28 November 2009

என் மேல் விழுந்த

Where were you?

Oh,
The single drop of rain that has landed on me,
Where were you all these days?
The lovely poem that I have written today,
Where were you all these days?
The gentle breeze that has awaken me,
Where were you all these days?
The melodious music that has mesmerized me,
Where were you all these days?
Like life trapped inside the body...
I was within you, all these days!


என்ன பாடல் என்று தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். இது வைரமுத்துவின் 'மே மாதம்' பாடல் வரிகள். எனக்கு முழு திருப்தி இல்லையென்றாலும், இது என்னுடைய ஆங்கில மொழிபெயற்பு. இதை நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயற்க பலமுறை முயன்றுள்ளேன். நீங்கள் வேறுமாதிரி முயற்சித்தால்/யோசித்தால், இங்கே பகிர்ந்து கொள்ளவும்.

என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்




06 November 2009

வண்ண ஆன்மீக உலகம்

நிறம் என்பது என்ன? இது சாதாரணமாக கேள்வியாக தோன்றிலும், அதன் தேடலில் இயற்கையின் பல ஆழமான இரகசியங்கள் உண்டு. ஒளி என்பது என்ன? ஒரு பொருளை அறிவது எப்படி? நாம் பார்ப்பது எப்படி? போன்ற பல கேள்விகள் இதில் ஒழிந்துள்ளன

ஒளி என்பது என்ன?

கடந்த நூற்றாண்டின் பெரும்பான்மையான இயற்பில் ஆராய்ச்சிகள் ஓளியை சார்ந்தே இருந்தது. ஓளியை பற்றிய இந்த ஆராய்ச்சிகளின் விடை தான் இயற்கையின் அடிப்படை வேக-வரம்பு, மேக்ஸ்வெல் மின்காந்த-அலை (Electromagnetic Wave) சமன்பாடு, ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் (Relativity), குவாண்டம் இயக்கவியல் (Quantum Mechanics), பொருள்-ஆற்றல் சமன்பாடு E=mc2, முதலியவை!

ஆக, ஒளி என்பது என்ன? மேக்ஸ்வெல் சமன்பாட்டின் படி, அது மின்காந்த அலை. இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமானால், குவாண்டம் இயக்கவியலின் படி, அது ஃபோட்டான் (Photon) எனப்படும் ஒரு விசை (Force) அடிப்படைத் துகள் (Elementary Particle) (http://sites.google.com/site/artificialcortext/others/elementary-particle).

ஒளிக்கு பல பண்புகள் உண்டு. அதில் முக்கியமானவை: செறிவு (Intensity), அதிர்வெண் அல்லது அலைநீளம் (Frequency or wavelength), முனைவாக்கம் (Polarization), முதலியவை. ஒளியின் அதிர்வெண் மிகச்சிறியது முதல் மிகப்பெரியது வரை இருக்கலாம். ஓளி அதன் அதிர்வெண் அடிப்படையில் பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. கீழே உள்ள படம் அதை அதிர்வெண் மற்றும் அலைநீளம் என இரண்டு அளவுகோல்களிலும் விளக்குகின்றது. ரேடியோ மற்றும் பார்க்கக்கூடிய-ஒளி-பகுதி பெரிதுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. இப்படி பல பண்புகள் ஒளிக்கு இருந்தாலும், நிறம் என்பது உண்மையில் ஒளியின் பண்பல்ல!



ஒரு பொருளை அறிவது எப்படி?

எந்த ஒரு பொருளைப் பற்றி (வடிவம் என்ன?, எங்கே உள்ளது?, அதன் வேகம் என்ன?) அறிவேண்டுமானால், அதை விட மிகச்சிறிய துகள்களை அல்லது அலைகளை அனுப்பி, அதிலிருந்து பிரதிபலித்த துகள்களை/அலைகளை கொண்டு கணிக்கலாம். அது எவ்விடங்களிலிந்து பிரதிபலிப்பாகியுள்ளது, பிரதிபலிப்பாகி வர ஆன நேரம், எப்படி பட்ட துகள்கள் பிரதிபலிப்பாகி உள்ளது, துகள்களின் பண்புகள் ஏதாவது மாறியுள்ளதா என்ற பல்வேறு காரணிகளை கொண்டு கணிக்கலாம். உதாரணமாக, எலக்ட்ரான் நுண்ணோக்கியில் எலக்ட்ரான் துகள்களும், ரேடாரில் ஒளியும், சோனாரில் ஒலியலைகளும் பயன்படுத்தப்படுகின்றது. இது போலவே வௌவால்கள் ஒலியலைகளை பயன்படுத்தப்படுகின்றன.

பார்ப்பது என்பது உலகிலுள்ள பொருட்களை அறிவது தான். அதற்கு நாம் ஒளியை பயன்படுத்தினாலும், அவற்றை நம்மிடமிருந்து அனுப்புவதில்லை. அதனால் வெளிபுற ஒளி மூலம் (சூரிய ஓளி) தேவைப்படுகின்றது. நாம் ஒளியை நம்மிடமிருந்து அனுப்பாததால், பிரதிபலிப்பாகி வர ஆன நேரத்தை கணிக்க முடியாது; எனவே பார்க்கும் பொருளின் தூரத்தையும் கணிக்க முடியாது. இதனால், நமக்கு இரண்டு கண்கள் தேவைப்படுகின்றது. பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளி அலைகள், இரு கண்களுக்கும் வெவ்வேறு கோணத்தில் வருவதை கொண்டு தூரத்தை கணிக்கலாம்.

கண்கள் ஒளியலைகளை உணரும் உருப்புக்கள். அவ்வலைகளை மின்னலைகளாக மூளைக்கு அனுப்புகின்றன. அவற்றைக் கொண்டு, மூளை பல்வேறு வகையான பொருள்களை அறிகின்றன. இரு கண்களுக்கும் வெவ்வேறு கோணத்தில் வரும் ஒளியலையின் வித்தியாசங்களை கொண்டு, பொருட்களின் தூரங்களையும், அவை நகரம் வேகங்களையும் மூளை கணிக்கின்றது. ஒளியலையின் செறிவு, அதிர்வெண் போன்ற பண்புகளை கொண்டு மறைமுகமாக பொருட்களின் பண்புகளையும் மூளை கணிக்கின்றது. இப்படி கணிக்கப்பட்ட செய்திகளை, மூளை எண்களாக அட்டவணையிட்டு காட்டுவதில்லை; அதற்கு பதில் வண்ணமயமான முப்பரிமாண (3D) மாதிரிகளாக காட்டுகின்றது.

முப்பரிமாண (3D) படம் எப்படி செயல்படுகின்றது?

ஒரு காட்சியை நம் இரு கண்கள் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பது போல், இரண்டு புகைப்படக் கருவிகள் (Cameras) கொண்டு படம் எடுக்க வேண்டும். இப்பொழுது முதல் புகைப்படக் கருவியின் படத்தை ஒரு கண்ணிற்கும், மற்றொன்றை அடுத்த கண்ணிற்கும் தனித்தனியாக கொடுத்தால் மூளை அதை முப்பரிமாணத்தில் (3D) காட்டும். ஆனால் திரையரங்கில் ஒரே திரையில் தான் இரண்டு புகைப்படக் கருவிகளின் படமும் திரையிட படுகின்றது. இதனால், இரண்டு படங்களும் இரண்டு கண்களும் செல்லும். இதை எப்படி தனிதனியே அனுப்பது? இதற்கு நம் மூளை பயன்படுத்தாத, ஒளியின் மற்றொரு பண்பான முனைவாக்கம் (Polarization) பயன்படுத்தப்படுகின்றது. முதல் புகைப்படக் கருவியின் படத்தை செங்குத்து-முனைவாக்கத்திலும், இரண்டாவது புகைப்படக் கருவியின் படத்தை கிடைமட்ட-முனைவாக்கத்திலும் திரையிட வேண்டும். ஒரு கண்ணிற்கு செங்குத்தாகவும், மற்றொரு கண்ணிற்கு கிடைமட்டமாகவும் முனைவாக்கம் செய்யப்பட்ட கண்ணாடி அணிந்து பார்க்க வேண்டும். இப்பொழுது இரண்டு படங்களும் தனித்தனியாக இரண்டு கண்களுக்கும் செல்வதால் மூளை அதை முப்பரிமாணத்தில் (3D) காட்டும்.



நாம் பார்ப்பது எப்படி?

எந்த ஒன்றின் தகவல்களை வேறொரு முறையில் குறிப்பதை மாதிரி-குறியீடு எனலாம். உதாரணமாக, ஒலியை (பேச்சை அல்லது பாடலை) பதிவு-தகட்டில் (Record-Disk) சேமிக்கும் போது, பதிவு-தகட்டில் உள்ள மேடு-பள்ளங்கள் அவ்வொலியின் மாதிரி-குறியீடு. அதையே காந்த-தகட்டில் (Magnetic-Disk) சேமிக்கும் போது, அதன் காந்த-புலன்-வேறுபாடுகள் அவ்வொலியின் மாதிரி-குறியீடு. அதையே எண்மயப்படுத்தி (Digitize) கணினியில் சேமித்தால், அந்த கோப்பு (File) அவ்வொலியின் மாதிரி-குறியீடு. டி.என்.ஏ (DNA) நம் உடலின் மாதிரி-குறியீடு. இது போலவே, மூளை ஒவ்வொன்றிக்கும் மாதிரி-குறியீடுகளை உருவாக்குகின்றது. இவ்வாறே, கண்களுக்கு வரும் ஒளி வண்ணமயமான முப்பரிமாண (3D) தோற்றமாகின்றது; அதில் ஒளியலையின் செறிவை வெளிச்சமாகவும், அதிர்வெண்களை நிறங்களாகவும் குறிக்கப்படுகிறது. (இது போன்ற மாதிரி-குறியீடுகள் மற்ற உணர்வுகளுக்கும் உண்டு)

புகைப்படக் கருவி (Camera) ஒளியலை அப்படியே படம் பிடிகின்றது. அது பொருட்களை அறிவதில்லை. ஆனால், பார்ப்பது என்பது பொருட்களை, அதன் பண்புகளை அறிவது. அதை மூளை கற்க வேண்டும். நடப்பது, பேசுவது போன்றவை வெளியீடு (Output) விடயங்களாக இருப்பதால், நாம் கற்பது எளிதாக தெரிகின்றது. கேட்பது, பார்ப்பது போன்றவை உள்ளீடு (Input) விடயங்களாக இருப்பதால், நாம் சிறுவயதில் கற்பது எளிதாக தெரிவதில்லை. ஆனால், அவற்றையும் மூளை சிறுகச்சிறுக படிப்படியாக கற்றுக் கொள்கின்றது.

உலகத்திலுள்ள பொருட்களை அறிய, அதிலிருந்து மூளை அதன் மாதிரிகளை படிப்படியாக மூளையில் உருவாக்குகின்றது. அந்த மாதிரிகளை படிப்படியாக உருவாக்க, ஒவ்வொரு படியிலும் அதற்கு முன் மூளையில் உள்ள மாதிரிகளை, மூளை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு மூளை மாதிரிகளை உருவாக்க வேண்டும் - இது மாதிரிகளுக்கான மாதிரி! மேலும் மாதிரிகளுக்கான மாதிரிகளுக்கான மாதிரி வேண்டும் - இது ஒரு முடிவில்லா தோடர்ச்சி! இப்படி தோடர்ச்சியாக மாதிரிகளை உருவாக்காமல், மூளை ஒரு மாதிரியை அதன் மாதிரியாக பயன்படுத்தலாம் - இது ஒரு வினோதமான சுழற்ச்சி. இது கணினியின் தன்-மீள்சுருள்-நிரல்களை (Self Recursive Programs) ஒத்து இருக்கலாம்.

இப்படி மூளை தன் மாதிரிகளை தானே நோக்குவதையே (தன்-மீள்சுருளாக), நாம் பார்ப்பதாக உணருகின்றோம். இது தான் நனவுநிலையின் (Consciousness) அடிப்படை. இந்த நனவுநிலை தான், இன்ப உணர்வு, வலி உணர்வு, காதல் உணர்வு, சுய உணர்வு என நம்முடைய அனைத்து உணர்வுகளுக்கும் காரணம். இந்த நனவுநிலை தான், காதுகளுக்கு வரும் ஒலியை சத்தமாகவும், நாக்கிற்கு வரும் சில வேதியல்-மூலக்கூறுகளின் செய்தியை சுவையாகவும், மூக்கிற்கு வரும் சில வேதியல்-மூலக்கூறுகளின் செய்தியை மணமாகவும், உடலின் அழுத்தங்கள் பரிசமாகவும் உணரவைக்கின்றன! இந்த உணர்வுகளுக்கு வெளி உலக தூண்டல்கள் அவசியம் இல்லை. மூளையால் அதன் மாதிரி-குறீயீடுகளை கொண்டு, எந்த உணர்ச்சிகளையும் நேரடியாக உருவகப்படுத்த முடியும். அப்படி தான் நாம் கனவுகளில் பார்க்கின்றோம்.

இது மூளை உருவாக்கும் ஒருவகையான வினோத மெய்நிகர் உலகம் (Virtual World)! இந்த மெய்நிகர் உலகில் தான், நம்முடைய அனைத்து உணர்வுகளும் உள்ளது. உண்மையில் சிகப்பு, பச்சை, ஊதா என்று நிறங்கள் வெளி உலகில் எங்கும் இல்லை! சத்தம், சுவை, மணம் என்ற எதும் வெளி உலகில் இல்லை! பேரின்பம், வலி, வேதனை என்ற எதும் வெளி உலகில் இல்லை. இவையெல்லாம் மூளையின் வினோத உலகத்தின் லீலைகள்! வெளி உலகில் நான் ஒரு மனித விலங்கு. மூளையின் இந்த வினோத உலகிலோ நான் ஒரு ஆன்மா!

02 November 2009

நம்பிக்கைகளின் மூலம்


கார்-எஞ்சின் எப்படி வேலை செய்கின்றது என்பதை அறியாமல், நாம் கார் ஓட்ட கற்று கொள்ள முடியும். அது போலவே, எப்படி நம்-மூளை கற்கின்றது...சிந்திக்கின்றது என்பதை அறியாமல் நாம் கற்று கொள்கின்றோம்...சிந்திக்கின்றோம். மூளை என்பது ஒரு கற்று கொள்ளும் எந்திரம். சிறுவயது முதல், அது எப்படிபட்ட சூழலில் வளர்கின்றதோ, அதன் படியே அது படிப்படியாக சிறுகச்சிறுக கற்று கொள்கின்றது. இவ்வாறே நாம் கேட்க, பார்க்க, பேச, நடக்க, ஓட, சிந்திக்க, பகுத்து-அறிய என பலவற்றை கற்று கொள்கின்றோம். நாம் எப்படி கற்று கொள்கின்றோம் என்பதை இரு முக்கிய காரணிகள் நிர்ணயிக்கின்றன: நம் ஜீன்கள், நாம் வளர்ந்த/வாழும் சூழல். இதில் இரு முக்கிய சூழல்கள் உள்ளன: சிறுவயதில் நெருங்கிய பந்தங்கள், பிற்பாடு நாம் வாழும் சமூகம். சிறுவயதில் பதிந்து போனவை பசுமரத்தில் அடித்த ஆணி போன்றது தான்; பிறகு மாற்றுவது எளிதல்ல.

மூளை எப்படி கற்று கொள்கின்றது? மூளை என்பது நரம்பு-செல்கள் (Neurons) பிணையப்பட்ட வலை (Neural Network). நாம் கற்கும் போது, புதிய நரம்பு-செல்-இணைப்புகளை உருவாக்கியோ அல்லது இணைப்புகளின் பலத்தை கூட்டியோ/குறைத்தோ நம் மூளை கற்று கொள்கின்றது. இவ்வாறு, புலன்கள் மூலமாக செல்லும் உலக வியசங்களை கொண்டு, மூளை மாதிரிகளை (Models) உருவாக்குகின்றது. இதில் ஒரு மாதிரியின் பலம் அல்லது நம்பிக்கை அதன் நிகழ்தகவை பொருத்தது. நாம் கற்று கொள்ளும் போது, அந்த மாதிரியின் நம்பிக்கை-நிகழ்தகவு அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். இந்த மாதிரிகளைக் கொண்டே, நாம் வாழ்கையை/உலகை புரிந்து/கணித்து வாழ்கின்றோம். புலன்கள் மூலமாக மூளைக்கு செல்லும் எந்த விடயங்களும் உலகைப் பற்றிய முழுமை அல்ல. அந்த முழுமையற்ற விடயங்களிலிருந்து மூளை ஒரு மாதிரியை (அறிவியல் தியரி போல்) உருவாக்கி, உலகை...வாழ்கையை புரிந்து...கணிப்பதையே அறிவு என்கின்றோம். அனைத்துமே முழுமையற்று இருப்பதால், அனைத்துமே நம்பிக்கை தான்; நம்பிக்கையின் நிகழ்தகவு வேறாக இருக்கலாம்; 100% நிச்சயம் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரின் மூடநம்பிக்கையும், அவரின் மூளையின்படி நம்பிக்கையே. ஆக, நம் நம்பிக்கை தற்சார்புடையது (Subjective). எனவே தான், பாரபட்சமற்ற வெளிசார்புடைய (Objective) ஆராய்ச்சி (அறிவியல்) தேவைபடுகின்றது. அதை தான், க‌லிலியோ உட்பட பல அறிஞர்கள் நமக்கு காட்டினர். ஆனால், அதை எப்படி எல்லோருக்கும் நம்ப/புரிய வைப்பது?

எந்த ஒன்றும், பரிணாம வளர்ச்சி அடைய சில முக்கிய அம்சங்கள் உண்டு: (1) அதை சேமிக்க இடம் (Storage); (2) அதை நகல்கள் எடுத்தல் (Copy); (3) நகல் எடுக்கும்போது நிகலும் பிழைகள். உதாரணமாக, ஜீன்கள் (Genes) இருக்கும்/சேமித்த இடம் DNA; அதன் நகல் எடுத்தலை இனப்பெருக்கம் என்றும் அதன் பிழைகளை மரபு-பிழைகள் என்கின்றோம். பரிணாம வளர்ச்சிக்கு நல்லது கெட்டதெல்லாம் தெரியாது; சூழலுக்கு ஏற்ற தக்கவைகள் பிழைத்து வளர்ச்சி அடையும். பரிணாம வளர்ச்சிக்கு மற்றொரு உதாரணம் மெம்கள் (Memes). மெம் என்பது ஒரு யோசனையை (Idea) குறிக்கும். கடவுள், மதம், அறிவியல், ஜாதகம், கலாச்சாரம், ஜாதி... இவை எல்லாம் மெம்கள் தான். இவை இருக்கும்/சேமித்த இடம் மூளை. இவை ஒரு மூளையிலிருந்து மற்றொன்றிக்கு காலகாலமாக மொழி, கலாச்சாரம் மூலம் பரவுகின்றது அல்லது நகல் எடுக்கப் படுகின்றது. ஜீன்களை போலவே செத்துப்போன மெம்கள் கோடான கோடி. செத்துப்போன கடவுள்களும் கோடான கோடி. இன்று பிழைத்திருக்கும் அனைத்து மெம்களும் ஏதாவது ஒருவகையில் சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்தவைகளே! அந்த சூழலில், பல மூடநம்பிக்கைகளுக்கு நம் உணர்ச்சிகள் (உணர்ச்சிகள் ஜீன்களின் பரிணாம வளர்ச்சி) முக்கிய காரணிகளாக இருக்கின்றன. மனிதனின் ஆரம்ப கட்டத்தில், அறியாமையும் பய-உணர்ச்சியும் பல மூடநம்பிக்கைகளுக்கு முக்கிய காரணிகளாக இருந்திருக்கலாம். மெம்கள் வளர்ச்சி அடைய தேர்ந்த மொழி மற்றும் கலாச்சாரம் தேவை என்பதாலே, அதை கொண்ட மனிதனிடத்தில் மூடநம்பிக்கைகளும், அறிவியல் வளர்ச்சிகளும் காணமுடிகின்றது; மற்ற விலங்குகளில் அவற்றை காண முடிவதில்லை.

பகுத்தறிவு என்பது (Critical Thinking), ஒவ்வொரு விடயத்தையும் சீர்தூக்கி வெளிசார்புடன் (Objective) கற்று, அதற்கு ஏற்ப நம்பிக்கை-நிகழ்தகவுகளை அமைப்பது. ஆனால், அந்த அறிவும் நாம் வளர்ந்த/வாழும் சூழல்களை பொருத்தது. முறையான பகுத்தறிவு இல்லாத போது, மூளை எளிதாக ஏமாந்து நம்பிக்கை-நிகழ்தகவுகளை வெளிசார்பு-அறிவுக்கு (Objective-Knowledge) எதிராக அமைப்பதை மூடநம்பிக்கை எனலாம். ஆனால், பகுத்தறிவு என்பது நம் மூளையின் அறிவு-பகுதியை மட்டுமே ஏற்பதல்ல, நம் உணர்ச்சி-பகுதியையும் ஏற்பது தான்! மானிட உணர்ச்சிகளுக்கு வடிகாலாகவும், சமூதாய வளர்ச்சிக்காவும் சில விடயங்களை கடைபிடிப்பதும் பகுத்தறிவு தான்! இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதும், நினைவு சின்னங்கள் எழுப்புவதும், பாடுவதும், கொண்டாடுவதும் பகுத்தறிவு தான். பகுத்தறிவு என்பது, நாம் எதை செய்தாலும் அதை புரிந்து கொண்டு செய்கின்றோமா அல்லது குருட்டுதனமாக செய்கின்றோமா என்பதில் தான் உள்ளது!

********

நம்முடைய ஒவ்வொரு உணர்ச்சியும், எண்ணமும், சிந்தனையும் நமக்கே சொந்தமான, தற்சாற்புடைய அனுபவங்கள். உதாரணமாக, சிலசமயம் காலம் வேகமாக செல்வது போலவும், சிலசமயம் மெதுவாக செல்வது போலவும் உணருகின்றோம். இது நம் மனநிலையை பொருத்து, நம் வயதை பொருத்து மாறுகின்றது. இதனால், நாம் சூரியனின்/சந்திரனின் சுழற்சிகள் அல்லது ஊசல்/குவார்ட்ஸ்/அணு கடிகாரங்கள் போன்ற வெளிச்சார்புடைய பொதுவான அளவுகோலை அல்லது ஆதாரத்தை காண முற்படுகின்றோம். இதில் சில அளவுகோல்கள் மற்றவற்றைவிட துல்லியமாகவும், நம்பத்தகுந்த படியும் இருப்பதை கவனிக்கவும். எப்படியாகிலும், வெளிசார்பு நிலை என்பது பொதுவான வெளிப்புற ஆதாரத்தையோ அல்லது அளவுகோல்களையோ அல்லது முறைகளையோ பயன்படுபடுத்துவது ஆகும்.

இவ்வாறு நாம் பல சிறந்த அளவுகோல்களை பலவற்றிற்கு உருவாக்கி உள்ளோம்; உதாரணமாக காலம், வெப்பநிலை, நீளம், எடை முதலியன. இதுபோலவே நாம் எப்படி ஒன்றை ஆழமாக புரிந்து கற்று கொள்ளமுடியும் எனபதற்கு உருவாக்கிய வெளிசார்புடைய முறை தான் அறிவியல். ஒன்றை கண்காணித்தில், விசயங்களை சேகரித்தல், அதன் மூலம் மாதிரிகளை, தியரிகளை உருவாக்குதல், அவற்றை சரிபார்த்தல், அதன் மூலம் புதியவற்றை கண்பிடித்தல் போன்றவை அறிவியல் முறையில் அடக்கம். அடிப்படையில் இது கட்டுபாட்டுடன் ஐயமுடன் ஒன்றை அணுகி அதற்கு தேவையான ஆதாரங்களையும், நிருபணங்களையும் எதிர்பார்க்கும் ஒரு முறை. அறிவியல் என்பது பகுத்தறிவின் ஒரு உச்ச கட்ட முறை.

சில விசயங்கள் அடிப்படையில் தற்சார்புடையவை. உதாரணமாக, எது நல்லது, கெட்டது, நியாயமானது? ஏனெனில், நியாயம் என்பது இயற்கையிலே இல்லை. 100 வருடங்களுக்கு முன் தப்பானது இன்று தப்பில்லை. எனக்கு நல்லது அடுத்தவருக்கு கெட்டதாக இருக்கலாம். ஒரு சமூக்கத்திற்கு/நாட்டுக்கு நல்லது அடுத்த சமூக்கத்திற்கு/நாட்டுக்கு கெட்டதாக இருக்கலாம். மனிதனுக்கு நல்லது மற்ற உயிரனங்களுக்கு கெட்டதாக இருக்கலாம். இது போன்ற அடிப்படையிலே தற்சார்புடைய விசயங்களுக்கு வெளிசார்புடைய பொதுவான, துல்லியமான, நம்பத்தகுந்த அளவுகோலையோ, முறையையோ உருவாக்குவது மிகக் கடினம். இவற்றிலுள்ள அனைத்து தற்சார்புடைய காரிணிகளை நீக்க முடியா விட்டாலும், வெளிசார்புடைய குறிகோள்களை உருவாக்கி அதன் மூலம் பொதுவான அளவுகோலை/முறையை உருவாக்கலாம். அப்படி உருவான ஒன்றுதான் நம்முடைய சட்டதிட்டங்கள். இது போலவே மற்ற சமூக பிரச்சனைகளுக்கும், நாம் எப்படிப்பட்ட நல்ல சமூகத்தை அனைவருக்கும் உருவாக்க விழைக்கின்றோம் என்ற குறிகோள்கள் மூலம் வெளிச்சார்புடைய பொதுவான அளவுகோல்களை/முறைகளை உருவாக்கலாம்.

********

நாம் ஏன் எளிதாக மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகின்றோம்? அது நம் மூளை எப்படிபட்ட முறைகளை/ உத்திகளை கொண்டு கற்றுக்கொள்கின்றது என்பதை பொருத்தது.
  • எந்த வயதில் கற்றது? ஒன்றுமறியா சிறுவதில் நம் நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்கள் (அதாவது நம்மை பாதுகாத்து, உணவூட்டும் நபர்கள்) கூறுவதை, நம் மூளை எளிதாக ஏற்று கற்றுக் கொள்கின்றது.
  • யார் மூலம் கற்றது? சிலரை நாம் மிகவும் முக்கியமானவர்களாகவும், தலைவர்களாகவும் கருதுகின்றோம். அவர்கள் கூறுவதை நம் மூளை எளிதாக ஏற்று கற்றுக் கொள்கின்றது.
  • பரிணாம வளர்ச்சியில் நம் மூளை சில அடிப்படை உணர்ச்சிகளை கொண்டுள்ளது. அதை தூண்டும் விசயங்களை மூளை எளிதாக ஏற்று கற்றுக் கொள்கின்றது.
  • எத்தனை முறை திரும்ப திரும்ப கேட்டது. சில பொய்களை பலமுறை சொல்லி உண்மை போல் ஆக்க முடியும்.
  • எத்தனை பேர் அதை நம்புகின்றார்கள்.
இப்படிப்பட்ட கற்கும் முறைகளை/உத்திகளை நாம் பரிமாண வளர்ச்சியில் இயல்புகளாக பெற்றுள்ளோம். அப்படியே நம் மூளை வடிவமைக்கப் பட்டுள்ளது. இப்படிப்பட்ட முறைகள் மூலம் மூளை எளிதாக ஏமாந்து மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகின்றது. இந்த இயல்பு முறையை தாண்டி, நாம் பகுத்தறிவு முறையில் கற்க அந்த திறனை கற்று/வளர்த்து கொள்ள வேண்டும் (கற்றலின் கற்றல்).

03 August 2009

அறிவு பேசினால்

நான் உனக்கு அறிவை தந்தேன்...
உலகை புரிந்து நடைபோட;
கருவிகள் செய்து உயிர்வாழ - மேலும்
காலநிலை கணித்து பயிர்செய்ய.
நான் உனக்கு அறிவை தந்தேன்...
தொற்று நோய்களை களைந்தெடுக்க;
கொடிய வியாதிகளுக்கு குணம்காண;
பெருங்கடலையும் ஆகாயத்தையும் தோற்கடிக்க;
அண்ட வெளியையும் வெற்றிகாண - மேலும்
உன் காலடியை நிலவிலும் பதிக்க!

நான் அறிவேன், நான் அறிவேன்...
நான் தான் உனக்கு அறிவை தந்தேன்...
உயிர்கொல்லும் ஆயுதங்கள் செய்ய;
அழிவுகாணும் அணுகுண்டுகள் செய்ய! - ஆனால்
அது உன் விலங்கின் உணர்ச்சி;
அது உன் மடமையின் கிளர்ச்சி;
சண்டையிட்டு போர்களம் காண! - ஆனால்
உன் கண்களை திற,
என்னுடன் சிகரம் ஏறு! - அங்கே
நான் அமைதியை காட்டுவேன்! - ஏனெனில்
ஆழ்ந்த அறிவு சமாதானம்!
உண்மையான நிர்வானம்!

நீ என்னை காண முடியும்...
உன் நீடித்த ஆவலில்;
உன் கேள்விகளில், சந்தேகங்களில் - முக்கியமாக
உன் திறந்த மனதில்!
அறிவே ஆற்றல் - ஆனால்
நான் அகங்காரமும் அல்ல!
கடைசி தீர்ப்பும் அல்ல! - ஏனெனில்
திறந்த மனது என் முன்நிபந்தனை!

பலநேரம், பலவற்றில்...
உன் மனதை மூடிக்கொண்டாய்;
குருட்டு நம்பிக்கைக்கு அடிமையானாய்!
அதன் ஆதாரமற்ற கொக்கரிப்புகளில்!
அதன் அகங்கார தீர்ப்புகளில்!
பாவங்கள் பற்றி பேசுகின்றாய் - கொடிய
நரகத்தின் தீயை பேசுகின்றாய் - உண்மையில்
மக்களை உயிருடன் எரிக்கின்றாய்;
அவர் ஆன்மாக்களை சபிக்கின்றாய்;
அவையெல்லாம் இந்த பூமியிலே!

உன் மனக்கண்ணை திற;
நான் இந்த உலகை காட்டுகிறேன்...
குருட்டு அகங்கார கொக்கரிப்பை விட,
மிகச் சிறப்புடனும், மாட்சியுடனும்!
உன் மனக்கண்ணை திற;
நான் நிதர்சனத்தை காட்டுகிறேன்...
மாயஜால வித்தையை விட,
பெரு வியப்புடனும், மேன்மையுடனும்!

சிந்தித்துப் பார்...
நீ சிந்திக்க முடியும் என்பதால்,
உனக்கு தெரியுமென எண்ணிவிடாதே,
சிந்திப்பது எப்படி நடக்கின்றதென்று!
நீ வாகனம் ஓட்டுகின்றாய் - அதன்
இயந்திரம் எப்படி இயங்குதென்று அறியாமல்!
நீ கேள்விகள் எழுப்ப முடியும் என்பதால்,
உனக்கு தெரியுமென எண்ணிவிடாதே,
அனைத்துக்கும் பதில் என்னவென்று!
அதற்கு பலகாலம் ஆகலாம் - அல்லது
என்றைக்குமே அகப்படாமல் போகலாம்!
அது எப்படியாகிலும் பராவாயில்லை...
உனக்கு தெரியாத போது, சொல்:
எனக்கு தெரியாது என்று!

ஆம், நீ என்னை காண முடியும்...
உன் நீடித்த ஆவலில்;
உன் கேள்விகளில், சந்தேகங்களில்;
நான் அகங்காரமும் அல்ல!
கடைசி தீர்ப்பும் அல்ல! - ஏனெனில்
திறந்த மனது என் முன்நிபந்தனை!
என் ஆரவாரமற்ற ஆரம்பம்,
நீ சொல்லும் துணிவான வார்த்தைகளில்...
எனக்கு தெரியாது!

13 July 2009

அவ்வளவு எளிதல்ல!

அதே எளிய ஈர்ப்பு விசை,
எல்லா பொருள்களுக்கும் - ஆனால்
சுட்டெறிக்கும் சூரியனும், அதனை
சுற்றிவரும் கோள்களும்;
கோடி கம்பீர அண்டகளும், அதன்
ஒவ்வொன்றின் கோடி நட்சத்திரங்களும்...
இது அவ்வளவு எளிதல்ல!

எளிய வெப்பவியக்கவியல் விதிகள் - ஆனால்
பூமியின் தட்பவெப்ப சூழ்நிலைகள்:
பனியுகம் முதல் வெப்பமயமாதல் வரை;
சூராவளி, சுனாமி முதல் வெப்ப அலை வரை...
இது அவ்வளவு எளிதல்ல!

உலகை இயக்கும் எளிய விதிகள் - ஆனால்
அதன் உருவாக்கத்தில் அடக்கம்:
முழு ஒழுகின்மையும், வியப்பிலாழ்த்தும் ஒழுங்கும்;
கணிக்க இயலா குழப்பமும், கணிக்க இயலும் சீரும்...
இது அவ்வளவு எளிதல்ல!

உயிரை இயக்கும் எளிய பரிணாம விதிகள்;
நாம் வெறும் உயிர்வாழ் எந்திரங்கள் - ஆனால்
அறிவின் நீட்சியும், உணர்வின் ஆழமும்;
ஆவி உலகில் நாம் உணரும் ஆன்மாவும்...
இது அவ்வளவு எளிதல்ல!

வாழ்வின் அர்த்தங்கள்...
பெரிதாக எதுவும் காண இல்லை - ஆனால்
காதலின் ஆற்றலும், அதன்
பேரின்ப நிலையும், அடிமை குணமும்;
மனமகிழும் ஆனந்தமும், குமறும் துயரமும்...
வாழ்கை அவ்வளவு எளிதல்ல!