03 August 2009

அறிவு பேசினால்

நான் உனக்கு அறிவை தந்தேன்...
உலகை புரிந்து நடைபோட;
கருவிகள் செய்து உயிர்வாழ - மேலும்
காலநிலை கணித்து பயிர்செய்ய.
நான் உனக்கு அறிவை தந்தேன்...
தொற்று நோய்களை களைந்தெடுக்க;
கொடிய வியாதிகளுக்கு குணம்காண;
பெருங்கடலையும் ஆகாயத்தையும் தோற்கடிக்க;
அண்ட வெளியையும் வெற்றிகாண - மேலும்
உன் காலடியை நிலவிலும் பதிக்க!

நான் அறிவேன், நான் அறிவேன்...
நான் தான் உனக்கு அறிவை தந்தேன்...
உயிர்கொல்லும் ஆயுதங்கள் செய்ய;
அழிவுகாணும் அணுகுண்டுகள் செய்ய! - ஆனால்
அது உன் விலங்கின் உணர்ச்சி;
அது உன் மடமையின் கிளர்ச்சி;
சண்டையிட்டு போர்களம் காண! - ஆனால்
உன் கண்களை திற,
என்னுடன் சிகரம் ஏறு! - அங்கே
நான் அமைதியை காட்டுவேன்! - ஏனெனில்
ஆழ்ந்த அறிவு சமாதானம்!
உண்மையான நிர்வானம்!

நீ என்னை காண முடியும்...
உன் நீடித்த ஆவலில்;
உன் கேள்விகளில், சந்தேகங்களில் - முக்கியமாக
உன் திறந்த மனதில்!
அறிவே ஆற்றல் - ஆனால்
நான் அகங்காரமும் அல்ல!
கடைசி தீர்ப்பும் அல்ல! - ஏனெனில்
திறந்த மனது என் முன்நிபந்தனை!

பலநேரம், பலவற்றில்...
உன் மனதை மூடிக்கொண்டாய்;
குருட்டு நம்பிக்கைக்கு அடிமையானாய்!
அதன் ஆதாரமற்ற கொக்கரிப்புகளில்!
அதன் அகங்கார தீர்ப்புகளில்!
பாவங்கள் பற்றி பேசுகின்றாய் - கொடிய
நரகத்தின் தீயை பேசுகின்றாய் - உண்மையில்
மக்களை உயிருடன் எரிக்கின்றாய்;
அவர் ஆன்மாக்களை சபிக்கின்றாய்;
அவையெல்லாம் இந்த பூமியிலே!

உன் மனக்கண்ணை திற;
நான் இந்த உலகை காட்டுகிறேன்...
குருட்டு அகங்கார கொக்கரிப்பை விட,
மிகச் சிறப்புடனும், மாட்சியுடனும்!
உன் மனக்கண்ணை திற;
நான் நிதர்சனத்தை காட்டுகிறேன்...
மாயஜால வித்தையை விட,
பெரு வியப்புடனும், மேன்மையுடனும்!

சிந்தித்துப் பார்...
நீ சிந்திக்க முடியும் என்பதால்,
உனக்கு தெரியுமென எண்ணிவிடாதே,
சிந்திப்பது எப்படி நடக்கின்றதென்று!
நீ வாகனம் ஓட்டுகின்றாய் - அதன்
இயந்திரம் எப்படி இயங்குதென்று அறியாமல்!
நீ கேள்விகள் எழுப்ப முடியும் என்பதால்,
உனக்கு தெரியுமென எண்ணிவிடாதே,
அனைத்துக்கும் பதில் என்னவென்று!
அதற்கு பலகாலம் ஆகலாம் - அல்லது
என்றைக்குமே அகப்படாமல் போகலாம்!
அது எப்படியாகிலும் பராவாயில்லை...
உனக்கு தெரியாத போது, சொல்:
எனக்கு தெரியாது என்று!

ஆம், நீ என்னை காண முடியும்...
உன் நீடித்த ஆவலில்;
உன் கேள்விகளில், சந்தேகங்களில்;
நான் அகங்காரமும் அல்ல!
கடைசி தீர்ப்பும் அல்ல! - ஏனெனில்
திறந்த மனது என் முன்நிபந்தனை!
என் ஆரவாரமற்ற ஆரம்பம்,
நீ சொல்லும் துணிவான வார்த்தைகளில்...
எனக்கு தெரியாது!