02 January 2011

அர்த்தங்களை தேடி

இந்த உலகம் மிகவும் விந்தையான ஒன்று தான். அதன் அர்த்தங்களை நாம் எப்படி தேடுங்கின்றோம் என்பதற்கான தேடலே இது. அதற்கு நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி இந்த உலகை உணர்ந்து கொள்கின்றோம், எப்படி கற்று கொள்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இது ஒரு தேடலின் தேடல்!

உணர்வுகள்

உயிர்கள் அதன் சுற்றுச்சூழலின் அர்த்தங்களை அறிந்து கொள்கின்றனவோ இல்லையோ, அனைத்து உயிர்களும் ஏதாவது ஒரு வகையில் அதன் சுற்றுச்சூழலை உணர்கின்றன. அப்படி பட்டவை மட்டுமே பிழைத்து இருக்க முடியும். பரிணாம வளர்ச்சி தொடர்பில் (Tree of Life) மேல் மட்டத்திலுள்ள விலங்குகள், பல நுணுக்கமான உணர்-உருப்புகளான புலன்களையும், மூளையையும் பரிணாம வளர்ச்சியில் பெற்றிருக்கின்றன. புலன்கள் சுற்றுச்சூழலின் பண்புகளை/காரணிகளை குறிப்பலைகளாக (மின்னலைகளாக) மாற்றி மூளைக்கு அனுப்புகின்றன. அந்த குறிப்பலைகளை கொண்டு மூளை சுற்றுசூழலை உணர்கின்றது.

[உணர்வு = சுற்றுச்சூழலின் ஒரு குறிப்பிட்ட பண்பை/காரணியை/தன்மையை அறிதல்]

மற்ற பல விலங்குகளை போல், மனிதனுக்கும் (குறைந்த பட்சம்) ஏழு உணர்வுகள் உண்டு.
  1. ஓளி-உணர்வு (பார்த்தல்; கண்)
  2. ஒலி-உணர்வு (கேட்டல்; காது)
  3. காற்றில்-கலந்துள்ள-சில-வேதிப்பொருட்களை-அறியும்-உணர்வு (மணம்; மூக்கு)
  4. நாக்கில்-படும்-சில-வேதிப்பொருட்களை-அறியும்-உணர்வு (சுவை; நாக்கு)
  5. அழுத்தத்தை-அறியும்-உணர்வு (தொடு-உணர்வு; தோல்)
  6. வெப்பநிலையை-அறியும்-உணர்வு (வெப்ப-உணர்வு; தோல்)
  7. புவியீர்ப்பு-விசையை-அறியும்-உணர்வு (சமன்நிலை-உணர்வு; காது; காதினுள்ளே உள்ள திரவத்தின் நிலையை கொண்டு அறியும் உணர்வு; இந்த சமன்நிலை-உணர்வை கொண்டு தான், நாம் மேல், கீழ் உணர்கின்றோம். அதை கொண்டே நடக்கவும், பிறகு ஓடவும், மிதிவண்டி ஓட்டவும் கற்றுக்கொள்கின்றோம்)
சில பறவைகளுக்கு உயர-உணர்வு (காற்றழுத்தத்தை பயன்படுத்தி) மற்றும் திசை-உணர்வு (புவியின் காந்தபுலத்தை பயன்படுத்தி) இருக்கலாம்.

ஒரு உணர்வின் திறன் அதனுடைய புலனின் திறனையும், அதனை அறியும் மூளையின் செயல்திறனையும் பொருத்து இருக்கும். உதாரணமாக, மனிதனின் காதினால் 20 முதல் 20,000 Hz வரையுள்ள அதிர்வெண் (Hz = ஒரு வினாடியில் நிகழும் அதிர்வுகள்) கொண்ட ஒலியலைகளை மட்டுமே அறிய முடியும். மற்ற சில விலங்குகளின் காதினால் இதைவிட குறைந்த அல்லது அதிக அதிர்வெண் ஒலியலைகளை அறிய முடியலாம். ஒரு உணர்விற்கான மூளையின் செயல்திறன் அந்த உணர்வின் குறிப்பலைகளை மூளை எந்த அளவு பயன்படுத்தி கற்று கொள்கின்றது என்பதை பொருத்தது. ஆனால் அதற்கு மூளையில் தேவையான அளவு இடமும் வேண்டும். உதாரணமாக, கண்பார்வை இழந்தவர்கள் ஒலியலைகளை பெரிதும் சார்ந்து இருப்பதாலும், பொதுவாக ஓளி-உணர்வுக்கு பயன்படும் மூளையின் இடம் பயன்படுபடுத்தப் படாமல் இருப்பதாலும், அவர்கள் மூளையின் ஒலி-உணர்வு செயல்திறன் அதிகமாக இருக்கும்.

கற்றல்

மூளையின் கட்டமைப்பு கணினியின் கட்டமைப்பிலிருந்து மாறுபட்டு இருந்தாலும், மூளை கணினி போன்று செய்திகளை/குறிப்பலைகளை பகுத்தாயும் ஒரு அமைப்பு. மூளை என்பது நரம்பணுக்களால் (Neurons) பிணையப்பட்ட வலை (Neural Network). மூளையின் நரம்பணுக்கள் ஒன்றுக்கொன்று பல்வேறு வகையில் இணைந்து நரம்பணு-வலைச்சுற்றுக்களை (கணினியின் மின் சுற்றுகளை போல்) அமைக்கின்றன. இந்த நரம்பணு-வலைச்சுற்றுக்களைப் பொருத்து மூளையின் செயல்முறைகள் இருக்கும். மூளையின் நரம்பணு-வலைச்சுற்றுக்கள் இரண்டு வழிகளில் அமைக்கப்படுகின்றன.

பரிணாம வளர்ச்சி தொடர்பில் கீழ் மட்டதிலுள்ள விலங்குகளின் மூளையின் நரம்பணு-வலைச்சுற்றுக்கள் பிறப்பிலே உருவாக்கப்படும் (கால்கள், வாய், மூக்கு போன்றவை பிறப்பிலே உருவாக்கப்படுவது போல்). அதாவது அதற்கேற்ற மரபணுக்கள் (ஜீன்கள்) பரிணாம வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இந்த முறை மூலம் எளிய சிக்கலற்ற செயல்முறைகள் மட்டுமே எளிதாக பரிணாம வளர்ச்சி அடைய முடியும். ஆதலால் அந்த விலங்குகளின் நடத்தைகளும் எளியமையாகவும் நேரடியாகவும் இருக்கும். உதாரணமாக எறும்புகள், தவலைகள், முதலைகள், பலவகை பறவைகள் கூட சில எளிய செயல்முறைகளை கொண்டே இயங்குகின்றன. இப்படி பெறப்படும் மூளையின் செயல்முறையை நாம் இயலுணர்வு/உள்ளுணர்வு (Intuition) என்கின்றோம்.

இந்த முறையை தவிர, பரிணாம வளர்ச்சி தொடர்பில் மேல் மட்டதிலுள்ள விலங்குகள் சுற்றுசூழலிலிருந்து பெறப்படும் அனுபவத்திலிருந்து அதாவது புலன்கள் மூலமாக வரும் குறிப்பலைகளை கொண்டு நரம்பணு-வலைச்சுற்றுக்களை அமைக்கின்றன. இதை நாம் கற்றல் என்கின்றோம். இந்த முறையில், பிறக்கும் போது மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் வெறுமையாக இருக்கும் (நரம்பணுக்கள் இருக்கும்; ஆனால் முறையான இணைப்புகள் இருக்காது). ஆனால் மூளை பலவிதமான கற்கும் உத்திகளை இயலுணர்வாக கொண்டிருக்கும். சிக்கலான, மாறி கொண்டே இருக்கும் சுற்றுச்சூழலை கற்றுக்கொள்ளவும், புதிய திறமைகளை கற்றுகொள்ளவும் இந்த முறை உதவும். ஆனால் கற்று கொள்வதற்கு காலமும் ஆற்றலும் தேவை. அதனால், இம்முறையை கொண்ட விலங்குகளின் குழந்தை பருவம் நீண்டதாக இருக்கும். மேலும், அதற்கு தேவையான பெற்றோர் பாசமும் கூடவே பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும். பிறந்த சில மணிநேரத்தில் நடக்கும் மான்குட்டியை ஓப்பிடும் போது, ஒரு மனித குழந்தை நடக்க வருடங்களை எடுத்துக் கொள்ளும்.

நாம் பிறக்கும் போது நமது மூளை சில இயலுணர்வுகளுக்கான (சில எளிய செயல்முறைகள் மற்றும் கற்றும் உத்திகள்) நரம்பணு-வலைச்சுற்றுக்களை கொண்டும், பெரும்பான்மையான பகுதி வெறுமையாகவும் இருக்கும். நாம் வளரும் போது, நம் புலன்களிலிருந்து பெறப்படும் குறிப்பலைகளை கொண்டு, மூளை அதன் கற்கும் உத்திகளை கொண்டு புதிய நரம்பணு-வலைச்சுற்றுக்களை உருவாக்கும். வெளிப்படையாகத் தெரிவதால், நாம் குழந்தைகள் நடக்க, பேச கற்றுக்கொள்வதை கவனிக்கின்றோம். வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அவ்வாறே நாம் பார்க்கவும், கேட்கவும், நுகரவும், சுவைக்கவும், உணரவும், அறியவும் கற்றுக்கொள்கின்றோம். இப்படி கற்றுக்கொண்டவற்றை சுய-அறிவு/பொது-அறிவு (Commonsense) என்கின்றோம். இது இயலுணர்வாக தன்னிச்சையாக நடக்கும் ஒன்று. இவ்வாறே குரங்கினங்கள் உட்பட பலவகை மேல்மட்ட விலங்குகள் கற்றுக்கொள்கின்றன. இதை தவிர, மனிதன் கற்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ளும் திறனையும் கொண்டுள்ளான். இப்பொழுது அவனால் இயலுணர்வாக உள்ள கற்கும் உத்திகளை தாண்டி புதிய கற்கும் உத்திகளையும் கற்க முடியும். இப்பொழுது அவனால் தன்னிச்சையாக கற்றுக்கொள்வதை தாண்டி வேண்டுமென்றே ஆராய்ந்து கற்றுக் கொள்ள முடியும். ஆனால் அது தன்னிச்சையாக (எளிதாக) வராது. அப்படி மனிதன் கண்டறிந்த சில செயல்முறைகள் தான் தத்துவம் (Philosophy) மற்றும் அறிவியல் (Science).

அறிவியல்

ஒரு கல்லை மேலே எறி. அது மேலே போகும்போது மேலும் மேலும் வேகமாக சென்றாலோ, அல்லது கீழே வரும்போது மேலும் மேலும் மெதுவாக வந்தாலோ, அல்லது திடீரென கோணல்மாணலாக சென்றாலோ எப்படி இருக்கும்? நாம் ஆச்சர்யம் அடைவோம். மேலே எறியப்பட்ட கல், மேலே போகும் போது மேலும் மேலும் மெதுவாகவும், கீழே வரும்போது மேலும் மேலும் வேகமாகவும் செல்ல வேண்டும். மேலும், எறியப்பட்ட கோணத்திற்கு ஏற்ப, அது ஒரு வளைவு பாதையை மேற்கொள்ளும். ஒவ்வொரு குழந்தையும் வளரும் போது அதன் அனுபவத்திலிருந்து இதை கற்றுக்கொள்கின்றது. வேகம், முடுக்கம், விசை, புவியீர்ப்புவிசை என எந்தவித ஆழ்ந்த புரிதலும் இல்லை என்றாலும், எறிந்த கல் சற்றே வேறுவிதமாக நடந்து கொண்டால், உடனே ஏதோ ஒன்று முரணாக இருப்பதை உணர்கின்றோம். ஆனால், நாம் வாழும் சுற்றுச்சூழலில், மேலே எறிந்த கல் கீழே வரவே வராது என்றால், அப்படியே நமது மூளையும் கற்று கொண்டிருக்கும். நாம் எப்படிப்பட்ட சுற்றுச்சூழலில் வாழ்கின்றோமோ அதனுடைய பண்புகளை, காரண-காரியங்களை நமது மூளை கற்றுக்கொள்கின்றது. இப்படி, நாம் வளர வளர, நமது மூளை பலவகையான அறிதல்களை கற்று, சேகரித்து கொள்கின்றது. இதை சுய-அறிவு/பொது-அறிவு என்கின்றோம். இது முக்கியமான பல அறிதல்களை கொடுத்தாலும், எந்தவித ஆழ்ந்த தெரிதலையோ, புரிதலையோ அது தருவதில்லை; மேலும் அது பலநேரம் நம்மை தவறான அறிதல்களுக்கும் இட்டுச் செல்கின்றது. அப்படித்தான், நாம் உருண்டையான பூமியை தட்டையாக நினைக்கின்றோம்; அப்படித்தான், பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றிவரும்போது, சூரியன் நம்மை சுற்றி வருவதாக நினைக்கின்றோம். அப்படித்தான், இயற்கைத்-தேர்வு-முறையில் (Natural Selection Process) பரிணாம வளர்ச்சிப் பெற்ற உயிர்களை யாரோ படைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.

ஆனாலும், பொது அறிவை தாண்டி, மனிதன் பல விசயங்களை ஆழமாக யோசித்தும், விவாதித்தும் இருக்கின்றான். இப்படிப்பட்ட அறிவு தேடலை தத்துவம் என்கின்றோம். இது பலவித புதிய சிந்தனைகளையும், யோசனைகளையும் உருவாக்கியது. முதல்-காரணகர்த்தா (Prime Mover) (அனைத்து காரண-காரிய விளைவுகளின் சங்கிலி தொடரில் முதல் மூலக் காரணம்) மற்றும் ஜீனோ முரண்பாட்டுண்மை (Zeno’s Paradox) (இயக்கம் எப்படி சாத்திமில்லா ஒன்று) போன்றவை அப்படி உருவான சிந்தனைகள் தான். கடவுள் என்ற கோட்பாடும் அப்படி உருவான ஒரு சிந்தனை தான். பல தத்துவ மேதைகள் அதை ஆழமாக அலசினார்கள். அனைத்துக்கும் மூல காரகர்த்தா கடவுள் என்றால், கடவுளின் காரணகர்த்தா யார்? தத்துவ தருக்க அடிப்படையில் பார்த்தால், ஒரு புதிரை விளக்க மற்றொரு புதிரை பயன்படுத்தும் முரன்பாடுதான் கடவுள் கோட்பாடு என்பதை அறிய முடியும். ஆனாலும் பலர் கடவுள் கோட்பாட்டை எந்த காரண-காரிய தருக்கங்களை எல்லாம் தாண்டி நம்பினாலும், அதை தத்துவ அளவில் விளக்க முற்பட்டனர். தத்துவத்தின் ஒரு துணைப்பிரிவாக கருதப்படக் கூடிய, இந்த தேடலை இறையியல் (Theology) என்கின்றோம். சில காலத்திற்கு பிறகு, தத்துவம் என்ற அறிவை தேடும் செயல்முறை, அதன் திறனின் எல்லையை எட்டியது; அதற்கு மேல் ஆழமாகவோ தெளிவாகவோ செல்ல முடியாமல், வாழ்கையை பற்றியோ, நாம் வாழும் உலகைப் பற்றியோ எந்த அழ்ந்த அறிவையும் தரமுடியாமல் வெறும் முன்னும் பின்னுமான விவாதித்திலே நின்று போனது.

மேலிருந்து கீழே போட்டால், ஒரு கனமான பொருள் அதைவிட குறைந்த கனமுள்ள பொருளை விட வேகமாக பூமியை அடையும் என்று நமது பொதுஅறிவுக்கு படலாம். கலிலியோ முதன்முதலில் இந்த இரண்டு பொருட்களும் ஒரே நேரத்தில் பூமியை அடையும் என்பதை சோதனை மூலம் செய்து காட்டினார். சந்திரன், கோள்கள், சூரியன், நட்சத்திரங்கள் பற்றி தத்துவங்களையும், கற்பனை கதைகளையும் சொல்வதை விடுத்து, தன்னுடைய தொலைநோக்கி கொண்டு அவற்றை கண்காணித்தார். வெளிச்சார்புடனான பரிசோதனை செய்தல், சரிபார்த்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை சுட்டி காண்பித்தார். இவ்வாறு கலிலியோ மற்றும் பலர் கண்காணித்தல், கோட்பாடு இயற்றுதல், பரிசோதனை செய்தல், சரிபார்த்தல் முதலியவற்றை கொண்ட ஒரு செயல்முறையை உருவாக்கினர். இப்படிப்பட்ட அறிவு தேடலை அறிவியல் என்கின்றோம். இது உயிர்களையும், அவற்றின் 400 கோடி வருட பரிணாம வளர்ச்சியையும், நாம் புரிந்து கொள்ள உதவியது. கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களையும், அவை ஒவ்வொன்றிலும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் அடக்கிய நமது அண்டத்தையும், அதன் 1400 கோடி வருட வளர்ச்சியையும் நமக்கு காட்டியது.

அறிவியல் என்பது வெளிசார்புடனான (Objectivity) ஒழுங்கு முறையில் அறிவைத் தேடும் ஒரு செயல்முறை. நமது மூளை எப்படிப்பட்ட திறன்களுடனும், குறைகளுடனும், வரம்புகளுடனும் பரிணாம வளர்ச்சியில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்து, நாம் வாழும் இந்த சிக்கலான உலகை ஆழ்ந்த அறிவுடன் புரிந்து கொள்ள நாம் கண்டறிந்த சிறந்த உத்திதான் அறிவியல். இதைக் கொண்டு உயிரை படிக்கலாம் (உயிரியல்), அண்டத்தை படிக்கலாம் (அண்டவியல்), மனதை படிக்கலாம் (உளவியல்), கலைகளை படிக்கலாம், மதங்களை படிக்கலாம், ஏன் அறிவியலையும் படிக்கலாம் (அறிவியலைப் பற்றிய அறிவியல்). ஆனால் நமக்கு அனைத்து விடைகளையும் உடனடியாக தர அறிவியல் ஒன்றும் மாயவித்தை அல்ல. அதற்கு காலமும், உழைப்பும் தேவை.

அறிதல்

மனிதனின் மூளை எப்படி பரிணாம வளர்ச்சியில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்தும், பல தலைமுறைகளாக நாம் கற்ற அனுபவத்திலிருந்தும் பல முறைகளில் நாம் எந்த ஒன்றையும் அறிந்து கொள்கின்றோம். இப்படி அறிந்தவற்றின் தொடர்புகளை கொண்டு நாம் அவற்றின் அர்த்தங்களை காண விளைகின்றோம்.
  • இயலுணர்வு/உள்ளுணர்வு (Intuition) : பிறப்பிலே நம்முடைய மூளை பல செயல்முறைகளை கொண்டுள்ளது. இவை பரிணாம வளர்ச்சியில் செதுக்கப் பட்டவை.
  • சுய-அறிவு/பொது-அறிவு (Commonsense): புலன்கள் மூலமாக வரும் குறிப்பலைகளை கொண்டு, அதாவது நம் உலக அனுபவத்திலிருந்து, நம்முடைய மூளை தன்னிச்சையாக கற்று, காரண-காரியங்களை பற்றிய பலவிதமான அனுமானங்களை சேகரிக்கின்றது. இதில் மிகக் குறிகிய புரிதலே இருக்கும்.
  • தத்துவம் (Philosophy): உள்ளுணர்வு மற்றும் பொது-அறிவில் பெறப்பட்ட செயல்முறைகளை விரிவுபடுத்தி நிறுவப்பட்ட நம்பிக்கை அமைப்பு. அதனால், இது நம் தற்சார்பு நம்பிக்கைக்கு (Subjectivity) உட்பட்டது.
  • இறையியல் (Theology): தத்துவத்தின் ஒரு துணைப்பிரிவான இது, ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை ஒருதலையாக சார்ந்த அமைப்பு. இது மிகவும் தாராளமாக (Liberal) ஏற்றுக் கொள்ளும் நம்பிக்கை அமைப்பு. அதனால் இது வெகுவாக நம் தற்சார்பு நம்பிக்கைக்கு உட்பட்டது.
  • அறிவியல் (Science): இது "எந்த ஒரு விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார்" என்பது போன்ற மிகவும் கட்டுபாடான (Conservative) நம்பிக்கை அமைப்பு. இதற்கு கண்காணித்தல், கோட்பாடு இயற்றுதல், பரிசோதனை செய்தல், சரிபார்த்தல் போன்றவை அவசியம். நம்முடைய உள்ளுணர்வு மற்றும் பொதுஅறிவின் தடைகளை தாண்டி ஒரு வெளிசார்புடனான அறிவை பெற இது ஒரு வழியை காட்டுகின்றது.

6 comments:

CorTexT (Old) said...

நான் ஆங்கிலத்தில் ஏற்கனவே எழுதிய பதிவுககளை இணைத்த ஒரு கட்டுரை...
Science of Science (http://ecortext.blogspot.com/2010/06/science-science.html)
Sense Making (http://ecortext.blogspot.com/2010/04/sense-making.html)
Who am I? (http://ecortext.blogspot.com/2010/06/welcome-to-me.html)

ஆ.ஞானசேகரன் said...

தெரிந்துக்கொள்ள கூடிய பல விடயங்கள் அடங்கிய பதிவு... பாராட்டுகள்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

RMD said...

நல்ல பதிவு.நன்றி நண்பரே. இந்த டி.என்.ஏ பற்றியும் இத்னை கண்டறியும் செயல் முறை பற்றியும் ஒரு பதிவிடுங்கள் .

CorTexT (Old) said...

//ஆ.ஞானசேகரன் said...
தெரிந்துக்கொள்ள கூடிய பல விடயங்கள் அடங்கிய பதிவு... பாராட்டுகள்//

மிக்க நன்றி!

CorTexT (Old) said...

//RMS Danaraj said...
நல்ல பதிவு.நன்றி நண்பரே. இந்த டி.என்.ஏ பற்றியும் இத்னை கண்டறியும் செயல் முறை பற்றியும் ஒரு பதிவிடுங்கள்
//

கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. டி.என்.ஏ பற்றி நீங்கள் கேட்கவருவது எனக்கு சரியாக புரியவில்லை. எதை எதிர்பார்க்கின்றீர்கள் என்று மேலும் விளக்கினால், என்னால் முடிந்த மட்டும் எழுத முயற்சிக்கின்றேன். வசதிக்காக ஒரு சிறு பட்டியல் இங்கே.

* டி.என்.ஏ மூலக்கூறு அமைப்பு என்ன? (http://en.wikipedia.org/wiki/DNA)
* டி.என்.ஏ மூலக்கூறு அமைப்பு எப்படி கண்டறியப்பட்டது?
* ஜீன்கள் என்றால் என்ன?
* செல்லின் அமைப்பு? டி.என்.ஏ செல்லில் எங்கு/எப்படி உள்ளது? (குரோசோம்கள்). செல் எப்படி டி.என்.ஏ கொண்டு புரதங்களை தயாரிக்கின்றது? (வேதி-உயிரியலின் அடிப்படை)
* ஜீனோம் (http://en.wikipedia.org/wiki/Genome)
* Epigenetics (http://en.wikipedia.org/wiki/Epigenetics)
* டி.என்.ஏ மூலக்கூறை எப்படி நம் செல்லிலிருந்து பிரிந்தெடுக்கின்றார்கள்?

மிகவும் விளக்கமாக பாடபுத்தகம் அளவிற்கு இவற்றை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஓரளவு அதன் அமைப்பையும், அதன் நான்கெழுத்து குறிப்புகளையும், அதனால் எழுதப்பட்ட ஜீன்களையும், அது எப்படி நம்மை நிர்ணயிக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்வது நல்லது. இரத்த பிரிவுகளை அறிந்து கொள்வது போல், கூடிய விரைவில் நாம் நம்முடைய ஜீனோமை தெரிந்து கொள்வோம். மருத்துவமும் ஒவ்வொருவருடைய ஜீனோமை பொருத்து இருக்கும் (Personalized medicine: http://en.wikipedia.org/wiki/Personalized_medicine). என்னுடைய "நான் யார்?" (http://icortext.blogspot.com/2010/07/blog-post.html) பதிவை படித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அதில் எழுதப்பட்டுள்ளது போல், நான் என்னுடைய மரபணு பகுப்பாய்வை செய்துள்ளேன்.

CorTexT (Old) said...

//
5. அழுத்தத்தை-அறியும்-உணர்வு (தொடு-உணர்வு; தோல்)
6. வெப்பநிலையை-அறியும்-உணர்வு (வெப்ப-உணர்வு; தோல்)
//

ஒரு நண்பருக்கு விளக்கியது இது. ஒருவர் நம்மை தொடும்போது அதன் அழுத்த-உணர்வையும் (எவ்வளவு மெதுவாக இருந்தாலும்), வெப்ப-உணர்வையும் சேர்த்தே உணர்ந்து அதை 'தொடுதல்' என்கின்றோம். ஆனால் அதில் இரு வேறுபட்ட உணர்வுகள் இருக்கின்றன. நம்முடைய மூளையிலும் அவை வெவ்வேறு முறையில், வெவ்வேறு இடத்தில் அறியப்படுகின்றன.