29 March 2011

மனிதனும் மற்ற உயிரினங்களும்

மிகக் கொடுமையான அவலங்கள், உதாரணமாக குழந்தை தொழிலாளர்கள், குப்பம், கூவம், கோடி கணக்கில் பட்டினி சாவு போன்றவை மனிதனுக்கு மட்டுமே சொந்தமானவை, மற்ற உயிரினங்களில் அவை காண இல்லை. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, என்றோம். ஆனால், மற்ற உயிரினங்களை விட ஏன் மனிதன் கீழ்நிலைக்கு போனான்? இங்கு எழும் மற்றொரு கேள்வி: ஏழ்மையான நாடுகள் பல இருந்தாலும், நம் நாட்டில் உள்ள கடைநிலை அவலத்தை மற்ற நாடுகளில் காண்பது அரிது, ஏன்? (இருக்கா?)

எந்த ஒன்றை நகல்கள் (Copy) எடுக்கும் போதும் பிழைகள் நிகழும். அதில் சில பிழைகளின் விளைவு சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருந்தால், அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு செல்லும், மற்றவை மடிந்து போகும். சிற்பி தேவையற்றதை செதுக்கி ஒரு வடிவமைப்பை உருவாக்குவது போல், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதல்லாதவை மடிந்து ஒருவகை வடிவமைப்பு வளர்ச்சி அடைந்து விடுகின்றது. இதை பரிணாம வளர்ச்சி என்கின்றோம். ஜீன்களின் பரிணாம வளர்ச்சி (உயிர்கள்) மற்றும் மெம்களின் பரிணாம வளர்ச்சி (யோசனைகள்) மனிதனின் வாழ்வை நிர்ணயிக்கின்றன. (நம்பிக்கைகளின் மூலம்)

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி நிகழ்கின்றது. ஆனால், சுற்றுச்சூழலோ மாறி கொண்டே இருக்கின்றது. அதற்கேற்ப பரிணாம வளர்ச்சியின் பாதையும் மாறி கொண்டே இருக்கின்றது. ஆக, சுற்றுச்சூழலின் மாற்றங்களுக்கு ஏற்ப மெதுவாக உயிரனங்கள் மாறியும், அழிந்தும், புதியவை உருவாகியும் சமன் செய்யப்படுகின்றது (இங்கு, கோடி கணக்கில் குழந்தைகளை பெற்று போட்டு பட்டினி போடுவதற்கு இடமில்லை). இப்படிப்பட்ட வடிவமைப்பிற்கு...வளர்ச்சி முறைக்கு... எந்தவித அறிவும் தேவையில்லை. உயிரினங்களை அறிவுடைய-யாரும் படைக்கவும் இல்லை. பரிணாம வளர்ச்சி யாருடைய-அறிவின் கட்டுபாடும் இல்லாமல் (எந்தவித திட்டமிடுதலும் இன்றி) இயற்கையாக நிகழ்வதால், அது பொதுவாக சீறற்று, முழுமையற்று, தொடர்பற்று, பல பலவீனங்கள் மற்றும் குறைகளுடனே இருக்கும். அப்படியே அனைத்து உயிரினங்களும், மனிதனும், அவனுடைய மூளையும், அவனுடைய உணர்ச்சிகளும், அவனுடைய அறிவுதிறனும்!

அறிவை கொண்டு, பரிணாம வளர்ச்சியை விட மேம்பட்ட முறையை காண முடியும். அதனாலே, அறிவுதிறன் மெதுவாக பரிணாம வளர்ச்சி அடைந்ததுள்ளது. அது இயற்கையின் மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொண்டும், மேலும் இயற்கை இரகசியங்களை புரிந்து கொண்டும், அதற்கேற்ப மாற்றிக் கொள்ள உதவும் ஒரு உத்தி. மனிதன் அவனுடைய அறிவுதிறனை கொண்டு பரிணாம-வளர்ச்சி-முறையை விட மேம்பட்ட தீர்வுகளை காண முடியும்; கண்டும் உள்ளான். அப்படியே இயற்கையின் பல துயரங்களிலிருந்து தப்பித்தும் உள்ளான். அப்படி தான், கருவிகளை உருவாக்கினான், வீட்டை கட்டினான், விவசாயம் செய்தான், பல உயிர்க் கொல்லி நோய்களை கழைந்தான். ஆனால், இவற்றை ஒரு நாளிலோ அல்லது ஒரு தலைமுறையிலோ செய்துவிடவில்லை. ஏனெனில், மனிதனின் அறிவுதிறன் மற்ற விலங்குகளை காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதல்ல, சற்றே அதிகமானது. காட்டில் வாழ்ந்த ஆதி மனிதன் கிட்டத்தட்ட குரங்குகளை போல் தான் வாழ்ந்தான். அவனுடைய மூளைக்கும், நவீன மனிதனின் மூளைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பிறகு, எங்கிருந்து வந்தது நவீன மனிதனின் வளர்ச்சி? அதற்கு காரணம், மெம்களின் பரிணாம வளர்ச்சி. மெம்கள் (யோசனைகள்) ஒரு மூளையிலிருந்து மற்றொரு மூளைக்கு நகலாக தேர்ந்த மொழி தேவைப்படுவதால், அதை கொண்ட மனிதனிடத்தில் மெம்கள் பரிணாம வளர்ச்சி அடைகின்றன. அதனால், மெம்களின் வளர்ச்சியான அறிவியல் வளர்ச்சியையும், மூடநம்பிக்கைகளையும் மனிதனிடத்தில் காணமுடிகின்றது, மற்ற உயிரினங்களில் அவற்றை காண முடிவதில்லை.

மனிதன் உருவாக்கிய சில நல்ல மெம்களின் வளர்ச்சி அவனை உயர்த்துகின்றன, சில கெட்ட மெம்களின் வளர்ச்சி அவனை மற்ற உயிரினங்களை விட கீழ்நிலைக்கு கொண்டுபோய்கின்றன. ஜீன்களை போலவே, பலவகையான மெம்கள் (நல்ல, கெட்ட, வெட்டியான,...) உருவாகி கொண்டே உள்ளன. அவற்றில் சமூகச்சூழலுக்கு ஏற்றவை பரிணாம வளர்ச்சி அடைகின்றதன. மெம்கள் தொடர்ந்து தோன்றுவதை தடுப்பது கடினம். ஒவ்வொரு தனி மனிதனின் எண்ணங்களையும், யோசனைகளையும் எப்படி தடுப்பது? அப்படியே தடுப்பதும் வளர்ச்சியை தடுப்பது போல் தான். ஆனால், நல்ல மெம்கள் செழிப்புடன் வளரவும், கெட்ட மெம்கள் வளரச்சி-அடையாமல் இருக்கவும் கூடிய சமூகச்சூழலை உருவாக்க முடியும். ஆனாலும், சில கெட்ட ஜீன்களை முற்றிலும் கழைவது எப்படி கடினமோ, அப்படியே, சில கெட்ட மெம்களை முற்றிலும் கழைந்தெடுப்பதும் கடினம். குறைந்த பட்சம், கெட்ட மெம்கள் செல்வ-செழிப்புடன்-வளராத சமூகச்சூழலை மனிதன் உருவாக்கும் போது, அவன் மற்ற உயிரினங்களை விட கேவலமான நிலைக்கு தள்ளப்படுவதை தடுக்கலாம்.


முயல்: இன்றுள்ள பெரும்பான்மையான அவலங்களுக்கு மக்கள் தொகையும் ஒரு காரணம். முன்பு அடிக்கடி நிகழும் போர்களிலும், கொள்ளை நோய்களிலும் மக்கள் தொகை குறைக்க பட்டிருக்க வேண்டும். இன்று அப்படி இல்லை.

ஆமை: மக்கள் தொகை பெருக்கத்திற்கு மற்றொரு முக்கியமான ஒரு மெம் உண்டு.

பாலினப்பெருக்கம் மிகவும் சிக்கலானது. அதனால் மக்கள் தொகை அவ்வளவு எளிதாக பெருகாது. அது குறையாக இருந்தாலும், பாலினப்பெருக்கத்தில் பல நன்மைகள் உண்டு, அதனாலே அது பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளது. அதன் முக்கிய நோக்கம், மக்கள் தொகையிலுள்ள ஜீன்களை கலக்குதல். ஜீன்களின் கலப்பு பல்வேறு வேறுபாடுகளை கொண்ட மக்களை உருவாக்குவதால், நோய் கிருமிகள் எல்லோரையும் ஒரே சமயத்தில் ஒரே மாதிரியாக தாக்குவது கடினம் (இல்லையென்றால், புதிதாக தோன்றும் ஒரு வைரஸ் மொத்த மக்கள் தொகையையும் எளிதாக அழித்து விடமுடியும்). அதனால் தொற்று நோய்கள் பரவுவதும் குறைக்கப்படும். மேலும், மரபுபிழையில் தோன்றிய நல்ல ஜீன்கள் மக்கள் தொகையில் பரவவும், கெட்ட ஜீன்களை களை எடுக்கவும் பாலினப் பெருக்கம் உதவுகின்றது. அதனால், உயிரினங்கள் பொதுவாக நெருங்கிய சொந்தங்களுடன், அதாவது ஒரே மாதிரியான ஜீன்களை கொண்டவர்களுடன் பாலினப் பெருக்கம் ஏற்படாமல் இருக்கமாறே பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

இயற்கையில் தகுந்த துணையை தேடுவது மிகவும் சிக்கலான காரியம். அதற்கு மனிதன் உருவாக்கிய ஒரு மெம் தான் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள், அதிலும் எளிதாக ஒரே ஜாதியில் செய்யப்படும் திருமணங்கள், இன்னும் எளிதாக சொந்தத்திலே செய்யப்படும் திருமணங்கள்.

முயல்: இதில் ஒரே மாதிரியான ஜீன்களை கண்டுகொள்ள இடம் இல்லை. மேலும் ஒரே மாதிரியான ஜீன்களுடனே பெரும்பாலான திருமணங்கள் நடக்கின்றன. பல நூற்றாண்டுகளாக, நாம் எப்படிபட்ட தலைமுறைகளை உருவாக்கி கொண்டுள்ளோம்?! மற்ற உயிரினங்களை தாண்டி, வாழ்க்கையை இசை, கலை, ஆடல், பாடல், ஆராய்ச்சி என பல்வேறு பரிமாணங்களில் இரசிக்க தெரிந்தவனுக்கு, கவிதை போன்ற காதலை எப்படி சற்றே தள்ளி வைக்க முடிந்தது என்பது ஆச்சர்யமாகத் தான் உள்ளது.

மற்றொரு ஆச்சர்யம்... ஜாதி எப்படி உருவாகி...வளர்ச்சி அடைந்தது? அக்கொடுமையை எப்படி பெரும்பான்மையான மக்கள் சகித்து கொண்டனர்? இன்றும் அது பல வடிவில் இருப்பதும் ஆச்சர்யம் தான்.

ஆமை: என்னை அதிர்ச்சியுடன் ஆச்சர்யப்படுத்தும் ஒன்று பச்சிளம் குழந்தைகளை விதவையாக்கியது!?!... எப்படி அவ்வளவு கீழ்நிலைக்கு மனிதன் போனான்? ஆண் ஆதிக்கம், பெண் அடிமை, கற்பு, விதவை கொடுமை, சிறுவயதில் திருமணம் என எப்படியோ அந்த மெம் உருவாகி...வளர்ச்சி அடைந்திருக்கின்றது. அச்சிறுமியை பெத்தவனும், பெத்தவளும்... அவளின் அண்ணனும், அக்காவும்... தாத்தாவும், பாட்டியும்... உற்றார் உறவினரும், சக மனிதர்களும் எப்படி அதை சகித்து கொண்டிருந்தனர்?

முயல்: அறியாமை, தேவையற்ற பயம், மூடநம்பிக்கை போன்றவை இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

ஆமை: அது போன்ற மெம்கள் வளர்ச்சி அடைய காரணம், மனிதன் உருவாக்கிய சமூகச்சூழலில் உள்ள சில அடிப்படை தவறுகளே... குறைந்த பட்சம், கெட்ட மெம்கள் செல்வ-செழிப்புடன்-வளராத சமூகச்சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு நான் கருதும் சில அடிப்படை பண்புகள்:
  • குறைபட்ச அவசியமான சமூக கட்டுபாடு. (கலாச்சார சிறையிலே)
  • ஒரு சமூகமாக, ஒவ்வொன்றையும் வெளிப்படையாக அலசம் பாங்கு மற்றும் புதியவற்றை ஏற்கும் பக்குவம்.
  • எந்த ஒரு விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார் – என்பதை உணருதல்.
  • தெரியாததை தெரியாது என சொல்ல துணியும் தைரியம். (அறிவு பேசினால்)
நீங்கள் கருதும் அடிப்படை பண்புகள் என்ன?

14 comments:

Kamaraj said...

இது "இருக்கா?" (http://icortext.blogspot.com/2011/03/blog-post.html) என்ற கேள்வில் ஆரம்பித்தது. இதை எழுத தூண்டிய "எல் போர்ட்.. பீ சீரியஸ்.." அவர்களுடனான நல்ல உரையாடலுக்கு நன்றி!

Thekkikattan|தெகா said...

இதுக்கு முதல் பதிவில அவ்வளவு ஓடியிருக்கு உரையாடல் எல்போர்ட்ஸ்வோட... இப்போதான் அதை முடிச்சேன். இருங்க இப்போ இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்...

Thekkikattan|தெகா said...

நல்ல வாசிப்பு, கார்டெக்ஸ்ட். அருமையா கோர்த்து கொடுத்திருக்கீங்க. மெம்களின் செயற்பாட்டை அந்தந்த சமூக காலக் கட்டங்களின் மக்களின் குழுச் சிந்தனைகள் எவ்வாறு ஒரு சமூக நாகரிகத்தை வளர்த்தெடுத்திருக்கிறது, அல்லது தேய்த்து அழித்து பட்டிருக்கிறது என தெளிவாக சொல்கிறது இந்த பதிவு.

// பரிணாம வளர்ச்சி யாருடைய-அறிவின் கட்டுபாடும் இல்லாமல் (எந்தவித திட்டமிடுதலும் இன்றி) இயற்கையாக நிகழ்வதால், அது பொதுவாக சீறற்று, முழுமையற்று, தொடர்பற்று, பல பலவீனங்கள் மற்றும் குறைகளுடனே இருக்கும் - மனிதனும், அவனுடைய மூளையும், அவனுடைய உணர்ச்சிகளும், அவனுடைய அறிவுதிறனும்!// -அதுதான் உண்மை! இதனை புரிந்து கொண்டாலே மனித இனங்களுக்கிடையே நடந்தேறும் அத்தனை வன் கொடூரங்களும் ஒரு முடிவிற்கு வரலாம்...

Thekkikattan|தெகா said...

//ஜாதி எப்படி உருவாகி...வளர்ச்சி அடைந்தது? அக்கொடுமையை எப்படி பெரும்பான்மையான மக்கள் சகித்து கொண்டனர்? இன்றும் அது பல வடிவில் இருப்பதும் ஆச்சர்யம் தான்.//

எப்படி மிருகங்களில் கூடி வாழ்தல் ஒரு தற்காப்பு உத்தியாக பயன்பாட்டில் இருந்ததோ (இருக்கிறதோ) அதே கட்டமைப்பின் அடிப்படையில்தான் ஹோமோனிட்ஸ்களிலும் சிறு, சிறு குழுக்களாக கூடி வாழ்வதும் தங்களை பிற இன குழுக்களிலிருந்து தங்களை தக்க வைத்து கொள்ள உதவியிருக்கலாம் (பிற பழக்க, வழக்க, மொழி சார்ந்த தாக்கங்களிலிருந்து தங்களது சிறப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நிலம், இயற்கை வளம் போன்றவற்றை தற்காத்துக் கொள்ளவும் இந்த குழுயமைவு அவசியப்பட்டிருக்கலாம்...)

ஆனால், இன்றைய நிலையில் இந்த க்ரேசினெஸ் எந்தளவிற்கு இன்றைய நாகரீக வாழ்விற்கு அவசியமென்று தெரியவில்லை. இருப்பினும், நாம் வளர்ச்சியுற்ற ஒரு ஹோமொனிட்டாக போக வேண்டிய தொலைவு மிகத் தொலைவு இருக்கிறது.

இன்றைய தேதியில் இது ஒரு காட்டுமிரண்டித்தனமான மெம்கள் தன் முயற்சியற்ற நிலையில் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது எனலாமா??

Kamaraj said...

//Thekkikattan|தெகா said...
நல்ல வாசிப்பு, கார்டெக்ஸ்ட். அருமையா கோர்த்து கொடுத்திருக்கீங்க...//
கருத்திற்கு மிக்க நன்றி தெகா!

// எப்படி மிருகங்களில் கூடி வாழ்தல் ஒரு தற்காப்பு உத்தியாக பயன்பாட்டில் இருந்ததோ (இருக்கிறதோ) அதே கட்டமைப்பின் அடிப்படையில்தான் ஹோமோனிட்ஸ்களிலும் சிறு, சிறு குழுக்களாக கூடி...//
நீங்கள் கூறுவது இனங்களை பற்றி என நினைக்கின்றேன். நீங்கள் கூறுவதுவது போல் இனங்கள் ஜீன்களின் வளர்ச்சி. ஜாதி மெம்களின் வளர்ச்சி (இனம் அதன் ஆரம்பமாக இருந்திருக்கலாம்). நான் அறிந்தவரை, ஜாதி (குடும்ப) தொழிற்முறைகளில் ஆரம்பித்து...வேதங்களால் நிலைநிறுத்தப்பட்டவை (ஒருவனுடைய தொழில் அவனுடைய பிறவிப்பயன், கர்மா)

// இன்றைய தேதியில் இது ஒரு காட்டுமிரண்டித்தனமான மெம்கள் தன் முயற்சியற்ற நிலையில் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது எனலாமா?? //
மன-வைரஸ்களான இந்த மெம்களை குணமாக்க அதுவும் ஒரு மருத்துவம் தான். பலருக்கு அந்த நோய் இருப்பதே தெரியாததால், அதை உணரவைக்க ஒருவேளை அவர்களை பரிதாபமாக பார்க்கலாம். :-)

saarvaakan said...

//அது போன்ற மெம்கள் வளர்ச்சி அடைய காரணம், மனிதன் உருவாக்கிய சமூகச்சூழலில் உள்ள சில அடிப்படை தவறுகளே... குறைந்த பட்சம், கெட்ட மெம்கள் செல்வ-செழிப்புடன்-வளராத சமூகச்சூழலை உருவாக்க வேண்டும்.//

அற்புதம் தோழர். அறிவியல் ரீதியான் மனிதம் செழிக்கும் ஆட்சிமுறையை உலகெமெங்கும் ஏற்படுத்த முடியுமா?

Kamaraj said...

//saarvaakan said...
அற்புதம் தோழர். அறிவியல் ரீதியான் மனிதம் செழிக்கும் ஆட்சிமுறையை உலகெமெங்கும் ஏற்படுத்த முடியுமா?
//
நன்றி தோழரே! கடினம் என்றே தோன்றுகின்றது... மனித மூளையின் அறிவுதிறன் அவ்வளவே. ஆனாலும் பல‌‌ மெம்களின் வளர்ச்சி அறிவியலை நோக்கி போய் கொண்டு இருப்பதாகவே தெரிகின்றது. மனிதம் செழிக்கின்றதோ இல்லையோ, குறைந்த பட்சம் அது கேவலமான நிலையிலிருந்து மீள வேண்டும்.

Muthu said...

Excellent article about human being and their defects.
I like the points made at the end:
Open minded discussion and Telling "I don't know" when we really don't know about a thing.

Kamaraj said...

//Muthu said...
Excellent article...
//
Thanks for your comments, Muthu!

Kamaraj said...

//ஆ.ஞானசேகரன் said...
nice one//

Thanks!

Anonymous said...

http://www.cnn.com/2011/WORLD/asiapcf/03/29/bangladesh.lashing.death/index.html

Anonymous said...

அருமை தோழரே மதவாதிகள் பரிணாமத்தை ஏற்காத சிந்தனையுள்ள "மெம்" எனக் கொள்ளலாம். கடவுள் மறுப்புத் தத்துவத்தை பொருத்துக் கொள்ள முடியாததால் பரிணாமத்தை, நிரூபிக்க முடியாத பொய்த்துப்போன தத்துவம் என இவர்களாக நினைத்துக் கொண்டு, கடவுளை காப்பாற்றியே ஆக வேண்டும் என்கிற நிர்பந்தத்தில் காட்டுமிராண்டி காலத்துச் சிந்தனைகளை விடாப்பிடியாக கடைபிடித்து வருகின்றனர். பத்து பைசாவுக்கு உபயோகமில்லாத புணிதயாத்திரை,'காட்டுமிராண்டி' பலியிடல், வேண்டுதல்,வேதவாக்கு,சடங்குகள் போன்றவற்றை மாற்றிக் கொள்ள வக்கில்லாமல்,ஏட்டுச் சுரைக்காயை அசைபோட்டு தின்றுவிட்டு வாந்தி எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

Kamaraj said...

//Anonymous said...
அருமை தோழரே மதவாதிகள்... //

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே. மதவாதிகளோ, அரசியல்வாதிகளோ, அல்லது மற்ற சிலரோ உருவாக்கும் கெட்ட மெம்கள் செழிப்புடன் வளராத சமூகச்சூழலை உருவாக்க வேண்டும். அது மட்டுமே நடைமுறை சாத்தியம்.

Kamaraj said...

ஒருசிலர் உருவாக்கும் கெட்ட மெம்களை தடுப்பதை விட, ஒரு சமூகமாக கெட்ட மெம்கள் செழிப்புடன் வளராத சமூகச்சூழலை உருவாக்குவது நடைமுறையில் சாத்தியம். அதற்கு ஒரு சில அடிப்படை பண்பு விதைகளை தூவ வேண்டும். ஆனால், ஏற்கனவே உள்ள...சமூகத்தில் ஒன்றி புரையோடி போன கெட்ட மெம்களை கழைவது எளிதல்ல. அதற்கு ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் விழிக்க வேண்டும். ஏனெனில், பொதுவாக மக்கள் ஒரு ஆட்டுமந்தை. சரியோ, தவறோ, அவர்கள் கூட்டத்தோடு ஓடுபவர்களே. அப்படியே அவர்கள் பரிமாண வளர்ச்சியில் வடிவமைக்கப் பட்டுள்ளனர். ஏனெனில், தனிமனித பார்வையில் அதுவே வெற்றியை தருகின்றது. வெளியே எப்படி தோன்றினாலும், உண்மையில் அவர்கள் தைரியம் அற்றவர்கள் என்பதே என் எண்ணம். அன்புவழியில், அவர்களுக்கு முடிந்தவரை ஆதாரங்களை காட்டுவதும், விழிக்க வைக்கும் கேள்விகளை கேட்பதுமே சிறந்த வழியாக இருக்க முடியும். ஜாதி, அடிமை போன்ற மிகக் கொடுமையான விசயங்களுக்கு கூட காந்திய வழி போராட்டங்களே வெற்றிபெற்றிருக்கின்றன.