02 November 2009

நம்பிக்கைகளின் மூலம்


கார்-எஞ்சின் எப்படி வேலை செய்கின்றது என்பதை அறியாமல், நாம் கார் ஓட்ட கற்று கொள்ள முடியும். அது போலவே, எப்படி நம்-மூளை கற்கின்றது...சிந்திக்கின்றது என்பதை அறியாமல் நாம் கற்று கொள்கின்றோம்...சிந்திக்கின்றோம். மூளை என்பது ஒரு கற்று கொள்ளும் எந்திரம். சிறுவயது முதல், அது எப்படிபட்ட சூழலில் வளர்கின்றதோ, அதன் படியே அது படிப்படியாக சிறுகச்சிறுக கற்று கொள்கின்றது. இவ்வாறே நாம் கேட்க, பார்க்க, பேச, நடக்க, ஓட, சிந்திக்க, பகுத்து-அறிய என பலவற்றை கற்று கொள்கின்றோம். நாம் எப்படி கற்று கொள்கின்றோம் என்பதை இரு முக்கிய காரணிகள் நிர்ணயிக்கின்றன: நம் ஜீன்கள், நாம் வளர்ந்த/வாழும் சூழல். இதில் இரு முக்கிய சூழல்கள் உள்ளன: சிறுவயதில் நெருங்கிய பந்தங்கள், பிற்பாடு நாம் வாழும் சமூகம். சிறுவயதில் பதிந்து போனவை பசுமரத்தில் அடித்த ஆணி போன்றது தான்; பிறகு மாற்றுவது எளிதல்ல.

மூளை எப்படி கற்று கொள்கின்றது? மூளை என்பது நரம்பு-செல்கள் (Neurons) பிணையப்பட்ட வலை (Neural Network). நாம் கற்கும் போது, புதிய நரம்பு-செல்-இணைப்புகளை உருவாக்கியோ அல்லது இணைப்புகளின் பலத்தை கூட்டியோ/குறைத்தோ நம் மூளை கற்று கொள்கின்றது. இவ்வாறு, புலன்கள் மூலமாக செல்லும் உலக வியசங்களை கொண்டு, மூளை மாதிரிகளை (Models) உருவாக்குகின்றது. இதில் ஒரு மாதிரியின் பலம் அல்லது நம்பிக்கை அதன் நிகழ்தகவை பொருத்தது. நாம் கற்று கொள்ளும் போது, அந்த மாதிரியின் நம்பிக்கை-நிகழ்தகவு அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். இந்த மாதிரிகளைக் கொண்டே, நாம் வாழ்கையை/உலகை புரிந்து/கணித்து வாழ்கின்றோம். புலன்கள் மூலமாக மூளைக்கு செல்லும் எந்த விடயங்களும் உலகைப் பற்றிய முழுமை அல்ல. அந்த முழுமையற்ற விடயங்களிலிருந்து மூளை ஒரு மாதிரியை (அறிவியல் தியரி போல்) உருவாக்கி, உலகை...வாழ்கையை புரிந்து...கணிப்பதையே அறிவு என்கின்றோம். அனைத்துமே முழுமையற்று இருப்பதால், அனைத்துமே நம்பிக்கை தான்; நம்பிக்கையின் நிகழ்தகவு வேறாக இருக்கலாம்; 100% நிச்சயம் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரின் மூடநம்பிக்கையும், அவரின் மூளையின்படி நம்பிக்கையே. ஆக, நம் நம்பிக்கை தற்சார்புடையது (Subjective). எனவே தான், பாரபட்சமற்ற வெளிசார்புடைய (Objective) ஆராய்ச்சி (அறிவியல்) தேவைபடுகின்றது. அதை தான், க‌லிலியோ உட்பட பல அறிஞர்கள் நமக்கு காட்டினர். ஆனால், அதை எப்படி எல்லோருக்கும் நம்ப/புரிய வைப்பது?

எந்த ஒன்றும், பரிணாம வளர்ச்சி அடைய சில முக்கிய அம்சங்கள் உண்டு: (1) அதை சேமிக்க இடம் (Storage); (2) அதை நகல்கள் எடுத்தல் (Copy); (3) நகல் எடுக்கும்போது நிகலும் பிழைகள். உதாரணமாக, ஜீன்கள் (Genes) இருக்கும்/சேமித்த இடம் DNA; அதன் நகல் எடுத்தலை இனப்பெருக்கம் என்றும் அதன் பிழைகளை மரபு-பிழைகள் என்கின்றோம். பரிணாம வளர்ச்சிக்கு நல்லது கெட்டதெல்லாம் தெரியாது; சூழலுக்கு ஏற்ற தக்கவைகள் பிழைத்து வளர்ச்சி அடையும். பரிணாம வளர்ச்சிக்கு மற்றொரு உதாரணம் மெம்கள் (Memes). மெம் என்பது ஒரு யோசனையை (Idea) குறிக்கும். கடவுள், மதம், அறிவியல், ஜாதகம், கலாச்சாரம், ஜாதி... இவை எல்லாம் மெம்கள் தான். இவை இருக்கும்/சேமித்த இடம் மூளை. இவை ஒரு மூளையிலிருந்து மற்றொன்றிக்கு காலகாலமாக மொழி, கலாச்சாரம் மூலம் பரவுகின்றது அல்லது நகல் எடுக்கப் படுகின்றது. ஜீன்களை போலவே செத்துப்போன மெம்கள் கோடான கோடி. செத்துப்போன கடவுள்களும் கோடான கோடி. இன்று பிழைத்திருக்கும் அனைத்து மெம்களும் ஏதாவது ஒருவகையில் சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்தவைகளே! அந்த சூழலில், பல மூடநம்பிக்கைகளுக்கு நம் உணர்ச்சிகள் (உணர்ச்சிகள் ஜீன்களின் பரிணாம வளர்ச்சி) முக்கிய காரணிகளாக இருக்கின்றன. மனிதனின் ஆரம்ப கட்டத்தில், அறியாமையும் பய-உணர்ச்சியும் பல மூடநம்பிக்கைகளுக்கு முக்கிய காரணிகளாக இருந்திருக்கலாம். மெம்கள் வளர்ச்சி அடைய தேர்ந்த மொழி மற்றும் கலாச்சாரம் தேவை என்பதாலே, அதை கொண்ட மனிதனிடத்தில் மூடநம்பிக்கைகளும், அறிவியல் வளர்ச்சிகளும் காணமுடிகின்றது; மற்ற விலங்குகளில் அவற்றை காண முடிவதில்லை.

பகுத்தறிவு என்பது (Critical Thinking), ஒவ்வொரு விடயத்தையும் சீர்தூக்கி வெளிசார்புடன் (Objective) கற்று, அதற்கு ஏற்ப நம்பிக்கை-நிகழ்தகவுகளை அமைப்பது. ஆனால், அந்த அறிவும் நாம் வளர்ந்த/வாழும் சூழல்களை பொருத்தது. முறையான பகுத்தறிவு இல்லாத போது, மூளை எளிதாக ஏமாந்து நம்பிக்கை-நிகழ்தகவுகளை வெளிசார்பு-அறிவுக்கு (Objective-Knowledge) எதிராக அமைப்பதை மூடநம்பிக்கை எனலாம். ஆனால், பகுத்தறிவு என்பது நம் மூளையின் அறிவு-பகுதியை மட்டுமே ஏற்பதல்ல, நம் உணர்ச்சி-பகுதியையும் ஏற்பது தான்! மானிட உணர்ச்சிகளுக்கு வடிகாலாகவும், சமூதாய வளர்ச்சிக்காவும் சில விடயங்களை கடைபிடிப்பதும் பகுத்தறிவு தான்! இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதும், நினைவு சின்னங்கள் எழுப்புவதும், பாடுவதும், கொண்டாடுவதும் பகுத்தறிவு தான். பகுத்தறிவு என்பது, நாம் எதை செய்தாலும் அதை புரிந்து கொண்டு செய்கின்றோமா அல்லது குருட்டுதனமாக செய்கின்றோமா என்பதில் தான் உள்ளது!

********

நம்முடைய ஒவ்வொரு உணர்ச்சியும், எண்ணமும், சிந்தனையும் நமக்கே சொந்தமான, தற்சாற்புடைய அனுபவங்கள். உதாரணமாக, சிலசமயம் காலம் வேகமாக செல்வது போலவும், சிலசமயம் மெதுவாக செல்வது போலவும் உணருகின்றோம். இது நம் மனநிலையை பொருத்து, நம் வயதை பொருத்து மாறுகின்றது. இதனால், நாம் சூரியனின்/சந்திரனின் சுழற்சிகள் அல்லது ஊசல்/குவார்ட்ஸ்/அணு கடிகாரங்கள் போன்ற வெளிச்சார்புடைய பொதுவான அளவுகோலை அல்லது ஆதாரத்தை காண முற்படுகின்றோம். இதில் சில அளவுகோல்கள் மற்றவற்றைவிட துல்லியமாகவும், நம்பத்தகுந்த படியும் இருப்பதை கவனிக்கவும். எப்படியாகிலும், வெளிசார்பு நிலை என்பது பொதுவான வெளிப்புற ஆதாரத்தையோ அல்லது அளவுகோல்களையோ அல்லது முறைகளையோ பயன்படுபடுத்துவது ஆகும்.

இவ்வாறு நாம் பல சிறந்த அளவுகோல்களை பலவற்றிற்கு உருவாக்கி உள்ளோம்; உதாரணமாக காலம், வெப்பநிலை, நீளம், எடை முதலியன. இதுபோலவே நாம் எப்படி ஒன்றை ஆழமாக புரிந்து கற்று கொள்ளமுடியும் எனபதற்கு உருவாக்கிய வெளிசார்புடைய முறை தான் அறிவியல். ஒன்றை கண்காணித்தில், விசயங்களை சேகரித்தல், அதன் மூலம் மாதிரிகளை, தியரிகளை உருவாக்குதல், அவற்றை சரிபார்த்தல், அதன் மூலம் புதியவற்றை கண்பிடித்தல் போன்றவை அறிவியல் முறையில் அடக்கம். அடிப்படையில் இது கட்டுபாட்டுடன் ஐயமுடன் ஒன்றை அணுகி அதற்கு தேவையான ஆதாரங்களையும், நிருபணங்களையும் எதிர்பார்க்கும் ஒரு முறை. அறிவியல் என்பது பகுத்தறிவின் ஒரு உச்ச கட்ட முறை.

சில விசயங்கள் அடிப்படையில் தற்சார்புடையவை. உதாரணமாக, எது நல்லது, கெட்டது, நியாயமானது? ஏனெனில், நியாயம் என்பது இயற்கையிலே இல்லை. 100 வருடங்களுக்கு முன் தப்பானது இன்று தப்பில்லை. எனக்கு நல்லது அடுத்தவருக்கு கெட்டதாக இருக்கலாம். ஒரு சமூக்கத்திற்கு/நாட்டுக்கு நல்லது அடுத்த சமூக்கத்திற்கு/நாட்டுக்கு கெட்டதாக இருக்கலாம். மனிதனுக்கு நல்லது மற்ற உயிரனங்களுக்கு கெட்டதாக இருக்கலாம். இது போன்ற அடிப்படையிலே தற்சார்புடைய விசயங்களுக்கு வெளிசார்புடைய பொதுவான, துல்லியமான, நம்பத்தகுந்த அளவுகோலையோ, முறையையோ உருவாக்குவது மிகக் கடினம். இவற்றிலுள்ள அனைத்து தற்சார்புடைய காரிணிகளை நீக்க முடியா விட்டாலும், வெளிசார்புடைய குறிகோள்களை உருவாக்கி அதன் மூலம் பொதுவான அளவுகோலை/முறையை உருவாக்கலாம். அப்படி உருவான ஒன்றுதான் நம்முடைய சட்டதிட்டங்கள். இது போலவே மற்ற சமூக பிரச்சனைகளுக்கும், நாம் எப்படிப்பட்ட நல்ல சமூகத்தை அனைவருக்கும் உருவாக்க விழைக்கின்றோம் என்ற குறிகோள்கள் மூலம் வெளிச்சார்புடைய பொதுவான அளவுகோல்களை/முறைகளை உருவாக்கலாம்.

********

நாம் ஏன் எளிதாக மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகின்றோம்? அது நம் மூளை எப்படிபட்ட முறைகளை/ உத்திகளை கொண்டு கற்றுக்கொள்கின்றது என்பதை பொருத்தது.
  • எந்த வயதில் கற்றது? ஒன்றுமறியா சிறுவதில் நம் நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்கள் (அதாவது நம்மை பாதுகாத்து, உணவூட்டும் நபர்கள்) கூறுவதை, நம் மூளை எளிதாக ஏற்று கற்றுக் கொள்கின்றது.
  • யார் மூலம் கற்றது? சிலரை நாம் மிகவும் முக்கியமானவர்களாகவும், தலைவர்களாகவும் கருதுகின்றோம். அவர்கள் கூறுவதை நம் மூளை எளிதாக ஏற்று கற்றுக் கொள்கின்றது.
  • பரிணாம வளர்ச்சியில் நம் மூளை சில அடிப்படை உணர்ச்சிகளை கொண்டுள்ளது. அதை தூண்டும் விசயங்களை மூளை எளிதாக ஏற்று கற்றுக் கொள்கின்றது.
  • எத்தனை முறை திரும்ப திரும்ப கேட்டது. சில பொய்களை பலமுறை சொல்லி உண்மை போல் ஆக்க முடியும்.
  • எத்தனை பேர் அதை நம்புகின்றார்கள்.
இப்படிப்பட்ட கற்கும் முறைகளை/உத்திகளை நாம் பரிமாண வளர்ச்சியில் இயல்புகளாக பெற்றுள்ளோம். அப்படியே நம் மூளை வடிவமைக்கப் பட்டுள்ளது. இப்படிப்பட்ட முறைகள் மூலம் மூளை எளிதாக ஏமாந்து மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகின்றது. இந்த இயல்பு முறையை தாண்டி, நாம் பகுத்தறிவு முறையில் கற்க அந்த திறனை கற்று/வளர்த்து கொள்ள வேண்டும் (கற்றலின் கற்றல்).

13 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல இடுக்கை... ஒவ்வொருவரும் புரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று பாராட்டுகள்

A.Sathiyanarayanan said...

Good article.

S.A. நவாஸுதீன் said...

//பகுத்தறிவு என்பது, நாம் எதை செய்தாலும் அதை புரிந்து கொண்டு செய்கின்றோமா அல்லது குருட்டுதனமாக செய்கின்றோமா என்பதில் தான் உள்ளது!//

இதுதான் மேட்டர். அருமையா சொல்லி இருக்கீங்க சார்.

CorTexT (Old) said...

// ஆ.ஞானசேகரன் said...
நல்ல இடுக்கை... ஒவ்வொருவரும் புரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று பாராட்டுகள்//

//A.Sathiyanarayanan said...
Good article.//

//S.A. நவாஸுதீன் said...
//பகுத்தறிவு என்பது, நாம் எதை செய்தாலும் அதை புரிந்து கொண்டு செய்கின்றோமா அல்லது குருட்டுதனமாக செய்கின்றோமா என்பதில் தான் உள்ளது!//

இதுதான் மேட்டர். அருமையா சொல்லி இருக்கீங்க சார்.
//


உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

Kumaresh said...

Adan goyala...naanga nenaikiroam..ni seiyara...Tamila type seiya theriala..but manamaarnda paaratukal.
Kalakurada Kama..

CorTexT (Old) said...

நன்றி டா Kumaresh!

உன் மனம் திறந்த விடயங்களுக்கும், சிந்தனைகளுக்கும், பாராட்டுதலுக்கும் என்னுடைய மனம் திறந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றி!

எண்ணங்கள் 13189034291840215795 said...

நல்ல பதிவு

CorTexT (Old) said...

//பயணமும் எண்ணங்களும் said...
நல்ல பதிவு//

மிக்க நன்றி!

Thekkikattan|தெகா said...

ஒரு சின்னக் கட்டுரைக்குள், எவ்வளவு விசயத்தை உள்ளடக்கி இருக்கீங்க. Amazing! Thanks for the essay. உங்களோட ‘நான் யார்’ பதிவு கூட படிச்சிட்டு பின்னூட்டி இருந்தேன். பாருங்க :-)

You may want to visit Dharumi's blogsite - he will be very happy to see you around - plz, start from here ...

http://dharumi.blogspot.com/2010/11/455-3.html

CorTexT (Old) said...

Thanks தெகா!!! I'll visit Dharumi's blogsite and thanks for the reference.

தருமி said...

நல்லெண்ணத் தூதுவர் 'தெக்ஸ்' வாழ்க .. வாழ்க !
:)

தருமி said...

மிக மிக "அடர்த்தியான" கட்டுரை. அதிலும் அந்தக் கடைசிப் பத்தியை மீண்டும் மீண்டும் வாசிக்கும்படியாயிற்று - அத்தனை அடர்த்தி. இதையே இன்னும் நீட்டித்து எழுதியிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது.

திரண்டு கருத்துக்களுக்கு வாழ்த்துகள்.

நல்ல நான் தேடிக்கொண்டிருந்த சொற்களைக் கொடுத்தமைக்கு நன்றி (தற்சார்புடையது வெளிசார்புடையது.)

//பரிணாம வளர்ச்சிக்கு நல்லது கெட்டதெல்லாம் தெரியாது;//- இது சரியா?

CorTexT (Old) said...

//தருமி said... //
தங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

//நல்ல நான் தேடிக்கொண்டிருந்த சொற்களைக் கொடுத்தமைக்கு நன்றி (தற்சார்புடையது வெளிசார்புடையது.)//
நானும் பலவற்றிக்கு நல்ல தமிழ் வார்த்தைகளை தேடிக்கொண்டு தான் இருக்கின்றேன். முடிந்த மட்டும் புரிய கூடிய எளிய வார்த்தகளை தேடி/உருவாக்கி பயன்படுத்துகின்றேன். Freewill மற்றும் Consciousness போன்றவற்றிக்கு நல்ல தமிழ் வார்த்தைகளை தேடி கொண்டுள்ளேன்.

//பரிணாம வளர்ச்சிக்கு நல்லது கெட்டதெல்லாம் தெரியாது - இது சரியா? //
நான் சொல்லவரும் பார்வை, பரிணாம வளர்ச்சி நிகழும் இயற்கை-தேர்வு-முறையை. இயற்கை நிகழும் நிகழ்வுகளுக்கு... இயற்கை-விதிகளின் படி நடக்கும் நிகழ்வுகளுக்கு நாம் காணும் நல்லது கெட்டதெல்லாம் இல்லை. பாசம், காதல், உதவி புரிதல் போன்றவை நாம் நல்லதாக நினைப்பதால் பரிணாம வளர்ச்சி அடையவில்லை; கோபம், சண்டையிடுதல், ஏமாற்றுதல் (குயில் அடுத்த பறவை கூட்டில் முட்டை போடுதல்), கொல்லுதல் (இன்று பிறந்த பச்சிளம் மான்குட்டியை கதர கொல்லும் சிங்கம்) போன்றவற்றை நாம் கெட்டதாக நினைப்பதால் அவை பரிணாம வளர்ச்சி அடையாமலும் இல்லை.

உங்கள் பார்வை வேறுபட்டால், நீங்கள் அதை விளக்கினால் நன்றாக இருக்கும்.