03 December 2010

வரலாற்று படங்கள்

இது நம் முன்னோர்களுக்கு தெரியாத நம் வரலாறு!

(கீழே உள்ள படங்கள் அனைத்தும் பெரிய சுவரொட்டி அளவு படங்கள். அவற்றின் மேல் சொடுக்கி பெரிதாக்கவும்.)


படத்தில் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக...
 • 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பெரு-வெடிப்பு நம் அண்டத்திலுள்ள அனைத்து கட்டுமான பொருட்களையும் (அடிப்படை துகள்கள்) உருவாக்கியது. அப்பொழுது இந்த அண்டம் குவாண்ட்டம் இயக்கவியலின் ஆதிக்கத்தில் இருந்தது. மற்ற இயற்கை விசைகளை விட புவியீர்ப்பு மிகவும் பலவீனமானதால், அப்பொழுது அதனுடைய தாக்கம் பெரிதாக எதும் இல்லை.
 • அண்டம் ஒளியை விட வேகமாக விரிவடைந்தது. (ஒளிவேகம் தோராயமாக ஒரு வினாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர்) [படத்தில்: Inflation = வீக்கம்]
 • 400,000 வருடங்களுக்கு பின் பெரு-வெடிப்பின் பின்ஒளிர்வு ஒளி. இதை நாம் WMAP என்ற செயற்கைகோள் மூலம் துள்ளியமாக படம் பிடித்துள்ளோம். அதையே கீழே உள்ள படம் காட்டுகின்றது. இது நம் அண்டத்தின் குழந்தை படம். இதிலிருந்து கடந்த காலம், எதிர்காலத்தை கணிக்க இயலும். [படத்தில்: Afterglow Light Pattern 400,000 yrs.]
 • அதன் பிறகு எந்த ஒளியிம் (மின்காந்த அலைகள்) இல்லாத ஒரு இருண்ட காலம். [படத்தில்: Dark Ages]
 • அடிப்படை துகள்கள் ஒன்றுகொன்றுடன் இணைந்து முதல்நிலை அணுக்கள் உருவானது. மேலும் அவை புவியீர்ப்பு விசையால் ஒன்றுகொன்றுடன் இணைந்து முதல் நட்சத்திரம், 400 மில்லியன் வருடங்களுக்கு பிறகு உருவானது. [படத்தில்: 1st Stars about 400 million yrs.].
 • முதல்நிலை அணுக்களை (ஹைட்ரஜன், ஹீலியம்) கொண்டு உருவான நட்சத்திரத்திரங்கள் அதன் வெப்பத்தில் மற்ற உயர்நிலை (அதிக அணு எண் கொண்ட) அணுக்களை உருவாக்கியது. அந்த அணுக்களை கொண்டு கோள்களும், உயிர்களும் உருவாகின (நாம் நட்சத்திர தூசியிலிருந்து உருவானவர்கள்!). பெரு-வெடிப்பிலிருந்து அண்டம் விரிவடைந்து கொண்டே உள்ளது. மேலும் தொடர்ந்த நட்சத்திரங்கள் இறப்பும், புதிய நட்சத்திரங்கள் பிறப்பும் இதில் அடக்கம். நட்சத்திரங்கள் இணைந்து நட்சத்திர மண்டலங்கள் உருவாகின. கீழே உள்ள படம் நமது பால்வழி மண்டலத்தை காட்டுகின்றது. [படத்தில்: Development of Galaxies, Planets, etc.]
 • சமீபத்திய கடந்த காலத்தில் நமது அண்டம் போதிய அளவு விரிவடைந்து விட்டதால், இப்பொழுது இருணாற்றல் எனப்படும் வெற்றிட ஆற்றலினால் வேகமாக விகிதத்தில் விரிவடைந்து கொண்டுள்ளது. [படத்தில்: Dark Energy Accelerated Expansion]

(If clicking on the image does not work, try here)

இது நமது பால்வழி மண்டலத்தை காட்டுகின்றது. இதில் நமது நட்சத்திரமான சூரியன் (படத்தில் 'We are here' என குறிக்கப்பட்டுள்ளது) ஒரு சுருளியில் உள்ளது. இது போல பல்லாயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் நம் அண்டலத்தில் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் பல்லாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திலும் பல கோள்கள் உள்ளன.

(If clicking on the image does not work, another link here OR try here)

உயிரின-தொடர்பு-மரம் அல்லது உயிரினங்களின் பரிணாமத் தொடர்பு: உள் வட்டத்திலிருந்து (4000 மில்லியன் வருடங்களுக்கு முன்பிலிருந்து) வெளி வட்டமாக (இன்று வரை)...
 • நமது பூமியின் வயது 4500 மில்லியன் வருடங்கள். முதல் உயிர் வேதி மூலக்கூறு 4000 மில்லியன் வருடங்களுக்கு முன்பு தோன்றியது. இது இன்றிருக்கும் எளிய உயிரை விட மிக எளிய மூலக்கூறு. ஆனாலும் வைரத்தை விட பல..பல..மடங்கு அரிதாக உருவான ஒன்று. அந்த ஒன்றிலிருந்து இயற்கை-தேர்வு-முறையில் எளிமையான உயிர்களிலிருந்து சிக்கலான உயிர்கள் வரை பரிணாம வளர்ச்சியடைந்தன. படத்தில் இடபக்கத்திலிருந்து வலபக்கமாக, பாக்டீரியா, தாவரங்கள் முதல் விலங்குகள் வரை காட்டபட்டுள்ளது. இறுதியில் மனிதன் (பாலூட்டிகள்) காட்டபட்டுள்ளது.
 • பல காலகட்டங்களில் நிகழ்ந்த பூகோள பனியுகங்களும் (Ice Ages), உயிரன-பேரழிவுகளும் (Mass extinctions) காட்டபட்டுள்ளது. 65 மில்லின் வருடங்களுக்கு முன், கடைசியாக நிகழ்ந்த உயிரன-பேரழிவில் டைனசார்கள் அழிந்து போயின.
 • படத்தின் அடியில் சொல்லப்பட்டுள்ளது போல், அழிந்து போன சில உயிரங்கள் மட்டுமே இங்கே காட்டப்பட்டுள்ளது. பெரும்பான்மையான கெட்ட வடிவமைப்புகள் மடிந்து, பிழைத்தவற்றை மட்டுமே இன்று நாம் காணுவதால், அவை சுற்று சூழலுக்கு ஏற்ற வகையில் யாரோ உருவாக்கி உள்ளது போல் தோற்றமளிக்கின்றது. பூமியில் தோன்றிய 99.9% உயிரனங்கள் இன்று இல்லை!

** மில்லியன் = பத்து இலட்சம் = 10,00,000
*** பில்லியன் = நூறு கோடி = 100,00,00,000
**** இங்குள்ள படங்கள் இணையதளத்திலிருந்து பெறப்பட்டவை (Google Search). படங்களை சுட்டும் போது அந்த இணையதளங்களுக்கு நேரடியாகச் செல்லும்.

28 November 2010

கலாச்சார சிறையிலே

விலங்குகளில் ஓர்-துணை சேர்க்கையிலிருந்து பல-துணை சேர்க்கை வரை பல வகைகளை காணலாம். சில பறவைகள் ஒரே ஒரு வாழ்க்கைத் துணையை மட்டுமே கொள்ளும். ஒன்று இறந்து போனாலும் (ஆணோ, பெண்ணோ) மற்றது அடுத்த பறவையை நாடாது. எந்த கலாச்சாரம் அதை அதற்கு கற்று கொடுத்தது? விலங்குகளில், பொதுவாக குழந்தைகளின் மேல் அம்மாவிற்கு பாசம் அதிகம். ஆனால் பொதுவாக மீன்களில், அப்பா தான் குழந்தைகளை பேணிகாப்பது. இந்த பாசங்களை எல்லாம் எந்த பண்பாடு கற்று கொடுத்தது? மனிதனின் அடிப்படை குணங்களும் அப்படியே!

மனிதன் ஒரு விலங்கு. அவனுடைய குணங்களை அவனின் மரபணுக்களும் சுற்றுசூழல்களும் நிர்ணயிக்கின்றன. எந்த ஒரு கறையானுக்கும் கறையான் புற்றை எப்படி கட்டவேண்டும் என்று தெரியாது. எந்த ஒரு கறையானும் அதன் கட்டமைப்பை வடிவமைக்கமும் இல்லை. ஆனால் அவற்றின் பண்புகளின் ஒன்று கூடிய செயல்பாடுகளின் வெளிபாடு (Emergence) தான் கறையான் புற்று. அது போலவே, மனிதர்களின் குணங்களின்...செயல்பாடுகளின் விளைவாக உருவாகும் சமூக வெளிபாடே கலாச்சாரத்தின்...பண்பாட்டின் அடிப்படை. மேலும், பல்வேறு காரணங்களுக்காக அன்றைய அறிவு மற்றும் சூழலுக்கு ஏற்ப, மனிதன் பல கட்டுபாடுகளையும்...சட்டதிட்டங்களையும் உருவாக்கி கொண்டான். நாளடைவில் அதில் பழகி போன மனிதன், அதன் உண்மையான காரண-காரியங்கள் எதுவும் தெரியவில்லை என்றாலும், அது இன்றைய சூழலுக்கு...அறிவுக்கு ஏற்றதாக இல்லை என்றாலும், அது தான் நடைமுறை, மரபு என்றும், அது தன் பண்பாடு, கலாச்சாரம் என்றும், அதை கட்டிக் காக்க தனக்குத் தானே சிறையிட்டு கொள்கின்றான். அந்த சிறையில் அவன் கொன்ற ஆன்மாக்கள் கோடான கோடி!

ஆனாலும், அந்த சிறைகளையெல்லாம் தாண்டி கலாச்சாரம் மாறி கொண்டே தான் இருக்கின்றது. அது பல்வேறு தலைமுறைகளில் மெதுவாக மாறுவதால் பொதுவாக மனிதன் அதை உணருவதில்லை. நேற்று வேறொன்றை தன் கலாச்சாரம் என்று போராடிய மனிதன், இன்று இடையிலே வந்த மற்றொன்றுக்காக போராடிக் கொண்டுள்ளான்.

கலாச்சாரம் ஒரு சமூகத்தின் பொருளாதாரம், சுகாதாரம், சந்தோசம் போன்ற பல வளங்களை நாளடைவில் நிர்மானிக்கின்றது. ஒரு கலாச்சாரம் அதன் கலாச்சாரத்தை வெளிப்படையாக அலசம் பாங்கும், பல புதியவற்றை ஏற்கும் பக்குவமும் கொண்டிருந்தால் அது முன்னேற்ற வழியில் வளர உதவும். ஏனென்றால் கலாச்சாரம் மாறி கொண்டே இருக்கும் ஒன்று. ஒரு நல்ல சமூகம் காண மனவியல், சமூகவியல், பொருளாதரம் பற்றிய பலவிசயங்களையும் அதன் சிக்கலான தொடர்புகளையும் அலசி ஆராய வேண்டும். அது மிகவும் சிக்கலான கடினமான காரியம் என்றாலும், மிகக் குறைந்த அவசியமான சமூக கட்டுபாடே, நிலையான தொடர்ந்த நீடித்த ஒரு நல்ல சமூதாயம் காண உதவும் என அறியலாம். அதில் முக்கியமானவை: தனி மனித உரிமை மற்றும் தனி மனித சுதந்திரம் (இதுவே இன்றைய நம் சட்டங்களுக்கெல்லாம் அடிப்படை).

தனி மனித உரிமை மற்றும் சுதந்திரத்தில் மற்றொரு முக்கிய அம்சமும் உண்டு: ஒருவன் அடுத்தவருக்கு தீங்கிழைக்காத பட்சத்தில், அவனுடைய உரிமையை...சுதந்திரத்தை பறிக்க நாம் யார்? அவனுடைய வாழ்க்கையை கேளி பேச நாம் யார்? இயற்கையை பற்றி, வாழ்க்கையின் நீள-அகல-ஆழத்தை பற்றி, அதன் அர்த்தத்தை பற்றி எந்த அளவிற்கு நமக்கு தெரியும்? நீங்கள் படிக்கும் இந்த எழுத்துகளை நான் எழுத உதவிய, அதை நீங்கள் படிக்க உதவிய, கணினியின் சூத்திரத்தை கண்டறிந்த கணினியின் தந்தையின் பெயர் ஆலன் ட்டுரின். அவன் ஓரினச்சேர்க்கையாளன் (Gay). அவனை பாவப்பட்ட ஜென்மம் என்று மனித சமூகம் தண்டித்து நாசப்படுத்தியது. அதில் அவன் தற்கொலை செய்து கொண்டான். அவன் ஆன்மா எவ்வளவு வேதனை அடைந்திருக்கும்! இது போன்ற மனிதர்களையும், திருநங்கை போன்ற மனிதர்களையும், மற்றும் எது போன்ற மனிதர்களையும் நல்லபடியாக வாழவிடுங்கள். அவர்களிலும் பல ஆலன் ட்டுரின்கள் உள்ளனர். பல ஆன்மாக்களை வாழவைத்ததோடு, அவர்களின் சேவையில் மானிடமும் செழிக்கும்!

புலி: ஆனால், ஓரினச்சேர்க்கையாளர்களால் குழந்தைகள் அதனால் சமூகம் கெட்டுவிடாதா? அது மேலும் அதிகரிக்காதா?

ஆமை: அது இயற்கையிலே நிகழும் ஒன்று. மற்ற விலங்குகளிலும் அவை உண்டு. அப்படியெனில் இயற்கையே அப்படி தான்! அதை மூடிமறைத்த உன் வேசம் போதும். நாமும் இயற்கையில் ஒரு அங்கம். அந்த நம்பிக்கையில் வேசம் கழைத்து வெளியே வா! ஓரினச்சேர்க்கையாளர்களை நாம் நல்லபடியாக வாழவிட்டால், அவர்களின் தொகை உண்மையிலே குறையலாம்; அது தெரியுமா? (தெரியவில்லையா, தேடுங்கள்; அந்த தேடலில் வாழ்வின் அர்த்தங்களும் கிடைக்கலாம்! வாழ்வின் நீள-அகல-ஆழங்களை உணரலாம்!).

குடித்து விட்டு பச்சை பச்சையாக நடுதெருவில் திட்டி கொண்டு சண்டையிடுவதை பார்க்கும் குழந்தைகள், திரைபடங்களிலும்...தொலைகாட்சிகளிலும் குத்துபாட்டுகளை பார்க்கும் குழந்தைகள், காதலிக்கும் ஒரு ஆணும் பெண்ணும் முத்தமிடுவதை பார்த்து கெட்டு போய்விடுவார்கள் என்று இச்சமூகம் அஞ்சுகின்றது. நமக்கு நாமே போட்டுக்கொண்ட முறையை மாற்றி, சிலர் திருமணமின்றி சேர்ந்து வாழ்வதை பார்த்து இச்சமூகம் கேளி பேசுகின்றது.

புலி: அப்படியே விட்டால், அமெரிக்காவைப் போல் நீலப்பட தொழில்கள் நம் கலாச்சாரத்திலும் வந்துவிடாதா?

ஆமை: வாழ்கை என்பது ஒரு சிக்கலான சமரச‌ம் என்பதை உணராமல், உடனே இப்படி பூதாகரமாக பெரிதிபடுத்தி பயமுறுத்தப் படுகின்றது! இப்படி கலாச்சாரம், கடவுள், மதம் பேரை சொல்லி பயமுறுத்தி தான், பல கோடி மக்களை கீழ் ஜாதி என சிலரால் அடக்கி வைக்க முடிந்தது. அப்படித்தான் தன் அம்மாவை, சகோதிரியை மொட்டையிட்டு நெருப்பில் தள்ள முடிந்தது.

தனிமனித நல்லது கெட்டதையெல்லாம் தாண்டி, சில விசயங்களை சமூகத்தில் எப்படி நிர்வகிக்க முடியும் என்பதை பார்க்க வேண்டும். ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் மதுபானங்கள் சட்டவிரோதமாக இருந்தது. நாமும் அப்படி கூட இருந்து பார்த்தோம். பிறகு நம் அரசே அதை எடுத்து நடத்தியதெல்லாம் அறிந்ததே. எனினும் சாராயம் (ஆல்கஹால்) மற்ற போதை பொருட்களை விட கெடுதல் என்கின்றார்கள் சில வல்லுனர்கள். நீல படங்கள் நம் ஊரில் சட்டபூர்வமாக அனுமதிக்க படவில்லையே தவிர, அது பல திரையரங்குகளில் ஒடி கொண்டுதான் உள்ளது. அதை இளவட்டங்களும், மற்ற வட்டங்களும் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். இப்படிபட்ட விசயங்கள் அனைத்தும், அமெரிக்காவில் தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடும் இல்லை; நம்மூரில் அதற்கு இணையாக அவை இல்லாமலும் இல்லை.

புலி: ஆனாலும் நம்முடைய கலாச்சாரம் பழமைவாந்த, பெருமைபட்டு கொள்ள வேண்டிய, கட்டிக்காக்க வேண்டிய ஒன்றல்லவா?

ஆமை: 50...100 வருடங்களுக்கு முன்பு வரை விதவைகளை மொட்டை இட்டு, நெருப்பில் தள்ளிய கலாச்சாரம் இது! முக்கால்வாசி மக்களை தீண்டதகாதவர்கள் என்று ஒடுக்கி வைத்த கலாச்சாரம் இது! இன்றும் அதன் அவலங்கள் பலவடிவில் நம் சமூகத்தில் உள்ளது. இன்றும் பச்சிளம் குழந்தைகள் வேலையிலும் விபச்சாரத்திலும் தள்ளப்படுகின்றார்கள். இந்தியாவில் இன்று ஒரு நாளைக்கு 6000 குழந்தையில் பசியால் சாகின்றார்கள். இது பால் நோய்கள் அதிகமாக கொண்ட சமூகமாகத் தான் உள்ளது.

இதில் நம் கலாச்சாரம் மட்டும் உயர்ந்ததென்று பீற்றி கொள்வதில் என்ன இருக்கின்றது? உலகிலுள்ள எல்லா கலாச்சாரத்திலும் நன்றும் தீதும் கலந்தே உள்ளது. பழமையை கட்டிக்காக்க நாம் ஏன் பின்னோக்கி செல்ல வேண்டும். அப்பன் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாய வேண்டாமா? முன்னோக்கி பார்! அதுவே நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் பெருமை!

புலி: நீங்கள் கூறுவதை முழுமையாக என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.

ஆமை: மனிதன் ஒரு விலங்கு. மற்ற விலங்களை போலவே குழுக்களை உருவாக்குகின்றோம், மற்றவர்களுடன் நேசம் கொள்கின்றோம், சண்டையிடுகின்றோம், உணவை தேடுகின்றோம், துணையை தேடுகின்றோம், கலவி புரிகின்றோம், காதலில் விழுகின்றோம், குடும்பம் அமைக்கின்றோம், குழந்தைகளை ஈணுகின்றோம், பேணுகின்றோம், முடிவாக வயதடைந்து சாகின்றோம். நாம் பெரிய விலங்கும் அல்ல, திடமான விலங்கும் அல்ல, வேகமாக விலங்கும் அல்ல. அப்படி எனில், மனிதனின் சாரம்...ஆன்மா எங்கே உள்ளது? அது அவனுடைய அறிவு தேடலில் உள்ளது! அப்படி தான் நாம் காலநிலை அறிந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தோம், நிலாவிலும் நம் காலடி பதித்தோம். கண்டதையும் கண்டபடி நம்பாமல், "எந்த ஒரு விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார்!" என்பதை மனிதன் உணரும் போது, சிறை சங்கிலிகளிலிருந்து அவன் விடுதலை பெறலாம்!

10 October 2010

எந்திர வாழ்கையிலே

தொடர்ந்து நிகழும் கணக்கிலடங்கா மாற்றங்களில், ஒரு சில அதன் சுற்று சூழலுக்கு ஏற்றால் போல் இருந்தால், அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு செல்லும். மற்றவை மடிந்து போகும். நாளடைவில் பிழைத்தவற்றை நோக்கினால், யாரோ அவற்றை அதன் சுற்றுசூழலுக்கு ஏற்றால் போல் உருவாக்கி உள்ளார் என்பது போல் தோன்றும். அப்படி இயற்கை-தேர்வு-முறையில் உருவான எந்திரங்கள் தான் பாக்டீரியா, தாவரங்கள், மீன்கள் முதல் விலங்குகள் வரை, மனிதன் உட்பட! இந்த எந்திரங்களின் வடிவமைப்பு அவற்றின் ஜீன்களில் (DNA) உள்ளது.

உயிர் எந்திரங்களின் அடிப்படை நோக்கம் பிழைத்திருந்து இனப்பெருக்கம் செய்தல். ஏனெனில், அப்படி பட்டவை மட்டுமே பிழைத்திருக்கின்றன. நம் உடலின் ஒவ்வொரு அங்கங்களும், மூளையின் ஒவ்வொரு எண்ணங்களும், வாழ்கையின் ஒவ்வொரு குறிகோள்களும் இந்த அடிப்படை நோக்கத்திலிருந்து உருவாக்கப் பட்டதே!

நாம் பிழைத்திருக்க உணவு வேண்டும்; அதை தேட கால்கள் வேண்டும்; பறித்து, பிடித்து உண்ண கைகள் வேண்டும்; உணவை கண்டுகொள்ள கண்களும், மூக்கும் வேண்டும்; உண்பதற்கு வாய் வேண்டும். இந்த உடல் உருப்புகளின் தசைகளை கட்டுபடுத்தி செயல்படுத்த நரம்பு மண்டலமும், மூளை வேண்டும்.

உடலுக்கு தேவையான நீர் முற்றிலும் குறைவதற்கு முன்பே மூளை நமக்கு தாகத்தை ஏற்படுத்தி எச்சரிக்க வேண்டும்; இரத்ததில் ஊட்டச்சத்து குறையும் முன்பே பசியை ஏற்படுத்தி எச்சரிக்க வேண்டும். உடல் செல்கள் அதிகமாக வெப்பத்தால் சேதமடையும் முன், வியர்வையை உருவாக்கி உடல் வெப்பத்தை குறைக்க வேண்டும். உடல் செல்கள் குளிரால் சேதமடையும் முன், உடல் நடுக்கத்தை ஏற்படுத்தி உடல் வெப்பத்தை கூட்ட வேண்டும். இனப்பெருக்கம் செய்ய பால் எண்ணங்களை உருவாக்க வேண்டும்; அதற்கேற்ப உடலை தயார்படுத்த வேண்டும்.

மூளை நம் கால்களுக்கு சமமான அளவிற்கு (25%) ஆற்றலை செலவிடுகின்றது. எனவே அது பொதுவாக சாதாரண வேகத்தில் இயங்க வேண்டும். ஆனால் ஆபத்து போன்ற முக்கிய சமயங்களில் மூளை இயங்கும் வேகத்தை கூட்ட வேண்டும். மூளை ஒவ்வொன்றின் நன்மை தீமைகளையும் லாப நட்டங்களையும் அறிந்து சீர்தூக்கி பார்க்க வேண்டும். ஆனால் எதிரியை போராட முடிவெடுத்த பிறகு, மூளை சீர்தூக்கி பார்த்தல் பகுதியை அணைத்து விட்டு, மூளையின் ஆற்றலையும் உடலையும் போராட்டத்திற்கு ஒருமுகப்படுத்தி தாயார்படுத்த வேண்டும். இப்படிபட்ட மூளையின் நிலையை (மன-நிலை; கால்கள் செயல்பட்டால் நடத்தல், மூளை செயல்பட்டால் மனம்) கோபம் என்கின்றோம். எனவே தான் - ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு - என்கின்றோம். ஒவ்வொன்றின் குறை நிறைகளை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் பால்-துணையின் மேல், மூளை அப்பகுதியின் செயலை அணைத்து விட வேண்டும். இப்படிபட்ட மூளையின் நிலையை காதல் என்கின்றோம். எனவே தான் - காதலுக்கு கண் இல்லை - என்கின்றோம். எனவே தான் காதலின் போது குறைகள் அற்ற சொர்க்கமாக இவ்வுலகை காண்கின்றோம். பொதுவாக மூளை பல விடயங்களை அலசி ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆகவே சாதாரணமாக மனம் அலைபாய்தல் எளிது. ஆனால் நம் குழந்தைகளின் மேல், நம் கவனத்தை ஒருமுகப்படுத்தி, அதன் நல்லது கெட்டதை அறிந்து அதற்கேற்ப ஆற்றலை செலவிடவேண்டும் வேண்டும். இப்படிபட்ட மூளையின் நிலையை பாசம் என்கின்றோம்.

மூளை அனுபவத்தில் ஏற்படும் புதிய நிகழ்வுகளை நினைவில் கொள்ள வேண்டும்; புதிய விசயங்களை கற்று கொள்ள வேண்டும்; புதிய திறமைகளை கற்று கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல், ஏற்கனவே உள்ள உணர்ச்சிகளை புதிய கற்றலின் மூலம், மூளை கட்டுபடுத்த வேண்டும். மூளை இப்படி பலவற்றை செயல்படுத்துவதோடு, அதன் நிலையையும் தெரிந்து கொள்ள வேண்டும்; தனக்கு என்ன தெரியும் தெரியாது, தன் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதையும் தெரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்; இதை நாம் சுயநினைவு என்கின்றோம். இவ்வாறு ஜீன்கள் நம் மூளையில் எழுதிய கட்டளையை செயல்படுத்துகின்றோம். இது நம் எந்திர வாழ்கை! இந்த எந்திரம் செயல்படும் போது உயிர் என்கின்றோம், அது செயல் இழக்கும் போது மரணம் என்கின்றோம்.

புலி: இப்பொழுதெல்லாம் சுவாசம் நின்ற பிறகும், இருதயம் நின்ற பிறகும் கூட உயிர் பிழைக்க வைக்க முடிகின்றதே?

ஆமை: பாக்டீரியா என்பது ஒரு செல் உயிரினம். அதன் செல்லின் எந்த பகுதி பழுதடைந்தாலும் அல்லது எந்த வேதிவினை தடைபட்டாலும் அது அதன் மரணம். நாம் பல-செல் உயிரினம். நாம் பல கோடி செல்களின் கூட்டு முயற்சி. அதில் ஒரு செல் பழுதடைந்தால், நம் உடல் அதை மாற்றிவிடும். ஆனால் ஒரு முக்கிய உருப்பே பழுதடைந்தால், அது மற்ற செல்களையும் சேதப்படுத்தி மொத்த உடலும் மெதுவாக செயலிழந்து போகும். சுவாசமோ, இருதயமோ நின்ற பிறகு, நம் உடல் செல்கள் மெதுவாக பழுதடைய ஆரம்பிக்கும். அதற்கு முன், செயற்கையாக சுவாசத்தை, இருதயத்தை இயக்கப்படுத்தினால், நாம் மீண்டு வரலாம். இன்றைய மருத்துவ தொழிற்நுட்பத்தில், பெரும்பான்மையான மூளையின் செல்கள் செயல் இழந்தால் அதை மரணம் எனலாம். ஏனெனில் மற்றவற்றிக்கு சில மாற்று வழிமுறைகளை கண்டறிந்துள்ளோம். நாளை மூளைக்கும் மாற்று வழி கண்டறியலாம்.

ஒரு கருதுகோள். உன் கை கால்களை இழந்து நீ செயற்கை அங்கங்களை பொருத்தி கொண்டால், அது நீதானா? (மூளையின் கட்டளைகளை மின்னனு செய்திகளாக மாற்றி அதை கொண்டு செயற்கை அங்கங்களை இயங்க வைப்பது. இதில் பல தொழிற்நுட்ப இடற்பாடுகள் இருந்தாலும் கை, கால்கள், காது, கண்கள் போன்றவற்றை ஓரளவு செயற்கையாக மாற்றி உள்ளோம்)

புலி: அப்பொழுதும் அது நான் தான்.

ஆமை: மூளையின் செல்கள் தொடர்ந்து செயல்பட நல்ல இரத்தத்தை தொடர்ந்து அனுப்ப வேண்டும். இருதயம், நுரையீரல் என உன் உடலின் அனைத்து உருப்புகளையும் நீக்கிவிட்டு செயற்கையாக மூளை நல்ல இரத்தம் கிடைக்கும் படி செய்தால், அப்பொழுதும் அது நீயா?

புலி: நான் தான்.

ஆமை: மூளையில் உள்ள செல்கள் (நரம்பணுக்கள்) எப்படி செயல்படுகின்றது என்பது நமக்கு தெரியும். ஒரு செல்லை அல்லது பல செல்களை மின்னனு-சிப்பை கொண்டு மாற்றி அமைக்க முடியும் (இதை எலி மற்றும் குரங்கின் மூளை செல்களுக்கு ஏற்கனவே நாம் செய்துள்ளோம்). இப்படி உன்னுடைய ஒவ்வொரு செல்லையும் மின்னனு-சிப்பை கொண்டு மாற்றி அமைத்தால், நீ எப்படி செயல்படுகின்றாயோ அதே போலவே செயல்படுவாய். அப்பொழுதும் அது நீயா?

புலி: ம்ம்ம், நான் தான் என்று நினைக்கின்றேன்!

ஆமை: இப்பொழுது உனக்கு மின்சக்தி தரும் பேட்டரி மட்டும் இருந்தால் போதும்.

புலி: நாம் உருவாக்கும் எந்திரங்கள் உயிரினங்களை போல் செயல்படுவதில்லையே?

ஆமை: உயிரினங்கள் மிகவும் சிக்கலான நேனோ-தொழிற்நுட்பத்தில் (அணு மற்றும் வேதி-மூலக்கூறுகள் அளவில்) உருவாக்கப்பட்டவை. இப்பொழுது தான் நாம் நேனோ-தொழிற்நுட்பத்தில் கால் வைத்துள்ளோம். ஆனாலும் மற்ற தொழிற்நுட்பத்திலும் பல நல்ல தீர்வுகளை காண முடியும். ஒவ்வொறு முறையிலும் நிறை குறைகள் உண்டு. விலங்குகள் எழும்புகளையும், ஆயிரக்கணக்கான நரம்பு மற்றும் தசைகளையும் கொண்டு உருவான கால்கள் முலம் இடம்பெயருகின்றன. நாம் செயற்கை எந்திரங்களுக்கு (கார் வண்டிகள்) சக்கரங்களை பயன்படுத்துகின்றோம். பறவையை போல் விமானத்தையும், மேலும் முற்றிலும் வேறுபட்ட முறையிலும் இயங்கும் இராக்கெட்டையும் உருவாக்கி உள்ளோம். மூளையை போல் கணினியை உருவாக்கியுள்ளோம். இன்று செயற்கை-அறிவில் உருவாக்கப்பட்ட கணினி-மென்நிரல்கள் செஸ் விளையாடுகின்றன, பலவகையான கணித சிக்கலுக்கு தீர்வு கண்டுபிடிக்கின்றன, பல துறைகளிலில் (மண்ணியல், இருதயவியல்,..) நிபுணர்களை போல் ஆலோசனை வழங்குகின்றன, பங்கு சந்தையில் பங்குகளை வாங்குகின்றன.

இன்று வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட செயற்கை-அறிவு-மென்நிரல்கள் ஒன்றுக்கொன்று-தொடர்புடைய ஆயிரக்கணக்கான செய்திகளை கொண்டவை. ஆனால் மனிதனை போன்ற பொது-அறிவுக்கு ஒன்றுக்கொன்று-தொடர்புடைய பல கோடி செய்திகளை கொண்ட மென்நிரல்களை உருவாக்க வேண்டும். அதை நேரடியாக உருவாக்குவதற்கு பதில், குழந்தைகள் உலகத் தொடர்பு மற்றும் அனுபவத்தின் மூலம் கற்பது போல் கற்கும்-மென்நிரல்களை உருவாக்கலாம். மனிதனை போன்ற தானியங்கு-எந்திரத்தை உருவாக்கினால் அதற்கும் சுயநினைவு மற்றும் ஒருவகையான உணர்ச்சிகள் இருக்கும்.

புலி: எப்படி?

ஆமை: அது அதை எப்படிபட்ட கட்டமைப்பு, கற்றும் உத்திகளை கொண்டு எந்த நோக்கத்திற்காக உருவாக்குகின்றோம் என்பதை பொருத்தது. குறைந்த பட்சம் அதற்கு அதனுடைய சக்தி மூலத்தை (மின் சக்தி வழங்கும் பேட்டரி) பற்றி ஒரளவாவது தெரிய வேண்டும் - அதிக பட்ச சேமிக்கும் சக்தி எவ்வளவு? ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு சக்தி தேவைபடும்? இன்னும் எவ்வளவு நேரம் சக்தி இருக்கும்? எப்படி பட்ட வழிகளில் சக்தியை பெறமுடியும்? அதன் அங்களை பற்றியும், அதை கொண்டு என்ன என்ன செய்ய முடியும் என்பதையும் அறிய வேண்டும். மேலும் உலகத்தை பற்றியும் அதன் காரண-காரியங்களை பற்றியும் கற்று கொள்ள வேண்டும்; அதற்கு அதன் கற்றும் திறனை பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதற்கு தனக்கு என்ன தெரியும்-தெரியாது, என்ன திறமைகள் இருக்கு-இல்லை எனபதை தெரிய வேண்டும். மொத்தத்தில் சுய-அறிவு சுயநினைவு வேண்டும். அதற்கு சுய-அறிவு இருந்தால், அதன் மூளையின் ஒவ்வொரு நிலையை பற்றியும் ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். அதன் ஒவ்வொரு நிலையும் அதன் உணர்ச்சிகளே!

ஒரு இலக்கை அடைய அதை திட்ட மிட வேண்டும். நிஜ உலக இலக்குகள் செஸ்-விளையாட்டை விட பல கோடி மடங்கு சிக்கலானவை. பல வழிகளிலிருந்து அதன் நன்மை-தீமைகளை அறிந்து தன்னுடைய பலம்-பலவீனம் அறிந்து ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்; தெரியாவற்றை பலவழிகளில் கற்று கொள்ள வேண்டும்; ஒவ்வொரு துணை-இலக்குகள் வெற்றி-தோழ்வி அடையும் போது, அதை அறிந்து கற்று கொள்ளும் நிலை ஒருவகையில் சந்தோசம்-விரக்தியை போன்றது தான். புதியவற்றவை கற்கும் போதும் ஏற்படும் நிலை, புரியாதவற்றால் குழம்பி அதை புரிந்து கொள்ள முற்படும் நிலை என பலவாறு அதன் நிலைகள் விரிவடையும்.

புலி: நாம் உருவாக்கும் செயற்கை எந்திரங்கள் நம்மைவிட மேம்பட்டதாக இருக்கும் அல்லவா?

ஆமை: செயற்கை எந்திரங்களின் மூளை அளவையும் வேகத்தையும் பலமடங்கு அதிகப்படுத்தலாம். தற்காலிக நினைவையும், சுய-அறிவையும் பலமடங்கு உயர்த்தி அதன் அறிவு-திறனை பல மடங்கு உயர்த்தலாம். அப்படிப்பட்ட எந்திரங்கள் நாளை நம்முடன் வலம்வரலாம்! அவை புற்றுநோய், HIV போன்ற நோய்களுக்கு மருந்து கண்டறியலாம், நாட்டின் உலகத்தின் பொருளாதார பிரச்சனைகளுக்கு, உலக-வெப்பமயமாதலுக்கு நல்ல தீர்வு காணலாம். அப்படிப்பட்ட எந்திரம் அதைவிட மேம்பட்ட எந்திரத்தை உருவாக்கலாம்! யார் கண்டார், நாம் நம் சந்ததிகளை ஜீன்கள் மூலமாக அனுப்பவதற்கு பதிலாக நாமே நம் மூளையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம்!

16 July 2010

மன விளையாட்டுநான் விரும்பியதை எல்லாம், நான் அடைய முடியாது;
அதை நான் அறிவேன் நன்று; ஆனாலும்,
நான் அடைய விரும்புகின்றேன்...நான் அடைய முடியாததை.
என்ன வினோதம்?! இது என்னுடைய மனம்!

புகை பிடித்தல் கெடுதல், அதை நான் அறிவேன்.
பலவித பொருட்களும் கெடுதல், அதையும் நான் அறிவேன்.
அதிலிருந்து மீள நினைக்கின்றேன், ஆனால் என்னால் முடியவில்லை.
ஆக... என் மனம் மீள விரும்புகின்றது, ஆனாலும் அதற்கு மீள விருப்பமில்லை!
இப்பொழுது... என் மனம் யார் கட்டுப்பாட்டில் என்பதுதான், மிகப்பெரிய கேள்வியோ?!

ஆனாலும் நான் எப்படி மீள்வது?
இன்று ஒரு நாள் நிறுத்தினால்... சற்றே கொஞ்சம் குறைத்துக் கொண்டால்,
இனிதாக ஏதாவது கொடுத்து, என்னையே நான் ஊக்கப் படுத்தாலாம்.
கட்டுபாட்டு வேண்டும் போது, எனக்கே நான் லஞ்சம் கொடுத்து கொள்வேன்.
கடின உழைப்பு வேண்டும் போது, என்னையே நான் ஊக்கப்படுத்தி கொள்வேன்.
ஆறுதல் வேண்டும் போது, என்னையே நான் தேற்றி கொள்வேன்.
என் மனம் அதற்கே லஞ்சம் கொடுத்து கொள்கின்றது...
என் மனம் அதுவாக ஊக்கப்படுத்தி கொள்கின்றது...
என் மனம் அதுவாக தேற்றி கொள்கின்றது...
என் மனதிற்கே என் மனதை தெரியாதது போல்!

எப்படி என் நூற்றுக்கணக்கான தசைகளை ஒருங்கிணைத்து கட்டுபடுத்தி,
என்னை நான் சமன்நிலைபடுத்தி, என் கால்களை நகரவைத்தேன்,
என்பதை பற்றி ஒன்றும் நான் அறியேன்; ஆனாலும்,
நான் சுய-உணர்வோடு நடப்பதாக நினைக்கின்றேன்!

குரங்கினால் முடியும்; கைபை கால்குலேட்டரால் முடியும்; ஆனால்,
ஓர் ஏழு இலக்க எண்ணை, தற்காலிக நினைவில் வைக்க என்னால் முடியாது.
தற்காலிக நினைவாகட்டும் அல்லது நீண்டகால நினைவாகட்டும்,
எங்கு சேமித்தேன், எப்படி சேமித்தேன், எப்படி திரும்ப பெற்றேன்,
என்பதை பற்றி ஒன்றும் நான் அறியேன்; ஆனாலும்,
நான் சுய-உணர்வோடு நினைவில் கொள்வதாக நினைக்கின்றேன்!

எப்படி பொருளுக்கு ஏற்ற வார்த்தைகளை பொறுக்கி எடுத்தேன்,
எப்படி இலக்கணத்திற்கு ஏற்ப வார்த்தைகளை கோர்த்து வைத்தேன்,
எப்படி அர்த்தமுள்ள வரிசையில் வாக்கியங்களை அடுக்கி வைத்தேன்,
என்பதை பற்றி தெளிவாக நான் அறியேன்; ஆனாலும்,
நான் சுய-உணர்வோடு பேசுவதாக நினைக்கின்றேன்!

என் தண்டு வடம் சேதமடைந்தால், என் உடல் செயல்-முடக்கம் அடையும்.
என் பார்வை-மூளை சேதமடைந்தால், என் பார்வையில் குறை உண்டாகும்.
என் செவி-மூளை சேதமடைந்தால், என் கேட்டலில் குறை உண்டாகும்.
என் தொடு-உணர்-மூளை சேதமடைந்தால், என் தொடு-உணர்வில் குறை உண்டாகும்.
என் நுகர்-மூளை சேதமடைந்தால், என் நுகர்-உணர்வில் குறை உண்டாகும்.
மற்றும் பலவகை மூளை சேதத்தால்...
விருப்பு வெறுப்புகள், வலி, இன்பம், சாந்தம், கோபம்,
சுய-உணர்வு, திசை உணர்வு, கால உணர்வு, சொந்த-பந்த உணர்வு
என பலவகை உணர்வுகள் தடம்மாறி போகும்!
மற்றும் பலவகை மூளை சேதத்தால்...
வார்த்தைகளை அறிதல், முகங்களை அறிதல், இசையை அறிதல்,
என பலவகை அறிதல்கள் இல்லமால் போகும்!
மற்றும் பலவகை மூளை சேதத்தால்...
அறிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், நினைவில் கொள்ளுதல்,
விளக்குதல், சிந்தித்தல், கட்டு படுத்துதல், முடிவெடுத்தல்
என பலவகை திறன்கள் இல்லமால் போகும்!
ஆனாலும்... இவை எல்லாம் நன்றாக வேலை செய்யும் போது,
அது என் முழு-சுதந்திர சுயேச்சையான எண்ணமாக நினைக்கின்றேன்!

02 July 2010

நான் யார்?

நான் யார்? - ஆண்டிகளும், யோகிகளும், தத்துவ ஞானிகளும் ஆயிரமாயிரம் வருடங்களாக கேட்ட கேள்வி! அதற்கான விடையை, டார்வின் 150 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்திருந்தாலும், இப்பொழுது உயிரை பற்றி நமக்கு அக்குவேர் ஆணிவேராக தெரியும். உயிர் என்பது ஒருவகை சிக்கலான வேதிவினைகளின் தொகுப்பு. அதன் அடிப்படை வினை, அமினோ அமிலங்களை (உணவு) கொண்டு மரபணுக்கள் (DNA மூலக்கூற்றின் பகுதி) எனப்படும் அச்சுக்களை பயன்படுத்தி புரதங்களை (உடலின் கட்டுமான பொருள்) உருவாக்குவது தான்.

[மரபணு] + [அமினோ அமிலங்கள்] --> [புரதம்]

நம் உடலின் பகுதிகள் ஒவ்வொன்றும் (இரத்தம், தோல், இருதயம், மூளை...) வெவ்வேறு புரதங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை புரதமும் வெவ்வேறு மரபணுக்களை பயன்படுத்தி ஆனால் ஒரே அமினோ அமிலங்களை கொண்டு வார்க்கப்படுகின்றன. நம்மை, அதாவது நம் அக மற்றும் புற பண்புகளை புரதங்கள் தீர்மானிக்கின்றன...புரதங்களையோ நம் மரபணுக்கள் தீர்மானிக்கின்றன. இவ்வாறு நம்மை நம் மரபணுக்கள் தீர்மானிக்கின்றன. பாக்டீரியா, செடி கொடிகள், மீன்கள், பறவைகள், ஆடு மாடுகள், சிங்கம் புலிகள், குரங்கு மனிதர்கள் என அனைத்து உயிர்களும் நான்கே எழுத்துக்களை கொண்டு எழுதப்பட்டுள்ளது. அவை A, C, G, T. இவை ஒவ்வொன்றும் ஒரு DNA-மூலக்கூற்றின் சிறு-பகுதி-மூலக்கூற்றை குறிக்கின்றது. DNA மூலக்கூற்றை ஒரு நீண்ட ஏணிப்படியாக கருதினால் அதன் படிகள் இந்த நான்கு சிறு-பகுதி-மூலக்கூறுகளை (எழுத்துக்களை) கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதை வரிசைப்படுத்தி எழுதினால் அதை மரபணு-வரிசை எனலாம். ஒரு 10 படி வரிசைக்கு உதாரணம்: CAGGAATGCA. இதில் ஒரு படி மாறினாலும் அதனால் உருவான புரதம் முற்றிலும் வேறுமாதிரியான பண்புகளை தரலாம்.

நாம் உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று என பல காரணிகள் புரத உருவாக்கத்தை பாதிக்கின்றன. மேலும் சூரியனின் புற-ஊதா கதிர்கள், புகைப்பிடித்தல் போன்றவை மரபணுக்களை சிதைக்கின்றன. இவ்வாறாக நம்முடைய சூழல்கள் (உணவு மற்றும் இதர பழக்கங்கள், வாழ்க்கை மற்றும் கலாச்சார முறைகள், உள்/வெளி சுற்றுப்புற சூழல்கள்) நம்மை தீர்மானிக்கின்றன.

[நான் யார்?] = [என் மரபணுக்கள்] + [என் சூழல்கள்]

இப்பொழுது மரபணு பகுப்பாய்வு (இரத்த சோதனை போல்) பரவலாக செய்யப்படுகின்றது. மரபணு பகுப்பாய்வுக்கு நம்முடை எச்சிலை அனுப்பி வைத்தால் போதும். ஏனென்றால், எச்சில் உட்பட நம்முடைய அனைத்து உயிரணுக்களின் உட்கருவிலும் அதே மரபணுக்கள் தான் உள்ளது. அம்மாவின் ஒரு உயிரணு (கருமுட்டை), அதன் உட்கருவிலுள்ள 50% மரபணுக்களுடன், அப்பாவின் 50% மரபணுக்கள் (விந்து) இணையும் போது - அதாவது கருவுறும் போது - நம் முதல் உயிரணு உருவாகின்றது. அது தொடர்ந்து புரதங்களை உருவாக்கி பிளவடைந்து புதிய உயிரணுக்களை உருவாக்கின்றது. ஒவ்வொரு வகை உயிரணும் (இரத்தம், தோல், இருதயம், மூளை...) ஒவ்வொருவகை புரதங்களை தயாரிக்கும் நிபுணர்களாகின்றது.

கீழே உள்ள படம், நமது உட்கருவிலுள்ள மரபணுக்கள் (22 ஜோடி குரோமொசோம்கள் மற்றும் XY குரோமொசோம்கள்; குரோமொசோம் என்பது DNA மூலக்கூற்றை சுற்றியுள்ள ஓர் உறை) மற்றும் இழைமணிகளின் (உயிரணு ஆற்றல் உரு) மரபணுக்களை காட்டுகின்றது.
 • 1-22 ஜோடி குரோமொசோம்கள், ஒரு தொகுப்பு அம்மாவிடமிருந்தும் மற்றொன்று அப்பாவிடமிருந்தும் வந்தது.
 • X-குரோமொசோம் அம்மாவிடமிருந்தும், மற்றொரு X-குரோமொசோம் அல்லது Y-குரோமொசோம் அப்பாவிடமிருந்தும் வந்தது. XY இணைந்தால் ஆண்பாலாகவும், XX இணைந்தால் பெண்பாலாகவும் இருக்கும்.
 • MT என்பது இழைமணி மரபணுக்கள். இழைமணிகள் நம் உயிரணுவில் ஆனால் உட்கருவுக்கு வெளியே இருக்கும். இது அம்மாவிடமிருந்து குழந்தைகளுக்கு செல்கின்றது.
 • ஒவ்வொரு குரோமொசோமிலும் உள்ள மொத்த படிகள் (Bases), மரபணுக்கள் (Genes), ஒரு-படி-பலவுருமாற்றங்கள் (SNPs) குறிக்கப்பட்டுள்ளது. ஒரு-படி-பலவுருமாற்றங்கள் என்பது ஒரு மரபணுவிலுள்ள ஒரு படியில் ஏற்படும் மாற்றங்களை குறிக்கின்றது. அதன் ஒவ்வொரு மாற்றமும் வெவ்வேறு பண்புகளை தரும்.

மொத்தத்தில் ஒவ்வொரு மரபணு வரிசையில், ஒரு-படி-பலவுருமாற்ற இடத்தில் உள்ள படியை கொண்டு, நமது பண்புகளை கணிக்க முடியும். சில உதாரணங்கள்:
 • எந்த நோய்கள் (நீரழிவு, மூட்டுவலி, மாரடைப்பு, புற்று, மூளை நோய்கள், மன நோய்கள், ...) நமக்கு வர அதிக அல்லது குறைந்த வாய்ப்புள்ளது?
 • எந்த மருந்துகள் எப்படிப்பட்ட சிகிச்சை அதிக பலன் தரும்?
 • மதுபானம் போன்ற போதை பொருள்களும் எளிதாக அடிமையாகும் பண்புள்ளதா?
 • காப்பியை எளிதாக ஜீரணிக்கும் பண்புள்ளதா?
 • தோல், கண், முடி நிறங்கள் என்ன?
 • நிற மற்றும் சுவை குருடு உள்ளதா? பலருக்கு பலவகையான கசப்பு சுவையை அறிய இயலாது.
 • வலி உண்ர்திறன் அதிகமாக அல்லது குறைவாக உள்ளதா?
 • வழுக்கைத்தலை வர அதிக அல்லது குறைந்த வாய்ப்பு உள்ளதா?
 • வெவ்வேறு வகை அறிவுதிறனின் வாய்ப்பு விகிதம் என்ன?
 • தற்காலிக மற்றும் நீண்ட ஞாபகசக்தி திறன் அதிகமாக அல்லது குறைவாக உள்ளதா?

நம் இழைமணி மரபணுக்கள் அம்மாவிடமிருந்து குழந்தைகளுக்கு செல்கின்றது. இவ்வாறு செல்லும் போது சிறு மரபணு பிழைகள் (மாற்றங்கள்) ஏற்படலாம். ஆதி மனிதனிலிருந்து தலைமுறை-தலைமுறையாக இதில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டு நமது மூதாதையோர்களை தடம்பிடிக்க முடியும். இவ்வாறு 200,000 வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் பரிணாம வளர்ச்சியடைந்த நமது முதல் மனித சந்ததியை தடம்பிடிக்க முடியும் (அதை அப்படியே இன்னும் பின்னோக்கி சென்று நமது நெருங்கிய உறவினர்களான குரங்கினத்தோடும் தடம்பிடிக்கலாம்). இழைமணி மரபணுக்களில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களை கொண்டு மனித இனத்தின் குடிபெயர்ச்சியை பல கிளை-சந்ததிகளாக (Haplogroups) பகுக்கலாம். இது தாய்வழி கிளை-சந்ததிகள் (இது போலவே, Y-குரோமொசோமின் மரபணு பிழைகள் கொண்டு தந்தைவழி கிளை-சந்ததிகளும் பகுக்கப்பட்டுள்ளது). உதாரணமாக பெருபான்மையான தென்-இந்தியாவினர் M-கிளை-சந்ததியின் சந்ததிகளாக இருக்கும். M-கிளை-சந்ததி 60,000 வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய சமயத்தில் L3-கிளை-சந்ததியிலிருந்து பிரிந்தது. L3-கிளை-சந்ததி L1-கிளை-சந்ததியிலிருந்து பிரிந்தது. கீழேயுள்ள படம் மனித குடிபெயர்ச்சியுடன் அதன் கிளை-சந்ததிகளையும் காட்டுகின்றது (இது 500 வருடங்களுக்கு முன்புவரை தான் பொருந்தும். அதன் பிறகு, கண்டங்களுக்கிடையே பயணம் எளிதாகி போனதால், இன்று பல கிளை-சந்ததி மனிதர்களையும் பல நாடுகளில் காணலாம்).
நாளை என்ன சாத்தியம் என்பதற்கு இது ஒரு ஆரம்பம் தான்! தான் யார், தன்னுடைய வரலாறு என்ன, தன்னுடைய உடலெழுத்து, தலையெழுத்து என்ன என்பதை அறிந்து கொண்ட முதல் விலங்கு மனிதன்! இதை கொண்டு, அவன் உயர்நிலை மாமனித இனமாகலாம்! பாரதி கம்பன் கவிதைகள் எழுதியதை போல், வருங்காலத்தில் புதிய தலைமுறை கவிஞர்கள் மரபணுக்களை எழுதலாம்!