28 November 2010

கலாச்சார சிறையிலே

விலங்குகளில் ஓர்-துணை சேர்க்கையிலிருந்து பல-துணை சேர்க்கை வரை பல வகைகளை காணலாம். சில பறவைகள் ஒரே ஒரு வாழ்க்கைத் துணையை மட்டுமே கொள்ளும். ஒன்று இறந்து போனாலும் (ஆணோ, பெண்ணோ) மற்றது அடுத்த பறவையை நாடாது. எந்த கலாச்சாரம் அதை அதற்கு கற்று கொடுத்தது? விலங்குகளில், பொதுவாக குழந்தைகளின் மேல் அம்மாவிற்கு பாசம் அதிகம். ஆனால் பொதுவாக மீன்களில், அப்பா தான் குழந்தைகளை பேணிகாப்பது. இந்த பாசங்களை எல்லாம் எந்த பண்பாடு கற்று கொடுத்தது? மனிதனின் அடிப்படை குணங்களும் அப்படியே!

மனிதன் ஒரு விலங்கு. அவனுடைய குணங்களை அவனின் மரபணுக்களும் சுற்றுசூழல்களும் நிர்ணயிக்கின்றன. எந்த ஒரு கறையானுக்கும் கறையான் புற்றை எப்படி கட்டவேண்டும் என்று தெரியாது. எந்த ஒரு கறையானும் அதன் கட்டமைப்பை வடிவமைக்கமும் இல்லை. ஆனால் அவற்றின் பண்புகளின் ஒன்று கூடிய செயல்பாடுகளின் வெளிபாடு (Emergence) தான் கறையான் புற்று. அது போலவே, மனிதர்களின் குணங்களின்...செயல்பாடுகளின் விளைவாக உருவாகும் சமூக வெளிபாடே கலாச்சாரத்தின்...பண்பாட்டின் அடிப்படை. மேலும், பல்வேறு காரணங்களுக்காக அன்றைய அறிவு மற்றும் சூழலுக்கு ஏற்ப, மனிதன் பல கட்டுபாடுகளையும்...சட்டதிட்டங்களையும் உருவாக்கி கொண்டான். நாளடைவில் அதில் பழகி போன மனிதன், அதன் உண்மையான காரண-காரியங்கள் எதுவும் தெரியவில்லை என்றாலும், அது இன்றைய சூழலுக்கு...அறிவுக்கு ஏற்றதாக இல்லை என்றாலும், அது தான் நடைமுறை, மரபு என்றும், அது தன் பண்பாடு, கலாச்சாரம் என்றும், அதை கட்டிக் காக்க தனக்குத் தானே சிறையிட்டு கொள்கின்றான். அந்த சிறையில் அவன் கொன்ற ஆன்மாக்கள் கோடான கோடி!

ஆனாலும், அந்த சிறைகளையெல்லாம் தாண்டி கலாச்சாரம் மாறி கொண்டே தான் இருக்கின்றது. அது பல்வேறு தலைமுறைகளில் மெதுவாக மாறுவதால் பொதுவாக மனிதன் அதை உணருவதில்லை. நேற்று வேறொன்றை தன் கலாச்சாரம் என்று போராடிய மனிதன், இன்று இடையிலே வந்த மற்றொன்றுக்காக போராடிக் கொண்டுள்ளான்.

கலாச்சாரம் ஒரு சமூகத்தின் பொருளாதாரம், சுகாதாரம், சந்தோசம் போன்ற பல வளங்களை நாளடைவில் நிர்மானிக்கின்றது. ஒரு கலாச்சாரம் அதன் கலாச்சாரத்தை வெளிப்படையாக அலசம் பாங்கும், பல புதியவற்றை ஏற்கும் பக்குவமும் கொண்டிருந்தால் அது முன்னேற்ற வழியில் வளர உதவும். ஏனென்றால் கலாச்சாரம் மாறி கொண்டே இருக்கும் ஒன்று. ஒரு நல்ல சமூகம் காண மனவியல், சமூகவியல், பொருளாதரம் பற்றிய பலவிசயங்களையும் அதன் சிக்கலான தொடர்புகளையும் அலசி ஆராய வேண்டும். அது மிகவும் சிக்கலான கடினமான காரியம் என்றாலும், மிகக் குறைந்த அவசியமான சமூக கட்டுபாடே, நிலையான தொடர்ந்த நீடித்த ஒரு நல்ல சமூதாயம் காண உதவும் என அறியலாம். அதில் முக்கியமானவை: தனி மனித உரிமை மற்றும் தனி மனித சுதந்திரம் (இதுவே இன்றைய நம் சட்டங்களுக்கெல்லாம் அடிப்படை).

தனி மனித உரிமை மற்றும் சுதந்திரத்தில் மற்றொரு முக்கிய அம்சமும் உண்டு: ஒருவன் அடுத்தவருக்கு தீங்கிழைக்காத பட்சத்தில், அவனுடைய உரிமையை...சுதந்திரத்தை பறிக்க நாம் யார்? அவனுடைய வாழ்க்கையை கேளி பேச நாம் யார்? இயற்கையை பற்றி, வாழ்க்கையின் நீள-அகல-ஆழத்தை பற்றி, அதன் அர்த்தத்தை பற்றி எந்த அளவிற்கு நமக்கு தெரியும்? நீங்கள் படிக்கும் இந்த எழுத்துகளை நான் எழுத உதவிய, அதை நீங்கள் படிக்க உதவிய, கணினியின் சூத்திரத்தை கண்டறிந்த கணினியின் தந்தையின் பெயர் ஆலன் ட்டுரின். அவன் ஓரினச்சேர்க்கையாளன் (Gay). அவனை பாவப்பட்ட ஜென்மம் என்று மனித சமூகம் தண்டித்து நாசப்படுத்தியது. அதில் அவன் தற்கொலை செய்து கொண்டான். அவன் ஆன்மா எவ்வளவு வேதனை அடைந்திருக்கும்! இது போன்ற மனிதர்களையும், திருநங்கை போன்ற மனிதர்களையும், மற்றும் எது போன்ற மனிதர்களையும் நல்லபடியாக வாழவிடுங்கள். அவர்களிலும் பல ஆலன் ட்டுரின்கள் உள்ளனர். பல ஆன்மாக்களை வாழவைத்ததோடு, அவர்களின் சேவையில் மானிடமும் செழிக்கும்!

புலி: ஆனால், ஓரினச்சேர்க்கையாளர்களால் குழந்தைகள் அதனால் சமூகம் கெட்டுவிடாதா? அது மேலும் அதிகரிக்காதா?

ஆமை: அது இயற்கையிலே நிகழும் ஒன்று. மற்ற விலங்குகளிலும் அவை உண்டு. அப்படியெனில் இயற்கையே அப்படி தான்! அதை மூடிமறைத்த உன் வேசம் போதும். நாமும் இயற்கையில் ஒரு அங்கம். அந்த நம்பிக்கையில் வேசம் கழைத்து வெளியே வா! ஓரினச்சேர்க்கையாளர்களை நாம் நல்லபடியாக வாழவிட்டால், அவர்களின் தொகை உண்மையிலே குறையலாம்; அது தெரியுமா? (தெரியவில்லையா, தேடுங்கள்; அந்த தேடலில் வாழ்வின் அர்த்தங்களும் கிடைக்கலாம்! வாழ்வின் நீள-அகல-ஆழங்களை உணரலாம்!).

குடித்து விட்டு பச்சை பச்சையாக நடுதெருவில் திட்டி கொண்டு சண்டையிடுவதை பார்க்கும் குழந்தைகள், திரைபடங்களிலும்...தொலைகாட்சிகளிலும் குத்துபாட்டுகளை பார்க்கும் குழந்தைகள், காதலிக்கும் ஒரு ஆணும் பெண்ணும் முத்தமிடுவதை பார்த்து கெட்டு போய்விடுவார்கள் என்று இச்சமூகம் அஞ்சுகின்றது. நமக்கு நாமே போட்டுக்கொண்ட முறையை மாற்றி, சிலர் திருமணமின்றி சேர்ந்து வாழ்வதை பார்த்து இச்சமூகம் கேளி பேசுகின்றது.

புலி: அப்படியே விட்டால், அமெரிக்காவைப் போல் நீலப்பட தொழில்கள் நம் கலாச்சாரத்திலும் வந்துவிடாதா?

ஆமை: வாழ்கை என்பது ஒரு சிக்கலான சமரச‌ம் என்பதை உணராமல், உடனே இப்படி பூதாகரமாக பெரிதிபடுத்தி பயமுறுத்தப் படுகின்றது! இப்படி கலாச்சாரம், கடவுள், மதம் பேரை சொல்லி பயமுறுத்தி தான், பல கோடி மக்களை கீழ் ஜாதி என சிலரால் அடக்கி வைக்க முடிந்தது. அப்படித்தான் தன் அம்மாவை, சகோதிரியை மொட்டையிட்டு நெருப்பில் தள்ள முடிந்தது.

தனிமனித நல்லது கெட்டதையெல்லாம் தாண்டி, சில விசயங்களை சமூகத்தில் எப்படி நிர்வகிக்க முடியும் என்பதை பார்க்க வேண்டும். ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் மதுபானங்கள் சட்டவிரோதமாக இருந்தது. நாமும் அப்படி கூட இருந்து பார்த்தோம். பிறகு நம் அரசே அதை எடுத்து நடத்தியதெல்லாம் அறிந்ததே. எனினும் சாராயம் (ஆல்கஹால்) மற்ற போதை பொருட்களை விட கெடுதல் என்கின்றார்கள் சில வல்லுனர்கள். நீல படங்கள் நம் ஊரில் சட்டபூர்வமாக அனுமதிக்க படவில்லையே தவிர, அது பல திரையரங்குகளில் ஒடி கொண்டுதான் உள்ளது. அதை இளவட்டங்களும், மற்ற வட்டங்களும் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். இப்படிபட்ட விசயங்கள் அனைத்தும், அமெரிக்காவில் தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடும் இல்லை; நம்மூரில் அதற்கு இணையாக அவை இல்லாமலும் இல்லை.

புலி: ஆனாலும் நம்முடைய கலாச்சாரம் பழமைவாந்த, பெருமைபட்டு கொள்ள வேண்டிய, கட்டிக்காக்க வேண்டிய ஒன்றல்லவா?

ஆமை: 50...100 வருடங்களுக்கு முன்பு வரை விதவைகளை மொட்டை இட்டு, நெருப்பில் தள்ளிய கலாச்சாரம் இது! முக்கால்வாசி மக்களை தீண்டதகாதவர்கள் என்று ஒடுக்கி வைத்த கலாச்சாரம் இது! இன்றும் அதன் அவலங்கள் பலவடிவில் நம் சமூகத்தில் உள்ளது. இன்றும் பச்சிளம் குழந்தைகள் வேலையிலும் விபச்சாரத்திலும் தள்ளப்படுகின்றார்கள். இந்தியாவில் இன்று ஒரு நாளைக்கு 6000 குழந்தையில் பசியால் சாகின்றார்கள். இது பால் நோய்கள் அதிகமாக கொண்ட சமூகமாகத் தான் உள்ளது.

இதில் நம் கலாச்சாரம் மட்டும் உயர்ந்ததென்று பீற்றி கொள்வதில் என்ன இருக்கின்றது? உலகிலுள்ள எல்லா கலாச்சாரத்திலும் நன்றும் தீதும் கலந்தே உள்ளது. பழமையை கட்டிக்காக்க நாம் ஏன் பின்னோக்கி செல்ல வேண்டும். அப்பன் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாய வேண்டாமா? முன்னோக்கி பார்! அதுவே நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் பெருமை!

புலி: நீங்கள் கூறுவதை முழுமையாக என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.

ஆமை: மனிதன் ஒரு விலங்கு. மற்ற விலங்களை போலவே குழுக்களை உருவாக்குகின்றோம், மற்றவர்களுடன் நேசம் கொள்கின்றோம், சண்டையிடுகின்றோம், உணவை தேடுகின்றோம், துணையை தேடுகின்றோம், கலவி புரிகின்றோம், காதலில் விழுகின்றோம், குடும்பம் அமைக்கின்றோம், குழந்தைகளை ஈணுகின்றோம், பேணுகின்றோம், முடிவாக வயதடைந்து சாகின்றோம். நாம் பெரிய விலங்கும் அல்ல, திடமான விலங்கும் அல்ல, வேகமாக விலங்கும் அல்ல. அப்படி எனில், மனிதனின் சாரம்...ஆன்மா எங்கே உள்ளது? அது அவனுடைய அறிவு தேடலில் உள்ளது! அப்படி தான் நாம் காலநிலை அறிந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தோம், நிலாவிலும் நம் காலடி பதித்தோம். கண்டதையும் கண்டபடி நம்பாமல், "எந்த ஒரு விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார்!" என்பதை மனிதன் உணரும் போது, சிறை சங்கிலிகளிலிருந்து அவன் விடுதலை பெறலாம்!

15 comments:

CorText said...

நண்பர் தெகா எழுதிய "கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு" (http://thekkikattan.blogspot.com/2010/11/template-post.html) என்ற பதிவில் நான் எழுதிய பின்னூட்டங்களின் தொகுப்பே இந்த பதிவு. அந்த தூண்டுதலுக்கு நன்றி தெகா!

Thekkikattan|தெகா said...

நல்ல அழகாக கோர்வையா கோத்து வைச்சிருக்கீங்க. எனக்கென்னவோ, கார்டெக்ஸ்ட் உங்க எழுத்தை எல்லாம் வாசிக்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ ஓரளவிற்கேனும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தை விட்டு தாண்டியிருந்தாலே முடியுமென்று படுகிறது.

இது போன்ற வாசிப்புகள் நமது மனத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் திறவுகோளாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

தொடர்ந்து எழுதி வாருங்கள்! தேடிப்பெறுபவர்கள் கண்டெடுத்துக் கொள்ளட்டும்.

மிக்க நன்றி, கார்டெக்ஸ்ட்! அவ்வப்பொழுது வந்து போங்க. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உரையாடுவோம்.

CorText said...

நன்றி தெகா! உங்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. தொடர்ந்து உரையாடுவோம். நேரம் கிட்டும் போதெல்லாம், கண்டிப்பாக எழுதுவேன்! :-)

RMS Danaraj said...

//கலாச்சாரம் ஒரு சமூகத்தின் பொருளாதாரம், சுகாதாரம், சந்தோசம் போன்ற பல வளங்களை நாளடைவில் நிர்மானிக்கின்றது. ஒரு கலாச்சாரம் அதன் கலாச்சாரத்தை வெளிப்படையாக அலசம் பாங்கும், பல புதியவற்றை ஏற்கும் பக்குவமும் கொண்டிருந்தால் அது முன்னேற்ற வழியில் வளர உதவும். எனென்றால் கலாச்சாரம் மாறி கொண்டே இருக்கும் ஒன்று. //

நல்ல பதிவு.அருமையான தமிழ் நடை.வாழ்த்துகள்

CorText said...

//RMS Danaraj said...

நல்ல பதிவு.அருமையான தமிழ் நடை.வாழ்த்துகள்
//

மிக்க நன்றி!

ஆ.ஞானசேகரன் said...

//கலாச்சாரம் மாறி கொண்டே இருக்கும் ஒன்று//

உண்மைதான்

ஆ.ஞானசேகரன் said...

//புலி: ஆனால், ஓரினச்சேர்க்கையாளர்களால் குழந்தைகள் அதனால் சமூகம் கெட்டுவிடாதா? அது மேலும் அதிகரிக்காதா?

ஆமை: அது இயற்கையிலே நிகழும் ஒன்று.//

இதுதான் என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.. இன்னும் இதற்கு ஆய்வு வேண்டும் என்ற வாதம் என்னிடம் இருக்கதான் செய்கின்றது

ஆ.ஞானசேகரன் said...

//புலி: நீங்கள் கூறுவதை முழுமையாக என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை///

ம்ம்ம்ம்ம்

ஆ.ஞானசேகரன் said...

பதிவு யோசிக்க வைக்கின்றது.... அதற்காக எல்லாம் சரிதான் என்று தோன்றவில்லை....

தொடந்து எழுதுங்கள் பாராட்டுகள்

CorText said...

//ஆ.ஞானசேகரன் said...

இதுதான் என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.. இன்னும் இதற்கு ஆய்வு வேண்டும் என்ற வாதம் என்னிடம் இருக்கதான் செய்கின்றது
//

ஓரினச்சேர்க்கை குணம் இயற்கையிலே நிகழும் ஒன்று என்பதற்கு எந்த ஆய்வும் தேவையில்லை. நீங்கள் சற்றே கண்ணை திறந்து பார்க்க வேண்டும். இதில் எந்த கருத்து வேறுபாடும் அறிவியலில் இல்லை. இது மனிதனிடத்தில் மட்டுமல்ல பெரும்பான்மையான விலங்குகளிடத்திலும் உண்டு; உதாரணமாக சில குரங்கினங்களில் அதிகமாக உள்ளது; சிங்கத்திடமும் இதை பார்க்கலாம். ஆனால், அது எந்த அளவிற்கு மரபியல், உடலியல் (ஹார்மோன்கள், மூளை அமைப்பு), சுற்று சூழல் (உணவு, வளர்ப்பு விதம்) போன்ற காரணங்கள் நிர்ணயிக்கின்றன என்பதில் இன்னும் ஆய்வு நடந்து கொண்டுள்ளது. பொதுவாகவே எந்த பாலின தன்மையும் மிகவும் சிக்கலான பல காரணங்களால் வெளிப்படுகின்றது.

http://www.news-medical.net/news/2006/10/23/20718.aspx
http://www.cbsnews.com/stories/2006/03/09/60minutes/main1385230.shtml

CorText said...

//ஆ.ஞானசேகரன் said...
பதிவு யோசிக்க வைக்கின்றது.... அதற்காக எல்லாம் சரிதான் என்று தோன்றவில்லை....
//

நூற்றுக்கணக்கான வருடங்களாக புரையோடி போன கருத்துக்களையெல்லாம் தாண்டி, நாம் வாழ்ந்த, வாழும் வட்டத்தையெல்லாம் தாண்டி, பல்வேறுவித பயத்தையெல்லாம் தாண்டி, ஒரே பதிவில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியும் என்று நானும் நினைக்கவில்லை. இவை நம் உணர்ச்சியில் ஊறிபோனவை. ஆனாலும் இது சிறிதேனும் யோசிக்க வைத்ததில் மகிழ்ச்சி தான்! :-)

CorTexT said...

சற்று முன் Deepa Mehta வினுடைய Water திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம்.

மதத்தின், கலாச்சாரத்தின் பெயரால் பச்சிளம் குழந்தைகளை விதவையாக்கி கொடுமைபடுத்தியிருக்கிறான் மனிதன். ஒரு புழு, பூச்சி, ஆடு, மாடு, குரங்கு என எந்த விலங்கினமும் கனவிலும் நினைக்க முடியாத காரியத்தை 100..50 வருடங்களுக்கு முன்வரை வீடு தோரும், தெரு தோரும் அரங்கேற்றிருக்கின்றான் (இது என்றே கி.மு விலோ, ஆதிகாலத்திலோ நடந்ததென்று நினைத்து கொள்ள வேண்டாம்). இது வெளிஉலகத் தொடர்பே இல்லாத எந்த பழங்குடி இனத்தினர்களால் கூட நினைக்க முடியாத கொடுமை.

வாழ்நாள் முழுவதும் விதவையாகவே வாழ்ந்த கிழவி ஒருவள் கடைசியில் ஒரு லட்டு சாப்பிடும் காட்சி நெஞ்சை கனமாக்கியது.

கடைசி காட்சியில் காந்தி சொல்லும் செய்தி அழகு: இது நாள் வரை கடவுள் தான் உண்மை என்று நான் நினைத்திருந்தேன். உண்மைதான் கடவுள் என்று இப்பொழுது நான் உணர்ந்துள்ளேன்.

2000 வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 340 இலட்சம் விதவைகள் இன்றும் இந்தியாவில் அதே கலாச்சாரத்தின் பிடியில்!

மனிதா, நீ கட்டி காக்க வேண்டியது கலாச்சாரம் அல்ல, அன்பு!

Thekkikattan|தெகா said...

என் வாழ்நாள் 200 வருடங்களையும் தாண்டும். அதனால் மானிடரின் குறிகிய பார்வையை மறந்து, சற்றே முன்னும் பின்னும் தூர பார்த்து விடுகின்றேன்.//

அருமையா சுருக்கி அழகா போட்டுருக்கீங்க. கொஞ்சம் இதன் சூட்சுமம் புரிந்து கொள்ள காலம் பிடிக்கும். அதன் கனம் அறிந்து கொள்ள!

//மனிதா, நீ கட்டி காக்க வேண்டியது கலாச்சாரம் அல்ல, அன்பு!//

நச்! தவறாக புரிந்து கொள்ளப்பட்டதின் விளைவே அந்த 340 லட்ச விதவைகள்...

Thekkikattan|தெகா said...

extra comment unrelated...

I guess you missed it -

http://thekkikattan.blogspot.com/2010/12/gfaj-1.html

CorTexT said...

கருத்துக்கு மிக்க நன்றி தெகா!

உங்கள் பதிவையும் விரைவில் படிக்கின்றேன்.