02 July 2010

நான் யார்?

நான் யார்? - ஆண்டிகளும், யோகிகளும், தத்துவ ஞானிகளும் ஆயிரமாயிரம் வருடங்களாக கேட்ட கேள்வி! அதற்கான விடையை, டார்வின் 150 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்திருந்தாலும், இப்பொழுது உயிரை பற்றி நமக்கு அக்குவேர் ஆணிவேராக தெரியும். உயிர் என்பது ஒருவகை சிக்கலான வேதிவினைகளின் தொகுப்பு. அதன் அடிப்படை வினை, அமினோ அமிலங்களை (உணவு) கொண்டு மரபணுக்கள் (DNA மூலக்கூற்றின் பகுதி) எனப்படும் அச்சுக்களை பயன்படுத்தி புரதங்களை (உடலின் கட்டுமான பொருள்) உருவாக்குவது தான்.

[மரபணு] + [அமினோ அமிலங்கள்] --> [புரதம்]

நம் உடலின் பகுதிகள் ஒவ்வொன்றும் (இரத்தம், தோல், இருதயம், மூளை...) வெவ்வேறு புரதங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை புரதமும் வெவ்வேறு மரபணுக்களை பயன்படுத்தி ஆனால் ஒரே அமினோ அமிலங்களை கொண்டு வார்க்கப்படுகின்றன. நம்மை, அதாவது நம் அக மற்றும் புற பண்புகளை புரதங்கள் தீர்மானிக்கின்றன...புரதங்களையோ நம் மரபணுக்கள் தீர்மானிக்கின்றன. இவ்வாறு நம்மை நம் மரபணுக்கள் தீர்மானிக்கின்றன. பாக்டீரியா, செடி கொடிகள், மீன்கள், பறவைகள், ஆடு மாடுகள், சிங்கம் புலிகள், குரங்கு மனிதர்கள் என அனைத்து உயிர்களும் நான்கே எழுத்துக்களை கொண்டு எழுதப்பட்டுள்ளது. அவை A, C, G, T. இவை ஒவ்வொன்றும் ஒரு DNA-மூலக்கூற்றின் சிறு-பகுதி-மூலக்கூற்றை குறிக்கின்றது. DNA மூலக்கூற்றை ஒரு நீண்ட ஏணிப்படியாக கருதினால் அதன் படிகள் இந்த நான்கு சிறு-பகுதி-மூலக்கூறுகளை (எழுத்துக்களை) கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதை வரிசைப்படுத்தி எழுதினால் அதை மரபணு-வரிசை எனலாம். ஒரு 10 படி வரிசைக்கு உதாரணம்: CAGGAATGCA. இதில் ஒரு படி மாறினாலும் அதனால் உருவான புரதம் முற்றிலும் வேறுமாதிரியான பண்புகளை தரலாம்.

நாம் உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று என பல காரணிகள் புரத உருவாக்கத்தை பாதிக்கின்றன. மேலும் சூரியனின் புற-ஊதா கதிர்கள், புகைப்பிடித்தல் போன்றவை மரபணுக்களை சிதைக்கின்றன. இவ்வாறாக நம்முடைய சூழல்கள் (உணவு மற்றும் இதர பழக்கங்கள், வாழ்க்கை மற்றும் கலாச்சார முறைகள், உள்/வெளி சுற்றுப்புற சூழல்கள்) நம்மை தீர்மானிக்கின்றன.

[நான் யார்?] = [என் மரபணுக்கள்] + [என் சூழல்கள்]

இப்பொழுது மரபணு பகுப்பாய்வு (இரத்த சோதனை போல்) பரவலாக செய்யப்படுகின்றது. மரபணு பகுப்பாய்வுக்கு நம்முடை எச்சிலை அனுப்பி வைத்தால் போதும். ஏனென்றால், எச்சில் உட்பட நம்முடைய அனைத்து உயிரணுக்களின் உட்கருவிலும் அதே மரபணுக்கள் தான் உள்ளது. அம்மாவின் ஒரு உயிரணு (கருமுட்டை), அதன் உட்கருவிலுள்ள 50% மரபணுக்களுடன், அப்பாவின் 50% மரபணுக்கள் (விந்து) இணையும் போது - அதாவது கருவுறும் போது - நம் முதல் உயிரணு உருவாகின்றது. அது தொடர்ந்து புரதங்களை உருவாக்கி பிளவடைந்து புதிய உயிரணுக்களை உருவாக்கின்றது. ஒவ்வொரு வகை உயிரணும் (இரத்தம், தோல், இருதயம், மூளை...) ஒவ்வொருவகை புரதங்களை தயாரிக்கும் நிபுணர்களாகின்றது.

கீழே உள்ள படம், நமது உட்கருவிலுள்ள மரபணுக்கள் (22 ஜோடி குரோமொசோம்கள் மற்றும் XY குரோமொசோம்கள்; குரோமொசோம் என்பது DNA மூலக்கூற்றை சுற்றியுள்ள ஓர் உறை) மற்றும் இழைமணிகளின் (உயிரணு ஆற்றல் உரு) மரபணுக்களை காட்டுகின்றது.
  • 1-22 ஜோடி குரோமொசோம்கள், ஒரு தொகுப்பு அம்மாவிடமிருந்தும் மற்றொன்று அப்பாவிடமிருந்தும் வந்தது.
  • X-குரோமொசோம் அம்மாவிடமிருந்தும், மற்றொரு X-குரோமொசோம் அல்லது Y-குரோமொசோம் அப்பாவிடமிருந்தும் வந்தது. XY இணைந்தால் ஆண்பாலாகவும், XX இணைந்தால் பெண்பாலாகவும் இருக்கும்.
  • MT என்பது இழைமணி மரபணுக்கள். இழைமணிகள் நம் உயிரணுவில் ஆனால் உட்கருவுக்கு வெளியே இருக்கும். இது அம்மாவிடமிருந்து குழந்தைகளுக்கு செல்கின்றது.
  • ஒவ்வொரு குரோமொசோமிலும் உள்ள மொத்த படிகள் (Bases), மரபணுக்கள் (Genes), ஒரு-படி-பலவுருமாற்றங்கள் (SNPs) குறிக்கப்பட்டுள்ளது. ஒரு-படி-பலவுருமாற்றங்கள் என்பது ஒரு மரபணுவிலுள்ள ஒரு படியில் ஏற்படும் மாற்றங்களை குறிக்கின்றது. அதன் ஒவ்வொரு மாற்றமும் வெவ்வேறு பண்புகளை தரும்.

மொத்தத்தில் ஒவ்வொரு மரபணு வரிசையில், ஒரு-படி-பலவுருமாற்ற இடத்தில் உள்ள படியை கொண்டு, நமது பண்புகளை கணிக்க முடியும். சில உதாரணங்கள்:
  • எந்த நோய்கள் (நீரழிவு, மூட்டுவலி, மாரடைப்பு, புற்று, மூளை நோய்கள், மன நோய்கள், ...) நமக்கு வர அதிக அல்லது குறைந்த வாய்ப்புள்ளது?
  • எந்த மருந்துகள் எப்படிப்பட்ட சிகிச்சை அதிக பலன் தரும்?
  • மதுபானம் போன்ற போதை பொருள்களும் எளிதாக அடிமையாகும் பண்புள்ளதா?
  • காப்பியை எளிதாக ஜீரணிக்கும் பண்புள்ளதா?
  • தோல், கண், முடி நிறங்கள் என்ன?
  • நிற மற்றும் சுவை குருடு உள்ளதா? பலருக்கு பலவகையான கசப்பு சுவையை அறிய இயலாது.
  • வலி உண்ர்திறன் அதிகமாக அல்லது குறைவாக உள்ளதா?
  • வழுக்கைத்தலை வர அதிக அல்லது குறைந்த வாய்ப்பு உள்ளதா?
  • வெவ்வேறு வகை அறிவுதிறனின் வாய்ப்பு விகிதம் என்ன?
  • தற்காலிக மற்றும் நீண்ட ஞாபகசக்தி திறன் அதிகமாக அல்லது குறைவாக உள்ளதா?

நம் இழைமணி மரபணுக்கள் அம்மாவிடமிருந்து குழந்தைகளுக்கு செல்கின்றது. இவ்வாறு செல்லும் போது சிறு மரபணு பிழைகள் (மாற்றங்கள்) ஏற்படலாம். ஆதி மனிதனிலிருந்து தலைமுறை-தலைமுறையாக இதில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டு நமது மூதாதையோர்களை தடம்பிடிக்க முடியும். இவ்வாறு 200,000 வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் பரிணாம வளர்ச்சியடைந்த நமது முதல் மனித சந்ததியை தடம்பிடிக்க முடியும் (அதை அப்படியே இன்னும் பின்னோக்கி சென்று நமது நெருங்கிய உறவினர்களான குரங்கினத்தோடும் தடம்பிடிக்கலாம்). இழைமணி மரபணுக்களில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களை கொண்டு மனித இனத்தின் குடிபெயர்ச்சியை பல கிளை-சந்ததிகளாக (Haplogroups) பகுக்கலாம். இது தாய்வழி கிளை-சந்ததிகள் (இது போலவே, Y-குரோமொசோமின் மரபணு பிழைகள் கொண்டு தந்தைவழி கிளை-சந்ததிகளும் பகுக்கப்பட்டுள்ளது). உதாரணமாக பெருபான்மையான தென்-இந்தியாவினர் M-கிளை-சந்ததியின் சந்ததிகளாக இருக்கும். M-கிளை-சந்ததி 60,000 வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய சமயத்தில் L3-கிளை-சந்ததியிலிருந்து பிரிந்தது. L3-கிளை-சந்ததி L1-கிளை-சந்ததியிலிருந்து பிரிந்தது. கீழேயுள்ள படம் மனித குடிபெயர்ச்சியுடன் அதன் கிளை-சந்ததிகளையும் காட்டுகின்றது (இது 500 வருடங்களுக்கு முன்புவரை தான் பொருந்தும். அதன் பிறகு, கண்டங்களுக்கிடையே பயணம் எளிதாகி போனதால், இன்று பல கிளை-சந்ததி மனிதர்களையும் பல நாடுகளில் காணலாம்).
நாளை என்ன சாத்தியம் என்பதற்கு இது ஒரு ஆரம்பம் தான்! தான் யார், தன்னுடைய வரலாறு என்ன, தன்னுடைய உடலெழுத்து, தலையெழுத்து என்ன என்பதை அறிந்து கொண்ட முதல் விலங்கு மனிதன்! இதை கொண்டு, அவன் உயர்நிலை மாமனித இனமாகலாம்! பாரதி கம்பன் கவிதைகள் எழுதியதை போல், வருங்காலத்தில் புதிய தலைமுறை கவிஞர்கள் மரபணுக்களை எழுதலாம்!

6 comments:

ஆ.ஞானசேகரன் said...

மிக நல்ல விளக்கங்கள்.... இன்னும் தெரியவேண்டிய பகுதிகள்..... இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலா,,

தட்ப வெப்ப சூழ்நிலைகள் மர்பணுவை பாதிக்குமா? அப்படி பாதிக்கும் என்றால் எப்படி?

நான் யார் என்று அறிந்த பிறகும் மனிதன் எதை நோக்கி பயனிக்கின்றான்? அதாவது மனதின் அமைதி வேண்டி கடவுளை தேடி செல்லும் நோக்கம் என்ன? கடவுள் நம்பிக்கை மரபியல் பண்பு சார்ந்ததா? இல்லை என்றால் பிள்ளைகளிடம் ஆழமாக தொற்றிக்கொள்வது ஏன்?

மேற்கண்ட விளக்கங்களையும் சொல்லவும்..

CorTexT (Old) said...

//இன்னும் தெரியவேண்டிய பகுதிகள்....//

என்னவென்று கூறவும். விரிவுபடுத்த முயற்சி செய்கின்றேன்.

CorTexT (Old) said...

//தட்ப வெப்ப சூழ்நிலைகள் மர்பணுவை பாதிக்குமா? அப்படி பாதிக்கும் என்றால் எப்படி?//

எந்த ஒரு வேதி-மூலக்கூறும், எந்த ஒரு வேதி-வினையும் தட்ப வெப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப்படும். மரபணு ஒரு வேதி-மூலக்கூறு, உயிர் என்பது ஒருவகை சிக்கலான வேதிவினைகளின் தொகுப்பு. எனவே தட்ப வெப்ப சூழ்நிலைகள் மரபணுவை பாதிக்கும்.

நாம் கருதரிக்கும் போது ஒரு உயிரணுவில் (செல்) ஆரம்பிக்கின்றோம். அதன் உட்கருவில் நம் மரபணுக்கள் உள்ளன. அந்த ஒரு உயிரணு பிளவடைந்து (செல் பிளவு) கோடிக்கணக்கான உயிரணுக்களை கொண்ட முழு மனிதனாகின்றோம். அந்த அனைத்து உயிரணுக்களின் உட்கருவிலும் அதே மரபணுக்கள் தான். ஆனால், பால்-உயிரணுக்களின் (கருமுட்டை மற்றும் விந்துக்கள்) உட்கருவில் நம்முடைய 50% மரபணுக்கள் மட்டுமே இருக்கும்.

நம்முடைய ஒரு உயிரணுவிலுள்ள மரபணு சிதைவுற்றால், அதிலிலிருந்து பிளவடைந்த அனைத்து உயிரணுவிலும் பாதிக்கப்ப மரபணுவே இருக்கும். பாதிக்கப்பட்ட மரபணுவை கொண்ட உயிரணுக்கள் உருவாக்கும் புரதம் சரியாக வேலை செய்யாது. சில குறிப்பட்ட மரபணு பாதிப்பு, புற்று நோயை உருவாக்கலாம். உதாரணமாக, சூரிய ஒளியிலுள்ள புற-ஊதா கதிர்கள் நம் தோல்-உயிரணுக்களை பாதிக்கும். அதனால் தோல்-புற்று நோய் வரலாம். நம் உடலிலுள்ள அனைத்து உயிரணுக்களின் மரபணுக்கள் மெதுவாக தொடந்து சிதையுறுவதால், நாம் முதுமையடைந்து இறக்கின்றோம். நம்முடைய ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு அளவில் முதுமை (சேதாரம்) அடையலாம். உதாரணமாக, மது பழக்கத்தால் கல்லீரல் வேகமாக முதுமையடையும்; புகைபிடித்தால் நுரையீரல் வேகமாக முதுமையடையும். ஆனால், நம் உடலின் பகுதிகள்/உறுப்புகள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன; ஒன்று சரியாக வேலை செய்யவில்லை என்றாலும், அது உடல் முழுவதையும் பாதிக்கும்.

மரபணு சிதைவு நம் பால்-உயிரணுக்களில் ஏற்பட்டால், அது அடுத்த தலைமுறைக்கு செல்லும்.

தட்ப வெப்ப சூழ்நிலைகள் மரபணுவை பாதித்தாலும், தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றபடிதான் நாம் பரிணாம வளர்ச்சியதைந்துள்ளோம். அதாவது அந்தந்த தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ற மரபணுக்களே பிழைத்து இருக்கும். அதிக சூரிய ஒளி கொண்ட பகுதிகளில், புற-ஊதா கதிர்களை தடுக்கும் புரதங்களை (அதுவே தோலின் கருப்பு நிறத்திக்கு காரணம்) உருவாக்கும் மரபணுக்களே பிழைக்கும் (அதாவது, அந்த மரபணுவை கொண்ட மனிதர்களே அங்கு எளிதாக பிழைக்க முடியும்; பிழைத்தவர்கள் தான் குழந்தைள் பெற முடியும்). மலை போன்ற உயரமான பகுதிகளிலுள்ள குறைந்த ஆக்சிஜன் சூழலுக்கு ஏற்ற மரபணுக்களே பிழைக்கும். ஆனால், தட்ப வெப்ப சூழ்நிலைகள் மாறிகொண்டே உள்ளது. அதற்கு ஏற்ப உயிர்கள் பரிணாம வளர்ச்சியடைகின்றன. அதில் உயிர்கள் அழிவதும், உயிரனங்கள் அழிவதும் அடக்கம்; அதில் பிழைத்தவற்றை பரிணாம வளர்ச்சியடைந்தவை என்கின்றோம்.

CorTexT (Old) said...

//நான் யார் என்று அறிந்த பிறகும் மனிதன் எதை நோக்கி பயனிக்கின்றான்? அதாவது மனதின் அமைதி வேண்டி கடவுளை தேடி செல்லும் நோக்கம் என்ன? கடவுள் நம்பிக்கை மரபியல் பண்பு சார்ந்ததா? இல்லை என்றால் பிள்ளைகளிடம் ஆழமாக தொற்றிக்கொள்வது ஏன்?//

தான் யாரென்று மனிதன் இப்பொழுது புரிந்து கொண்டாலும், அதை தெரிந்து கொண்டவர்கள் சிலரே, அதிலும் அதை புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே.

நமது மூளை நம்பிக்கை அடிப்படையில் தான் வேலை செய்கின்றது. ஆனால், அது குருட்டு நம்பிக்கையாகும் போது தான், நாம் ஜாதி, ஜாதகம், கடவுள், மதம், ஆவி, பேய் என்று பலவற்றிக்கு ஆளாகின்றோம்.
http://icortext.blogspot.com/2009/11/blog-post.html

நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக கடவுள் நம்பிக்கை சார்ந்த மரபணுக்கள் இருக்கலாம். சிலருக்கு ஆன்மிக உணர்ச்சி அல்லது ஆன்மிக நிலை (ஒரு மாய நிலை) அதிகமாக இருக்கலாம். பல நேரம், அது மூளையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் கோளாருகளால் ஏற்படுகின்றது. மனிதனின் அறியாமை அதை இந்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. ஒருவித ஆன்மிக நிலையை, இப்பொழுது காந்த-புல ஒட்டத்தை மூளைக்கு செலுத்தி வேண்டிய நேரத்தில் உருவாக்க முடியும். சில வகை மது பொருட்கள் ஆன்மிக அல்லது ஒருவை பரவச நிலையை தருகின்றன.
http://icortext.blogspot.com/2009/11/blog-post_06.html

உங்கள் யோசனைக்கு சில கேள்விகள்... நாம் ஏன் மது, புகை போன்றவற்றிக்கு அடிமையாகின்றோம்? மனிதன் முதலில் இசையை எப்படி உருவாக்கி இருக்கலாம்? அன்றிலிருந்து இன்றுவரை இசை எப்படி மாறியுள்ளது? ஏன் ஒருசில வரையரைக்கு உட்பட்ட சத்தத்தை இசையென்று விரும்புகின்றோம்? நமக்கு ஏன் காமடி பிடிக்கின்றது? பெல்ஸ் பேண்ட் ஏன் எப்படி உருவானது? நமக்கு ஏன் விளையாட்டு பிடிகின்றது? நமக்கு ஏன் சினிமா நடிகர் நடிகைகளை பிடிக்கின்றது? நாம் ஏன் நம்மை நாமே தேற்றி கொள்கின்றோம், நம்மையே நாம் ஏமாற்றி கொள்கின்றோம்? நமக்கே அது தெரியாதா என்ன? கிடைக்காத ஒன்றுக்காக நாம் ஏன் ஆசை படுகின்றோம்?

இவை அனைத்திலும், நமக்கு (நம் பிழைப்பு மற்றும் இனப்பெருக்கத்திற்கு) என்ன லாபம்? இவை ஏன் எப்படி எங்கிருந்து வந்தது?

Thekkikattan|தெகா said...

wow! simply amazing, man... you can not simply put all this effort and let it go astray. It needs to be widely read, we got to do something about it. There are other aggregator like indli.com, tamilveli.com etc.,

First let us hook it up with tamilmanam. Follow this link to get overall help from Tamilmanam-

http://www.tamilmanam.net/tmwiki/index.php?id=help

and follow this link if you have already registered with tamilmanam and received from them a confirmation stating that you are added. if so, then add this tool bar of tamilmanam in your site... follow this link:

http://www.tamilmanam.net/tmwiki/index.php?id=blogger_rating_guidelines

CorTexT (Old) said...

Thanks தெகா! I really appreciate your help and the tips! I'll try them. But, in any case, I satisfied with few friends like you.