17 June 2011

காண்பதெல்லாம்...

தனி ஒரு நபராக, சுயநினைவு (Consciousness) என்பது நம் ஒவ்வொருடைய அனுபவத்திலும் மிக நெருங்கிய அன்னோன்யமான ஒன்று. ஆனால் நம் அறிவுக்கோ மிகக் குறைவாக எட்டிய ஒன்று. இந்த மிக நெருங்கிய தற்சார்புடைய அனுபவத்தை, மனதைப் பற்றிய வெளிச்சார்புடைய அறிவாக மக்கள் தவறாக எடுத்துக்கொள்கின்றனர். அதனால் தான், பல்லாயிரம் வருடங்களாக மனதை பற்றி பல்வேறு அரை வேக்காடான கருத்துக்களை நம்பிக் கொண்டுள்ளனர். முறையான ஆராய்ச்சிகளும், ஆதாரங்களும் மாறுபட்ட கோணத்தை காட்டுகின்றன.

சுயநினைவை முதல்-நிலை-சுயநினைவு, மேல்-நிலை-சுயநினைவு, தன்-சுயநினைவு என பலவாறு பகுக்கலாம். அதில் பார்த்தல், கேட்டல் போன்ற நம் உணர்வுகள், சுயநினைவில் முதல் நிலையில் உள்ளவை. அதிலும் பார்வையை, நம் அனுபவத்தில் மிக தெளிவான, திடமான ஒன்றாக கருதுகின்றோம். அதனால் தான், "ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்" என்கின்றோம். அப்படிப்பட்ட பார்வையை ஒரு உதாரணமாக கொண்டு சுயநினைவை பற்றிய சில எளிய அடிப்படை உண்மைகளை அறிய முயலும் ஒரு தேடல் இது.

நாம் பார்ப்பது எப்படி? கண்களால் அல்ல, மூளையால் பார்க்கின்றோம். கண் என்பது புகைப்படக் கருவி போல் ஒளிச் செய்திகளை சேகரிக்கும் ஒரு புலன் உருப்பு. அது ஒளிச் செய்திகளை மின்-அலைச்-செய்திகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகின்றது. இந்த செய்திகளை கொண்டு, கோடுகள், விளிம்புகள், ஓரங்கள், நிறங்கள், உருவங்கள், பொருட்கள், முகங்கள், மனிதர்கள், இயக்கங்கள் என படிப்படியாக பல்வேறு பாங்குகளை மூளை அடையாளம் கண்டுகொள்கின்றது. மூளை இவற்றை எப்படி அடையாளம் கண்டுகொள்கின்றது? நாம் வளரும் போது, இந்த பாங்குகளை படிப்படியாக நம் மூளை கற்றுக் கொண்டு அதற்கேற்ப நரம்பணு-வலைச்சுற்றுக்களை (Neuronal Circuitry) உருவாக்குகின்றது (மேலும்: அறிவின் மூலம்). இவை நம் மூளை உருவாக்கிய உலக மாதிரிகள். முடிவாக, இந்த மாதிரிகளை உணர்வதையே, நாம் பார்த்தல் என்கின்றோம்.

மூளை உருவாக்கிய மாதிரிகளே, நாம் உணரும் உலகம். ஆக, நாம் பார்ப்பது/உணர்வது அனைத்துமே ஒருவகையில் மாயை போன்றது தான். இதில் ஏற்படும் சில குழறுபாடுகளை தான், ஆவியென்றும், பூதமென்றும், பேய் பிடித்ததென்றும், சாமி பிடித்ததென்றும், கூடுவிட்டு-கூடு பாய்தல் என்றும் மக்கள் கூறுகின்றனர். இந்த மாயையை நாம் பொதுவாக உணருவதில்லை என்றாலும், பல்வேறு மாயப் படங்கள் மூளை-உருவாக்கிய-மாதிரிகளுக்கும் வெளியுலக-நிதர்சனத்திற்கும் உள்ள வேறுபாட்டை சற்றே வெளிப்படையாக அறிவிக்கின்றன. கீழே உள்ள மாயப் படங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். இப்பொழுது சற்றே அனுபவபூர்வமாக பாருங்கள். இது உங்கள் அடிப்படை சுயநினைவை பற்றிய உங்கள் அனுபவம். (இங்குள்ள படங்களை சொடுக்கி பெரிது படுத்தலாம்)

(இந்த இரண்டு படங்களும் அச்சு மாறாமல் ஒரே படங்கள் தான்)

(A மற்றும் B கட்டத்தில் உள்ள நிறங்கள் அப்படியே ஒன்றுதான். இப்படத்தை காகிதத்தில் நகழெடுத்து, இந்த கட்டங்களை வெட்டி எடுத்து அருகருகே வைத்து பார்க்கவும். நிறங்கள் என்பது வெளியுலக-நிதர்சனத்தில் எங்கும் இல்லை. அவை மூளை-உருவாக்கிய-மாதிரியின் அம்சங்கள். (மேலும்: வண்ண ஆன்மீக உலகம்))


(இது எந்த இயக்கமும் அற்ற அசைவற்ற படம்)(உள்ளீடற்ற முகம். இது ஏமாற்று வித்தை அல்ல. முகம் பொதுவாக வெளி நோக்கியே இருப்பதால், உள்ளீடற்ற பக்கத்தையும் வெளிநோக்கிய முகமாக மூளை அனுமானிக்கின்றது. அந்த மாதிரியையே நாம் உணருகின்றோம் – நமது அறிவு பகுதி மூளைக்கு அது உண்மையல்ல என்று தெரிந்தாலும் கூட!)

பார்ப்பது என்பது ஒளி-அலைகளை மின்-அலைகளாக மாற்றி அதை ஆராய்ந்து அதிலுள்ள பல்வேறு பாங்குகளை கண்டறிவதென்றால், அதற்கு சில குறிப்பட்ட நேரம் ஆகவேண்டுமே. பிறகு எப்படி நாம் உடனடியாக பார்க்கின்றோம்? நாம் உடனடியாக பார்ப்பதில்லை. ஒன்றை ஒரளவு உணர ஆரம்பிக்கவே, தோராயமாக 50 மில்லி-வினாடிகள் ஆகும். நிறம், இயக்கம் என பார்வையின் பல்வேறு பண்புகள், மூளையின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு கால-அளவில் கணிக்கப்படுகின்றன (இதில் தொடர் மற்றும் இணை கணிப்புகள் அடக்கம்). ஆக, நாம் எப்பொழுதும் தாமதமாகவே பார்க்கின்றோம், உடனடியாக/நேரடியாக பார்ப்பதில்லை. மேலும், தொடர்ச்சியாகவும் பார்ப்பதில்லை. தோராயமாக ஒவ்வொரு 50 மில்லி-வினாடிக்கு ஒரு முறை, நாம் பார்ப்பது மூளையில் படம் பிடிக்கப்பட்டு அதன் பாங்குகள் கணிக்கப்படுகின்றன. நம் மூளை காட்சியை தொடர்ச்சியாக பார்ப்பது போன்ற மாயையை உருவாக்குகின்றது. அதனால் தான், படச்சுருளிலுள்ள தனிப்பட்ட படங்களை வேகமாக ஓட்டி காட்டும் போது திரைப்படமாக கண்டுகளிக்கின்றோம்.

ஒவ்வொன்றையும் கண்டுகொள்ள நேரம் தேவைப்படும்போது, நாம் எப்படி பலவற்றை இவ்வளவு வேகமாக கண்டுகொள்கின்றோம்? உதாரணமாக ஒரு வீட்டில் நுழைந்த உடன்! இதும் ஒரு மாயை தான். நாம் எல்லாவற்றையும் உடனடியாக கண்டுகொள்வதில்லை. சூழ்நிலை மற்றும் கடந்தகால நினைவை பொருத்து, நம் மூளை ஏற்கனவே மூளையில் சேமித்தவற்றை வார்ப்புருக்களாக (Templates) பயன்படுத்தி, தேவை மற்றும் முக்கியத்துவத்திற்கு ஏற்ப அங்குள்ள ஒவ்வொரு பொருட்களையும், உருவங்களையும் ஒன்றன்-பின்-ஒன்றாக பூர்த்தி செய்கின்றது. அதனால் தான், ஒரே மாதிரியான இரண்டு படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை கண்டுகொள்ள நேரமாகின்றது.

(இந்த அவரை விதைகளுக்கிடையே ஒரு முகம் உள்ளது. கண்டுபிடிக்கவும்)

(முகத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், ஒரு சிறு குறிப்பு: படத்தின் கீழ் பகுதி. கீழே உள்ள எளிய சோதனையை முழுமனதோடு முயற்சி செய்யவும். ஏனெனில் இது ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவம். இங்கு இரண்டு அணிகள் உள்ளன. அதில் வெள்ளை-உடை-உடுத்திய அணி எத்தனை முறை பந்தை பரிமாறி கொள்கின்றனர் என்பதை கணக்கிடவும். எண்ணிக்கை சற்றே தவறிபோனாலும், நிறுத்தாமல் தொடர்ந்து கணக்கிடவும்)பெரும்பான்மையானவர்கள் "அதை" பார்க்க தவறிவிடுகின்றனர். நாம் எல்லாவற்றையும் பார்ப்பது போல் தோன்றினாலும், சூழ்நிலைக்கேற்ப நம் மூளை சிலவற்றை தேர்ந்தெடுத்தும், மற்றவற்றை தவறவும் விடுகின்றது. ஏனெனில், எல்லாவற்றையும் அவ்வளவு விரைவாக கண்டுகொள்ள தேவையான வேகமோ, திறனோ நம் மூளைக்கு இல்லை.

மூளையின் நரம்பணுக்களுக்கு இடையே நிகழும் மின்-துடிப்புகளின் வேகம் சில 10-கள் முதல் சில 100-கள் வரை உள்ள ஹெர்ட்ஸ்கள் (Hz = ஒரு வினாடியில் நிகழும் துடிப்புகள்) இருக்கும் (இப்பொழுதுள்ள கணினியின் வேகம், சில 1,00,00,00,000-கள் ஹெர்ட்ஸ்கள் - GHz). மூளையின் மின்-துடிப்புகளின் வேகம் குறைவாக இருந்தாலும், இணை-கணிப்பு (Parallel Processing), வார்ப்புரு-பூர்த்தி-செய்தல் (Template Filling) போன்ற பல்வேறு உத்திகளை பயன்படுத்தி அதை ஓரளவு ஈடு செய்கின்றது. நரம்பணு-மின்-துடிப்புகளின் வேகம் ஏன் ஒரு சிறு வரம்புக்குள் உள்ளது? நரம்பணுக்கள் வேதி-அயனிகளை மின்னேற்றி (சேகரித்து), மின்னிறக்கி (வெளியேற்றி) மின்-துடிப்புகளை உருவாக்குகின்றது. இப்படி மின்னேற்றி தேவையான மின்னழுத்ததை உருவாக்க சில குறைந்தபட்ச நேரம் தேவைப்படுகின்றது.

மேலும், மூளை வேலை செய்ய அதிகமான ஆற்றல் தேவைப்படுகின்றது (நம் கால்களுக்கு இணையான அளவு). அதனால் பரிணாம வளர்ச்சி பார்வையில், மூளையின் அளவை அதிகரிப்பதோ, மூளையின் வேகத்தை அதிகரிப்பதோ அதிக செலவீனமாக ஒன்று. சாதாரண சமயங்களில், மூளை ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச தேவையான வேகத்தில் வேலை செய்கின்றது. ஆனால், மிக எச்சரிக்கையான, ஆபத்தான சமயத்தில் (உதாரணமாக, ஒரு ஆபத்திலிருந்தோ, விபத்திலிருந்தோ தப்பிக்கும் கணத்தில்) மூளை வேகமான வேகத்தில் வேலை செய்யும். அதனால், மூளையால் உலக செய்திகளை மேலும் வேகமாக கணிக்க முடியும். இப்படிப்பட்ட சமயங்களில், வெளி-உலக-இயக்கங்கள் மெதுவாக செல்லது போல் தோன்றும். வெளி-உலக வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், மூளை சாதாரண வேகத்தை விட வேகமாக கண்டுகொள்வதால், வெளி-உலக-இயக்கங்கள் மெதுவாக செல்வது போல் தோன்றுகின்றது (இதை உருவகப்படுத்தயே Slow-Motion எனப்படும் மெதுவாக செல்லும் காட்சிகள் திரைப்படத்தில் அமைக்கப்படுகின்றன). பல வெற்றிகரமான விளையாட்டுவீரர்களின் மூளை, இதை விளையாட்டுகளின் போதும் செயல்படுத்தலாம். நாம் வயதடையும் போது, மூளையின் வேகமும் மெதுவாக குறைகின்றது. அதனால், வெளி-உலகம் வேகமாக செல்வது போல் தோன்றும்.

5 comments:

CorTexT said...

நிறக்குருடு, சில-நிறங்கள் குருடு, இருவேறு உணர்வுகள் இணைந்து தோன்றல் (Synesthesia), பார்வை குருடு... என பார்வையில் மனிதர்களுக்கிடையே பல்வேறு வெறுபாடுகள் உள்ளன. நம் கண்களில் ஒரு குருட்டுப்புள்ளி உள்ளது. அதாவது கண்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த புலன்-உணர்வு செல்களும் இல்லை. அதை ஒரு எளிய முறை கொண்டு நம்மால் கண்டுகொள்ள முடியும்.

சார்வாகன் said...

அருமை
முன் மாதிரி இல்லாத ஒன்றை நம்மால் உணர முடியுமா?.கனவில் முன் பின் பார்த்திராத ஒரு உ(அ)ருவம் பார்க்கிறோம் என்றால் அது குறித்து நம் மன‌தில் ஏதோ ஒரு முன் மாதிரி பிம்பம் இருந்தால் மட்டுமே சாத்தியமா?.
செவிப்புலனகள்,காதுல் கேட்கும் அனுமாஷ்யக் குரல்[சிகோஃபெரனியா] பற்றி ஒரு பதிவிட வேண்டுகிறேன்.
நன்றி

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சதுரங்கக் கட்டங்கள் ஏ வும் பி யும் ஒன்றென்று நம்ப இயலவில்லை :) வெட்டி ஒட்டிப் பார்க்க வேண்டியது தான்...

சரியாக எண்ணிவிட்டேன், ஆனால் கொரில்லாவை முழுசாக மிஸ் செய்துவிட்டேன் :))

நல்லதொரு இடுகை.. எனது கூகிள் பஸ்ஸில் இந்தக் காணொளியைப் பகிர்ந்து கொண்டேன், உங்களது இடுகைக்குச் சுட்டியுடன்.. நன்றி..

CorTexT said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
சதுரங்கக் கட்டங்கள் ஏ வும் பி யும் ஒன்றென்று நம்ப இயலவில்லை :) வெட்டி ஒட்டிப் பார்க்க வேண்டியது தான்...//
வாங்க எல் போர்ட்! முடிந்தால் Color Printout எடுக்கவும். இப்படத்தை Photoshop, Paint போன்றவற்றை கொண்டு, B யை Cut or Copy செய்து A அருகில் Paste செய்து கணினியிலே பார்க்கலாம்.

//சரியாக எண்ணிவிட்டேன், ஆனால் கொரில்லாவை முழுசாக மிஸ் செய்துவிட்டேன் :))//
பலே! நான் முதலில் பார்த்த போது எண்ணிகையையும் கோட்டை விட்டேன், கொரில்லாவையும் கோட்டை விட்டேன்! :-) இதை எந்த ஒழுங்கான அறிமுகமும் இன்றி எதேச்சையாக பார்த்ததால் இருக்கலாம். ஆனாலும் வெகுநாட்கள், அது நம் பார்வையை பற்றி யோசிக்க வைத்தது.

//நல்லதொரு இடுகை.. எனது கூகிள் பஸ்ஸில் இந்தக் காணொளியைப் பகிர்ந்து கொண்டேன், உங்களது இடுகைக்குச் சுட்டியுடன்.. நன்றி..//
மிக்க நன்றி!!!

CorTexT said...

//சார்வாகன் said...
அருமை//

மிக்க நன்றி சார்வாகன்!!!

//முன் மாதிரி இல்லாத ஒன்றை நம்மால் உணர முடியுமா?.கனவில் முன் பின் பார்த்திராத ஒரு உ(அ)ருவம் பார்க்கிறோம் என்றால் அது குறித்து நம் மனதில் ஏதோ ஒரு முன் மாதிரி பிம்பம் இருந்தால் மட்டுமே சாத்தியமா?.//
ஒரு பிம்பம் என்பது பல்வேறு காட்சி அம்சங்களை, பகுதிகளை (கோடு, விளிம்பு, நிறம், வடிவம்) கொண்டு உருவாக்கப்படுகின்றது. இந்த பகுதிகளை வேறுமாதிரி புதியது போன்ற பிம்பங்களை உருவாக்க முடியும். இசை, ஓவியம் போன்றவற்றில் பல்வேறு முன்மாதிரிகளை சற்றே வேறுவிதமாக வித்தியாசமாக கலந்து கொடுக்கப் படுகின்றது (அதனால் தான் கலைஞர்கள் பலநேரம் Synesthesia கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் உணர்வுகளை ஒன்றுக்கொன்றுடன் மாற்றி கலந்து கொடுக்கின்றார்கள்). புதியவற்றை கற்றுக்கொள்ளும் போது, மூளை முன்-மாதிரி ஒன்றை கொண்டே முதலில் உணர்ந்து கொள்கின்றது. பிறகு அது மற்றொன்றிக்கு முன்-மாதிரி ஆகலாம்!

//செவிப்புலனகள்,காதுல் கேட்கும் அனுமாஷ்யக் குரல்[சிகோஃபெரனியா] பற்றி ஒரு பதிவிட வேண்டுகிறேன்.//
சிகோஃபெரனியா பற்றி ஆழமாக படித்ததில்லை. ஆனாலும் கேட்டல்-உணர்வை பற்றி ஒரு சிறு குறிப்பை "கேட்டதெல்லாம்..." என்ற பதிவாக இட்டுள்ளேன்.