுடனும், வரம்புகளுடனும் பரிணாம வளர்ச்சியில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்து, நாம் வாழும் இந்த சிக்கலான உலகை ஆழ்ந்த அறிவுடன் புரிந்து கொள்ள நாம் கண்டறிந்த சிறந்த உத்திதான் அறிவியல். இதைக் கொண்டு உயிரை படிக்கலாம் (உயிரியல்), அண்டத்தை படிக்கலாம் (அண்டவியல்), மனதை படிக்கலாம் (உளவியல்), கலைகளை படிக்கலாம், மதங்களை படிக்கலாம், ஏன் அறிவியலையும் படிக்கலாம் (அறிவியலைப் பற்றிய அறிவியல்). ஆனால் நமக்கு அனைத்து விடைகளையும் உடனடியாக தர அறிவியல் ஒன்றும் மாயவித்தை அல்ல. அதற்கு காலமும், உழைப்பும் தேவை.

அறிதல்

மனிதனின் மூளை எப்படி பரிணாம வளர்ச்சியில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்தும், பல தலைமுறைகளாக நாம் கற்ற அனுபவத்திலிருந்தும் பல முறைகளில் நாம் எந்த ஒன்றையும் அறிந்து கொள்கின்றோம். இப்படி அறிந்தவற்றின் தொடர்புகளை கொண்டு நாம் அவற்றின் அர்த்தங்களை காண விளைகின்றோம்.
 • இயலுணர்வு/உள்ளுணர்வு (Intuition) : பிறப்பிலே நம்முடைய மூளை பல செயல்முறைகளை கொண்டுள்ளது. இவை பரிணாம வளர்ச்சியில் செதுக்கப் பட்டவை.
 • சுய-அறிவு/பொது-அறிவு (Commonsense): புலன்கள் மூலமாக வரும் குறிப்பலைகளை கொண்டு, அதாவது நம் உலக அனுபவத்திலிருந்து, நம்முடைய மூளை தன்னிச்சையாக கற்று, காரண-காரியங்களை பற்றிய பலவிதமான அனுமானங்களை சேகரிக்கின்றது. இதில் மிகக் குறிகிய புரிதலே இருக்கும்.
 • தத்துவம் (Philosophy): உள்ளுணர்வு மற்றும் பொது-அறிவில் பெறப்பட்ட செயல்முறைகளை விரிவுபடுத்தி நிறுவப்பட்ட நம்பிக்கை அமைப்பு. அதனால், இது நம் தற்சார்பு நம்பிக்கைக்கு (Subjectivity) உட்பட்டது.
 • இறையியல் (Theology): தத்துவத்தின் ஒரு துணைப்பிரிவான இது, ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை ஒருதலையாக சார்ந்த அமைப்பு. இது மிகவும் தாராளமாக (Liberal) ஏற்றுக் கொள்ளும் நம்பிக்கை அமைப்பு. அதனால் இது வெகுவாக நம் தற்சார்பு நம்பிக்கைக்கு உட்பட்டது.
 • அறிவியல் (Science): இது "எந்த ஒரு விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார்" என்பது போன்ற மிகவும் கட்டுபாடான (Conservative) நம்பிக்கை அமைப்பு. இதற்கு கண்காணித்தல், கோட்பாடு இயற்றுதல், பரிசோதனை செய்தல், சரிபார்த்தல் போன்றவை அவசியம். நம்முடைய உள்ளுணர்வு மற்றும் பொதுஅறிவின் தடைகளை தாண்டி ஒரு வெளிசார்புடனான அறிவை பெற இது ஒரு வழியை காட்டுகின்றது.