18 March 2011

இருக்கா?

காக்கா இளைப்பாற கருவேல மரமிருக்கு;
என் மக்க இளைப்பாற மாமரத்து நிழலிருக்கா?

கொக்கு பசியாற கொக்குளத்து மீனிருக்கு;
என் மக்க பசியாற மக்கிப்போன நெல்லிருக்கா?

வண்டு தாகம்தீர பூவிலெல்லாம் தேனிருக்கு;
என் மக்க தாகம்தீர சிறுகுவளை நீரிருக்கா?

சிங்கம் படுத்துறங்க மலையிலே குகையிருக்கு;
என் மக்க படுத்துறங்க ஒழுகாத குடிலிருக்கா?

குரங்கு விளையாட மரத்தோட கிளையிருக்கு;
என் மக்க விளையாட குப்பத்திலே இடமிருக்கா?

குருவி நீராட தெருயோர ஓடையிருக்கு;
என் மக்க நீராட கூவத்திலே நீரிருக்கா?

மயிலு காதலிக்க சோலையெல்லாம் பூத்திருக்கு;
என் மக்க காதலிக்க விலைபோகா ஊரிருக்கா?முதல் நான்கு வரிகள்: வைரமுத்து

23 comments:

Thekkikattan|தெகா said...

வாவ்! இது யாரு பாடினது கார்டெக்ஸ்-

நீங்கதானே? Enjoyed... பாடலின் வரிகள்... ம்ம்ம்

CorTexT said...

நான் பாடியது தான். சகிக்க முடிந்தால் சரிதான்!

மிக்க நன்றி, தெகா!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//சகிக்க முடிந்தால் சரிதான்!//

கொஞ்சம் கஷ்டந்தான். :))

ஏற்கனவே காட்டெல்லாம் அழிச்சிகிட்டு வர்றோம்.. மனிதர்களோட இணைந்து காக்கா குருவியும் இனி பாடலாம்..

CorTexT said...

// கொஞ்சம் கஷ்டந்தான். :)) //
ஒருவேளை நான் எல்-போர்ட் எச்சரிக்கை போட்டிருக்காலாம் :-)

// ஏற்கனவே காட்டெல்லாம் அழிச்சிகிட்டு வர்றோம்.. மனிதர்களோட இணைந்து காக்கா குருவியும் இனி பாடலாம் //
ஆனாலும், மனிதனிடத்தில் மட்டுமே மிகக் கொடுமையான துயரங்களை பார்க்க முடிகின்றது. குழந்தை தொழிலாளர்கள், குழந்தை விபச்சாரம், குப்பம், கூவம், அயிரக்கணக்கில் குழந்தைகள் பட்டினி சாவு - இவையெல்லாம் மனிதனுக்கு மட்டுமே சொந்தமானவை. காட்டெல்லாம் அழிச்சாலும் காக்கா குருவி நமக்கு கீழே போகாது; போகவும் முடியாது.

ஆ.ஞானசேகரன் said...

வாவ்வ்வ்வ்.... மிக அருமை தொடரலாம்....

ஆ.ஞானசேகரன்

CorTexT said...

//ஆ.ஞானசேகரன் said...
வாவ்வ்வ்வ்.... மிக அருமை தொடரலாம்....//

மிக்க நன்றி!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. சரிதான் கார்ஸ்.. நம்ம சோஷியல் அண்ட் எகனாமிக் ஹைரார்க்கி அப்படி.. :(

CorTexT said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
ம்ம்.. சரிதான் கார்ஸ்.. நம்ம சோஷியல் அண்ட் எகனாமிக் ஹைரார்க்கி அப்படி.. :(
//
இதை பற்றிய என் எண்ணங்கள்..

இயற்கையிலே பல துயரங்கள் அடக்கம் என்றாலும் பெரும்பாலும் அது ஒரு அளவிற்கு மேல் செல்வதில்லை. ஏனெனில் அதற்கேற்ப மெதுவாக உயிரினங்கள் மாறி சமன் செய்யபடுகின்றது (அழிவு, மாற்றம், புதியன உட்பட). மற்ற விலங்குகளை விட மனிதனின் சற்றே கூடுதல் அறிவு ஒரு இருமுனை கத்தி. ஒருபக்கம் இயற்கையின் பல துயரங்களிலிருந்து தப்பித்தவன், மறுபக்கம் இயற்கையை விட மிக கேவலமான துயரங்களுக்கு தள்ள படுகின்றான். ஆனால் அது நம் கையில் உள்ளது... நாம் உருவாக்கும் சமூதாயத்தில் உள்ளது. அது நாம் எந்த அளவு இயற்கையோடு சார்ந்து (மிக முக்கியமாக உளவியல் அடிப்படையில்) உள்ளோம் என்பதை பொருத்தது.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சரி தான் கார்ஸ்.. கொஞ்சம் நாள் முன்னே தேனீ வாழ்க்கை படிச்சேன்.. தேனிகளுள் labour division இருந்தாலும், உணவுப் பங்கீட்டுல இந்தளவு வித்தியாசம் இல்லைன்னு தான் நினைக்கிறேன்.. மற்ற உயிரினங்களோட சோஷியல் அமைப்பு குறிந்து படிக்கனும்ன்னு நினைச்சிருக்கேன்..

// மற்ற விலங்குகளை விட மனிதனின் சற்றே கூடுதல் அறிவு ஒரு இருமுனை கத்தி.//

ம்ம்.. சுயமாய்ச் சிந்திக்கத் தெரிந்த மனிதன் ஏமாற்றவும் செய்வான் (out of proportion to what is required for his survival). :)

//அது நாம் எந்த அளவு இயற்கையோடு சார்ந்து (மிக முக்கியமாக உளவியல் அடிப்படையில்) உள்ளோம் என்பதை பொருத்தது.//

இது புரியல.. எதைச் சொல்ல வர்றீங்க? சார்ந்து இருந்தால் நல்லதா இல்லை நல்லதில்லையா?

CorTexT said...

//மற்ற உயிரினங்களோட சோஷியல் அமைப்பு குறிந்து படிக்கனும்ன்னு நினைச்சிருக்கேன்.. //
முடிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

//சார்ந்து இருந்தால் நல்லதா இல்லை நல்லதில்லையா?//
இயற்கையோடு சார்ந்து இருப்பதே நல்லதாக இருக்க முடிவும். ஏனெனில் நாமும் இயற்கையில் ஒரு அங்கம்; அதை தாண்டி வேறு எங்கு செல்ல முடியும். ஆனால், அது சூரியனை கும்பிடுவதில் இல்லை. நம் கலாச்சாரம் இயற்கையோடு ஒன்றியதாக பொதுவாக நாம் நினைத்து கொண்டாலும், உண்மையில் உளவியல் அடிப்படையில் மிக செயற்கையாக (போலியாக) உள்ளோம் என்பதே என் எண்ணம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//நெருப்பில் தள்ளினோம்// இதெல்லாம் எந்தக் காலத்தில் எப்படி ஆரம்பித்தது என்பதையறியாமல் காலத்தின் போக்கில் முட்டாள்த்தனமாக ஒவ்வொருவரும் தன் கையில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு பிறரை ஒடுக்கியது கொடுமை.. எதிரியால் சிறை பிடிக்கப்பட்டு சிதைக்கப்படலாம் என்ற நிலையில் ராஜ்புதானியப் அரசப் பெண்கள் இதைச் செய்ததாக அறிந்திருக்கிறேன்.. பின்னே வந்தவர்கள் வேறு மாதிரியாக மாற்றி விட்டனர் :(

CorTexT said...

// எதிரியால் சிறை பிடிக்கப்பட்டு சிதைக்கப்படலாம் என்ற நிலையில் ராஜ்புதானியப் அரசப் பெண்கள் இதைச் செய்ததாக அறிந்திருக்கிறேன் //
இது சுய-பாதுகாப்புக்கான தற்கொலை. இதை இன்றும் போர்வீரர்கள், போராளிகள் (ஆண், பெண் உட்பட) செய்கின்றனர். ஆனால், அதற்காக நெருப்பிலா குதித்தார்கள்? கண்டிப்பாக அதை விட நல்ல வழிகள் இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கின்றேன். எப்படியாகிலும் இதுவும், கற்பு தொடர்புடைய நெருப்பு குளித்தலும் முற்றிலும் வேறுவேறு நோக்கங்கள். கற்புக்காக நெருப்பு குளித்தல் இராமாயணத்தில் (450 BCE) உள்ளது.

இது போன்றவை எல்லாம் மெம்கள், ஜீன்கள் போன்று (ஒரு மெம் ஒரு யோசனையை குறிக்கும்)
(http://icortext.blogspot.com/2009/11/blog-post.html). ஜீன்களை போலவே, ஏதோ ஒரு வழியில் (மரபு பிழை போன்று) ஒரு மெம் உருவாகின்றது. அதற்கே ஏற்ற சூழல் இருந்தால் அது வளர்ச்சி அடைந்து செழித்தோங்குகின்றது. நெருப்பில் தள்ளப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் யாருக்கோ மகளாக, சகோதரியாக, அம்மாவாக, தோழியாக, சக ஜீவராசியாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் எல்லாம் எப்படி கைகட்டி கொண்டு சும்மா இருந்தார்கள்? அப்படியென்றால் அப்பொழுது இருந்த சமூக சூழல் எப்படி இருந்திருக்க வேண்டும்? இது போன்ற கொடுமையான மெம்கள் அழிந்து போனாலும், அடிப்படையில் அன்றிந்த சமூக சூழல் இன்றும் உள்ளது. அதை நாம் முற்றிலும் சீர் தூக்கி பார்க்க வில்லை. கலாச்சாரத்தை, மதத்தை காப்பாற்ற அவற்றை மெதுவாக மூடி மறைத்து விட்டு ஒன்றும் நடக்காதது போல் பாவிக்கின்றோம். "இருக்கா?" – அதன் தொடர்ச்சி தான்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கார்ஸ்.. இன்றைக்கு தீயில் குதிப்பது மிகவும் வலி மிகுந்த தற்கொலை வழின்னு நாம நினைப்பது போல அவங்களும் நினைச்சிருக்க மாட்டாங்க.. படையெடுப்புகளுக்கும் நாடு பிடிப்புகளுக்கும் பழகிப் போன ஒரு சமூகத்துல மாஸ் சூசைட் செய்துக்க ஏதுவாக இருந்திருக்கும்ன்னு நினைக்கறேன்.. இன்னைக்கும் தலைவருக்காக தீக்குளிக்கும் தொண்டர்கள் இருப்பதை பார்க்கிறோமே.. எனக்கு நேரடியாகத் தெரிந்த இரண்டு பேர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்கள்.. ஒருவர் எனது பள்ளி ஆசிரியர்!!

ஆனால், கற்பை நிரூபிப்பதற்கான ஒரு வழியாகப் பார்த்தோம் என்றால் - மிக முட்டாள்த்தனமானது..

ராமாயணம் ஒரு கதை.. அதைப் பற்றி அதற்கு மேல ஒன்னும் நினைக்க விரும்பல.. அப்படியே இருந்தாலும் கூட, யாராவது ஒருத்தராவது தீக்குளித்து உயிர் பிழைத்து தன் கற்பை நிரூபிச்சு இருப்பாங்களா? :)) அதுவும் அந்தக் காலத்திய மருத்துவ அறிவைக் கணக்கில் கொண்டு? :))

மெம் பற்றி கொஞ்சமாகப் படித்திருக்கிறேன்..

CorTexT said...

உண்மைதான். தற்கொலை ஒரு தனி பெரிய விசயம்.

என் உதாரணத்தின் நோக்கம் விதவை கொடுமை (அதில் ஒன்று நெருப்பில் தள்ளுவது; கற்பை காப்பாற்ற அல்லது நிலைநிறுத்த). இராமாயணம் கதையா, இல்லையா என்பதை விட, அது எழுதப்பட்ட சமயத்தில் அப்படி பட்ட மெம் இருந்திருக்கின்றது என்பதே அது உணர்த்துகின்றது. ராஜ்புதானியப் அரசப் பெண்கள் செய்தது அப்படி பட்ட மெம்மாக தெரியவில்லை. ராஜ்புதானியப் அரசு இராமாயணம் எழுதப்பட்டதற்கு பின்பு வந்தவை தானே?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. புரிகிறது.. நான் நினைத்தபடி, இப்படி ஆரம்பித்த ஒன்று பின்னாளில் கட்டாயம் ஆக்கப்பட்டு சதி ஆக மாறியிருக்கலாம் என்பதே.. (இது சரியா என்று தெரியவில்லை.. நீங்கள் அப்படி இல்லை என்கிறீர்கள்..) அதற்காக விதவைக் கொடுமையை ஒரு பொழுதிலும் நியாயப்படுத்த முடியாது..

தென் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இரண்டு தலைமுறைக்கு முன்னரே விதவை மறுமணம் (தோழியின் பாட்டிக்கு செய்திருக்கிறார்கள்) வழக்கம் இருந்து வந்ததையும் அறிகிறேன்..

அன்றைய மக்களின் அறிவு மற்றும் அறிவியல் வளர்ச்சிப்படி அவர்கள் நிறைய மூட நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர்.. உதாரணத்துக்கு உயிர் பலிகள்.. மேலும் பிறரின் மீது ஆதிக்கம் செலுத்த இவற்றை ஒரு காரணமாகவும் பயன்படுத்தி இருக்கின்றனர்.. இதர எல்லா கலாச்சாரத்திலும் தவறுகள் இருக்கின்றன.. உதாரணத்துக்கு அடிமை முறைகள்.. எல்லாமும் தவறு தான்..

இன்றும் நாம் தவறுகள் இழைக்கிறோம்.. உடலால் உழைப்பவருக்கும் மூளையால் உழைப்பவருக்கும் பத்து மடங்கு வருமான இடைவெளி இருக்கிறது.. தவறே இல்லாத நிலைக்கு என்றைக்கு சமூகம் செல்லும் என்று தெரியவில்லை.. ஒவ்வொரு தலைமுறையிலும் சில சீர்திருத்தங்களை ஏற்று தன்னுள் அடங்கிய மக்களையும் வெளி மக்களையும் பிற விலங்குகளையும் ஒன்றாக பாவிக்கும் குறைந்த பட்சம் கொடுமைக்கு உள்ளாக்காத நிலைக்கு செல்ல வேண்டும்..

இராமாயண காலத்தில் இப்படிப்பட்ட மெம் இருந்திருக்கலாம்.. ஆனால் இந்தக் கதையைத் தவிர்த்து வேறெதிலும் இதைக் குறித்து கேள்விப்பட்டிருக்காததால் மேற்கொண்டு எதுவும் சொல்ல இயலவில்லை..

CorTexT said...

//இரண்டு தலைமுறைக்கு முன்னரே விதவை மறுமணம் (தோழியின் பாட்டிக்கு செய்திருக்கிறார்கள்) வழக்கம் இருந்து வந்ததையும் அறிகிறேன் //
ஒரு ஈ, காக்கா கூட செய்யாத கொடுமையை செய்து விட்டு, இரண்டு தலைமுறைக்கு முன்னரே ஒரு சில மறுமணம் நடந்ததை, என்னால் பெருமையாக நினைக்க முடியவில்லை (விதவை மறுமணம் கணவனின் சகோதரனுடன் பல நடந்திருக்கின்றன). இன்றும் விதவைகளாக உள்ளவர்களுக்கு நம் பதில் என்ன?

// இதர எல்லா கலாச்சாரத்திலும் தவறுகள் இருக்கின்றன.. உதாரணத்துக்கு அடிமை முறைகள்//
ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிமை படுத்தினர். அமெரிக்கர்கள் கருப்பர்களை அடிமை படுத்தினர். நாம் நம்மையே அடிமை படுத்தி கொண்டோம். நம் கலாச்சாரத்திலும், மற்றவற்றிலும் உள்ள தவறுகளை கூட்டி கழித்து பார்த்தால் எல்லாம் ஒன்றாக (தோராயமாக தான்) இருக்கும் என்று நினைக்கின்றீர்களா? பெங்கலூர் போனாலும், இங்கிலாந்து போனாலும், அமெரிக்கா போனாலும், உன் ஜாதி என்ன என்ற கேள்வி இன்னும் இல்லாது போக காணோம். பெரும்பாலான திருமணங்கள் இன்னும் ஜாதியில் தான் நிச்சயிக்கப்படுகின்றன.

// உடலால் உழைப்பவருக்கும் மூளையால் உழைப்பவருக்கும் பத்து மடங்கு வருமான இடைவெளி இருக்கிறது //
இது பொருளாதாரம். Supply and Demand. அதை கட்டுபடுத்தினால் அது Socialism. பலநேரம் அது எதிரான விளைவுகளையே தரும். இது ஒரு தனி பெரிய விசயம்.

//ஒவ்வொரு தலைமுறையிலும் சில சீர்திருத்தங்களை ஏற்று... //
சரி தான். மேலும், ஒரு கூற்று (பழமொழியாக இருக்கலாம்) ஒன்று: "உன் தவறை நீ முழுமனதாக ஒத்து கொள்ளாதவரை, அதை தாண்டி பெரிதாக நீ செல்ல முடியாது".

"இருக்கா?" – கேட்கும் இரண்டு கேள்விகள். குழந்தை தொழிலாளர்கள், குழந்தை விபச்சாரம், குப்பம், கூவம், அயிரக்கணக்கில் குழந்தைகள் பட்டினி சாவு போன்ற மிகக் கொடுமையான அவலங்கள் மனிதனுக்கு மட்டுமே சொந்தமானவை, மற்ற உயிரினங்களில் அவை காண இல்லை. மற்ற உயிரினங்களை விட ஏன் மனிதன் கீழ்நிலைக்கு போனான்? ஏழ்மையான நாடுகள் பல இருந்தாலும், நம் நாட்டில் உள்ள கடைநிலை அவலத்தை மற்ற நாடுகளில் காண்பது அரிது, அது ஏன்?

(இது நாம் செய்த, செய்யும் தவறுகளின் விளைவுகள். அதன் தடங்களை ஆய்ந்து உணர்ந்து கொண்டு, அதன் மூலம் அவற்றை தொடராமல், திரும்ப செய்யாமல் இருப்பதும் மேலும் அது போன்ற புதிய தவறுகளை தடுப்பதும் அறிவுடமை.)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கார்ஸ்.. சாதி ஏன் எப்படி ஆரம்பித்தது.. எதனால் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கெல்லாம் நான் இன்னும் படிக்கணும்.. செவ்விந்தியர்கள் எல்லோரும் ஒரு இனம்.. அவர்கள் குழுவாக வாழ்ந்த நிலையிலே ஒரு குழு இன்னொரு குழுவை அடித்து துரத்துவது இயல்பு.. நாமும் அப்படித் தான் இன்னும் இருக்கிறோமா என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு..

கம்யூனிசம் சார்ந்த கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்திருப்பதால் அப்படி ஒரு எண்ணம்.. அதிலே நல்ல அறிவில்லாமல் அது குறித்து மேலும் வாதாட விருப்பமில்லை..

//"இருக்கா?" – கேட்கும் இரண்டு கேள்விகள். குழந்தை தொழிலாளர்கள், குழந்தை விபச்சாரம், குப்பம், கூவம், அயிரக்கணக்கில் குழந்தைகள் பட்டினி சாவு போன்ற மிகக் கொடுமையான அவலங்கள் மனிதனுக்கு மட்டுமே சொந்தமானவை, மற்ற உயிரினங்களில் அவை காண இல்லை. மற்ற உயிரினங்களை விட ஏன் மனிதன் கீழ்நிலைக்கு போனான்? ஏழ்மையான நாடுகள் பல இருந்தாலும், நம் நாட்டில் உள்ள கடைநிலை அவலத்தை மற்ற நாடுகளில் காண்பது அரிது, அது ஏன்?//

காரணங்கள் என்னன்னு நீங்க என்ன நினைக்கிறீங்க என்று சொல்லுங்க.. குழந்தை விபச்சாரம் நமது மன்னர் காலத்து கலாச்சாரத்தில் இருந்தே உள்ளதா? குழந்தை மீன்ஸ் <14 என்று வைத்துக் கொள்வோமா? இல்லை அது வறுமையின் விளைவா?

மறுமணம் பற்றிச் சொன்னது பெருமைக்காக அல்ல.. ஒரே நாட்டுக்குள்ளே வேறு வேறு இடங்களில் வேறு மாதிரி இருந்திருக்கிறது என்று சொல்லத் தான்.. அவ்வ்வ்வ்.. நான் கலாச்சாரத்துக்கு குடை பிடிப்பவர் அல்ல.. அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் முறை.. தவறுகள் கண்டிப்பாக இருக்கும்.. அறியாமல் ஒப்புக்கொள்ளாமல் திருத்தம் மேற்கொள்ள முடியாது.. சரிதான்.. ஆனால்.. தவறு எப்படி ஆரம்பித்தது.. எதனால் நிகழ்ந்தது.. அதற்க்கேதும் காரணம் உண்டா என்பதையும் அறிய விரும்புகிறேன்.. அவ்வளவே..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சரி.. குழந்தை விபச்சாரம் பற்றி எடுத்துக் கொண்டோமானால் - குறிப்பிட்ட கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழும் எத்தனை சதவிகித மனிதர்கள் இதைச் செய்வதாக நினைக்கிறீர்கள்? பெரும்பாலானவர்கள் செய்தால் ஒழிய அதை கலாச்சாரத்தின் விளைவாக எடுத்துக் கொள்ள இயலுமா?

இங்கே சட்டப்படி அது தடுக்கப்படுவதால் (அமெரிக்கா) அப்படியான விபச்சாரம் நடப்பதில்லை என்றாலும் pedophiles இங்கேயும் தானே இருக்கிறார்கள்? நமது நாட்டில் சட்டத்தைக் கடுமையாக்கினால் இதைக் குறைக்க முடியும் தானே?

CorTexT said...

மரபுபிழையில் புதிய ஜீன்கள் உருவாகி கொண்டே இருப்பது போல், பல்வேறு காரணங்களால் மெம்களும் (நல்ல மற்றும் கெட்ட) உருவாகி கொண்டே உள்ளன. அதையே நீங்கள் சுட்டி காட்டுகின்றீர்கள் மற்றும் தேடுகின்றீர்கள். நன்று. ஆனால், அவை தொடர்ந்து தோன்றுவதை தடுப்பது கடினம் (அது வளர்ச்சியை தடுப்பது போல் தான்). ஆனால், நல்ல மெம்கள் செழிப்புடன் வளரவும், கெட்ட மெம்கள் வளரச்சி-அடையாமல் இருக்கவும் கூடிய சமூக-சூழலை நாம் உருவாக்க முடியும். ஆனாலும் கெட்ட மெம்களை முற்றிலும் கழைந்தெடுப்பதும் கடினம் (Evolutionarily Stable Strategy – ESS போல்).

குறைந்த பட்சம், கெட்ட மெம்கள் செல்வ-செழிப்புடன்-வளராத சமூக-சூழலை நாம் உருவாக்கும் போது, மற்ற உயிரினங்களை விட கேவலமான நிலைக்கு மனிதன் தள்ளப்படுவதை தடுக்கலாம். அதற்கு நான் நினைக்கும் சில அடிப்படை சமூக-சூழல்கள்:
** மிக குறைந்த அவசியமான சமூக கட்டுபாடு. குறைந்த பட்சம், மற்ற உயிரினங்கள் அளவிற்காவது இருக்கலாம்.
** ஒரு சமூகமாக, ஒவ்வொன்றையும் வெளிப்படையாக அலசம் பாங்கு மற்றும் புதியவற்றை ஏற்கும் பக்குவம்.
** எந்த ஒரு விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார் – என்பதை உணருதல்.
** தெரியாததை தெரியாது என சொல்ல துணியும் தைரியம்.

(அறியாமை, தேவையற்ற பயம், மூடநம்பிக்கை போன்றவை இதனுள் அடக்கம்)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//ஆனால், நல்ல மெம்கள் செழிப்புடன் வளரவும், கெட்ட மெம்கள் வளரச்சி-அடையாமல் இருக்கவும் கூடிய சமூக-சூழலை நாம் உருவாக்க முடியும். ஆனாலும் கெட்ட மெம்களை முற்றிலும் கழைந்தெடுப்பதும் கடினம் (Evolutionarily Stable Strategy – ESS போல்).//

ம்ம்.. ess புதுசு.. படித்துப் பார்க்கணும்..

//** மிக குறைந்த அவசியமான சமூக கட்டுபாடு. குறைந்த பட்சம், மற்ற உயிரினங்கள் அளவிற்காவது இருக்கலாம்.
** ஒரு சமூகமாக, ஒவ்வொன்றையும் வெளிப்படையாக அலசம் பாங்கு மற்றும் புதியவற்றை ஏற்கும் பக்குவம்.
** எந்த ஒரு விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார் – என்பதை உணருதல்.
** தெரியாததை தெரியாது என சொல்ல துணியும் தைரியம்.//

2, 3, and 4 - கண்டிப்பாக தேவை..
1 - அகைன், நான் படிக்கணும், அலசனும் கார்ஸ்.. எதெல்லாம் தவறு.. எதெல்லாம் சரி.. இப்படி..

நல்ல உரையாடலுக்கு நன்றி மற்றும் பை.. அடுத்ததில் சந்திக்கலாம்..

CorTexT said...

//நல்ல உரையாடலுக்கு நன்றி மற்றும் பை.. //
நல்ல உரையாடலுக்கு நன்றி! பை :)

//அடுத்ததில் சந்திக்கலாம்..//
மகிழ்ச்சி!

Thekkikattan|தெகா said...

அடேங்கப்பா இம்பூட்டு ஓடியிருக்கா? எல்போர்டு செம ஃபார்ம்ல இருந்திருக்கப்போய்...

கார்டெக்ஸ்ட், விடாம அடிச்சி ஆடியிருக்கீங்க :) - முழுசும் படிச்சிட்டோம்ல.

CorTexT said...

//Thekkikattan|தெகா said...
அடேங்கப்பா இம்பூட்டு ஓடியிருக்கா? //

உரையாடலும் சுகமே! அதை நீங்கள் சுகமாக படித்ததை அறிந்ததும் சுகமே!