11 October 2016

நாடக முக்கோணம்

ஸ்டீபன் கார்ப்மேன் (Stephen Karpman) உருவாக்கிய, உளவியல் சார்ந்த நாடக முக்கோணம் (Drama Triangle) மாதிரி மனித சமூக தொடர்புகளில், உறவுகளில் ஏற்படும் சண்டை, சச்சரவு, முரண்பாடுகளில் உள்ள அழிவுத்தரும், பயனற்ற மனநிலைகளை, அதன் தொடர்புகளை விளக்குகின்றது. மனிதன் நடத்தும் இந்த நாடக மேடையில் மூன்று பாத்திரங்கள் (மனநிலைகள்) - அது தலைகீழ் முக்கோண அமைப்பில் குறிக்கப் படுகின்றது.


(1) பலிகடா/ பாவப்பட்டவர் (Victim)
 • எப்பொழுதெல்லாம் நாம் எரிச்சல், வருத்தம், சலனம்இறுக்கம், ஏமாற்றம், அதிர்ப்தி, கோபமாக உணரும்போது, நம் உள்-உணர்வுகளுக்கு வெளியிலுள்ள வேறு எவரோ, எதுவோத் தான் காரணம் என நம்பும் போது, நாம் இந்த பலிகடா/பாவப்பட்டவர் பாத்திரத்தை ஏற்கின்றோம்.
 • இவரின் மனநிலை, "பாவம் நான்!" என்பதாக இருக்கும். இவர் தான் தீங்கிழைக்கப்பட்டதாக, முடக்கப்பட்டதாக நினைப்பார். மேலும் உதவியற்ற, நம்பிக்கையிழந்த, ஆற்றலற்ற, அவமானமான மனநிலையை உணர்வார். எந்தவித முடிவுகளை எடுக்கவோ, பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவோ, எதையும் முழுமையாக புரிந்து கொள்ளவோ முடியாத நிலையில் இருப்பார். வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்கவோ, உணரவோ இயலாது. எதிர்மறை எண்ணங்களை மேலும் மேலும் எண்ணெய் ஊற்றி வளர்ப்பார். 
 • நம் உள் மனநிலைகளுக்கு வெளிப்புற காரணிகளை முற்றிலும் காரணமாக்கும் போது, அவற்றின் கையில் நம் கட்டுப்பாட்டை, அதிகாரத்தை கொடுத்து விடுகின்றோம். மற்றவரை, மற்றவற்றை குறை கூறுவதை விடுத்து, நம்முடைய மனநிலைக்கு நாம் பொறுப்பு ஏற்காதவரை இதைத் தாண்டி நாம் வெளிவர முடியாது.
 • இவர் மற்ற இரு பாத்திரங்களை (சண்டைகாரர், மீட்பர்) நாடலாம், அல்லது அவற்றை இவரே தன் கையில் எடுக்கலாம் (பொதுவாக, சண்டைகாரர் மனநிலையை).
(2) சண்டைகாரர்/ கோபக்காரர் (Persecutor)
 • நம்முடைய சொந்த அல்லது நமக்கு தேவையானவர்களின் "பலிகடா/ பாவப்பட்டவர்" நிலையிலிருந்து இந்த மனநிலைக்கு செல்கின்றோம்.
 • இவர் அடம்பிடித்து, வற்புறுத்தும் மனநிலை, "எல்லாம் உன்னுடைய தப்பு!". மற்றவர்களை குறைகூறுவது, திட்டுவது, அடக்குவது, கட்டுப்படுத்துவது, அவர்களின் மீது கோபப்படுவது, அதிகாரப்படுத்துவது இவரின் நிலைப்பாடுகளாக இருக்கும். இவர் மற்றவர்களை விட உயர்ந்தவர், மேன்பட்டவர், நல்லவர், சிறந்தவர் என்ற மனநிலையிலும், எந்தவிதத்திலும் வளைந்து கொடுக்காத விரைப்பு தன்மையுடனும் இருப்பார்.
(3) மீட்பர்/ காப்பாற்றுபவர் (Rescuer)
 • இவரின் வார்த்தைகள், "நான் உன்னை காப்பாற்றுவேன்!" என்பதாக இருக்கும். தனக்கு எல்லாம் தெரியும், தான் எல்லாம் அறிந்தவர் என்பது இவரின் மனநிலையாக இருக்கும். அடுத்தவர்களை சரிசெய்வது, ஒழுங்குப்படுத்துவது, அவர்களுக்கு அறிவுரை சொல்வது இவரின் நிலைப்பாடுகளாக இருக்கும். மற்றவர்களை காப்பாற்ற, உதவ செல்லவில்லை என்றால் இவர் குற்ற உணர்வு கொள்வார். ஆனால், இவரின் காப்பாற்றும் நிலைப்பாட்டில் பல எதிர்மறை விளைவுகள் உண்டு. "பலிகடா/ பாவப்பட்ட" மனநிலையில் உள்ளவர் இவரைத் தாண்டி சுயமாக யோசிக்கவோ, சொந்த காலில் நிற்கவோ இயலாமல் இவரின் தயவிலே, இவரை சார்ந்தே வாழும் நிலையை உருவாக்கும். "பலிகடா/ பாவப்பட்ட" மனநிலையில் உள்ளவர் அந்த மனநிலையில் உள்ளதற்கு அனுமதி தந்து அவர்களை வளரவிடாமல் செய்யும். 
 • மீட்பர் தன்னுடைய கவனத்தை அடுத்தவர் மீது செலுத்துவதால், அது அவரின் சொந்த பிரச்சனைகளை, கவலைகளை மறக்க உதவும். அது அவரின் வெகுமதியாக இருக்கும். தன் பிரச்சனைகளை, கவலைகளை முழுமையாக நேரெதிர் கொள்ளாமல் தவிர்ப்பதே இவரின் உதவும் மனநிலைக்கு உண்மையான உள்காரணமாக இருக்கும். 
 • மேலோட்டத் தோற்றத்தில், மீட்பர் அடுத்தவரின் பிரச்சனைகளை தீர்ப்பது போலவும், அதற்காக கடினமாக முயற்சி எடுப்பதாகவும் இருக்கும். ஆனால், உள்புறத்தில் பிரச்சனைகள் தொடர அல்லது அதன் மூலமான சொந்த இலாபத்தை நோக்கி அவரின் செயல்கள் இருக்கும். உதவி செய்கின்றவர் என்ற பெருமை, அதனாலான இறுமாப்பு, அடுத்தவர் தன்னை சார்ந்து இருப்பதில் சந்தோசம் போன்ற பல்வேறு ஆழ்மன உந்துதல்கள் இருக்கும். 
 • பல நேரம் நிதர்சனம் சுடும். உண்மையான தீர்வுகள் எளிதாக இருப்பதில்லை. இதை ஏற்க "பலிகடா/ பாவப்பட்ட" மனநிலையில் உள்ளவர்களுக்கு மிக கடினமாக இருக்கும். இதை பயன்படுத்தி, மீட்பர்களில் சிலர் பல்வேறு ஆசைகள் கட்டியும், அதிசியங்கள் நிகழ்த்தியும் அவர்களை தன்வசப்படுத்தவர்.
இந்த மூன்று மனநிலைலும் உண்மையான, முழுமையான நம் ஆழ்மன ஆசைகள், தேவைகள், காரணங்கள் நமக்கு எளிதாக தெரிவதில்லை. பொதுவாக, நம் உள்மனம் சுயலாபத்தையும், குறுக்கு வழிகளையும் நாடுவதால், நாம் பிரச்சனைகளை தெளிவாக, முழுமையாக பார்ப்பதில்லை. இந்த மனநிலைகளிலிருந்து நாம் ஏற்படுத்தும் பாதிப்புகளை, சேதங்களை, அவலங்களை (நமக்கும், மற்றவர்களுக்கும்), நாம் உணர்வதில்லை.

இந்த நாடக முக்கோண பிடியிலிருந்து வெளிவருவதற்கு...
 • (1) முதலில் நாம் அதில் மாட்டிக் கொண்டதை உணர்ந்து, கண்டு கொள்ள வேண்டும். எரிச்சல், வருத்தம், சலனம், கோபம், இறுக்கம், ஏமாற்றம், அதிர்ப்தி போன்ற மனநிலையில் நாம் இருந்தால், அது நாம் நாடக முக்கோணத்தில் மாட்டிக் கொண்டதை சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம்சண்டைக்காரர், மீட்பர் மனநிலைகளை கண்டுகொள்வது கடினமாக இருக்கலாம். ஏனென்றால், அவற்றை நாம் மிக அமைதியான முறையிலும் செயல்படுத்தலாம்.
 • (2) நாம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் பொது, மனம் தெளிவற்ற நிலையிலும், அறிவுபூர்வமாக எதையும் செயல்படுத்த முடியாத நிலையிலும் இருப்போம். அப்பொழுது, மனதில் சற்றே இடைவெளி கொடுத்து, நாம் எப்படி உணர்கின்றோம், உண்மையில் நமக்கு என்ன நடக்கின்றது என்பதை நிதானமாக அறிந்து கொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில் எதையும் செய்யாமல், எதையும் பேசாமல் இருப்பது நன்றுஅதற்கு நமக்கு நாமே கட்டுப்பாட்டை கொடுத்து, வாக்குறுதியை கொடுத்து, அதற்கான மனப் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக, சில சுய-உணர்வோடான சுவாசத்தை மேற்கொள்ளலாம்; சிறிய நடை பயணம் செல்லலாம்; மனந்தெளிநிலை தியானம் செய்யலாம்.
 • (3) நம் உணர்ச்சிகளுக்கு, மனநிலைகளுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். அடுத்தவரை, மற்றவற்றை குறைகூறுவதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர வேண்டும். அதற்காக, நம் உணர்சிகளை கட்டுப்படுத்தி, அடக்கி வைப்பதும் நல்லதல்ல. நம் உணர்வுகளை அறிந்து கொண்டு, அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் உணர்ச்சிகளுக்கும், தேவைகளுக்குமான தொடர்புகளை கண்டுகொள்ள வேண்டும். பெரும்பாலும், நம் உணர்சிகள் நாம் எந்த ஒன்றையும் எந்த அர்த்தத்தில் பார்க்கின்றோம் என்பதில் இருக்கும்பலநேரம், அது நம் தவறான நம்பிக்கைகளினாலும், நம் பயத்தினாலும் ஏற்பட்டதாக இருக்கும். நாம் நம் ஊர்வன மூளையின் பயம்-சார்ந்த சிந்தனைகளிலிருந்து வெளிவந்து, நம் பாலூட்டி மூளையின் உணர்ச்சி வசத்திலிருந்து வெளிவந்து, நிதானமான மனநிலைக்கு வரும்போது மனதில் தெளிவு பிறக்கலாம்.
நம் மனம் உணர்ச்சி வசத்திலிருந்து, நாடகத்திலிருந்து முழுவதும் விடுபட, சில வினாடிகள், நிமிடங்கள், நாட்கள், மாதங்கள், அல்லது வருடங்கள் ஆகலாம். அதுவரை, சம்மந்தப்பட்ட நபருடனான தொடர்புகளை ஒரு பாதுகாப்பான எல்லைக்குள் வைத்துக்கொள்ளலாம். மேலும், மேலும் நம்மையும், அடுத்தவரையும் காயப்படுத்தி கொண்டு இல்லாமல், நம் தொடர்புகளை எளிமையான முறையில் குறைத்துக் கொள்ளலாம்.

உணர்ச்சி வசத்திலிருந்து, நாடகத்திலிருந்து முழுவதும் விடுபட்ட நிலையில், தேவைப்பட்டால் அதுபற்றி சம்மந்தப்பட்ட நபருடன் உரையாடலாம். அது அடுத்தவரை குறைகூறுவதற்காகவோ, அவர் மீது பழிபோடுவதற்காகவோ இல்லாமல், நம் சூழல் மற்றும் உணர்வுகளை மட்டுமே சார்ந்ததாக இருக்க வேண்டும். அது மறைமுகமாக இல்லாமல், எந்தவித உள்குத்தம் கொண்டு இல்லாமல், எளிமையாக நேர்மையாக இருக்க வேண்டும். மேலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், நம் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதாக மட்டுமே இருக்க வேண்டும். அவர் எப்படி எடுத்துக் கொள்கின்றார் என்பது அவரின் உரிமை, அது அவரின் வாழ்கை. மேலும், மேலும் அதை கிண்டி, நம்மையும், அடுத்தவரையும் காயப்படுத்திக் கொண்டு இருக்காமல், அதை தாண்டி நாம் பயணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கோபத்தில் சில நேரம் நாம் செய்யும் திறமையற்ற அல்லது முறையற்ற செயல்களுக்கு வேண்டுமானால் சாக்குப்போக்கு சொல்லிக் கொள்ளலாம், ஆனால் எந்த ஒன்றுக்காகவும், அது எவ்வளவு பெரியது என்றாலும், எவரையும் தொடர்ந்து மனத்தளவிலோ, சொல்லளவிலோ, செயலளவிலோ கொடுமைப் படுத்துவது, சித்திரவதை செய்வது மிகப்பெரிய கொடூர செயல்.

நாடக முக்கோணத்திற்கு ஒரு மாற்றுமுறை முக்கோணம் - தலைகீழ் நாடக முக்கோணம், மாற்றுமுறையில் நேராக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய பண்புகள்: பிரச்சனைகளை, சச்சரவுகளை, முரண்பாடுகளை விழிப்புணர்வுடனும், அறிவுடனும், அன்புடனும், பொறுப்புடனும் அணுகுவது; நாம் யாரை விடவும் தாழ்ந்தவரோ, உயர்ந்தவரோ இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து கொள்வது.


(1) படைப்பாளி/ பொறுப்பாளி (Creator)
 • முதலில் வாழ்க்கையின் வலி/துயர/துக்கங்களை ஏற்று கொள்வது. அது வாழ்வின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ளாதவரை, நாம் அடுத்தவரை, மற்றவற்றை குறை சொல்லி கொண்டு, அல்லது மீட்பர்களின் கையில் மாட்டிக்கொண்டு தான் இருக்க முடியும். நாம் நம் வாழ்க்கையின் படைப்பாளியாக/ பொறுப்பாளியாக இருக்க முடியாது.
 • ஒரு படைப்பாளியாக பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் கிண்டி கொண்டிருக்காமல், அவற்றுக்கு பொறுப்பேற்று நல்ல தீர்வுகளை நோக்கி கவனம் செலுத்துவது.
 • நம் தேவையற்ற பயங்களை எதிர்கொண்டு, புதிய வழிகளை கண்டுகொள்வது, அதை செயல்முறை படுத்துவது. புதிய மனத் திறமைகளை வளர்ப்பது.
(2) தெளிவுபடுத்துபவர்/ சவால்கொடுப்பவர் (Challenger)
 • பலிகடா மனநிலையை தெளிவுபடுத்துவது. தேவைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் இடையிலான தொடர்புகளை விளக்குவது.
 • தண்டிக்கும், குறைகூறும் மனப்பான்மை இல்லாமல், தற்போதைய பலிகடா நிலையின் அவலங்களை கேள்விகள் கேட்டு, சவால்கள் கொடுத்து, பலிகடா மனநிலையிலிருந்து படைப்பாளி/ பொறுப்பாளி நிலைக்கு படிப்படியாக உறுதியான நிலையில் அழைத்துச் செல்து.
(3) பயிற்சியாளர்/ ஊக்குவிப்பவர் (Coach)
 • மீட்பருக்கும், பயிற்சியாளருக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, ஒவ்வொருவரும் ஒரு படைப்பாளியாக பொறுப்புடன் தன்னுடைய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டு, முடிவுகளை சுயமாக எடுக்க முடியும் என்று நம்புவது.
 • கேள்விகள் கேட்டு, விளக்கி படைப்பாளியை தெளிந்த, அறிந்த முடிவுகளை எடுக்க உதவுவது. அவர் சுயமாக சொந்தக் காலில் வளர உதவுவது.
 • பயிற்சியாளர் அன்புடனும், அக்கறையுடனும், கவனத்துடனும், பொறுப்புடனும் அணுகினாலும், ஓர் எல்லைத்தாண்டி அடுத்தவருக்காக தீர்வுகளை, முடிவுகளை எடுக்கக் கூடாது.
அடுத்தவர்களுக்கு உதவுவது என்பது ஒரு உயர்ந்த மனநிலை. ஆனால், அது நம் தெளிந்த மனநிலையின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். அது நம்முடைய பிரச்சனைகளை, கவலைகளை மறக்க, தவிர்ப்பதற்கான வெளிப்பாடானால், அது நமக்கும், அடுத்தவருக்கும் மேலும் துயரங்களையே தரும். ஒரு நல்ல ஆசிரியர், மீட்பராக இல்லாமல் பயிற்சியாளராக இருக்க முயற்சிக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை ஆரம்பத்தில் மீட்பர் நிலையிலிருந்து பாதுகாத்தாலும், அவர்கள் வளர வளர, பயிற்சியாளர் நிலைக்குச் சென்று அவர்களை சொந்த காலில் வளர விட வேண்டும். நம்மை, நம் வாழ்க்கையை யாரோ ஒருவர் காப்பாற்றுவார், பார்த்துக்கொள்வார் என நம்பும் வரை, உண்மையில் நாம் இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை என்பதாகவே இருக்கும். அதுவரை நாம் பலிகடா நிலையில் உள்ள பாவப்பட்ட ஜென்மங்களே!


Reference:

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

கடைசி வரிகள் நிதர்சனம்....

Ramesh Ramar said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper